ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சிறகுகளும் கனவு வானமும் – பித்தன் வெங்கட்ராஜ்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சிறகுகளும் கனவு வானமும் – பித்தன் வெங்கட்ராஜ்

 

 

 

இலக்கியம் செழிக்கும் நாடு வளர்ச்சிப்பாதையில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாகச் சிறுவர் இலக்கியம் செழிக்கும் நாடு என்று குறிப்பிட்டோமானால் அந்த நாட்டின் வளரச்சிப்பாதையில் வரும் எந்தத் தடைகளையும் தவிடுபொடியாக்கும் வல்லமை அதற்கு உண்டு என்று தைரியமாகக் கூறலாம்.

“புத்தகங்களே! கவனமாயிருங்கள். குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்” என்றார் கவிக்கோ அப்துல் இரகுமான் அவர்கள். அந்த வாக்கின்படி குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் படிக்கும் புத்தகங்கள் எப்படிப்பட்ட தரத்துடன் இருக்கவேண்டும் என்று நாமே ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு முன்பு, சிறுவர் இலக்கிய உலகம் சிறப்பாக இயங்கி வந்த சூழல் இருந்தது. அந்தச் சூழலிலிருந்து வெளிப்பட்ட பலரும் முக்கிய எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும், பல்வேறு துறைகளில் பெரிய பதவிகளில் இருப்பவர்களாகவும் இருப்பதை நாம் பார்க்கின்றோம். ஆனால், தற்போதைய சூழலில், சமுதாயத்தில் நடக்கும் பல குற்றச் சம்பவங்களுக்கு பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களே காரணமானவர்களாக இருக்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கின்றது. இடைப்பட்ட காலத்தில் சிறுவர் இலக்கியம் பெரும்பான்மையானோரால் கொண்டாடப்படாததின் விளைவு என்றே இதனைக் கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது.

பொதுவாக சிறுவர்களின் உலகம் மிகவும் எளிமையானது. அவர்களது நிஜவாழ்வுக்கும் கற்பனைக்கும் பெரிய இடைவெளி கிடையாது. சின்னஞ்சிறு விஷயங்களையும் அதீதமான மகிழ்ச்சியோடு கொண்டாடும் மனநிலை உடையவர்கள். அத்தகு மனநிலையில் அவர்கள் படிக்கும் நூல்கள் அவர்களது எண்ண ஓட்டத்தின்படியே அவர்களுள் சென்று நேர்மறைச் சிந்தனைகளைப் பரப்பவேண்டும். அப்படிப்பட்ட அற்புதமான தகவல்கள் நிறைந்த, மிக எளிமையான சொற்றொடர்கள் கொண்ட ஒரு சிறுவர் நாவல்தான் திரு.பல்லவி குமார் அவர்கள் எழுதியிருக்கும் ‘சின்னச் சிறகுகளும் கனவு வானமும்’.

சதீஷ், தீபன் என்னும் இரு சிறுவர்களின் கனவுகளும் என்னை என் சிறுவயதின் கற்பனைக் கனவுகள்போல உணரவைத்தன. அவை நாம் சிறுவயதில் படித்த இராணி காமிக்ஸ் கதைகளைப்போல ஒரு சாகசமானவையாக இருந்தன. சிறுவர்கள் தங்களைத் தாங்களே கதாநாயகர்களாக உணர்வது என்பது இதுபோன்ற சாகசக் கதைகளைக் கேட்கும்போதோ படிக்கும்போதுதான்.

தன் வயதொத்த ஒரு கதாப்பாத்திரம் செய்யும் வசீகரமான விஷயங்களைத் தாங்களும் செய்துபார்க்க எண்ணுவது, முயற்சிப்பது மிகச் சாதாரணம். அதனைச் சரியான வகையில் உணர்ந்த ஆசிரியர் அக்கதாப்பாத்திரங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் தேடித்தேடி சிறப்பாக அமைத்துள்ளார். மீன் அரசிக் கோட்டையில் சுற்றிவிட்டு வெளியே வந்ததும் சதீஷ் தவறவிட்டுவிடும் அதிசயக் கல்லும், ஓரியனுக்குப் பயணம் செய்யும் தீபன், காக்பிட்டில் தவறிவிழுந்து தவறான பொத்தான்களைத் தட்டிவிடுதலும் எதிர் பாராத திருப்பங்கள். ஓரியினை வைத்துத் திசையறிதலும், ஓரியன் பற்றிய கிரேக்கப் புராணக் கதையும் மாணவர்கள் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்கள். பொதுவாக எந்தவொரு மதநம்பிக்கை சார்ந்த விஷயங்களையும் சிறுவர்களுக்கு உரைக்கும்போது கூடுமானவரை அதிலிருக்கும் அறிவியல் ரீதியான அடிப்படைகளோடு புரியவைத்தல் அவர்களுக்கு நன்மை பயக்கும். எந்தவொரு மூடப்பழக்கத்தையும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டு அதற்குரிய பதிலை நாடி அவர்களைச் செல்லவைக்கும். அந்தவகையில் ஓரியனுக்கும் திருவாதிரைக்கும் உள்ள தொடர்பை ஆசிரியர் விவரித்திருக்கும் விதம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அறிந்துகொள்ளவேண்டிய ஒரு அறிவியல் கலந்த ஆன்மிகத் தகவலாக அமைந்ததுள்ளது.

இவற்றைத் தாண்டி, பள்ளிச் சூழலில் மாணவர்களின் குதூகல மனநிலையை ஆசிரியர் அப்படியே படம்பிடித்துக்காட்டியிருப்பது, என் பள்ளிநாட்களில் நண்பர்களுடனான கேலியும் கிண்டலும் நிறைந்த வாழ்வியலை நினைவூட்டுவதாக இருந்தது.

பள்ளிச் சூழலின் ஒரு அங்கமாக இருக்கும் சாரணர் இயக்கம் பற்றிய விழிப்புணர்வும் செயல்பாடுகளும் கதையின் நாயகர்களான சதீஷ் மற்றும் தீபன் கதாப்பாத்திரங்களோடு மிக நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ளது. சாரணர் இயக்கம் பற்றித் தெரியாத மாணவர்கள் இந்நாவலைப் படிப்பார்களாயின் சாரணர் இயக்கம் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டும் விதமான தகவல்களை ஆசிரியர் இந்நாவலில் தந்துள்ளார்.

தற்போதைய சூழலில் மாரடைப்பு என்பது எப்போதுவேண்டுமானாலாம் யாருக்குவேண்டுமானாலாம் ஏற்படுகின்றது என்றிருக்கையில், CPR எனப்படும் அவசரகால முதலுதவிப் பயிற்சி சாரணர்களுக்குப் பல காலமாக வழங்கப்பட்டு வந்திருப்பதை பதிவுசெய்திருக்கிறார் ஆசிரியர். எத்தனை பேருக்கு CPR செய்யத்தெரிகிறதோ அதைவிடப் பலமடங்கு உயிர்கள் மாரடைப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. இந்த CPR மட்டுமல்லாது பொது முதலுதவி, சாலை விதிகள் விழிப்புணர்வு, பேரிடர் மேலாண்மை, பெண்களின் பாதுகாப்பு போன்ற சமுதாயத்திற்கு நலம் பயக்கும் பல தகவல்களை இந்நாவலினூடே தந்திருக்கிறார் ஆசிரியர். இவையனைத்துமே பள்ளி மாணவ வயதினருக்குக் கட்டாயமாக இருக்கவேண்டிய விழிப்புணர்வுத் தகவல்கள்.

Extra curricular activities எனப்படும் கல்வியின் இணைச் செயல்பாடுகள் வெறும் பேச்சளவில் மட்டுமே பேசப்பட்டுவிட்டு இக்காலச் சிறுவர்களை வெறும் புத்தகப்புழு என்று கூறுவதாக மாணவர்கள் உணர்வதையும் ஆசிரியர் பதிவுசெய்திருக்கிறார். இந்நூலைப் படிக்கும் மாணவர்களுக்கு வெறும் புத்தகங்கள் மட்டுமே கல்வி அல்ல என்பது நிச்சயம் புரியும்.

சாரணச் சந்திப்பும், செயல்பாடுகளும், தாமதமாகக் கிடைக்கும் அங்கீகாரங்களும் என பள்ளிச் சூழலின் பல முக்கியமான இடங்களைக் கண்முன் நிறுத்துவதோடு, தற்கால எழுத்தாளர்களான தங்கம் மூர்த்தி , முருகேஷ் மு மற்றும் Kasavayal Kannan ஆகியோரையும் சிறுவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார் ஆசிரியர்.

ஒரு பள்ளிச் சூழலில் மாணவர்களிடையே நடக்கும் சாதாரண விஷயங்களை வைத்து ஒரு அசாதாரணமான நாவலைத் தந்திருக்கிறார் ஆசிரியர். இந்நாவலில் இருக்கும் மீன் அரசிக் கோட்டைப் பயணம், ஓரியன் பயணம் ஆகிய பகுதிகள் சிறுவர்களுக்கான ஒரு அறிவியல் புனைவுத் திரைப்படமாக எடுக்குமளவுக்கான கருவையும் காட்சிகளையும் கொண்டுள்ளன என்றே சொல்லலாம். மொத்தத்தில் இந்நூல் சிறுவர் இலக்கியத்திற்கு ஒரு முக்கியமான பங்களிப்பு ஆகும்.

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச்சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில். உங்களைச் சுற்றியிருக்கும் குழந்தைகளுக்கு நீங்கள் பரிசளிக்க விரும்பும் ஒரு சிறந்த புத்தகம் இந்த ‘சின்னச் சிறகுகளும் கனவு வானமும்’ என்பது திண்ணம்.

நன்றி

-பித்தன் வெங்கட்ராஜ் ✍️
கவிஞர், பாடலாசிரியர்.

நூலின் பெயர் : ‘சின்னச் சிறகுகளும் கனவு வானமும்’
(சிறுவர் நாவல்)
ஆசிரியர்: திரு. பல்லவி குமார்
பதிப்பகம்: தமிழ்ப்பல்லவி வெளியீடு (9942347079)

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *