எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சிறார் எழுத்தாளர்களும் சவால்களும்" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சிறார் எழுத்தாளர்களும் சவால்களும்” கட்டுரை

சிறார் எழுத்தாளர்களும் சவால்களும்

– உதயசங்கர்

சிறார் இலக்கியம் என்றால் பொதுவாக குழந்தைகள் இந்த உலகத்தில் வாழ்வதற்குப் பயிற்சியளிப்பது, இந்த சமூகத்தின் மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுப்பது, மானுட அறத்தைப் போதிப்பது என்று எல்லோருமே தெரிந்து வைத்திருக்கிறார்கள். குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த மனிதனாக, சிறந்த குடிமகனாக வாழ்வதற்கான அனைத்தையும் கல்வி, இலக்கியம், கலை, விளையாட்டு, அன்றாடப்பழக்கவழக்கங்கள் இவற்றின் மூலம் வழங்குவதென்ற இலட்சியத்துடனேயே நம்முடைய சமூகமே இயங்குகிறது. சிறார் எழுத்தாளர்களும் இத்தகைய இலட்சியத்துடனேயே தங்களுடைய படைப்புகளைப் படைக்கிறார்கள்.

சிறார் இலக்கியத்தின் வாசகர்கள் வயதுக்கு வயது மாறுபடுகிறார்கள். வர்க்கத்துக்கு வர்க்கம் மாறுபடுகிறார்கள். கிராமத்துக்கும் நகரத்துக்கும் வேறுபடுகிறார்கள். அரசுப்பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் வேறுபடுகிறார்கள். ஒவ்வொரு வயதுக் குழந்தைக்குமுள்ள அறிதல் திறன் மற்றும் உணர்தல் திறன் வேறுபடுகிறது. ஒவ்வொரு வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடுகிறார்கள். ஏழை எளிய குழந்தைகளுக்கும் மத்திய தரவர்க்க் குழந்தைகளுக்கும் மேல்தட்டு வர்க்க க் குழந்தைகளுமிடையில் சிறார் இலக்கிய நுகர்வில் வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி அனைவரும் குழந்தைகள். இந்த அனைத்துக் குழந்தைகளும் சேர்ந்து தான் எதிர்காலத்தைக் கட்டமைக்கப் போகிறவர்கள்.

மேலே குறிப்பிட்ட அத்தனை வேறுபாடுகளையும் தாண்டித் தான் சிறார் இலக்கியம் எல்லாக்குழந்தைகளையும் சென்றடைய வேண்டும். ஆக சிறார் எழுத்தாளர்களின் மிகப்பெரிய சவாலே முதலில் அவர்கள் எந்த வயதுக் குழந்தைக்காக எழுதுகிறார்களென்பதை முடிவு செய்ய வேண்டும். அந்த வயதுக் குழந்தைகளின் உளவியல், அறிதிறன் ஆகியவற்றைக் குறித்து தெரிந்திருக்க வேண்டும். இதைக் கடந்து அந்தக் குழந்தைகளுக்கான படைப்பு வறட்டுத்தனமான, செயற்கையான, படைப்பூக்கமில்லாத வெறும் அறிவுரைகளாக இருந்து விடக் கூடாது.

ஏனெனில் கலை என்பதே கட்டற்ற புனைவு தான். இலக்கியம் அதன் புனைவுத்தன்மையினால் தான் உணர்வைத் தீண்டுகிறது. மனதோடு உறவாடுகிறது. . கலை முதலில் மனதில் வினை புரிகிறது. பிறகு தான் அறிவை நோக்கிப் பயணப்படுகிறது. எனவே கலையின் செயல்தளம் உணர்வுத்தளம் என்பதால் தான் கட்டற்ற புனைவுவெளியை படைப்பாளிகளால் உருவாக்க முடிகிறது.

புனைவு நம்ப முடியாததையெல்லாம் நம்ப வைக்கிறது. நடக்க முடியாததையெல்லாம் நடக்க வைக்கிறது. அதீதத்தை யதார்த்தம் போலும் சித்தரிக்கிறது. ஒரு மாய யதார்த்தத்தை உருவாக்குகிறது. மனிதனை வசியம் செய்கிறது. கற்பனையான உலகத்தில் கற்பனையாக தற்காலிகமாகவேனும் வாழ வைக்கிறது. யதார்த்த உலகின் துயங்களிலிருந்து ஆற்றுப்படுத்துகிறது. யதார்த்த உலகத்திலிருந்து சிறிது நேரம் ஆசுவாசம் தருகிறது. புனைவுக்குள் இருக்கும்போது சுத ந்திரம் கிடைக்கிறது.

ஆக மொத்த த்தில் கலை தனக்கான பிரபஞ்சத்தில் இந்த அண்டத்தையே கற்பனையாகவும் படைக்கிறது.

கலை யதார்த்தத்தை அடிப்படையாகக்கொண்டு புனைவாக படைப்பாளியின் நோக்கத்துக்கு ஏற்ப உருவாகிறது. யதார்த்த த்தை அப்படியே பிரதிபலிப்பதில்லை. படைப்பாளியின் தலையீட்டுடன் தான் கலைப்படைப்பு படைக்கப்படுகிறது. எனவே தான் கலையில் உண்மை இருக்கலாம். ஆனால் கலையே உண்மை கிடையாது. இதை

சிறார் இலக்கியத்தில் இந்தப் புனைவுவெளி எல்லையற்ற சாத்தியங்களைத் தருகிறது. ஏனெனில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் இந்த உலகம் புதிதாகப் பிறக்கிறது. குழந்தைகள் எப்போதும் கட்டற்ற புனைவு வெளியில் தங்கள் சிறகுகளை விரித்து பறப்பவர்கள். பிறந்ததிலிருந்தே குழந்தைகளுக்கு இந்த உலகம் ஆச்சரியங்களையும் அற்புதங்களையும் தந்து கொண்டேயிருக்கிறது.

வளர வளரத்தான் அவர்கள் வாழ்வின் யதார்த்தங்களைப் புரிந்து கொள்கிறார்கள். உலகம் முழுவதும் பழம்பெரும் இலக்கியங்கள் தொடங்கி உதாரணத்துக்கு பண்டைய கிரேக்க த்தில் வாழ்ந்த ஈசாப் என்ற அடிமையால் சொல்லப்பட்ட கதைகளானாலும் சரி, இந்தியாவின் பஞ்ச தந்திரக் கதைகளானாலும் சரி, அவற்றில் விலங்குகள் மனித குணங்களுடனும், விசித்திர உருவங்களுடன் படைக்கப்பட்டிருக்கின்றன. பெரியவர்களுக்காகச் சொல்லப்பட்ட நீதிக்கதைகளிலேயே விலங்குகள் பேசுகின்றன உயிரியல் பற்றிய அறிவியல் வளர்வதற்கு முன்னால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது பஞ்சதந்திரக்கதைகள் ( Fables ) தோன்றிய காலத்திலிருந்தே உலகம் முழுவதும் இப்படியான கதைகளும் கருத்துகளும் பொதுப்புத்தியில் உறைந்து விட்டன.

இந்த யதார்த்தத்தையும் கணக்கிலெடுத்துக்கொண்டால் குழந்தைப் படைப்புகளில் விலங்குகள் பேசுவதோ, மனிதர்களைப்போல குணபாவங்களைக் கொண்டிருப்பதாக எழுதுவது இயல்பானது தான்.

ஆனால் குழந்தைகளுக்கு எழுதும்போது விலங்குகளின் அடிப்படை இயல்புகளிலிருந்து அவற்றை மாறுபடுத்திக் காட்டுவது உதாரணத்துக்கு பாம்பு ஞாபகம் வைத்திருந்து கொத்தும். பாம்புகளை வணங்கினால் அது நமக்கு ஆசீர்வாதம் தரும். வயதான பாம்புகள் நாகரத்தினம் தரும். என்பது போன்ற மூட நம்பிக்கைகளைச் சொல்வது குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிந்து விடும். அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆழ்மனதில் தங்கி பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே புனைவுகளில் விலங்குகள் மனித குணங்களைப் பிரதிபலிக்கலாம். அதன் நோக்கங்கள் முக்கியமானவை ஒவ்வொரு விலங்கும் தன்னுடைய இருத்தலுக்காக தனித்துவமான நிறம், மணம், குணம், உணவுப்பழக்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இந்த தனித்துவமே அவற்றின் வாழ்வதற்கான போராட்டத்தில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. இந்த் அறிவியல் அடிப்படைகளை மாற்றி அதில் மனிதகுணங்களை ஏற்றிச்சொல்வது என்பது சரியானதாக இருக்குமாவென்பது கேள்விக்குறி தான்.

அதேநேரம் விலங்குகளின் உண்மையான இயல்போடு புனைகதைகளில் எழுதுவது ஒரு சவாலாகவே இருக்கும். புனைவின் கவித்துவ எல்லையிலிருந்து அறிவியலின் நிரூபண எல்லைக்குள் புகுந்துவிடும் சாத்தியங்கள் அதிகம் என்றே தோன்றுகிறது. அதனால் புனைவின் ரசனை குறைந்துவிடும் அபாயமும் ஏற்படும். வாசிக்கும் குழந்தைகளுக்கு கலைப்படைப்பாக இல்லாமல் அறிவியல் கட்டுரையாக தோன்றிவிடும். இன்னும் சொல்லப்போனால் கலையின் இலக்கான மனம் புனைவின் கவித்துவ அழகையே விரும்புகிறது. அதனால் ஈர்க்கப்படுகிறது. கலை கலையாக இருப்பதை உறுதிப்படுத்துவது இந்த கவித்துவ அழகு தான்.

அதேநேரம் குழந்தைகளுக்கு எழுதும்போது அடிப்படை அறிவியல் உண்மைகள் மாற்றாமல் அதேநேரம் புனைவின் கவித்துவ அழகோடு எழுதுவது மிகப் பெரிய சவால்.

உலகம் முழுவதும் இந்த விவாதங்கள் நடைபெறுகின்றன. இன்னமும் இதற்கான விடைகள் கிடைக்கவில்லை. அப்படி கலையும் அறிவியலும் ஒன்றில் ஒன்று இணைந்து கலந்து புனைகதைகளாக வெளிவந்திருக்கிறதா என்று தெரியவில்லை. அதற்கு முன்னுதாரணங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை.
சிறார் படைப்புகளில் புதிய சவால்களை சிறார் எழுத்தாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.

📚 எழுதியவர்:

எழுத்தாளர் உதயசங்கர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *