போராட்டம்.. போராட்டம் …ஜென்ம ஜென்மமாய் போராட்டம், பரம்பரை பரம்பரையாய் போராட்டம், 500 ஆண்டுகளாய் போராட்டம்? ஏன் போராட்டம்? எங்கே போராட்டம்? எதற்காகப் போராட்டம்?
‘கியூபா’ என்பது அந்த நாட்டின் பெயர். மண்வளம், மழைவளம் மிக்க பசுமையான நாடு. அந்த நாடு பசுமையாக இருந்ததைத் தவிர வேறு எந்தக் குற்றமும் செய்யவில்லை. அங்கே கொஞ்சம் போல் மக்கள், வெளி உலகோடு எவ்விதத் தொடர்பும் இன்றி, ஆண்டாண்டு காலமாக எந்தத் துயரமும் இன்றி, கிழங்குகள் பழங்கள் காய்கறிகள் என எதையோ விளைய வைத்து நிம்மதியாக பல்லாயிரம் ஆண்டு காலமாக வாழ்ந்து வந்தார்கள். எதையோ கண்டுபிடிக்க புறப்பட்ட கிறித்தோபர் கொலம்பஸ், 1492 இல், பல தீவுகளைக் கொண்ட கியூபாவைக் கண்டுபிடித்தான். அன்று, அவன், அந்த நிலத்தில் கால் வைத்தான், அந்த அதிர்வில் காணாமல் போனது அந்த மண்ணின் நிம்மதி. அன்று காணாமல் போன நிம்மதி இன்று வரை திரும்பவில்லை!.
ஃபிடல் காஸ்ட்ரோ பற்றியும் சேகுவேரா பற்றியும் ஏராளமாக படித்திருக்கிறோம். ஆனால், கியுபா பற்றி படித்திருக்கிறோமா?
அங்கே மூன்று விதமான பழங்குடியினர் வாழ்ந்தார்கள். அவர்களில் தைனோ என்ற இனமே பெரும்பான்மையாக இருந்தார்கள். அந்த பூர்வ குடி மக்கள் அன்பு கொண்டவர்களாகவும், சூதுவாது அறியாதவர்களாகவும், குறிப்பாக ஆயிதம் அற்றவர்களாகவும் இருக்கிறார்கள், என்பதை கொலம்ஸின் கப்பல் பயணத்திற்கு நிதி உதவி செய்த ஸ்பெயின் நாட்டு மன்னருக்கு எழுதி அனுப்பினார். கொண்டு வந்திருந்த கரும்பு விதைகளை கியூபா மண்ணில் வைத்துவிட்டு, பூர்வ குடி மக்களில் குறிப்பிட்ட ஒரு பத்து இளைஞர்களை கப்பலில் தூக்கி போட்டுக் கொண்டு ஸ்பெயின் திரும்பினார் கொலம்பஸ்.
நம்ம ஊர்ப் பக்கம் குழந்தைகளிடம் சொல்வார்களே, ‘பூச்சாண்டி வருகிறான் உங்களையெல்லாம் பிடித்துக் கொண்டு போகப் போகிறான்’ என்று. அது கொலம்பஸ் மாதிரியான ஆட்களைப் பார்த்துத் தான் சொல்லி இருப்பார்களோ என்னவோ!
ஏன் கொலம்பஸ் கரும்பை நட்டு வைத்து விட்டு வந்தார் என்றால்? சர்க்கரை அல்லது இனிப்பு பொருள் என்பது மிகவும் அரிதான பொருளாக இருந்த காலம் அது. ஐரோப்பாவெங்கும் கரும்பு விளையவில்லை, விளைய வைக்க முடியவில்லை. ஆகையால், இல்லாத ஊருக்கு இழப்பம் பூ சர்க்கரை என்பதைப் போல, பீட்ரூட்டில் இருந்து எடுக்கப்பட்ட சர்க்கரையைத் தான் அன்றைய ஐரோப்பிய உலகம் பயன்படுத்திக் கொண்டிருந்திருக்கிறது.
ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கிறித்தோபர் கொலம்பஸ் கியூபா வந்தார். கடத்திச் சென்றிருந்த பூர்வகுடி இளைஞர்கள் 10 பேரில் மூன்று பேர் மரித்துப் போக ஏழு பேரை உடன் அழைத்து வந்திருந்தார். ஓராண்டில் அந்த இளைஞர்களுக்கு ஸ்பானிய மொழியை கற்றுக் கொடுத்து, அவர்களிடமிருந்து அவர்களின் தைனோ மொழியை கற்றுக் கொண்டனர். ஒரு மொழியை ஒருவருக்கு கற்றுக் கொடுக்கும் போது கற்றுக் கொடுப்பவருக்கும் கற்றுக் கொள்பவருக்கும் இடையில் பொதுவான எந்த மொழியும் தேவைப்படாத ஒரு வழிமுறையை அப்போதே ஐரோப்பியர்கள் கண்டுபிடித்து வைத்திருந்தனர். கடத்திச் செல்லப்பட்ட அந்த இளைஞர்களே இப்போது அவர்களுக்கு மொழி பெயர்ப்பாளர்களாகப் பயன்பட்டனர்.
அவர்கள் ஓராண்டுக்கு முன் நட்டு வைத்து விட்டுப் போன கரும்பைக் கண்டனர். அது நன்றாகவே வளர்ந்திருந்தது. சுவைத்துப் பார்த்தனர், உலகில் அவர்கள் இதுவரை காணாத இனிப்பை அந்தக் கரும்புகள் கொண்டிருந்தன. மேலும் பல தீவுகளில் கரும்பைக் கொண்டு போய் நட்டு வைத்துப் பார்த்தனர். அதே சுவையோடு அதுவும் நன்கு வளர்ந்தது.
இப்போது பெட்ரோல் எப்படியோ அது போல அந்தக் காலத்தில் சர்க்கரை. சர்க்கரை வைத்திருக்கும் நாடே உலகை ஆளும் நாடாக இருக்க முடியும் என்கிற என்கிற அளவுக்கு அதன் மதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. சர்க்கரையை வெள்ளைத் தங்கம் என்றே அழைத்தனர்.கியுபாவின் கரும்புகள் அதிக இனிப்பைத் தரும் கரும்பாக இருக்கவே, ஸ்பெயின் ஆட்சியாளர்களுக்கு தகவல் அனுபினார் கொலம்பஸ், கரிபியன் தீவுகள் அனைத்தையும் ஸ்பெயின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட வேண்டும். அதன்படி பெரும் படையை திரட்டிக் கொண்டு, 1511 ஆம் ஆண்டு தியாகோ என்பவனின் தலைமையில் பெரும் படை கியுபா வந்து இறங்கியது.
ஸ்பெயினில் உள்ள பெரும் பணக்காரர்களுக்கு கியுபாவில் உள்ள கரும்பின் இனிப்பை ஊட்டியது. இனிப்பை தேடி வரும் ஈக்கள் போல பெரும் பணக்காரர்கள் கியூபாவில் குவிந்தார்கள். க்யுவில் வந்து நின்ற பணக்காரர்களுக்கு கியூபாவை கீறிக் கீறி கூறு போட்டு விற்கத் தொடங்கியது ஸ்பெயின். உலக நாடுகளுக்கு சர்க்கரைக் கிண்ணமானது கியூபா.
அங்கே வாழ்ந்த பூர்வ குடிகளை ஆயுதம் கொண்டு அடிமைகளாக்கி அவர்களைக் கொண்டே காடுகளை அழித்து விளை நிலங்களாக மாற்றினார்கள். செல்வந்தர்களும் வியாபாரிகளும் கியுபாவில் குவிந்தார்கள். வந்தவர்கள் அவர்களுடைய நோய்களையும் கியூபாவில் கொண்டு வந்து கொட்டினார்கள். புதிய வகை நோய்களை பூர்வ குடிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஐரோப்பியர்களுக்கு அந் நோய்கள் பழகிப் போனவை அவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஆனால், பூர்வ குடிகள்? கொத்துக்கொத்தாக மடிந்தனர். மூன்று லட்சமாக இருந்த பூர்வ குடிகளின் மக்கள் தொகை 50, 60 ஆண்டுகளில் வெறும் 5000 ஆக குறைந்து போனது. காலப்போக்கில் அதுவும் இல்லாமல் போனது. தனது கரும்பு ஆசையால் ஸ்பெயின் நாடு ஒரு இனத்தையே அழித்துவிட்டது. கரும்பை விளைவிக்க ஆட்கள் இல்லை. எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அடுத்து என்ன செய்யலாம் என ஸ்பெயின் யோசித்தது, அதற்கு ஒரு நல்ல யோசனையும் கிடைத்தது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து கருப்பின மக்களை அடிமைகளாக பிடித்துக் கொண்டு வந்தது. லட்சக்கணக்கில் அடிமைகளை இறக்குமதி செய்தது.
இப்போது ஸ்பெயினுக்கு மூன்று வழிகளில் வருமானம் வந்து கொண்டிருந்தது. ஒன்று கியுபாவின் நிலங்களை விற்றுக் கொண்டே இருப்பதில், இன்னொன்று விளைகின்ற ஒவ்வொரு கரும்புக்கும் வரி போட்டது, இறக்குமதி செய்யப்படும் அடிமைகளுக்கும் வரி போட்டது. ஆனால், கருப்பின மக்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். அங்கே கரும்பு மட்டுமே விளைவிக்கப்படுவதால் உணவுத் தட்டுப்பாடு இருந்தது. கருப்பின அடிமைகளுக்கு ஒரு வேளை உணவு கூட உருப்படியாக கிடைக்கவில்லை. அவர்கள் இறந்து கொண்டே இருந்தார்கள். அதற்கெல்லாம் காலனிய கட்டமைப்பு இரக்கப்படவில்லை. அவர்களுக்கு உணவு கொடுப்பதை விட புதிய அடிமைகளை இறக்குமதி செய்வது செலவு குறைவாக இருந்தது.

வேளாண் நிலங்கள் விரிவுபட்டு போய்க்கொண்டே இருந்தது. கரும்பு உற்பத்தியும் பெருகிக்கொண்டே போனது. வேலைக்கான ஆட்கள் பற்றாக்குறையாக இருந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை இறக்குமதி செய்து கொண்டே இருந்தது. கரும்புக்கு அடுத்தபடியாக வேறு இரண்டு பொருள்களும் அங்கே விற்பனைக்கு தயாரானது. அது ஒரு தற்செயலான செயல். கரும்பின் கழிவிலிருந்து சர்க்கரை பிராந்தி ஒரு வகை ரம் தயாரிக்கப்பட்டது. அதை அங்குள்ள தொழிலாளர்கள் இலவசமாக பயன்படுத்தி வந்தனர்.கப்பலில் வரும் தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்பட்டது. பிறகு அதன் சுவை உலகம் எங்கும் பிடித்துப் போக பெரும் விலை கிடைத்தது. பிறகு அதுவும் வியாபாரமானது. அதுபோலவே பூர்வ குடிகள் எப்போதாவது பயன்படுத்தி வந்த புகையிலை அதிலிருந்து சுருட்டு தயாரித்தார்கள். அதுவும் உலகப் புகழ்பெற்றது. (சேகுவேராவுக்கு உலகின் எந்த மூலைக்கு போனாலும் அவருக்கு கியூபாவின் சுருட்டு வேண்டும். கியூபாவின் சுருட்டு சே வுக்கு எந்த அளவு பிடித்திருந்தது என்றால் ஒரு கையிலே இன்கூலரும் ஒரு கையிலே சுருட்டும் வைத்திருப்பாராம்) வியாபாரிகளும் வணிகர்களும் வந்து கொண்டே இருந்ததால், நாடு, நகரங்கங்கள் உருவாகத் தொடங்கியது. வர்த்தகத்தின் மையப் புள்ளியாக விளங்கிய ஹவானாவை கியுபாவின் தலைநகராக ஸ்பெயின் அறிவித்தது. இப்போதும் ஹவானாதான் கியுபாவின் தலைநகர்.
பூர்வ குடிமக்கள் அடிமைகள் தான். ஆனால், அந்த அடிமைத்தனத்தை அப்படியே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. போராட்டம்.. போராட்டம் வாழ்க்கை முழுவதும் போராட்டம் தான். ஸ்பெயினின் ஆட்சி அதிகாரம் தொடங்கிய 1511 ஆம் ஆண்டிலேயே அத்துவே என்கிற பூர்வ குடிகளின் தலைவன் அன்றே போராடத் தொடங்கினான். பூர்வ குடிகள் மொத்தமாக அழிக்கப்பட்டு விட்டனர். அதன் பிறகு 216 ஆண்டுகள் ஸ்பெயின் எவ்வித தொந்தரவு இன்றி ஆட்சி செய்தனர்.ஒருங்கிணைந்த போராட்டமாக எந்த போராட்டமும் இல்லை. சித்திரவதைகளும் கொலைகளும் தொடர்ந்தன. 1727 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க மக்கள் 300 பேர் சேர்ந்து ஒரு போராட்டத்தை நடத்தினர். ஸ்பெயின் இராணுவம், 300 பேரையும் கொன்றழித்தது.
1795 இல் ஒரு கிளர்ச்சி. ஆப்பிரிக்கர்கள் மட்டுமல்லாமல், ஸ்பானியர்களும் ஆப்பிரிக்கர்களுக்கும் பிறந்த பிள்ளைகள் என அனைவரும் இணைந்து நின்று ஒரு போராட்டத்தைத் தொடங்கினர். அனைவரும் இணைந்து போராடியது ஸ்பெயின் நாட்டினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த போராட்டத்திற்கு நிக்கோலஸ் மொராவல் என்கிற கருப்பினத் தலைவர் தான் தலைமை தாங்கினார். போராட்டத் தலைவர் கொல்லப்பட்டார் போராட்டம் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்தப் போராட்டம் அந்த மக்களை விழிப்படையச் செய்தது. போராட வேண்டும், விடுதலை பெற்றே தீர வேண்டும் என்கிற வேட்கையை கொடுத்தது.
அடுத்த சில ஆண்டுகளிலேயே 1812 இல் ஹோசோ அன்டோனியா என்பவர் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்தார். அவர் ஒரு ஓவியராக இருந்தபடியால் ஓவிய நூல் ஒன்றை உருவாக்கினார். அதன் ஒவ்வொரு பக்கத்திலும், ஓவியத்தின் மூலமாக கியுப மக்களின் வாழ்க்கை நிலைமையையும் அம்மக்களை எப்படி எல்லாம் ஸ்பொயின் ஒடுக்குகிறது என்பதையும், மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஓவியங்களாகத் தீட்டி ஊர் ஊராகச் சென்று போராட்டத்தின் அவசியத்தை மக்களுக்கு புரிய வைத்தார். ஆனாலும் அவர் கைது செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டார்.
அடுத்ததாக 1843 இல் கார்லோத்து என்கிற அடிமையாக்கப்பட்ட ஆப்பிரிக்கப் பெண்மணி ஆயுதமேந்திப் போராடினார். மக்களை அடைத்து வைத்து துன்புறுத்திய ஆலை முதலாளிகளையும் அவருடைய அடியாட்களையும் அடித்து நொறுக்கி அடிமையாக்கப்பட்ட அனைத்து மக்களையும் விடுதலை செய்தார். விடுலை பெற்ற மக்களைத் திரட்டிக் கொண்டு அடுத்த ஆலைகளுக்குச் சென்றார். தொடர்ந்து சென்று ஐந்து ஆலைகளில் இருந்த மக்களை எல்லாம் விடுதலை செய்தார். பெண்ணாக இருந்தும் பெரும் ஆயுதப் போராட்டத்தை ஆலைகளுக்கு எதிராக முன்னெடுத்தார். ஸ்பெயின் ராணுவம் விரைந்து அவரை கைது செய்தது. மிகக் கொடூரமாக கொன்றழித்தது. ஆனாலும் சரித்திரம் இன்று வரை அந்தப் பெண்மணியை நினைவில் வைத்திருக்கிறது.
அடுத்து ஒரு போராட்டம் 1848 ஆம் ஆண்டுகளில் நார்சிசோ லோபஸ் திடீர் திடீரென வந்து தாக்கினார். மூன்று ஆண்டுகள் கியூபாவுக்கு விடுதலை பெற்றுத்தர முயற்சி செய்தார் முடியவில்லை. ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். ஆனாலும் அவர் போராடும்போது கியுபாவுக்கு என ஒரு புதிய கொடியை உருவாக்கி இருந்தார். அன்று அவர் உருவாக்கிய அந்தக் கொடி தான் இப்போது கியூபாவின் தேசியக் கொடி.
1868 இல் மிகப்பெரிய போராட்டம் தொடங்கியது. இது கியூபாவின் வரலாற்றில் மிக முக்கியமான போராட்டமாகும். இந்தப் போராட்டம் யாரால் தொடங்கப்பட்டது என்றால்? மானுவல் செஸ்பெடாஸ் என்பவர். இவர் ஒரு சர்க்கரை ஆலை அதிபர். திடீரென ஒரு நாள் ஆலையில் பணி செய்த அனைவரையும் மணி அடித்து பயங்கரமாக ஒலி எழுப்பி அழைத்தார். தொழிலாளர்கள் எல்லாம் என்னமோ ஏதோ என்று நடுங்கிப் போயி, வழக்கமாய் கூடும் இடத்தில் வந்து கூடி நின்றனர். “இன்று முதல் நீங்கள் யாரும் அடிமை இல்லை உங்களை விடுதலை செய்கிறேன்” என்றார். விடுதலை உங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கியுபாவுக்குமே பெற்றுத் தர வேண்டும். நான் போராடப் போகிறேன் விருப்பமுள்ளவர்கள் என்னோடு இணைந்து கொள்ளலாம் என்றார். 147 பேர் அவரோடு இணைந்தனர். போராடினார்கள். அவரது கருத்தையும் லட்சியத்தையும் நம்பி மேலும் 1200 பேர் அவரது படையில் சேர்ந்தனர். மானுவல் கொல்லப்பட்டார். அடுத்தடுத்து உருவான தளபதிகளும் கொல்லப்பட்டனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது. இந்தப் போராட்டம் தொடர்ந்து பத்து ஆண்டுகள் நீடித்தது. இப்போது வரை இந்தப் போராட்டம் ‘பத்தாண்டுப் போராட்டம்’ என்ற பெயர் சொல்லி அழைக்கப்படுகிறது. போராட்டத்தின் விளைவாக பத்தாண்டுகளுக்குப் பிறகு ஒரு வழியாக ஸ்பெயின் பேச்சுவார்த்தைக்கு வந்தது. சன்ஹூன் என்ற பெயரில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கியூபாவில் ஒரு அரசு அமைக்கவும், குறைந்தபட்ச அதிகாரத்தை அதற்கு வழங்கவும் ஸ்பெயின் ஒப்புக்கொண்டது. அடிமைத்தனத்தை முழுவதுமாக ஒழிப்பதற்கான அழுத்தத்தை தொடர்ந்து அது படிப்படியாக நிறைவேற்றவும் முடிவு எடுக்கப்பட்டது.1886இல் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. குறைந்தபட்ச கூலி என்பது சட்டமானது. பின் நாளில் மானுவல் செஸ்டாஸை கியுபாவின் தந்தை என்று அறிவித்தார்கள்.
போராட்டங்கள் ஓயவில்லை. கிடைத்தது அரை விடுதலைக்கும் குறைவான விடுதலை தானே அது. அடுத்து ஒரு போராட்ட வீரர் தோன்றி போராட வேண்டியதிருந்தது. ‘ஹோசே மார்த்தி’ இவர் ஒரு கவிஞராக இருந்தார். இவரது எதிர்ப்பைக் கண்டு சிறு வயதிலேயே ஸ்பெயின் ராணுவம் இவரை கைது செய்து விட்டது. ஸ்பெயினுக்கு நாடு கடத்தியது. ஸ்பெயினிலேயே படித்தார் வழக்கறிஞராக பட்டம் பெற்றார். கியூபா வந்தவர், அன்றைய போர்களில் பங்கெடுத்து உயிர் பிழைத்தவர்களை எல்லாம் சென்று சந்தித்தார். பெரும் படை திரட்டினார். அமெரிக்கா சென்று கியுபர்களிடம் நிதி திரட்டினார். ஆயுதங்களை வாங்கினார், மூன்று கப்பல்களை வாங்கினார். ஆனால், ஸ்பெயின் அரசாங்கம் அதனை மோப்பம் பிடித்து விட்டது. மூன்று கப்பல்களையும் பறிமுதல் செய்தது. அவர் தலைமறைவானவர். 1895 இல் எப்படியோ கியூபா வந்தார். ஆயுதங்கள் இல்லை அவர் கையில் பணம் இல்லை இருந்தும் போராட்டத்தைத் தொடங்கினார். போராட்டம் தொடங்கிய ஐந்தாவது மாதத்தில் ஹோசே மார்த்தி கொல்லப்பட்டார். அவருக்குப் பின் அடுத்தடுத்து வந்த தளபதிகளும் கொல்லப்பட்டனர். ஆனாலும் போராட்டத்தின் நெருப்பு அணையவில்லை. போர் தொடர்ந்தது. ராணுவம் கொடூரமான ஆயுதங்களைக் கொண்டு மக்களைக் கொன்று குவித்தது. ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது. 1898 இல் போராட்டம் வெற்றி பெற்று விடும் என்ற நிலையில்! புதியதொரு துயரம், உலகையே பிடித்த ஆட்டம் சனியன் கியுபாவுக்குள் மூக்கை நுழைத்தது. உலகத்தின் அத்தனை நாட்டுப் பிரச்சனைகளிலும் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா.
அமெரிக்கா ஏன் மூக்கை நுழைத்தது? 1898 இல் கியுபாவின் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க கப்பல் ஒன்று திடீரென்று வெடித்துச் சிதறியது. அதிலிருந்த 286 அமெரிக்க கப்பல் படை வீரர்கள் இறந்து போனார்கள். ஸ்பெயின் அரசு தான் அமெரிக்காவை கைப்பற்றுவதற்காக இப்படி ஒரு செயலை செய்தது என்று அமெரிக்கா வதந்திகளைப் பரப்பியது. கியுபாவுக்குள் நுழைந்து ஸ்பெயினுடன் அமெரிக்கா சண்டையிடத் தொடங்கியது. சண்டையை நிறுத்திவிட்டு இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியது. இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. அதுதான் பாரிஸ் ஒப்பந்தம். ஸ்பெயின் ராணுவம் வெளியேறியது அமெரிக்கா ராணுவம் உள்ளே வந்தது. பேயின் கையிலிருந்து விடுபட்டு பிசாசின் கையில் அகப்பட்டுக் கொண்டது போல அமெரிக்காவின் கையில் அகப்பட்டுக் கொண்டது கியூபா. கியூபாவில் அடுத்த கட்ட வரலாறு தொடங்கியது. போராட்டங்கள் முடியவில்லை அது இன்றும் தொடர்கிறது.
மக்கள் தொடர்ந்து போராடினார்கள். போராட்டத்தின் விளைவாக தேர்தல் முறை வந்தது. தேர்தலில் போட்டியிட பிடல் காஸ்ட்ரோ வந்தார். தேர்தலையே நடைபெறவிடாமல் செய்தார்கள். நீதிமன்றம் சென்றார். நீதி கிடைக்கவில்லை. ஆயுதத்தைக் கையில் எடுத்தார். சேகுவாரா என்ற பெரும் வீரன் கியுபாவிற்காக போராட முன் வந்தார். 1959 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்று. அமெரிக்காவை புரட்சிப்படையினர் வென்றெடுத்தனர்.
கியூபாவில் போராட்டம் ஓய்ந்ததா? ஓயவில்லை. ஏன் ஓயவில்லை? எதனால் ஓயவில்லை? யாரோடு போராடுகிறார்கள்? இப்போது கியுபாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதோடு நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும் என்பதையும் இந்த நூல் தெளிவாக விளக்குகிறது. இதுவரை ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி, சேகுவாராவைப் பற்றித்தான் படித்திருக்கிறேன். இந்த நூலில் தான் கியூபாவைப் பற்றிப் படித்தேன். வெறும் 95 பக்கத்தில் 500 ஆண்டு கால வரலாற்றை இந்நூல் விளக்குகிறது. ‘நாம் ஏன் கியுபாவின் பக்கம் நிற்க வேண்டும்’ இத்தனை சிறிய நூலை வாசித்தால் தெரிந்து கொள்ளலாம். நான் வாசிக்க வாய்ப்பு அளித்த வாசிப்பு இயக்கத்திற்கு நன்றி. நூலாசிரியர் இ.பா. சிந்தனுக்கு வாழ்த்துக்கள்.
நூலின் விவரங்கள்:
நூல் : நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?
ஆசிரியர் : இ.பா.சிந்தன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.95.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
எழுதியவர் :
எழுத்தாளர் பொன் விக்ரம்
Ponvickram1967@gmail.cam
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
