நிலாவில் பிறந்த முதல் உயிர் (The first life born on the moon) சீனா சாங்'இ - ஏற்காடு இளங்கோ (Yercaud Elango) - China's Chang'e-4 moon lander

நிலாவில் பிறந்த முதல் உயிர் – ஏற்காடு இளங்கோ

நிலாவில் பிறந்த முதல் உயிர்

நிலாவை நோக்கிய ஆய்வுப் பயணம் 1959 ஆம் ஆண்டில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டில் நீல் ஆர்ம்ஸ்ராங் மற்றும் ஆல்டிரின் ஆகிய இருவரும் முதன் முதலாக நிலவில் இறங்கி சரித்திரம் படைத்தனர். நிலா சார்ந்த ஆய்வுப் பயணம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை நிலாவிற்கு அனுப்பி ஆய்வுகளைச் செய்து வருகின்றன.

நிலவின் மறுபக்கம்

நிலா தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, பூமியை ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இது தன்னைத் தானே சுற்ற சராசரியாக 29 நாட்கள் ஆகிறது. பூமியைச் சுற்றிவர 27.322 நாட்கள் (27 நாட்கள் 7 மணி 43 நிமிடங்கள்) ஆகிறது. ஆகவேதான் பூமியில் உள்ள நமக்கு நிலவின் ஒரு பக்கம் மட்டுமே எப்போதும் தெரிகின்றது.

நிலவின் இன்னொரு பக்கத்தை, அதாவது மறு பக்கத்தைப் (Far Side) பார்க்கவே முடியாது. இதற்குக் காரணம் இருக்கிறது. நிலவு தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்வதற்கும், பூமியை ஒருமுறை சுற்றி வருவதற்கும் ஆகும் காலம் ஏறக்குறைய சமமாக இருக்கிறது. ஆகையால் நாம் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரமாகும். இதுவே நிலாவில் ஒரு நாள் என்பது 28 நாட்கள் ஆகும். நிலவிலும் இரவு, பகல் உண்டு. அங்கு பகல் என்பது14 நாட்கள் மற்றும் இரவு என்பது 14 நாட்கள் என்ற அடிப்படையில் இருக்கும். இப்படி ஒரு வித்தியாசமான சூழலை நிலவு கொண்டிருக்கிறது.

 நிலாவில் பிறந்த முதல் உயிர் (The first life born on the moon) சீனா சாங்'இ - ஏற்காடு இளங்கோ (Yercaud Elango) - China's Chang'e-4 moon lander

நிலாவின் மறுபக்கம் கரடு, முரடானது. அது பூமியிலிருந்து தொலைதூரத்தில் உள்ளது. மறுபக்கத்தை அடைவது என்பது மிகவும் கடினமானது. ஏனென்றால் அதன் நிலப்பரப்பு பெரிய பள்ளங்களைக் கொண்டுள்ளது. மேலும் சமதளப் பகுதி என்பது மிகக் குறைவாகவே உள்ளது.

நிலவின் மறுபக்கம் ஆராயப்படாமலே இருந்து வருகிறது. நிலவின் மறுபக்கத்தில் பனிக் கட்டியின் தடயங்கள் இருக்கலாம். அப்படி பனிக்கட்டிகள் இருந்தால் அதன் மூலம் தண்ணீர் கிடைக்கும். மேலும் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் இருப்பதை ஆய்வு செய்ய முடியும். ஆகவே நிலவின் மறுபக்கத்தை ஆய்வுச் செய்ய வேண்டும் என விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டினர்.

நிலா சார்ந்த ஆய்வுப் பயணம் தொடங்கியதில் இருந்து இதுவரை 18 விண்கலங்கள் மட்டுமே நிலவின் தரையில் பாதுகாப்பாக இறங்கியுள்ளன. இவற்றில் 6 பயணங்கள் மூலம் மனிதர்கள் நிலவில் இறங்கினர். அங்கு பல ஆய்வுகள் செய்த பிறகு பூமி திரும்பினர். மேலும் 12 ஆளில்லாத விண்கலங்கள் நிலவில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டன.

நிலவிற்குப் பயணம் மேற்கொண்ட விண்கலங்கள் பூமியைப் பார்த்த நிலவு பகுதியிலேயே இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டன. ஆனால் 2019 ஆம் ஆண்டில் சீனா அனுப்பிய விண்கலம் நிலவின் மறு பக்கத்தில் இறங்கி சாதனைப் படைத்தது. இதன் மூலம் நிலவின் ஆராயப்படாத மறு பக்கத்தில் கால் பதித்த ஒரே நாடு என்ற சாதனையை சீனா நிகழ்த்தியது.

சாங்’இ

 நிலாவில் பிறந்த முதல் உயிர் (The first life born on the moon) சீனா சாங்'இ - ஏற்காடு இளங்கோ (Yercaud Elango) - China's Chang'e-4 moon lander

சீனப் புராணங்களில் சந்திரனின் கடவுளாக சாங்’இ கருதப்படுகிறார். இந்தக் கடவுளின் நினைவாக நிலவின் ஆய்வுக்கு சாங்’இ (Chang’e) எனப் பெயர் சூட்டப்பட்டது. சீனா சாங்’இ1 என்ற செயற்கைக்கோளை 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று நிலவுக்கு அனுப்பியது. அது வெற்றிகரமாக நிலாவை அடைந்தது. அது முழு நிலவையும் ஸ்கேன் செய்தது. மேலும் 3D வரைபடத்தை உருவாக்கியது.

அதன் பிறகு சாங்’இ2 என்ற செயற்கைக்கோள் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று நிலாவிற்கு அனுப்பப்பட்டது. அது 5 நாட்களுக்குள் நிலவை அடைந்தது. நிலவை மிகவும் விரிவாக வரைபடம் தயாரித்தது. அதன் பிறகு அது பூமி – சூரியன் எல்2 லக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி ஆய்வுச் செய்வதற்காகச் சென்று விட்டது.

சாங்’இ3 என்ற விண்கலம் லாங் மார்ச் 3B ராக்கெட்டில் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 2 அன்று ஏவப்பட்டது. அது நிலவில் டிசம்பர் 14 அன்று தரை இறங்கியது. நிலவில் தரையிறங்கிய முதல் சீன விண்கலம் இதுவாகும். இதில் யுடு (Yutu) என்ற 140 கிலோ எடை கொண்ட சந்திர ரோவர் இருந்தது. இது நிலாவில் 3 சதுர கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தது. நிலவில் மூன்று மாதங்கள் ஆய்வுகளை மேற்கொண்டது.

சாங்’இ4

சீனா நிலவிற்கு அனுப்பிய மிக முக்கியமான விண்கலம் சாங்’இ4 ஆகும். இந்த விண்கலம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 7 அன்று ஏவப்பட்டது. இது டிசம்பர் 12 அன்று நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இதன் தரையிறங்கும் விண்கலம் மிக மெதுவாக 2019 ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று நிலவின் தரையை அடைந்தது.

இந்த விண்கலம் இறங்கிய இடம் நிலவின் தொலைவில் உள்ள தென் துருவ எய்ட்கன் படுகையில் (Aitken Basin) உள்ள வான் கார்மன் பள்ளம் (Von Karman Creater) ஆகும். இந்த இடம் நிலவின் மறுபக்கம் ஆகும். இது நிலவு ஆராய்ச்சிப் பயணத்தில் சீனா நிகழ்த்திய ஒரு புதிய வரலாற்று சாதனையாகும். இது நிலவின் மறுபக்கத்தில் இறங்கிய முதல் விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது. இது இறங்கிய இடத்திற்கு ஸ்பேடியோ தியான்ஹே (Spatio Tianhe) எனப் பெயர் சூட்டப்பட்டது.

 நிலாவில் பிறந்த முதல் உயிர் (The first life born on the moon) சீனா சாங்'இ - ஏற்காடு இளங்கோ (Yercaud Elango) - China's Chang'e-4 moon lander

இந்த விண்கலம் 1,200 கிலோ எடை கொண்டது. இதில் யுடு-2 என்ற ரோவர் இடம் பெற்றிருந்தது. இதன் எடை 140 கிலோ ஆகும். இது 1.5 மீட்டர் நீளமும்,1 மீட்டர் அகலமும்,1 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த ரோவர் 6 சக்கரங்களால் இயங்கக் கூடியது. இந்த ரோவர் தரையிறங்கிய சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு செயல்படுத்த தொடங்கியது.

இதன் இயக்க காலம் 3 மாதங்கள் ஆகும். ஆனால் இதை வடிவமைத்த சீனப் பொறியாளர்கள் சில ஆண்டுகள் செயல்படும் என நம்பினர். ஆனால் இந்த ரோவர் 5 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சோவியத் யூனியனின் லுனோகோட் -1 என்ற ரோவர் 322 நாட்கள் சந்திரனில் செயல்பட்டது. அதன் சாதனையை யுடு – 2 ரோவர் முறியடித்தது. இது நிலவின் மண் மற்றும் பாறையில் உள்ள இரசாயனம் ஆகியவற்றை ஆய்வுச் செய்துக் கொண்டிருக்கிறது.

விதை முளைத்தல்

 நிலாவில் பிறந்த முதல் உயிர் (The first life born on the moon) சீனா சாங்'இ - ஏற்காடு இளங்கோ (Yercaud Elango) - China's Chang'e-4 moon lander

நிலவில் தரை இறங்கிய விண்கலத்தில் பல்வேறு ஆய்வு சாதனங்கள் இருந்தன. இதில் ஒரு சிறு உயிர்க்கோள அமைப்பும் (Mini Lunar Biosphere) இடம் பெற்றிருந்தது. இந்த உயிர்க்கோளம் நன்கு மூடப்பட்டு சீல் செய்யப்பட்டிருந்தது. இது ஒரு வாளி (Bucket) போன்ற கொள்கலன் ஆகும். இது உருளை வடிவமானது. இது 18 சென்டிமீட்டர் உயரமும், 16 சென்டிமீட்டர் விட்டமும் கொண்டது. இதன் எடை 3 கிலோ ஆகும்.

இந்தக் கொள்கலனில் நீர், மண் மற்றும் காற்று ஆகியவை இடம் பெற்றிருந்தது. இதில் பருத்தி விதை, உருளைக் கிழங்கு, கடுகு விதை, அரபிடோப்சிஸ் தாலியானா எனும் ஒரு பூச்செடியின் விதை, அத்துடன் ஈஸ்ட் மற்றும் பழ ஈ முட்டைகள் ஆகியவற்றை விஞ்ஞானிகள் வைத்திருந்தனர். இந்தக் கொள்கலனில் பூமியைப் போன்ற சுற்றுச்சூழல் அமைப்பு இருந்தது.

ஈ முட்டையில் குஞ்சு பொரித்தால், லார்வாக்கள் கார்பன் டை ஆக்சைடை உற்பத்தி செய்யும். விதைகள் முளைத்தால், தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். தாவரங்களும், லார்வாக்களும் ஒன்று சேர்ந்து கொள்கலனுக்குள் இணைந்து வாழமுடியும் என நம்பினர்.

இந்த உயிர்க்கோளத்திற்குள் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அளவைக் கட்டுப்படுத்த ஈஸ்ட் வைக்கப்பட்டது. அத்துடன் இது ஈக்கள் மற்றும் இறந்த தாவரக் கழிவுகளைச் சிதைத்து பூச்சிகளுக்கு கூடுதல் உணவு ஆதாரத்தை வழங்கும். இந்த உயிரியல் பரிசோதனைக் கொள்கலனை 28 சீனப் பல்கலைக்கழகங்களால் வடிவமைக்கப்பட்டது ஆகும்.

விண்கலம் பூமியிலிருந்து நிலவின் தரையை அடைவதற்கு 25 நாட்கள் ஆனது. அதுவரை உயிரியல் தொழில்நுட்பம் மூலம் இந்த விதைகள் செயலற்ற நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. நிலத்தின் தரையில் விண்கலம் இறங்கிய பிறகு 3 மணி நேரம் கழித்து, உயிர்க்கோளத்தின் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆக சரி செய்யப்பட்டது.

கொள்கலனுக்குள் சூரிய ஒளி கிடைக்கச் செய்தனர். விதைகளுக்குத் தண்ணீர் விடுவதற்கு தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டது. தானியங்கி கருவி மூலம் நீர் பாய்ச்சப்பட்டது. பருத்தி விதை ஒன்று ஜனவரி 15 அன்று முளைத்தது. இது நிலவில் முளைத்த முதல் தாவரமாகும். நிலவில் முதன்முதலாக உயிரியல் வளர்ச்சி ஏற்பட்டது.

 நிலாவில் பிறந்த முதல் உயிர் (The first life born on the moon) சீனா சாங்'இ - ஏற்காடு இளங்கோ (Yercaud Elango) - China's Chang'e-4 moon lander

சீனாவிற்கு முன்பு நிலவில் இது போன்ற பரிசோதனையை எந்த நாடும் செய்யவில்லை. உயிர்க்கோளத்தின் உள்ளே ஏற்படும் வளர்ச்சியைப் புகைப்படம் எடுக்க கேமரா இருந்தது. இது 170 படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. நிலவில் பருத்தி விதை முளைத்ததை சீனா புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டது. இது நிலவில் தோன்றிய முதல் உயிராகும். இதன் மூலம் நிலவில் தாவரங்களை வளர்க்க முடியும் என்பதை சீனா நிரூபித்தது. இது விண்வெளி வரலாற்றில் ஒரு மிகப் பெரிய சாதனையாகும்.

ஜனவரி 16 அன்று நிலவில் இரவு தொடங்கியது. அதனால் சூரிய ஒளி கிடைக்கவில்லை. இதன் வெளிப்புற வெப்பநிலை மைனஸ் 52 டிகிரி செல்சியஸ் ஆக வீழ்ச்சி அடைந்தது. இதனால் உயிர்க் கோளத்திற்குள் 24 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையைப் பராமரிக்க முடியவில்லை. இதன் பிறகு பருத்தி தாவரம் இறந்து விட்டது. அதன் பிறகு இந்தப் பரிசோதனை நிறுத்தப்பட்டது.

ஆய்வு நிலையம்

சாங்’இ5 என்ற விண்கலம் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று நிலவின் மறுபக்கத்தில் இறங்கியது. இது 1,731 கிராம் சந்திர மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பியது. இதன் அடுத்த பயணமாக சாங்’இ6 என்ற விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் 2024 ஆம் ஆண்டு மே மாதம் இறங்கியது. இது எய்ட்கன் படுகையில் 53 நாட்கள் ஆய்வு மேற்கொண்டது. மண், தூசி மற்றும் பாறை மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டு பூமி திரும்பியது.

சீனா 2030 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவிற்கு அனுப்ப உள்ளது. நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை இறக்கி, அங்கு ஒரு ஆய்வு நிலையத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நிலாவில் ஒரு ஆய்வு நிலையம் உருவாகப் போகிறது என்பது மகிழ்ச்சியான தகவல் ஆகும்.

கட்டுரையாளர்:

 நிலாவில் பிறந்த முதல் உயிர் (The first life born on the moon) சீனா சாங்'இ - ஏற்காடு இளங்கோ (Yercaud Elango) - China's Chang'e-4 moon lander

ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. கல்லிங்கரை கருணாநிதி

    நிலாவில் பருத்தி விதை போட்டு முளைத்த ஆய்வை செய்த சீனாவின் முயற்சியை பாராட்டுக்குரியது. நாம் இஸ்ரோ மூலம் எண்ணற்ற கோள்களை வான்வெளியில் செலுத்தி உலகளவில் நாம் பெருமை அடைந்தாலும் இன்னும் நாம் செல்ல வேண்டியத் தூரம் இன்னும் அதிகமாகவுள்ளது. அறிவியல் மனப்பான்மையை வளர்க்க நாம் பள்ளி கல்லூரிகளில் முயற்சிக்க வேண்டும்!
    திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது பொருள் தேடுவதைக் குறித்தாலும் பிறநாடுகள் அறிவியலில் நிகழ்த்தும் சாதனைகளை நம் தாய்மொழியில் கொண்டு வந்து சேர்க்கும் கட்டுரையாளருக்கு மிகுந்த பாராட்டுக்கள்! Book day இணைய தளத்திற்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *