வாங் ஹாவோஸ் (Wang Haoze) என்பவர் ஒரு சீன விண்வெளிப் பொறியாளர் மற்றும் விண்வெளி வீரர் ஆவார். இவர் விண்வெளிக்குச் சென்ற மூன்றாவது சீனாவின் பெண் வீராங்கனை மற்றும் விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் சீனப் பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மஞ்சு என்ற சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்தப் பயணத்தின் மூலம் இவர் சீன நாட்டின் நாயகியாக மாறினார்.
கல்வி
இவர் 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சீனாவின் ஹெபே மாகாணத்தின் செங்டேயில் உள்ள நுவான்பிங் கவுண்டியில் பிறந்தார். இவரது தந்தை போக்குவரத்து காவல் அதிகாரியாகப் பணிபுரிகிறார். இவரது தாயார் ஒரு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியராக உள்ளார். இவரது தாயார் இளம் வயதிலேயே பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். குடும்பத்தில் போதுமான பணம் இல்லாமல் போனதால், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், விவசாய வேலைகளுடன் சேர்ந்து தனியாகப் படித்து, ஒரு பள்ளியின் ஆசிரியரானார். ஆகவே தனது மகளை இன்னும் கடினமாக படிக்க ஊக்கம் அளித்தார்.
இவர் கிழக்கு சீனாவின் சியான்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங்கில் உள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆற்றல் மற்றும் மின் பொறியியலில் முதன்மைப் பட்டம் பெற்றார். மேலும் பல்கலைக்கழகத்தின் தடகள போட்டியில் பங்கேற்றார். ஜியாங்சு மாகாண விளையாட்டுப் போட்டிகளில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை அடிக்கடி முன்னிலைப்படுத்தினார். அவர் மாகாண அளவில் நீண்ட தூர ஓட்டப் பந்தயங்களில் வெற்றி பெற்றார். அதே சமயத்தில் கல்வியிலும் சிறந்து விளங்கினார். இவர் உயர்தரத்தில் தேர்ச்சி பெற்றார். ஆகவே அதே பல்கலைக்கழகத்தில் மீண்டும் சேர்ந்து, படிப்பைத் தொடர அனுமதி வழங்கப்பட்டது.
இவர் பல்கலைக்கழகத்தில் பிளாஸ்மா வெடிப்பு பற்றி தொடர்ந்துப் படித்தார். இது அவருக்கு முற்றிலும் புதிய துறையாக இருந்தது. இது அவருக்கு மிகவும் சிரமத்தைத் தந்தது. இருப்பினும் அவர் கடினமாக உழைத்தார். அதன் மூலம் இவர் 2015 ஆம் ஆண்டில் வெப்ப இயற்பியலில் பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்வித்துறையில் ஒரு புதிய துறையைத் தொடர கடினமான ஆராய்ச்சி செய்வது அவசியம். கடினமாக உழைப்பதன் மூலம் வெற்றி பெற முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.
தொழில்

இவர் டிசம்பர் 2009 இல் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். இவர் முதுகலைப் பட்டப் படிப்பை முடிப்பதற்கு முன்பு, ராக்கெட் இயந்திரங்களின் ஆரம்ப ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக அவர் சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்தார். பின்னர் 11 ஆவது விண்வெளி உந்துவிசை தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த பொறியாளராகப் பணியாற்றினார். ராக்கெட் எஞ்சின் வடிவமைப்பாளராக பணியாற்றிய போது தெரியாதவற்றை ஆராய்வதையும், வெல்வதையும் அவர் மிகவும் விரும்பினார்.
இவர் ஜனவரி 2021 இல் இராணுவத்தில் சேர்ந்தார். தற்போது அவர் சீன மக்கள் விடுதலை இராணுவ விண்வெளி வீரர் படையில் விண்வெளி விமானப் பொறியாளர் பதவியை வகிக்கிறார். இதில் 4 ஆம் வகுப்பு விண்வெளி வீரராக உள்ளார். இவர் இராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவி வகிக்கிறார்.
விண்வெளிப் பயணம்
இவர் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விண்வெளி வீரருக்கானப் பயிற்சியில் ஈடுபட்டார். உடல் மற்றும் மனதின் வரம்புகளைத் தொடர்ந்து ஒருநிலையில் வைக்க வேண்டி இருந்தது. அவர் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால்களில் ஒன்று மையவிலக்கு விண்கலத்தின் ஆறு மடங்கு தீவிர ஈர்ப்பு விசையை உருவகப்படுத்தும் ஒரு இயந்திரம் ஆகும். இந்த இயந்திரத்தில் முதல் முறையாக பயிற்சி பெற்றபோது தனது நுரையீரல் கிழிந்து போவது போல் சுவாசிக்க முடியாமல் தடுமாறினார்.
ஷென்சோ-19 என்ற விண்கலம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று விண்வெளிக்கு ஏவப்பட்டது. இதில் தளபதியாக காய் சூஷே, ஆபரேட்டராக சாங் லிங்டாங் மற்றும் விமானப் பொறியாளராக வாங் ஹாவோஸ் ஆகிய 3 வீரர்கள் பயணம் செய்தனர். விண்வெளிப் பாதைக்குள் நுழைந்தபோது திடீரென மிதந்தேன், அது மாயாஜாலமானது எனக் கூறினார். இவர்கள் சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். ஷென்சோ -19 என்பது டியாங்காங் விண்வெளி நிலையத்திற்குச் சென்ற 8 ஆவது விண்கலமாகும். இவர் விண்வெளியில் 182 நாட்கள், 8 மணி நேரம், 42 நிமிடங்கள் இருந்தார்.
இவர் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று விண்வெளியில் இருந்து புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று, இவர் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வாழ்த்துக்களை அனுப்பினார். இவர் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று பூமித் திரும்பினார். நான் ஒரு விண்வெளி வீரராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கூறினார். ஆனால் அவரது அதிர்ஷ்டத்திற்கு பின்னால் பல வருட அயராத முயற்சிகள், உறுதியான அறிவியல் அடித்தளமும் உள்ளன.
எழுதியவர் :

✍️ – ஏற்காடு இளங்கோ
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

