பார்வையாளர்கள் முன்னிலையில் சிம்பன்சிகள் சிறப்பாக செயல்பட முயற்சிக்கின்றனவா?
புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் – 17
நீங்கள் ஒரு கடினமான பணியைச் செய்யும்போது, உங்களை யாராவது பார்த்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு என்ன உணர்வு ஏற்படும்? அழுத்தமா? அல்லது உற்சாகமா?
செல் பிரஸ் வெளியிடும் “ஐசயின்ஸ்” இதழில் நவம்பர் 8 ஆம் தேதி வெளியான புதிய ஆய்வின்படி, சிம்பன்சிகள் கணினிப் பணிகளைச் செய்யும்போது, அவைகளைப் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொருத்து அவைகளின் செயல்திறன் மாறுபடுகிறது.
“பார்வையாளர் விளைவு” எனப்படும் இந்த நடத்தை மனிதர்களிடம் காணப்படுவதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். இந்த ஆய்வானது மனித சமூகங்கள் உருவாவதற்கு முன்பே இந்த நடத்தை தோன்றியிருக்கலாம் என்று காட்டுகின்றது.
“சிம்பன்சிகளின் பணி செய்யும் திறன் பார்வையாளர்களால், குறிப்பாக மனித பார்வையாளர்களால், பாதிக்கப்படுவதைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது!” என்று ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தின் கிறிஸ்டன் லின் கூறுகிறார்.
“வேறொரு இனத்தைச் சேர்ந்த ஓர் உயிரினம் தங்களைப் பார்ப்பதைப் பற்றி சிம்பன்சிகள் கவலைப்படாது என்றுதான் நாம் நினைப்போம். ஆனால், பணியின் சிரமத்தைப் பொறுத்து அவை மனித பார்வையாளர்களால் பாதிக்கப்படுவது தெரிகிறது. நாம் முன்பு எதிர்பார்த்ததை விட இந்த உறவு மிகவும் சிக்கலானது என்பதை இது காட்டுகிறது.”
மனிதர்களில், பார்வையாளர்கள் முன்னிலையில் சிறப்பாக செயல்படுவது பெரும்பாலும் நற்பெயரைப் பராமரிக்க வேண்டும் என்ற விருப்பத்தால் ஏற்படுகிறது. இந்த ‘பார்வையாளர் விளைவு’ மனிதரல்லாத சிம்பன்சிகளிடமும் இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஷின்யா யமமோட்டோ மற்றும் அகிஹோ முராமட்சு உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது..
“எங்கள் ஆய்வுத்தளம் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள சிம்பன்சிகள் அடிக்கடி மனிதர்களுடன் தொடர்பு கொள்கின்றன, அவர்களுடன் நேரத்தைச் செலவிடவும் விரும்புகின்றன. உணவு வெகுமதிகளுக்காக பல்வேறு தொடுதிரை சோதனைகளில் கிட்டத்தட்ட தினமும் பங்கேற்கின்றன.” என்று முராமட்சு கூறுகிறார்.
“இதனால், பார்வையாளர்களால் ஏற்படும் விளைவுகளை ஆராய்வதற்கு சிறந்த வாய்ப்பைப் பெற்றோம். மேலும், மனிதர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்ட சிம்பன்சிகளை வைத்து இந்த ஆய்வை மேற்கொள்ள முடிந்தது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.”
இந்த சோதனையில், சிம்பன்சிகள் தொடுதிரைகளில் பல்வேறு சிக்கலான பணிகளில் ஈடுபட்டன. அதே நேரத்தில், மனித பார்வையாளர்களுடனான அவைகளின் தொடர்புகள் கவனமாக கண்காணிக்கப்பட்டன.
பணிகள் எளிமையானவை முதல், சிம்பன்சிகளின் சிக்கலைத் தீர்க்கும் திறன்களுக்கு சவால் விடும் சிக்கலான வரிசைகள் வரை இருந்தன.
சோதனையில் பல்வேறு வகையான மனித பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் – பரிச்சயமானவர்கள், அறிமுகமில்லாதவர்கள், சீருடையில் இருப்பவர்கள், சாதாரண உடையில் இருப்பவர்கள். ஆய்வின் முடிவுகள் நம்பகமானவையாகவும், அறிவியல் பூர்வமானவையாகவும் இருப்பதை உறுதி செய்ய இந்த நுட்பமான அணுகுமுறை உதவியது.
ஆறு ஆண்டுகளில் சிம்பன்சிகளின் தொடுதிரை பணியை முடித்த ஆயிரக்கணக்கான அமர்வுகளை ஆராய்ந்த பின்னர் ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுகளுக்கு வந்தனர்.
மூன்று வெவ்வேறு எண்களின் அடிப்படையிலான பணிகளில், அவைகளைப் பார்க்கும் சோதனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, மிகவும் கடினமான பணியில் சிம்பன்சிகள் சிறப்பாக செயல்படுவதைக் கண்டறிந்தனர்.
ஆனால், எளிதான பணிக்கு, பார்வையாளர்கள் மற்றும் சோதனையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் செயல்திறன் குறைந்ததையும் கண்டறிந்தனர்.
இந்தப் பார்வையாளர் விளைவுக்குக் காரணமான குறிப்பிட்ட காரணிகள் என்னவென்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மனிதர்களிலும் கூட இதற்கான விளக்கம் முழுமையாகப் புரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனிதரல்லாத குரங்கினங்களை மேலும் ஆய்வு செய்வது, பார்வையாளர்கள் முன்னிலையில் செயல்திறன் மாறுபடும் இந்தப் பண்பு எப்படி, ஏன் உருவானது என்பது குறித்த கூடுதல் தெளிவைத் தரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
“பார்வையாளர்கள் மீதான அக்கறை, மனிதர்களுக்கு மட்டுமே உரிய தனித்துவமான பண்பு அல்ல. சிம்பன்சிகளிடமும் இது காணப்படுகிறது என்பதை எங்கள் ஆய்வு உறுதிப்படுத்துகிறது”
“மனித சமூகங்கள் பெரும்பாலும் நற்பெயரை மையமாகக் கொண்டவை. நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை மற்றவர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்பதில் நாம் அக்கறை கொள்கிறோம். சிம்பன்சிகளும் பார்வையாளர்கள் முன்னிலையில் வித்தியாசமாக நடந்துகொள்வதைப் பார்க்கும்போது, நற்பெயர் குறித்த இந்த விழிப்புணர்வு, மனிதர்களாக நாம் உருவாவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, நமது பொதுவான மூதாதையர்களிடமிருந்து வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.” என்று யமமோட்டோ கூறுகிறார்.
இந்த ஆய்வு, பரிணாம உளவியல் துறையில் பல எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுரையாளர் :
த. பெருமாள்ராஜ்
இத்தொடரின் முந்தைய கட்டுரையைப் படிக்க : புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் – 16: ஆமாம்! உங்கள் உடல் முழுவதும் மூளைதான்!
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: இதய வடிவ சிப்பிகள் (Heart cockles): transmit sunlight to photosymbiotic algae