நூல் அறிமுகம் :சித்திரத்தில் பெண்ணெழுதி – செ தமிழ்ராஜ்

நூல் அறிமுகம் :சித்திரத்தில் பெண்ணெழுதி – செ தமிழ்ராஜ்

 

 

சித்திரத்தில் பெண்ணெழுதிய கவிஞர் பொன் விக்ரம் அவர்களின் நூலிற்குள் மெல்ல நுழைவோம். சித்திரத்தில் பெண்ணெழுதி தலைப்பே மிக வசீகரமாக இருக்கின்றது. அதற்கு நியாயம் செய்யும் விதமாக அற்புதமானதொரு ஒவியம் அட்டைப்படமாக அமைந்துள்ளது. வரைந்தவர் பெயரில்லை ஒருவேளை இணையதளங்களில் எடுக்கப்பட்ட படமா என்று தெரியவில்லை. ஆனாலும் மிக அழகாக இருக்கிறது. கவிஞர் பொன் விக்ரம் இதுவரை எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

சித்திரத்தில் பெண்ணெழுதி ஒன்பதாவது புத்தகம். 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருப்பதாக புத்தகத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது. நோய்ப் பெருந்தொற்று காலத்தில் கவிதைப் பெருந்தொற்றில் கவிஞர் சிக்கியிருக்கிறார் என்று தெரிகின்றது. கவிஞர் சக்தி ஜோதி அவர்கள் மிகச்சிறப்பானதொரு அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள். முன்னுரையையும் கவிதையாகவே சொல்லியிருக்கிறார். நூலை எல்லா மகள்களுக்கும் என்று சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் மொத்தம் ஐந்து கதைகளை கவிதையாக்கம் செய்திருக்கிறார். அனைத்தும் கண்ணீர் கதைகள். கவிதைகள் சிந்திய கண்ணீரில் இவரது புத்தக அட்டைப்படமும் நனைந்துவிட்டதுபோலும் கலங்கலாக இருக்கிறது. எதையும் திட்டமிட்டு யோசித்தே செய்திருக்கிறார். வசன கவிதைகளின் பிதாமகன் பாரதியின் பாஞ்சாலி சபதமே இவரது இக்கவிதைகளுக்கு ஆதர்சமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். மகாபாரத்தில் இருந்து சூதாட்ட படலமும் பாஞ்சாலி துகிலுரியப்படும் காட்சியும் பாரதி தனது கனல் வரிகளால் பாஞ்சாலியை ஒரு புதுமைப்பெண்ணாகவே வரைந்து காட்டியிருப்பார்.

பாரதி இதிகாசத்தை கவியாக்கம் செய்திருந்தார்
பொன் விக்ரமோ சமகாலத்து பெண்ணின் துயரை கண்ணீர் காவியமாக படைத்து இருக்கிறார்.

முதல் கவிதையே பாசக் காவியமாக தீட்டி இருக்கிறார்.
கதைக் கவிதைத் தலைப்பு

ஒரு வார்த்தை
காதல் திருமணம் செய்துகொண்ட மகளுக்கும் தகப்பனாருக்குமிடையே அந்திம காலத்தில் நடக்கும் பாசமலர் காட்சிகள். கண்ணெதிரே ஊர்வலம் போகின்றன. காதல் திருமணம் செய்துகொண்ட ஒரே காரணத்திற்காக காலமெல்லாம் வெறுத்து ஒதுக்கிய மகளை உயிர் பிரியும் நேரத்தில் தான் நடந்துகொண்டதெல்லாம் தவறு என்றுணர்ந்து காலத்தை பின்னோக்கி பார்த்து உலகின் முன்னோக்கி நடக்கிறார். மன்னிப்பு கோரி நிற்கும் தகப்பனுக்கும் பெருந்தாயாய் மாறி நிற்கும் மகளிற்கும் இடையே தொக்கி நிற்கும் அந்த ஒரு வார்த்தை கேட்டதும் உயிர்ப் பறவை பாரங்களற்று பறக்கின்றது. ஊனுருக உயிருறுக அன்பை பாடி நெஞ்சை நெகிழ்த்தியிருக்கிறார் கவிஞர். மகளை பெற்ற தந்தைகள் யாவருக்கும் சொல்லியிருக்கிறார் காதலை ஆசிர்வதியுங்கள் என்று.

இரண்டாவது கதைக் கவிதைத் தலைப்பு

வண்ணமயிலாள்
பெண்ணைப் பெற்றவர்கள் கணவன் வீட்டிற்கு அனுப்பியபின் படுகின்ற பிரிவுத் துயரும் புகுந்த வீட்டில் வாழச் செல்லுகின்ற பெண்கள் படும் துயரும் யாவரும் அறிந்ததே. இலக்கியமறிந்த செல்வச் செழிப்பான பாரதிதாசனையும் பெரியாரையும் பின்பற்றுகின்ற ஒரு முற்போக்கான பெண்கள் பிற்போக்குத்தனமான வீடுகளில் வாழச் சென்றால் அங்கு என்னவெல்லாம் நேரும் என்பதை மிக அழகான வரிகளில் கவியாக்கம் செய்துள்ளார். எதற்கும் ஒரு கொள்ளளவு உண்டு என்பதையும் மீறி அழுத்தினால் பெண்கள் வெடித்துச் சிதறுவார்கள் என்பதை நயம்பட உரைத்துள்ளார்.

அடிமைத் தாலியை கழற்றி எரிந்து சுயமரியாதை உள்ள பெண்ணாக சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ்த்துவங்குகிறாள். என்று தன்னம்பிக்கையை விதைத்திருக்கிறார் கவிஞர் பொன் விக்ரம் அவர்கள் இந்தக் கதையில் எனக்குப் பிடித்த வரிகள்.

“தின்னக் காத்திருக்கும் வாய்களுக்கு
அலங்கரித்து அனுப்பிய ஆடுநானென்று”

“எல்லாம் சொல்லித்தந்த கல்வி
மனிதன் நிறமென்ன
என்று சொல்லித் தரலையே
அவன்நேரத்திற்கு ஒரு நிறம்
மாறுவான்னு சொல்லலையே”

“என் நாக்கை
நானே தினம்
தூக்குல
தொங்கவிடுறேன்
நாக்கை
வாய்க்குள் வைத்துப்பூட்டி
சாவியை தூக்கியெறிந்தேன்”

அடடா அடடா அழகான சொற்கள்

மூன்றாவது கதைக் கவிதைத்தலைப்பு

அம்மா
இந்தத் தலைப்பில் இரண்டு கதைகள் இருக்கின்றன. இளம்விதவைத் தாயொருத்தியால் வளர்க்கப்பட்ட மகன் தாயாரின் முதிய காலத்தில் அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டு பிரிவுத் துயர் தாளாமல் இறந்துபோவதும் இறப்பின் செலவிற்கு கூட பணம் வைத்துவிட்டுப் போவதும் மனதை பிசையவைக்கின்றன.
இதே தலைப்பின்கீழ் கொடூர கணவனால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட பெண் விரக்தியின் உச்சியில் கணவனைப் பலிவாங்க தீ வைத்து இறந்துபோகிறாள்.

என்றொரு சோக கதையும் இருக்கிறது. எல்லோரும் முன்னுரை எழுதுவார்கள் கவிஞர் பொன் விக்ரம் அவர்களோ இக்கதைக்கு பின்னுரையும் எழுதி விளக்கவுரையும் தந்திருக்கிறார். கோனார் உரை போல்புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது.

நான்காவது கதைக் கவிதையின் தலைப்பு

தழல்வனம்
காதலலெனும் காமுகனால் ஏமாற்றப்பட்டு வீதியில் வீசப்பட்ட அபலைப்பெண்ணொருத்தியின் துயரக்கூக்குரல் ஆரம்பமே நெஞ்சை உலுக்கும் வரிகளோடு துவக்குகிறார்

“அவமான எரிமலையில்
நானேறி நின்றேனே
கழுமரத்தின் கூர்முனையில்
நானேறி அமர்ந்தேனே
வயிற்றில் வரவு வைத்த
வஞ்சகனை காணோமே
இளமை எரித்த தீயில்
கருகித்தான் போனேனே”

சமகாலத்தில் காதலெனும் போர்வையில் பெண்களை சூறையாடும்போக்கு அதிகரித்திருக்கும் இவ்வேளையில் இக்கவிதை மிக முக்கியமானதாகிறது

ஐந்தாவது கதைக் கவிதை

பூப்புனித நீராட்டு விழா
வளரிளம்பெண்கள் அடையும் மாபெரும் துயரமிது. அதுவரை வண்ணத்துப்பூச்சிகளாய் சுற்றித் திரிந்த வாழ்க்கை சிறுமிகள் வயதிற்கு வந்ததும் விலங்குகள் பூட்டப்படுகின்றன. கனத்த ஆயுள் கால சங்கிலிகள் அன்றிலிருந்து சாகும்வரை உயிரோடு இருக்கின்றார்கள். உயிர்ப்போடு இருப்பதில்லை. அப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கை சித்திரத்தை கண்ணீரைத் தொட்டு எழுதியிருக்கிறார். பூப்படைந்ததும் திருமணம் குழந்தையின்மை மலடிப் பட்டம் கருத்தரிப்பு மையங்கள் சோதனை குழாய் குழந்தை இயற்கை பிரசவமற்று அறுவை சிகிச்சையில் பிறந்த குழந்தை இறக்க அவளும் சாவைத் தழுவுகிறாள்.

இருள் சூழ்ந்த வாழ்வை வெளிச்சமாக்கி போன குழந்தையை நோக்கி ஓடுவதுடன் கதையை நிறைவு செய்கிறார். நமது கண்களில் கண்ணீரை படரவிடும் இக்கதையில் ஒரு அழகான கவிதை இருக்கிறது

“குழந்தை வரம் வேண்டி
கோயில் குளம் சுத்தி வந்தேன்
சாமிகள் நாங்க
வெறும் கல்லுதான்னு
சொல்லாம சொல்லுச்சு
கண்ட கண்ட ஆயுதத்த வச்சுக்கிட்டு
ஏன் தான் தண்டமாக நிக்குதுக
என்னிலிருந்து
என்னைப் பிரித்து
எனைப் பெண்ணாய்
ஆக்கிய தூமையே
ஒரு பத்து மாசம்
நின்று தொலைத்தால் என்ன
ஆண்களுக்கு இல்லையே இந்த நிலமை
அட ஆண்டவனே இது என்ன நேர்மை”

மிகச்சிறந்த கவிதையை இக்கதைக்குள் பொதித்து வைத்திருக்கிறார்

ஆக மொத்தத்தில் பெண்ணினத்தின் பிரதிநிதியாக நின்று பெண்களின் பாடுகளை வாசிப்பவர் கண்களில் நீர் பெருக பாடியுள்ளார். இவருக்கு வார்த்தைகள் யாவும் குற்றால அருவிபோல குதித்தோடி வருகின்றது. கவிதைகள் யாவிலும் சந்த நடை கொஞ்சுகிறது. ஒப்பாரி இசைப்பாடலாகவும் பாடலாம். சினிமா பாடலாசிரியராய் போனால் மிளிர்வார்.

கண்ணதாசனும் திரைப்பட பாடல்களும் ஆங்காங்கே நினைவூட்டுகின்றன. ஒரு சின்னவருத்தம் என்னவெனில் பக்கத்திற்கு பக்கம் பிழைகள் மலிந்து கிடக்கின்றன. பிழை திருத்தும் வேலைக்கு செல்வோர்க்கு இப்புத்தகத்தை தேர்வுத் தாளாய் வைக்கலாம். எதிர்வரும் காலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

எழுத்துலகில் பிரகாசிக்க பரந்துபட்ட வாசிப்பும் கூர்மையான எழுத்தும் வசப்பட வேண்டும். இரண்டையும் கைப்பற்றி விரைவில் உலகெங்கும் வலம் வருவார் என்ற பெருநம்பிக்கையுடன் கதையில் கவிதை சொல்லிய அருமை கவிஞர் பொன் விக்ரம் அவர்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.

செ தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை

நூலின் பெயர் : சித்திரத்தில் பெண்ணெழுதி
ஆசிரியர் : கவிஞர் பொன் விக்ரம்
வெளியானஆண்டு : 2020
பக்கம் : 104
விலை : 100

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *