தொடர் 1: கொரோனாவை எதிர்கொள்ள சீனாவின் அனுபவம் வழிகாட்டுகிறது – விஜய் பிரசாத் | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

கொரோனா கொடுத்திருக்கும் அதிர்ச்சிக்கு மத்தியில், சீனாவுக்கு  எதிரான அச்ச உணர்வு அதிகரித்து வருகிறது

ஜி7 அரசுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 25 அன்று அறிக்கை ஒன்றை வெளியிடத் தவறினர். ஜி7 அமைப்பின் தலைமையில் இருக்கின்ற அமெரிக்காவிற்கு அந்த அறிக்கையைத் தயாரிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. அந்த வரைவறிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது என்று பல உறுப்பினர்களும் கருதினர்.அந்த வரைவில், ’வூஹான் வைரஸ்’  என்ற சொற்றொடரை அமெரிக்கா பயன்படுத்தியிருந்தது மட்டுமல்லாது, உலகளாவிய தொற்றுநோய்க்கான பொறுப்பை சீன அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது. முன்னதாக, ’சீன வைரஸ்’ என்ற  சொற்றொடரை  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  பயன்படுத்தியிருந்தார். பின்னர் அவர் அவ்வாறு பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார்.

அவரது ஊழியர்களில் ஒருவர் ’குங் காய்ச்சல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் ஜெஸ்ஸி வாட்டர்ஸ் முழுக்க முழுக்க இனவெறி கொண்டு, ’ஏன் இந்த வைரஸ் தொற்று சீனாவில் தொடங்கியது? உயிருடன் உள்ள வெளவால்கள் மற்றும் பாம்புகளுக்கான சந்தைகள் அவர்களிடம் இருக்கின்றன’ என்றார். டிரம்ப்  நிர்வாகத்தால் சுமத்தப்பட்ட களங்கத்தின் விளைவாக, ஆசியர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் அமெரிக்காவில் அதிகரித்தன.

WHO appoints Dr Tedros Adhanom Ghebreyesus as Director-General ...

ஐரோப்பாவையோ அல்லது வட அமெரிக்காவையோ இந்த வைரஸ் தாக்குவதற்கு முன்பாக, பிப்ரவரி 14 அன்று  உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரலான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஆற்றிய உரையில் மிகச் சரியான முறையில் ’இப்போது ஒற்றுமைதான் தேவை, களங்கம் அல்ல’ என்று அழைப்பு விடுத்தார்.இந்த வைரஸுக்காக சீனாவை குறை சொல்வதற்கான உந்துதல் இருக்கும், சீனா மீது விரோதம் பாராட்டுவதற்கு இந்த வைரஸ் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் என்பதை கெப்ரேயஸ் அறிந்திருந்தார். ’இப்போது ஒற்றுமைதான் தேவை, களங்கம் அல்ல’ என்ற அவரது முழக்கம் உலகளாவிய தொற்றுநோய் குறித்து இருக்கின்ற குறுகிய, குருட்டுத்தனமான, அறிவியலற்ற கருத்துக்களுக்கு மாறாக சர்வதேசப் பார்வை கொண்ட, மனிதநேயம் கொண்ட கருத்துக்களை நோக்கமாக கொண்டிருந்தது.

தோற்றங்கள்

விலங்குகள்  மற்றும் மனிதர்களிடையே பல வைரஸ்கள் உருவாகின்ற விதத்திலேயே, அதிகாரப்பூர்வ  பெயராக சார்ஸ்-கோவ்-2 என்ற பெயரைக் கொண்டிருக்கும் இந்த வைரஸும் உருவாகிறது.இந்த வைரஸ் எங்கே உருவானது என்பது குறித்து இன்னும் உறுதியான ஒருமித்த கருத்து எதுவும் ஏற்படவில்லை; சீனாவின் ஹூபே மாகாணத்தில் வூஹானில் உள்ள காட்டு விலங்குகள் விற்கப்படும்  ஹுனான் கடல் உணவு மொத்த வியாபாரச் சந்தையின் மேற்கு முனையில் இது உருவானது என்ற கருத்து இருக்கிறது. சார்ஸ்-கோவ்-2 போன்ற புதிய நோய்க்கிருமிகளுடன் மனிதர்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்ற காடுகள் மற்றும் நிலப்பகுதிகளுக்குள் விவசாயத்தை விரிவுபடுத்துவதே இதில் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இந்த வைரஸ்  மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை என்றாலும், இது மட்டுமே அவ்வாறாக இருக்கவில்லை.

சமீப காலகட்டத்தில், எச்1 என்1, எச்5 என்எக்ஸ், எச்5 என்2 மற்றும் எச்5 என்6 (H1N1, H5Nx, H5N2 and H5N6) போன்ற பலவகையான பறவை காய்ச்சல்களை நாம் கண்டிருக்கிறோம்.  எச்5 என்2 அமெரிக்காவில் தோன்றியதாக அறியப்பட்டாலும், ’அமெரிக்க வைரஸ்’ என்பதாக அது அறியப்படவில்லை. அந்த நோய் உருவானதற்காக அமெரிக்கா மீது யாரும் களங்கம் சுமத்த முற்படவில்லை. எந்தவொரு நாட்டின் மீதும்  பொறுப்பை சுமத்தாத வகையில், இவ்வாறான  வைரஸ்களை விவரிப்பதற்கு அறிவியல் பெயர்கள் மட்டுமே  பயன்படுத்தப்பட்டன. காடுகளுக்குள் மனிதர்களின் அத்துமீறல், மனித நாகரிகத்திற்கும் (விவசாயம் மற்றும் நகரங்கள்) காடுகளுக்கும் இடையிலான சமநிலை பாதிப்பு போன்றவற்றின் மீது, இந்த வைரஸ்களின் வருகை அடிப்படை கேள்விகளை எழுப்புகின்றது.

Clouds of decoy viruses help cure genetic disease

வைரஸிற்குப் பெயரிடுவது சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கிறது. 1832ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவை நோக்கி காலரா தொற்று நகர்ந்து சென்றது. அப்போது அது ’ஆசிய காலரா’ என்று அழைக்கப்பட்டது. தாங்கள் ஜனநாயகப்பூர்வமாக இருப்பதால், சர்வாதிகார நோய்க்கு ஆளாக மாட்டோம் என்று பிரெஞ்சுக்காரர்கள் உணர்ந்தனர்; ஆனாலும் ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்த சுகாதார நிலையைப் போலவே, அங்கும் இருந்ததால்  பாக்டீரியாவால் உருவான காலராவால் பிரான்ஸ் நாடு அழிந்தது. (1848ஆம் ஆண்டு அமெரிக்காவை காலரா தாக்கியபோது, அங்கே பொதுக்குளியல் இயக்கம் பிறந்தது)

முதலாம் உலகப் போரின்போது, போரில் ஈடுபட்டு வந்த  பெரும்பாலான நாடுகளில் பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டிருந்தன. அந்த நேரத்தில், போரில் ஈடுபடாமல் இருந்த ஸ்பெயினில் இருந்த ஊடகங்கள், அந்த காய்ச்சல் குறித்த செய்திகளை அதிகமாக வெளியிட்டு வந்தன. எனவே ஸ்பெயினில் மட்டும் அந்த காய்ச்சல் இருப்பதாகக் கருதி ஸ்பானிஷ் காய்ச்சல்’ என்று அந்தக் காய்ச்சலுக்குப் பெயரிடப்பட்டது. அதனாலேயே நாட்டின் பெயரை அந்த தொற்றுநோய் பெற்றுக் கொண்டது. உண்மையில், அமெரிக்காவில் உள்ள கான்சாஸில் இருந்த ராணுவதளத்தில் இருந்த வீரர்களுக்கு கோழிகளிடமிருந்து வைரஸ் பரவியதாலேயே அந்த ஸ்பானிஷ் காய்ச்சல் தொடங்கியது. பிரிட்டிஷ் இந்தியாவிற்கு பின்னர் பரவிய அந்த தொற்றுநோயால் உயிரிழந்தவர்களில், இந்தியாவில் மட்டும் 60 சதவீதம் பேர்  இருந்தனர். அந்த நோய்க்கு ஒருபோதும் ’அமெரிக்க காய்ச்சல்’ என்று அப்போது பெயரிடப்படவில்லை. அமெரிக்காவில் விலங்கு – மனிதன் ஆகியோருக்கு இடையிலான பரவலால் ஏற்பட்ட சேதத்திற்கான செலவுகளை அமெரிக்காவிடமிருந்து  மீட்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் முயற்சிக்கவில்லை.

சீனாவும், கொரோனா வைரஸும்

தி லான்செட் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு முக்கியமான கட்டுரையில், பேராசிரியர் சாவோலின் ஹுவாங்  பின்வருமாறு எழுதியிருக்கிறார். ’முதலாவதாக அடையாளம் காணப்பட்ட  சார்ஸ்-கோவ்-2 நோயாளியிடம் நோயின் அறிகுறி காணப்பட துவக்க நாள் 2019 டிசம்பர் 1 ஆகும்’.அந்த வைரஸின் தன்மை, மனிதனிடமிருந்து மனிதனுக்கு அதனால் பரவ முடியுமா என்பவை குறித்து அதிக அளவிலான குழப்பம் ஆரம்பத்தில் இருந்தது. அந்த வைரஸ் ஏற்கனவே அறியப்பட்ட வைரஸ்களில் ஒன்றாகும் என்றும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு அது முக்கியமாக பரவுகிறது என்றும் கருதப்பட்டது.

Political show': Xi visits Wuhan as China coronavirus cases slow ...

புதிய கொரோனா வைரஸ் நிமோனியாவின் பரவல் குறித்து எச்சரிக்கை எழுப்பிய முதல் மருத்துவர்களில் ஒருவர், ஒருங்கிணைந்த சீன மற்றும் மேற்கத்திய மருத்துவ ஹூபே மாகாண மருத்துவமனையில் உள்ள சுவாசம் மற்றும் அவசர  பராமரிப்பு மருத்துவத் துறையின் இயக்குனரான டாக்டர் ஜாங் ஜிக்சியன் ஆவார்.வயதான தம்பதியினரிடம் அதிக அளவிலான காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பதை டாக்டர் ஜாங்  டிசம்பர் 26 அன்று கண்டார். அவர்களை மேலும் பரிசோதனை செய்து பார்த்த போது, இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பி, மைக்கோபிளாஸ்மா, கிளாமிடியா, அடினோவைரஸ் மற்றும் சார்ஸ் தொற்றுகள் அவர்களுக்கு இல்லை என்று நிராகரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டிருந்த அவர்களுடைய மகனின்  சி.டி ஸ்கேன், நுரையீரலின் உட்புறத்தில்  ஏதோ நிரம்பியிருப்பதைக் காட்டியது. அன்றைய தினமே, அதே அறிகுறிகளுடன் கடல் உணவு சந்தையில் விற்பனையாளராக இருந்த மற்றொரு நோயாளியும் வந்தார்.

இந்த நான்கு நோயாளிகள் குறித்து வூஹானின் ஜியாங்கன் மாவட்டத்தில் உள்ள சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திற்கு டாக்டர் ஜாங்  அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தார். அடுத்த இரண்டு நாட்களில், கடல் உணவு சந்தைக்குச் சென்றிருந்த மேலும் மூன்று நோயாளிகளை, அதே அறிகுறிகளுடன் டாக்டர் ஜாங் மற்றும் அவரது சகாக்கள் கண்டனர். அந்த மருத்துவமனையில் இருந்த ஏழு நோயாளிகளையும் விசாரிப்பதற்காக, ஹூபே மாகாண நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், டிசம்பர் 29 அன்று நிபுணர்களை அனுப்பி வைத்தது. வைரஸை அடையாளம் கண்டு, வெளிக் கொண்டு வரும்  போராட்டத்தில் டாக்டர் ஜாங் மற்றும் அவரது குழுவினர் செய்த மதிப்புமிக்க பணிகளை ஹூபே மாகாணம்  பிப்ரவரி 6 அன்று  அங்கீகரித்தது. அவர்களுடைய பணியை முடக்குவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

TamilsNow Newsகொரோனா வைரஸ்;மக்களிடையே ...

கண் மருத்துவர் டாக்டர். லி வென்லியாங்

வூஹான்  மத்திய மருத்துவமனையின் கண் மருத்துவரான டாக்டர். லி வென்லியாங் மற்றும் வூஹான் மத்திய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தலைவரான ஐ ஃபென் என்ற இரண்டு மருத்துவர்கள்  புதிய வைரஸ் குறித்து இருந்த குழப்பத்தை அகற்றி, தெளிவுபடுத்தும் முயற்சியில் குறிப்பிடத்தக்க பங்கையாற்றினர். ஒன்றும் தெளிவாக இல்லாத ஆரம்ப நாட்களில், போலிச் செய்திகளைப் பரப்பியதாக அதிகாரிகளால் அவர்கள் கண்டிக்கப்பட்டனர். பிப்ரவரி 7 அன்று அந்த வைரஸால் டாக்டர் லி கொரோனா இறந்து போனார். தேசிய சுகாதார ஆணையம், ஹூபே மாகாண சுகாதார ஆணையம், சீன மருத்துவ மருத்துவர் சங்கம் மற்றும் வூஹான் அரசாங்கம் ஆகியவை அவரது குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவித்தன. டாக்டர் லியை தகாத முறையில் கண்டித்ததை வூஹான் பொது பாதுகாப்பு பணியகம் மார்ச் 19 அன்று ஒப்புக் கொண்டதோடு, அதற்காக தன்னுடைய  அதிகாரிகளை தண்டிக்கவும் செய்தது. போலிச் செய்திகளை பரப்புவதை நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு, பிப்ரவரியில் மன்னிப்பு கேட்ட டாக்டர் ஐ ஃபென், பின்னர் வூஹான் ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி நிலையத்தால் பாராட்டப்பட்டார்.

டிசம்பர் 29க்குள் புதிய வைரஸைப் பற்றி  அறிந்து கொண்ட மாகாண அதிகாரிகள்,  அடுத்த நாள் சீனாவின் நோய் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதற்கு மறுநாள், டிசம்பர் 31 அன்று, மர்மமான தொற்று வூஹானில் முதலாவதாகத் தோன்றிய ஒரு மாதத்திற்குப்  பிறகு உலக சுகாதார அமைப்பிற்கு (WHO) சீனா தகவல் தெரிவித்தது. ஜனவரி 3ஆம் தேதிக்குள் இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டது; ஒரு வாரம் கழித்து, புதிய கொரோனா வைரஸின் மரபணு வரிசையை உலக சுகாதார அமைப்புடன் சீனா பகிர்ந்து கொண்டது. மரபணு வரிசையை சீனா வெளியிட்டதால், தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான உடனடி அறிவியல் பணிகள் உலகம் முழுவதும் நடந்தன; இப்போது சாத்தியமுள்ள 43 தடுப்பூசிகளில், நான்கு தடுப்பூசிகள் ஆரம்பகட்ட பரிசோதனையில்  இருக்கின்றன.

சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், சீன மருத்துவ அறிவியல் அகாடமி, சீன அறிவியல் அகாடமி ஆகியவற்றின்  நிபுணர்கள் அடங்கிய குழுவை சீன தேசிய சுகாதார ஆணையம் கூட்டியது; அவர்கள் வைரஸ் மாதிரிகள் மீது தொடர்ச்சியான சோதனைகளை நடத்தினர். தொற்றுநோய்க்கான உண்மையான காரணம் புதிய கொரோனா வைரஸ்தான் என்பதை ஜனவரி 8 அன்று அவர்கள் உறுதிப்படுத்தினர். அந்த வைரஸால் ஏற்பட்ட முதல் மரணம் ஜனவரி 11 அன்று அறிவிக்கப்பட்டது. ஜனவரி 14 அன்று, மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதற்கான எந்த ஆதாரமும் இன்னும் கிடைக்கவில்லை என்று வூஹான் முனிசிபல் சுகாதார இயக்கம் தெரிவித்தது. ஆனாலும் குறிப்பிட்ட வகையில் மனிதனிடமிருந்து மனிதனுக்கு  பரிமாற்றம்  என்பதற்கான சாத்தியம் இல்லை  என்று அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

Coronavirus pandemic could be over by June if countries mobilize ...

டாக்டர். ஜாங் நன்ஷான்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும், பிரபல சுவாச நிபுணரும், சீனாவில் சார்ஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்தவருமான டாக்டர் ஜாங் நன்ஷான், மனிதனிடமிருந்து மனிதனுக்கு புதிய கொரோனா வைரஸால் பரவ முடியும் என்று ஒரு வாரம் கழித்து, ஜனவரி 20 அன்று தெரிவித்தார். சில மருத்துவ ஊழியர்களும் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர். அன்றைய தினம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கெக்கியாங் ஆகியோர் வைரஸ் பரவல் குறித்து கவனம் செலுத்துமாறு  அனைத்து மட்ட அரசாங்க அமைப்புகளுக்கும் அறிவுறுத்தலை வழங்கினர். அவசரகால பதில் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு தேசிய சுகாதார ஆணையம் உள்ளிட்ட பிற அதிகாரப்பூர்வ அமைப்புகளுக்கு தகவல் கூறப்பட்டது.

இந்த வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகின்றது என்று நிறுவப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 23 அன்று வூஹானில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்த நாள், ஹூபே மாகாணம் முதலாம் நிலை எச்சரிக்கையை செயல்படுத்தியது. ஜனவரி 25 அன்று, ஒருங்கிணைப்புக் குழுவை பிரதமர் லி கூட்டினார்.  இரண்டு நாட்கள் கழித்து வூஹானை அவர் பார்வையிட்டார். இதுவரையிலும் அறியப்படாத வைரஸை எதிர்கொண்டதால், சீனாவால் வேறு ஏதாவது செய்திருக்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.வைரஸ் பரவுவதைத் தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததற்காக சீன அரசாங்கத்தையும், சீன மக்களையும், பிப்ரவரி 16 முதல் 24 வரைக்கும் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த உலக சுகாதார அமைப்பைச் சார்ந்த குழு தனது அறிக்கையின் மூலம் பாராட்டியது.

Coronavirus: What are the symptoms and how to protect yourself

ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் வூஹானுக்கு வந்தனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கென்று இரண்டு புதிய மருத்துவமனைகள் கட்டப்பட்டன. மேலும் ஊரடங்கில் இருந்த குடும்பங்களுக்கு உதவுகின்ற வகையில் பல்வேறு குடிமை அமைப்புகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்தன. நோய்த்தொற்று அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளிலும், அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்களை தனிமைப்படுத்தியும் சீன அதிகாரிகள் வைத்திருந்ததை புதிய ஆய்வு ஒன்று சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறான இலக்கு  சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தொற்று சங்கிலியில் இருந்தவர்களை அடையாளம் காணவும், அதன் மூலமாக அந்த சங்கிலியை உடைக்கவும் முடிந்தது.

உலகமும்சீனாவும்

வூஹானில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் 3.5 கோடி மக்கள் வசிக்கின்ற இந்திய மாநிலமான கேரளாவின் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா அவசர நடவடிக்கைகளைத் தொடங்கினார். அவர் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. எந்த மாதிரியான பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஷைலஜாவுக்கும் அவரது குழுவினருக்கும், சீனா அப்போது செய்து கொண்டிருந்தது கற்றுக் கொடுத்தது. இந்தியாவின் இந்தப் பகுதியில் அவர்களால் வைரஸைக் கட்டுப்படுத்த முடிந்தது.

ஆரம்பத்திலேயே பிரச்சினையின் தீவிரம் குறித்து அமெரிக்காவிற்குத் தெரிவிக்கப்பட்டது. விடுமுறையில் இருந்த அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தலைவரான டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட்டை சீன நோய் கட்டுப்பாட்டு  மையத்தின் அதிகாரிகள் புத்தாண்டு தினத்தன்று அழைத்தனர். அவர்கள் சொன்னது அவரைத் திணறடித்தது என்று நியூயார்க் டைம்ஸ்  எழுதியது. சீன நோய் கட்டுப்பாட்டு  மையத்தின் தலைவரான டாக்டர் ஜார்ஜ் எஃப்.காவ் சில நாட்களுக்குப் பிறகு ரெட்ஃபீல்டுடன் பேசினார். அவ்வாறு பேசிய போது டாக்டர் காவ் கண்ணீர் வடித்தார். அந்த எச்சரிக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஒரு மாதம் கழித்து, ஜனவரி 30 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அக்கறையில்லாத நிலைப்பாட்டை எடுத்தார். ’இது  எங்களுக்கு நல்ல முடிவைக் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது குறித்து என்னால்  உறுதியளிக்க முடியும்’ என்று கொரோனா வைரஸைப்  பற்றி அவர் கருத்து தெரிவித்தார். மார்ச் 13 வரை தேசிய அளவிலான அவசரநிலையை அவர் அறிவிக்கவில்லை. அந்த நேரத்தில் அமெரிக்காவில் வைரஸ் பரவத் தொடங்கியிருந்தது.

China battles coronavirus outbreak: All the latest updates | China ...

உலகெங்கிலும் இருந்த மற்ற நாடுகளும் அவ்வாறு கவலையற்றே இருந்தன. ஆசிய காலராவால் பிரான்ஸ் பாதிக்கப்படாது என்று கருதிய 1832ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசியல்வாதிகளைப் போலவே அந்த நாடுகள் அனைத்தும் இருந்தன. ஆசிய காலரா என்று 1832ஆம் ஆண்டு எதுவும் இருந்திருக்கவில்லை. உண்மையில் மோசமான சுகாதார நிலையில் உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கின்ற காலரா மட்டுமே அப்போது இருந்தது. அதேபோல், சீன வைரஸ் என்று  எதுவும்  இப்போது இல்லை; சார்ஸ்-கோவ்-2 மட்டுமே உள்ளது.  சில சோதனைகள், தவறுகளுக்குப் பின்னர், இந்த வைரஸை எதிர்கொள்கின்ற வழியை சீன மக்கள் நமக்குக் காட்டித் தந்திருக்கின்றனர். அவர்கள் கற்றுத் தந்திருக்கும் பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. உலக சுகாதர அமைப்பு சொல்வதைப் போல, “சோதனை, சோதனை, சோதனை”, அதற்குப் பின்னர் ஊரடங்கு, தனிமைப்படுத்திக் கொள்ளுதல், தனிமைப்படுத்தி வைத்தல் ஆகியவற்றை கவனமாக மேற்கொள்ள வேண்டும். வைரஸை எதிர்த்துப் போராடுவதில் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொண்டுள்ள சீன மருத்துவர்கள், இப்போது ஈரான், இத்தாலி மற்றும் பிற இடங்களுக்கு சர்வதேச உணர்வு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை கொண்டு  சென்றிருக்கிறார்கள்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை மார்ச் 4 அன்று, உலக சுகாதார அமைப்பின் குழுவை  சீனாவுக்கு வழிநடத்திச் சென்ற டாக்டர் புரூஸ் அய்ல்வர்டை பேட்டி கண்டது. அந்த வைரஸ் குறித்து சீனா எவ்வாறு நடந்து கொண்டது என்று கேட்டபோது, ’போர்க்காலத்தைப் போலவே அவர்கள் அணிதிரட்டப்படுகிறார்கள், வைரஸ் பற்றிய பயம் அவர்களைத் தூண்டிவிடுகிறது. சீனாவின் மற்ற பகுதிகளையும், உலகத்தையும் பாதுகாப்பதில் தாங்கள் முன்னணியில் இருப்பதை உண்மையிலேயே அவர்கள் உணர்ந்திருந்தார்கள்’ என்று அவர் கூறினார்.

https://peoplesdispatch.org/2020/03/31/growing-xenophobia-against-china-in-the-midst-of-corona-shock/

(தொடரும்)

Dr. Vijay Prasad on Obama's Middle East Policies - YouTube

விஜய் பிரசாத், வெயன் ஜு, டு சியாஜுன்

2020 மார்ச் 31 , பீப்பிள்ஸ் டிஸ்பாட்ச் இணைய இதழ்

தமிழில் தா.சந்திரகுரு