சார்ஸ்-கோவ்-2 பற்றி உலகளாவிய தொற்றுநோயின் ஆரம்பகட்டத்தில் சீனா எவ்வாறு கற்றுக்கொண்டது?
உலகளாவிய தொற்றுநோய் இருப்பதாக 2020 மார்ச் 11 அன்று உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. அன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ’இது கொரோனா வைரஸால் ஏற்பட்டிருக்கின்ற முதலாவது உலகளாவிய தொற்றுநோய்’ என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார். ’கடந்த இரண்டு வாரங்களில், சீனாவுக்கு வெளியே கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 13 மடங்காகவும், பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காகவும் அதிகரித்துள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார். இந்த வைரஸ் மிகக்கொடியது என்பதும், மனித சமுதாயத்திற்குள் எளிதில் நுழைந்து பரவும் திறன் கொண்டது என்பதும் மார்ச் 11க்குப் பிறகு தெளிவாகியது. ஆனால் அதற்கு முன்னெப்போதும் அது தெளிவாக இருந்திருக்கவில்லை.
மார்ச் 17 அன்று, அமெரிக்க ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் கிறிஸ்டியன் ஆண்டர்சன் மற்றும் அவரது குழுவினர் இந்த புதிய கொரோனா வைரஸ் திரிபான சார்ஸ்-கோவ்–2, வெளவால்கள் அல்லது எறும்புதின்னிகளில் காணப்படுகின்ற பிற கொரோனா வைரஸ்களில் காணப்படாத பாலிபேசிக் பிளவு தளம் என்றழைக்கப்படும் மரபணுக்களில் பிறழ்வைக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினர். வூஹானில் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த வைரஸ் மனிதர்களுக்கு வந்திருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். குவாங்டாங் செயல்முறை சார்ந்த உயிரியல் வளங்களுக்கான நிறுவனத்தைச் சார்ந்த டாக்டர் சென் ஜின்பிங், தன்னுடைய சகாக்களுடன் இணைந்து பிப்ரவரி 20 அன்று ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
எறும்புதின்னியின் கொரோனா வைரஸ் இனத்திலிருந்து நேரடியாக இந்த புதிய கொரோனா வைரஸ் மனிதர்களில் உருவாகியிருக்கிறது என்ற கூற்றிற்கு ஆதரவாக தங்களுடய தரவுகள் இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர். பிரபல தொற்றுநோயியல் நிபுணரான ஜாங் நன்ஷான், ’முதன்முதலாக சீனாவில் காணப்பட்டுள்ள கோவிட்-19, சீனாவில்தான் முதன்முதலாகத் தோன்றியது என்று கருத முடியாது’ என்று கூறினார்.
சீனர்கள் உணவாக எடுத்துக்கொள்ளும் எறும்புத்தின்னி
இறுதியில் இந்த வைரஸைப் பற்றிய உறுதியான புரிதலை தொடந்து நடைபெறுகின்ற அறிவியல் ஆய்வுகள் நமக்கு நிச்சயம் தரும். இந்த வைரஸ் வூஹான் சந்தையில் நேரடியாக வெளிப்பட்டது என்பது குறித்தும் இப்போதைக்கு தெளிவில்லை. மேற்கத்திய அறிவியலாளர்கள் எச்சரிக்கையுடன் வலியுறுத்தி வருகின்ற போதிலும், இந்த வைரஸின் மூலத்தைப் பற்றி மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ச்சியாக அறிவியல்பூர்வமாக ஆதாரங்களற்ற தகவல்களையே கூறி வருகின்றன. வூஹானில் உள்ள மருத்துவர்களின் அல்லது சீனாவில் உள்ள பொது சுகாதார நிபுணர்களின் கருத்துக்களை அவர்கள் கவனித்ததாக தெரியவில்லை.
டிசம்பர் மாதம் முதன்முதலாக தங்களுடைய மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்த்தபோது, கடுமையான நுரையீரல் பாதிப்பு இருப்பதை சி.டி ஸ்கேன் காட்டிய போதிலும், அந்த நோயாளிகளுக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பதாகவே வூஹான் மருத்துவர்கள் நம்பினர்; நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட வழக்கமான மருத்துவ சிகிச்சைகள் குணமளிக்கவில்லை என்ற சூழலில், அங்கிருந்த மருத்துவர்கள் பதற்றமடைந்தனர். ஆனாலும் இது பிராந்திய தொற்றுநோயாக, அதற்குப் பின்னர் உலகளாவிய தொற்றுநோயாக விரிவடையும் என்பதை கற்பனை செய்து கொள்வதற்கான எந்த காரணமும் அவர்களிடம் அப்போது இருக்கவில்லை.
வூஹான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளால் தங்களிடமிருந்த ஆதாரங்களைக் கொண்டு ஒரு முடிவிற்கு வந்து சேர முடியவில்லை. இறுதியில் அது அறிமுகமில்லாத புதிய வைரஸ் என்றும், மிக வேகமாக அது பரவுகிறது என்றும் தெளிவாகத் தெரிந்தவுடன், அவர்கள் சீனாவின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தையும், பின்னர் உலக சுகாதார அமைப்பையும் தொடர்பு கொண்டனர்.
தொற்றுநோய் பற்றிய தகவல்களை சீன அரசாங்கம் மறைத்துள்ளது என்றும், சீனாவின் எச்சரிக்கை அமைப்பு செயல்படவில்லை என்றும் குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்ட மேற்கத்திய செய்தித்தாள்களை, குறிப்பாக நியூயார்க் டைம்ஸ் மட்டுமே படிப்பவராக நீங்கள் இருந்திருந்தால், இது நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்காது.
எங்களுடைய விசாரணையில் இந்த வாதங்கள் எதுவுமே உண்மை இல்லை என்று தெரிய வந்தது. திட்டமிட்டு சீன அரசாங்கம் தகவல்களை மறைத்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை; ஒரு சில மருத்துவர்கள் தகவல்களை பொதுமக்களிடம் வெளியிட்டதற்காக, நிறுவப்பட்ட நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காததற்காக தங்களுடைய மருத்துவமனைகளால் அல்லது உள்ளூர் காவல் நிலையத்தால் கண்டிக்கப்பட்டனர் என்பதற்கான சான்றுகள் மட்டுமே உள்ளன. சீனாவின் நேரடி அறிக்கை முறை தவறானது என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக எந்தவொரு அமைப்பையும் போலவே, இதுவரை அறியப்படாத அல்லது வகைப்படுத்தப்படாத நோய்ப் பரவலை அந்த அமைப்பால் எளிதில் சரிசெய்ய முடியவில்லை என்பதற்கான சான்றுகள் மட்டுமே உள்ளன.
சுகாதார அவசரநிலைகள் குறித்து செய்திகளை வெளியிடுவதற்கு மற்ற மருத்துவ முறைகளைப் போல சீன மருத்துவ முறையும் கடுமையான நடைமுறைகளைக் கொண்டுள்ளது. தங்களுடைய மருத்துவமனை நிர்வாகத்திடம் மருத்துவப் பணியாளர்கள் அறிக்கை அளிக்கிறார்கள். அதற்குப் பிறகு, பல்வேறு நிலைகளில் சீன நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் சுகாதார ஆணையத்திடம் அறிக்கை அளிக்கின்றனர். இணைய அடிப்படையிலான நேரடி அறிக்கை முறையையும் அவர்கள் பயன்படுத்தலாம். அந்தப் பிரச்சினை குறித்து அறிக்கை அளிப்பதற்கு மருத்துவப் பணியாளர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், உயர்மட்ட விசாரணைக் குழு வூஹானுக்கு வருவதற்கு குறைந்த நேரமே ஆனது என்றும் எங்கள் விசாரணையில் கண்டறியப்பட்டது.
சீன அரசாங்கம் தகவல்களை மறைத்ததா?
ஹூபே மாகாணத்தில் உள்ள சீன மற்றும் மேற்கத்திய மருத்துவத்தின் ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவமனையில் உள்ள சுவாசம் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை மையத்தின் இயக்குநரான டாக்டர் ஜாங் ஜிக்சியன் டிசம்பர் 26 அன்று வயதான தம்பதியைக் கண்டார். அவர்களுக்கிருந்த நோய் அவரைத் தொந்தரவு செய்தது. அந்த தம்பதியினரின் மகனின் நுரையீரலை சி.டி ஸ்கேன் எடுக்க ஏற்பாடு செய்த அவர், அதன் மூலமாக GGO (நுரையீரலில் உள்ள குழாய்களில் திரவம் தேங்கியிருக்கும் நிலை) எனப்படும் நிலைமை அவரிடம் இருப்பதை அறிந்தார். அதற்கான காரணங்கள் குறித்து உறுதியாக அறிய முடியாத டாக்டர் ஜாங், அந்த நிலைமையை மருத்துவமனையின் துணைத் தலைவர் சியா வெங்குவாங்கிற்கும், மருத்துவமனையின் பிற துறைகளுக்கும் தெரிவித்தார். உடனடியாக அந்த மருத்துவமனை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான ஜியாங்கன் மாவட்ட மையத்திடம் தகவல் கூறியது. இவையனைத்தும் 24 மணி நேரத்திற்குள் நடந்து முடிந்தது.
ஹூபே மாகாணத்தில் உள்ள மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை பிரிவு
டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் ஹூபே மாகாண மருத்துவமனைக்கு மிகஅதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வந்தனர். இந்த நோயாளிகளிடம் நிமோனியாவின் அறிகுறிகளும், குறிப்பிடத்தக்க வகையில் நுரையீரல் பாதிப்பும் இருந்தது என்பதைத் தவிர வேறெதையும் மருத்துவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. தென் சீன கடல் உணவு சந்தையே வைரஸ் பரவிய முதல் இடம் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. டிசம்பர் 29 அன்று, நோயாளிகளின் என்ணிக்கை இன்னும் அதிகரித்ததால், மாகாண மற்றும் நகராட்சி சுகாதார ஆணையங்களின் நோய் கட்டுப்பாட்டுத் துறைக்கு மருத்துவமனையின் துணைத் தலைவர் சியா வெங்குவாங் நேரடியாக தகவல் அளித்தார்.
அன்றைய தினமே, தொற்றுநோயியல் விசாரணைக்காக ஹூபே மாகாண மருத்துவமனைக்குச் செல்லுமாறு வூஹான் நோய் கட்டுப்பாடு மையம், ஜின்யின்டன் மருத்துவமனை மற்றும் ஜியாங்கன் மாவட்ட நோய் கட்டுப்பாடு மையம் ஆகியவற்றிற்கு நகராட்சி மற்றும் மாகாண சுகாதார ஆணையங்களின் நோய் கட்டுப்பாட்டுத் துறை அறிவுறுத்தல் வழங்கியது. டிசம்பர் 31 அன்று, பெய்ஜிங்கிலிருந்து தேசிய சுகாதார ஆணையத்தின் நிபுணர் குழு வூஹானுக்கு வந்து சேர்ந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரச்சினையின் முதல் அறிகுறி தோன்றிய ஐந்து நாட்களுக்குள் பெய்ஜிங்கிலிருந்து அதிகாரிகள் வூஹானுக்கு வந்து சேர்ந்தனர்.
பெய்ஜிங்கிலிருந்து நிபுணர் குழு வருவதற்கு முந்தைய நாள், தன்னுடைய மருத்துவ பள்ளி வகுப்பு நண்பர்களிடம் இந்த மர்ம வைரஸ் குறித்த தனது விரக்தியை டாக்டர். ஐஃபென் வெளிப்படுத்தினார். அடையாளப்படுத்தப்படாத நிமோனியா குறித்த சோதனை அறிக்கையைப் பார்த்த டாக்டர் ஐஃபென், சார்ஸ் கொரோனா வைரஸ் என்ற சொற்களை சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு, அதை புகைப்படம் எடுத்து தன்னுடைய மருத்துவ பள்ளி வகுப்பு நண்பர் ஒருவருக்கு அனுப்பி வைத்தார். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான டாக்டர் லி வென்லியாங் மற்றும் ஏழு மருத்துவர்கள் உட்பட வூஹானில் இருந்த மருத்துவர்கள் மத்தியில் அந்த தகவல் பரவிய பின்னர், காவல்துறையினரால் அவர்கள் கண்டிக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு வெளியே தகவல்கள் எதையும் வெளியிட வேண்டாம் என்று ஜனவரி 2 அன்று வூஹான் மத்திய மருத்துவமனை மேற்பார்வை துறைத்தலைவரால் டாக்டர் ஐஃபென் எச்சரிக்கப்பட்டார்.
இந்த மருத்துவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட கண்டனங்கள் வைரஸ் பற்றிய தகவல்களை மறைத்ததற்கான ஆதாரமாக இப்போது காட்டப்படுகின்றன. இது தர்க்கரீதியானதல்ல. மருத்துவர்கள் மீதான கண்டனங்கள் ஜனவரி தொடக்கத்தில் நடந்தன. டிசம்பர் 31க்குள் பெய்ஜிங்கிலிருந்து உயர்மட்ட குழு வந்து சேர்ந்திருந்தது, அன்றைய தினமே உலக சுகாதார அமைப்பிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு மருத்துவர்களையும் கண்டிப்பதற்கு முன்னரே சீனாவின் நோய் தடுப்பு மையம் மற்றும் உலக சுகாதார அமைப்பிற்குத் தகவல் தரப்பட்டிருந்தது.
2020 பிப்ரவரி 7 அன்று, நிலைமையை விசாரிப்பதற்காக விசாரணைக் குழுவை வூஹானுக்கு அனுப்புவது என்று தேசிய மேற்பார்வை ஆணையம் முடிவு செய்தது. 2020 மார்ச் 19 அன்று, தங்களுடைய விசாரணையின் முடிவுகளை அந்த விசாரனைக் குழு வெளியிட்டது. தங்களுடைய கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்காக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. விசாரணையின் விளைவாக, டாக்டர் லி வென்லியாங்கிற்கு வழங்கப்பட்ட கண்டன கடிதத்தை ரத்து செய்து சுற்றறிக்கை ஒன்றை வூஹான் பொது பாதுகாப்பு பணியகம் வெளியிட்டது. ஏப்ரல் 2 அன்று டாக்டர் லி வென்லியாங் மற்றும் வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இறந்த 13 பேர் தியாகிகளாக அறிவிக்கப்பட்டு அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டனர். இது கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்கள் குடியரசு தன்னுடைய குடிமக்களுக்கு வழங்குகின்ற மிக உயர்ந்த மரியாதையாகும்.
பெய்ஜிங்கிற்கு இந்த தொற்றுநோய் குறித்து தெரிவிப்பதற்கு உள்ளூர் அதிகாரிகள் பயந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நியூயார்க் டைம்ஸ் கூறியதைப் போல, இந்த பிரச்சினையின் மீது கவனத்தைத் திருப்புவதற்கான முயற்சிகளை விசில்ப்ளோயர்கள் எடுத்தனர் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. டாக்டர் ஜாங் விசில்ப்ளோயர் அல்ல; அவர் நிறுவப்பட்டிருக்கும் நெறிமுறைகளைப் பின்பற்றினார். அது உலக சுகாதார அமைப்பிற்கு சில நாட்களுக்குள் தகவலை அனுப்ப வழிவகுத்தது.
சீனாவின் ஆரம்பகால எச்சரிக்கை அமைப்பு
2002 நவம்பர் நடுப்பகுதியில், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஃபோஷனில், சார்ஸ் நோய் பரவியது. மருத்துவர்களால் அங்கே என்ன நடக்கிறது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இறுதியாக பிப்ரவரி மாத நடுவில், சீன சுகாதார அமைச்சகம் விசித்திரமான தொற்று நோயை விவரித்து, ஒரு வாரத்தில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனதாக உலக சுகாதார அமைப்பின் பெய்ஜிங் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. தங்களைப் பாதுகாக்கக்கூடும் என்று நினைக்கின்ற எந்தவொரு மருந்தையும் வாங்குகின்ற மக்கள், மருந்து இருப்புகளைக் காலி செய்து வருகிறார்கள் என்ற அந்த செய்தியில் மக்களிடையே இருந்த பீதி கலந்த அணுகுமுறை பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது. சார்ஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அப்போது எட்டு மாதங்கள் ஆனது.
அதற்குப் பிறகு, சீன அரசாங்கம் எந்தவொரு சுகாதார அவசரநிலையும் கட்டுப்பாட்டை மீறி செல்வதற்கு முன்னர், அவற்றைக் கட்டுப்படுத்துகின்ற வகையில் நேரடி அறிக்கை முறையை வடிவமைத்தது. இந்த அமைப்பு முறை தெளிவாக வரையறுக்கப்பட்ட தொற்று நோய்களைப் பொறுத்த வரை மிக நன்றாக வேலை செய்தது. இதுபோன்ற இரண்டு சம்பவங்களை ஃபுடான் பல்கலைக்கழகத்தின் சுகாதார பொருளியல் பேராசிரியரான டாக்டர் ஹு ஷான்லியன் விவரித்திருக்கிறார். போலியோ ஒழிப்பு நிபுணர் குழுவில் அங்கம் வகித்த அவரது குழு கிங்காயில் போலியோ நோய் இருந்த இருவரைக் கண்டறிந்தது. உள்ளூர் அரசாங்கம் இந்த நோயாளிகள் குறித்து மத்திய அரசிடம் தெரிவித்தது.
அவசரகால நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடங்கிய அரசாங்கம், வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த போலியோவைத் திறம்பட கட்டுப்படுத்துவதற்காக குழந்தைகளுக்கு சர்க்கரை க்யூப் தடுப்பூசியை வழங்கியது. அதேபோன்று உள்மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்திலிருந்து வந்திருந்த இரண்டு பிளேக் நோயாளிகள் பெய்ஜிங்கில் இருந்தது பற்றி அவர் தகவல் தந்தார். இது போன்ற நோய்கள் நேரடி அறிக்கை முறையால் மிக விரைவாக கண்டறியப்பட்டன என்று அவர் எழுதினார்.
ஆரம்ப எச்சரிக்கை முறைக்குள் போலியோ மற்றும் பிளேக் போன்ற நன்கு அறியப்பட்ட நோய்களை எளிதில் பதிவு செய்ய முடியும். வைரஸால் டாக்டர்கள் குழப்பமடைந்தால், அந்த அமைப்பு முறை எளிதில் வேலை செய்யாது. மஞ்சள்காமாலை, காசநோய் போன்ற பொதுவான வியாதிகளாக இருந்தால், நேரடி மருத்துவ அறிக்கை முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவ பதிவுகளை தனது மருத்துவர்களுக்கு அனுப்பி வைத்த டாக்டர் ஐஃபென், ஆனால் இந்த முறை அது அறிந்திருக்கப்படவில்லை என்று அவர் கூறினார். நன்கு அறியப்பட்டுள்ள மெர்ஸ், எச்1 என்1 போன்ற நோய்க்கிருமிகளுக்கு அல்லது விரைவாகப் பரவாத, குறைந்த அளவில் மனிதர்களிடையே பரவலைக் கொண்ட எச்7 என்9 நோய்க்கிருமிகளைப் பொறுத்தவரை, உலகின் பெரும்பாலான நாடுகளில் இருப்பதைவிட, சீனாவில் இருக்கும் இந்த நேரடி அறிக்கை முறை மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாக ஷாங்காய் டாக்டர் ஜாங் வென்ஹோங் கூறுகிறார். புதிய வைரஸை எதிர்கொள்ளும்போது, மருத்துவப் பணியாளர்களும், நேரடி அறிக்கை முறையும் சற்றே தடுமாற்றம் அடையலாம்.
நோய்த்தொற்று குறித்து தெளிவு இல்லாதபோது, மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு மருத்துவமனையில் உள்ள நோய் கட்டுப்பாட்டுத் துறைக்கு தகவல் தெரிவிப்பதே மிகவும் பயனுள்ள வழி ஆகும். டாக்டர் ஜாங் ஜிக்சியன் இதைத்தான் செய்தார். அவருக்கு மேல்நிலையில் இருக்கின்ற மருத்துவமனை தலைவர் உள்ளூர் நோய் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டார் அங்கிருந்து சீன தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் சீன தேசிய சுகாதார ஆணையத்தை தொடர்பு கொண்டனர். டாக்டர் ஜாங் த்ந்த அபாய எச்சரிக்கைக்குப் பிறகு, ஐந்து நாட்களுக்குள் வூஹானில் இருந்த மர்ம வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பிற்கு தகவல் தரப்பட்டது.
ஜனவரி 21 முதல் உலக சுகாதார அமைப்பு தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. டிசம்பர் 31 முதல் ஜனவரி 20 வரையிலான நிகழ்வுகளை முதல் அறிக்கை எடுத்துச் சொல்கிறது. டிசம்பர் 31 அன்று, அறியப்படாத நோயியல்தன்மையும், அறியப்படாத காரணமும் கொண்ட நிமோனியா காய்ச்சல் சீனாவில் உள்ள ஹூபே மாகாணத்தில் இருக்கின்ற வூஹான் நகரில் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பின் சீன அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி 7 அன்று புதிய வகை கொரோனா வைரஸை சீன அதிகாரிகள் தனிமைப்படுத்தி கண்டறிந்தனர். பின்னர் ஜனவரி 12 அன்று நோயைக் கண்டறிவதற்கான கருவிகளைக் கண்டுபிடிக்க உதவுகின்ற விதத்தில் புதிய கொரோனா வைரஸின் மரபணு வரிசையை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். வைரஸ் எவ்வாறு பரவுகின்றது என்பது குறித்த துல்லியமான தகவல்கள் வரும்காலத்தில் கிடைக்கும்.
2020 ஜனவரி 24 அன்று புதிய கொரோனா வைரஸ் பற்றிய தகவலுடன் நேரடி அறிக்கை முறை புதுப்பிக்கப்பட்டது. இப்போது கிடைத்திருக்கும் அனுபவத்திலிருந்து அது மேலும் கற்றுக் கொண்டுள்ளது.
உண்மைகளும், சித்தாந்தமும்
உலக சுகாதார அமைப்பு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமையாக இருப்பதாக, புளோரிடா செனட் உறுப்பினர் மார்கோ ரூபியோ குற்றம் சாட்டினார். உலகளாவிய தொற்றுநோயை அறிவிப்பதில் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் மிகமெதுவாக முடிவெடுத்தது, உலக சுகாதார அமைப்பின் நேர்மையை சீனா எந்த அளவிற்கு சமரசம் செய்தது என்பது குறித்து விசாரணைகளை அமெரிக்கா மேற்கொள்ள முயற்சிக்கும் என்று அவர் எழுதினார். உலக சுகாதார அமைப்பிற்கான அமெரிக்க நிதி குறித்து தெளிவற்ற நிலை உள்ளது. உண்மையில் ரூபியோ கூறியதில் எந்த உண்மையும் இல்லை.
புளோரிடா செனட் உறுப்பினர் மார்கோ ரூபியோ
உலகளாவிய தொற்றுநோயை அறிவிப்பதில் உலக சுகாதார அமைப்பு மெதுவாகச் செயல்பட்டதா? 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று கலிபோர்னியாவில் எச்1 என்1 குறித்த முதல் நோயாளி கண்டறியப்பட்டார். அதனை உலகளாவிய தொற்றுநோய் என்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜூன் 11 அன்று உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. சார்ஸ்-கோவ்-2 விஷயத்தில், நோயாளிகள் முதன்முதலாக 2020 ஜனவரியில் கண்டறியப்பட்டு, ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 11 அன்று உல்க சுகாதார அமைப்பு அதனை உலகளாவிய தொற்றுநோய் என்று அறிவித்தது. இடைக்காலத்தில், வூஹான் (ஜனவரி 20-21), பெய்ஜிங், குவாங்டாங், சிச்சுவான் மற்றும் வூஹானுக்கு (பிப்ரவரி 16-24) விசாரணைக் குழுக்களை உலக சுகாதார அமைப்பு அனுப்பி வைத்தது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னரே, விசாரணை தொடங்கியது. உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பிற்கான கால அளவு ஒரே அளவிலேயே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், 2009இல் இருந்ததை விட 2020இல் இன்னும் கொஞ்சம் வேகமாகவே அந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
நியூயார்க் டைம்ஸ் அல்லது மார்கோ ரூபியோ என்று யாராக இருந்தாலும், இந்த உலகளாவிய தொற்றுநோய்க்கு சீன அரசாங்கமும் சீன சமுதாயமும் தான் காரணம், தங்களுடைய தோல்விகளால் அவர்கள் உலக சுகாதார அமைப்பை சமரசம் செய்து கொண்டது மட்டுமல்லாமல் தொற்றுநோயையும் ஏற்படுத்தி இருக்கின்றனர் என்று முடிவு செய்ய வேண்டிய உடனடித் தேவை அவர்களுக்கு இருக்கிறது. இங்கே உண்மைகள் பொருளற்றவையாகிப் போகின்றன. உண்மைகள் வேண்டுமென்றே மறைக்கப்படவில்லை, பெய்ஜிங்கிற்கு தகவல் அளிக்க உள்ளூர் அதிகாரிகளிடம் எந்தவொரு பயமும் இல்லை; உண்மையில் அந்த அமைப்பு முறை தகர்ந்து போயிருக்கவில்லை என்பதையே இந்த அறிக்கையின் வாயிலாக நாங்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றோம். கொரோனா வைரஸ் தொற்றுநோய் மர்மம் நிறைந்ததாக, சிக்கலானதாக இருந்தது. சீன மருத்துவர்களும், அதிகாரிகளும் என்ன நடக்கிறது என்பது குறித்து மிக விரைவிலேயே கற்றுக்கொண்டனர், கிடைத்த உண்மைகளின் அடிப்படையில் நியாயமான முடிவுகளை எடுத்தனர்.
(தொடரும்)
விஜய் பிரஷாத், டு சியாஜுன், வெயன் ஜு
2020 ஏப்ரல் 07 பீப்பிள்ஸ் டிஸ்பாட்ச் இணைய இதழ்
தமிழில்
முனைவர் தா.சந்திரகுரு