சீனத் தலைவர் சியாங் – கே_ஷேக் என்ற இந்த புத்தகத்தை எழுதியவர் ப.ராமஸ்வாமி .இது கலைமகள் காரியாலயம் சென்னை மயிலாப்பூரில் இருந்து 1945இல் வெளியிட்டுள்ள புத்தகம் , இதன் விலை மூன்று ரூபாய் .
சீன நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த சேனாதிபதி என்று அழைக்கப்பட்ட சியாங் – கே_ஷேக் , போரில் தலைமைதாங்கி எவ்வாறு வெற்றிக்கு வழி கூறுகிறார் என்பது இந்த புத்தகத்தின் பின் பாதியாக அமைந்திருக்கிறது.
வரலாற்றுப் பாடத்தில் படிப்பதோடு சரி, டாக்டர் ஸன் – யாட் _லென் , சியாங் – கே – ஷேக்
இவர்களைப் பற்றியெல்லாம் .இவர்களைக் குறித்த மிகப்பெரிய விரிவான வரலாற்றை இந்த புத்தகம் தருகின்றது. சீனாவுக்கென்று ஒரு பாரம்பரியமும் கலாச்சாரமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு உரிய பண்பாடு என்ற அந்த காலகட்டத்திலிருந்து மன்னர் ஆட்சி நடந்திருக்கிறது. மன்னர் ஆட்சியின் போது சீனா எவ்வாறு உலக நாடுகளால் துண்டாடப்பட்டது என்று முதல் பகுதியில் ஒவ்வொரு பக்கங்களிலும் நமக்கு விரிவான வரலாறாக இடம்பெற்றுள்ளது .
சீனாவினுடைய நாகரிகம் பண்பாடு அதன் கலை குறித்த ஆர்வம் மக்களுடைய பண்புகளில் ஒப்பில்லாத சமுதாயம் உலகத்திற்கே ஒரு புதுமையாக இருந்து என்றெல்லாம் சிறப்பு பெற்று இருந்த சீனா, சீனாவையும் புரட்சியையும் பிரிக்கவே முடியாது என்று ஒரு நிலைக்கு தள்ளப்பட்டது எவ்வாறு என்பது குறித்தான வரலாறுதான் இந்த சீன தலைவர் ஷேக் குறித்த புத்தகம்.
சியாங் கே ஷேக்
இதில் சீனாவின் புராதன நாகரிகம் குறித்தும் சீனாவும் வல்லரசுகளும் அவர்களுக்கிடையே இருந்த போராட்டம் விரிவாகத் தரப்பட்டுள்ளது. நாம் கணித புத்தகத்தில் படிக்கும் சமச்சீர் (symmetry) என்ற சொல்லின் பொருளை சீனர் 17ஆம் நூற்றாண்டிலேயே கவிதைகளாகவே வடித்திருக்கிறார்கள் , அது குறித்த விளக்கங்களும் கூட விளக்கங்களும் இந்த புத்தகத்தில் உள்ளது .
கன்பூசியஸ் மதம் புத்த மதம் இது குறித்தெல்லாம் ஆரம்ப கால வரலாற்றை கொடுத்துள்ள இந்த புத்தகத்தில் சீனாவின் வல்லரசுகளும் என்ற தலைப்பில் தான் உண்மையான வரலாறு ஆரம்பமாகிறது.
மன்னராட்சியில் நூறாண்டுகளுக்கும் மேலாக சீனா எவ்வாறெல்லாம் வல்லரசு நாடுகளின் ஏகாதிபத்திய அழிவுகளுக்கு ஆளானது என்ற பக்கங்கள் நம்மை அடப் பாவமே என உச் கொட்ட வைக்கின்றன.
சீனாவின் ஜனத்தொகை குறித்து நமக்கு தெரியும் உலகிலேயே அதிக மக்கள் தொகையை பெற்ற சீனா , அதனுடைய நிலப் பரப்பு ,அவருடைய பகுதிகளில் சீன மக்களின் ஆறு பிரிவுகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன .
சீனர்கள் பெரும்பாலும் கிராமங்களில் வசித்து விவசாயத் தொழிலை முக்கியமாக செய்து வந்திருக்கின்றனர் . சீனாவில் பிறப்பை வைத்து மக்களை பிரிவுபடுத்த வில்லை , அவர்கள் செய்யும் தொழிலை வைத்து தான் வாழ்ந்து வந்தனர் என்பது படிப்பதற்கே மகிழ்வாக உள்ளது .
இங்கிலாந்து ஜெர்மனி பிரான்சு இத்தாலி என எல்லா நாடுகளிலும் இருந்து வந்த அந்திய அரசுகள் சீனாவை கொத்தித் தின்ன ஆரம்பிக்கின்றன .
மனைவி சூங் மே லிங்க் உடன் சியாங் கே ஷேக்
முதன்முதலில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பு அபினியை ஒட்டி வளர ஆரம்பித்து நாடே சின்னா பின்னமாகிறது . அபின் என்று அழைக்கப்படக்கூடிய போதை வஸ்து என்று சொல்கிறோம் அல்லவா அதை சீனாவிற்குக் கொண்டு சென்று அங்குள்ள மக்களை குறிவைத்து சாய்த்தநிலை 1700களில் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் சந்தைகள் கடைகள் எல்லாம் அபினி கிடைக்கும்படி கிழக்கிந்தியக் கம்பெனியினர் வாய்ப்புகளை உருவாக்கி மக்களை எந்நேரமும் போதையில் ஆழ்த்திய கதைகள்இன்று நமது நாட்டின் டாஸ்மார்க் வர்த்தகத்தைக் கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்து ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது. அபினி சீன சமூகத்தையே உருக்குலைத்த வரலாறு வேதனையாக உள்ளது.
பல்வேறு நாடுகளும் எப்போது பார்த்தாலும் சீனாவில் பிரச்சினைகளை உருவாக்கி உடன்படிக்கை செய்து சீன நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொண்டு சீனாவில் பயங்கர பிரச்சினைகளை உருவாக்கி இருக்கிறார்கள். ஜப்பான் தான் இதில் மிகப் பெரிய பிரச்சனையை சீனாவிற்கு தொடர்ந்து கொடுத்து வருகிறது அதனுடைய வரலாறு தான் இந்த புத்தகம் முழுக்க வருகிறது.
மன்னராட்சி ஒழிந்த பிறகு ஜப்பான் எப்படி மீட்டு எடுக்கப்படுகிறது டாக்டர் ஸன்யாட்சன் எவ்வாறு வழிநடத்துகிறார் , அவருக்குப் பிறகு அவரோடு துணையாய் இருந்து ராணுவத்தில் இருந்து வெளிவந்து படைத்தளபதியாக இருந்த சீன தளபதியாக வளர்ந்த சியாங் காய் ஷேக் எவ்வாறு சீனாவை மீட்டுக் கொண்டு வருகிறார் என்பது தான் இந்த புத்தக வரலாறு.
மாவோவுடன் சியாங் கே ஷேக்
ஆண்டுக் கணக்கில் ஏகாதிபத்திய நாடுகள் சீனாவுடன் செய்த போர்கள் எல்லாம் தகவல்களாகவும் காட்சிகளாகவும் மிக அழகாகக் கூறப்பட்டுள்ளன . ஸன்யாட் சென் எவ்வாறு சீனாவிற்கு தலைமைப் பொறுப்பை ஏற்கிறார், ஒரு காலகட்டத்தில் அவர் மற்றொருவரிடம் குடியரசுத் தலைவர் பொறுப்பை ஒப்படைத்து ஏமாந்து போவதும் அதற்கு பிறகு சீனா மீண்டும் பழைய நிலைமைக்கு ஆளானது, அதன் பிறகு உள்ளே அங்கே ஷேக் உள்ளே வருவதும் நவஜீவன் இயக்கம் உருவாக்கப்படுவது, அவருடைய வரலாறு, பிறப்பு வளர்ப்பு, அவருடைய குணாதிசயங்கள் எப்படி என இந்தப் புத்தகம் தகவல்களை சுவாரஸ்யமாகத் தருகிறது
அதோடு சியாங் கே – ஷேக்கின் மனைவி மெய்லிங் தேவி குறித்து படிக்கும் பொழுது நமக்கு நினைவிற்கு வருகிறார் மார்க்ஸ்ஸின் காதல் மனைவி ஜென்னி. இவரைப் போலவே சீனாவின் விடுதலைப் புரட்சியில் மெய்லிங் தேவி ஷேக்கிற்கு துணை நின்றிருக்கிறார்.
ஆக மட்டும் குள்ள நரித்தனம் செய்த ஜப்பான் , கடைசியில் சீனாவை எதிர்க்க முடியாமல் திண்டாடுகிறது. எல்லா நாடுகளும் சீனாவிற்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடிய ஒரு கால கட்டம் வருகிறது. இடையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பல ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சி அங்கு உருவாகி , சீனாவிற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகளை கொள்ளைக்காரர்கள் என்று கூறியே அவர்களைத் தடுத்து அவர்களுக்கு பிரச்சினை கொடுக்கிறார் சியாங் – கே – ஷேக் என்பது இங்கே விளக்கமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
டாக்டர் ஸன் யாட் சென் இறப்பதற்கு முன் குறித்து வைத்தபடி புரட்சியின் லட்சியம் சீனாவில் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுவது என்றபடி ஷேக் பயணித்தாலும்,
ஷேக் தடுமாறுகிறார்.
அதை அடைய வேண்டும் என்ற ஆசையும் சியாங் – கே – ஷேக்கிற்கு உண்டு. ஆனால் கம்யூனிஸ்ட் தன்னிடம் சேர்க்காமலேயே அதை அடையாமல் இருக்க நிறைய தவறான வழிகளை மேற்கொண்டு உள்நாட்டுக் கலகத்தைத் தொடர்ந்து உருவாக்குகிறார் சியாங் .
கம்யூனிஸ்ட்டுகளை வெறுத்து ஒதுக்குகிறார் , தாங்க முடியாத கொடுமைகளை கம்யூனிஸ்டுகளுக்குத் தரும் இவரையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி நடந்த நிகழ்வுகள் குறித்து மிகவும் சுவாரசியமாக தரப்பட்டுள்ளது.
ஜப்பான் இவ்வளவு கொடூரமான குணங்களைப் பெற்றிருக்கும் என்று இதைப் படிக்கும் போது தான் தெரிகிறது மொத்த உலகத்திற்குமே பிரச்சினைக்குரிய நாடாக ஜப்பான் இருந்தது
வியப்பாக உள்ளது.
எத்தனையோ பிரச்சினைகளை கொடுத்து சீனாவை களவாடி பிரித்து நாசம் செய்து பலவாறு சிக்கல்களைக் கொடுக்கிறது ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டு பிரச்சனை குறித்து நாம் பாடப் புத்தகத்தில் படித்து இருக்கிறோம், ஓரளவிற்கு அதன் விபரீதங்கள் அறிந்து வைத்திருந்தோம்.
ஆனால் ஏன் அமெரிக்கா ஜப்பான் மீது இத்தனை கடுமையான தாக்குதலை மேற்கொண்டது என்பதற்கான அடிப்படைக் காரணத்தை இப்புத்தகம் விளக்குகிறது. உலக நாடுகள் மொத்தத்திற்கும் ஜப்பான் எத்தனை துன்பங்களைக் கொடுத்துள்ளது…. எல்லா நாடுகளிலும் சுதந்திரமும் ஜனநாயகமும் நிலவி விட்டால் எந்த பிரச்சினையும் கிடையாது ஆனால் எந்த சுதந்திரமும் ஜனநாயகமும் உருவாகாத படி எத்தனை பிளவுகளை ஜப்பான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது என்பது பக்கம் பக்கமாக இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் கம்யூனிஸ்ட்கள் சீனாவில் கூறுவது , ” நாங்கள் மீன்கள், ஜனங்களே தண்ணீர்” என…. பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் பாதிக்கப்பட்ட பொழுதும் அவர்கள் நாட்டுக்காக அரசுக்கு உதவி செய்து கொண்டே இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் படையெடுப்பு சீனா முழுவதையும் முடித்துள்ளது, விவசாயிகள் ,தொழிலாளர்கள் ,மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,படித்தவர்கள், பாமரர்கள், முதலாளிகள், வியாபாரிகள் எல்லோருமே போரில் ஈடுபட்டு இருக்கிறார்கள். என்பது பற்றியும் ஆங்காங்கே விவரிக்கப்பட்டுள்ளது.
1921 இல் 13 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி, 1945 இல் இந்த புத்தகம் எழுதும் பொழுது 12 இலட்சம் உறுப்பினர்களுடன் வளர்ந்து இருக்கிறது என்று குறிப்பிடுவதை வைத்து பார்க்கும் பொழுது அங்கே கம்யூனிஸ்டுகள் மக்களுக்கு எந்தளவுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்குகிறது.
சீன அரசின் கட்சி கோமின்டாங் உடன் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து மாபெரும் சக்தியாகி , இரண்டு நூற்றாண்டுகளாக அழிவில் இருந்த சீனக் குடியரசை
மீட்டெடுத்து வந்திருக்கிறது என்பதற்கான வரலாறு இந்த புத்தகத்தில் உள்ளது.
சீன குழந்தைகள் கூட எதிரிகளின் நடமாட்டத்தை துப்பறிந்து சொல்லி வரும் அளவிற்கு அங்கு பயிற்சி பெற்றனராம் . தாய்மார்கள் வயதானவர்கள் , கிராமத்துப் பெண்கள் அனைவரும் ஜப்பானிய படைகளைப் பார்க்கும் பொழுது அவர்களுடைய தலைகளை வெட்டி விட்டார்கள், ஜப்பானிடம் அனுதாபம் உள்ள ஆண்களை சீன பெண்கள் விவாகரத்து செய்து விளக்கிவிடும் சூழ்நிலையும் இருந்துள்ளதாம் .
ஜப்பானிய கொடியை கண்டாலே பெண்கள் கூட்டமாகக் கூடி களிமண் கட்டிகள் எறிந்து விடும் வழக்கம் இருந்திருக்கிறது, இது ஒன்று இரண்டல்ல ஆயிரக்கணக்கில் இது போன்ற சம்பவங்கள் நடந்து அது மெய்லிங் தேவி தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளாராம் .
பேராசை பிடித்த ஜப்பான் சீனாவை வீழ்த்த முயன்றிருக்கிறது அது முடியவில்லை, அது எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பதே இந்தப் புத்தகத்தின் இரண்டாவது பகுதி முழுவதும் இருக்கிறது . உலகளவில் இருக்கக்கூடிய பெரும் தலைவர்கள் எல்லாம் சீனக் குடியரசை புகழ்ந்து பாராட்டி இருக்கின்றனர். நம்முடைய ஜவஹர்லால் நேரு கூட, சீனாவை யாரும் நசுக்கிவிட முடியாது எனத் தெளிவாக கூறியிருக்கிறார், சீனர்கள் ஞானமும் ஆழ்ந்த சிந்தனை உள்ளவர்கள், என்று ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டுள்ளார் .
இந்தியா பிரிட்டிஷ் மக்களிடம் முழுமையாக அடிமைப்பட்டுக் கிடந்தது ஆனால் சீனா துண்டு துண்டாக களவாடப்பட்டு தொடர்ந்து போராட்டங்களை சந்தித்து இன்று எந்த அளவிற்கு தன்னை மீட்டுருவாக்கம் செய்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நூலாக இருக்கிறது.
குறிப்பாக இந்த நோய் தொற்று சீனாவிலிருந்து பரவினாலும் சின்ன இவ்வாறு தன்னை காத்து கட்டுக்குள் வைத்தது அவர்களிடம் என்ன பலம் உள்ளது எப்படி அவர்கள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது இந்த நேரத்தில் இந்த புத்தகம் உள்ளே இருக்கக்கூடிய செய்திகள் அதை நிரூபிப்பதற்கான ஒருசில சாட்சியங்களாக அமைகின்றன.
இது 1945 இல் எழுதப்பட்டுள்ளது . ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்கு முன்பு , அதிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்து நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது. உலக நாடுகளின் வரலாறுகள் நிச்சயமாக அறிந்து கொள்ளப்பட வேண்டும் .அவற்றின் வரிசையில் இது ஒரு முக்கியமான புத்தகம் .
உமா