சித்ரா சிவன் (Chitra Shivan) எழுதி பிறகு பிரசுரம் வெளியிட்டுள்ள அத்தினி நாவல் (Athini Novel) புத்தகம் - நூல் அறிமுகம்

சித்ரா சிவன் எழுதிய அத்தினி (நாவல்) – நூல் அறிமுகம்

அத்தினி (நாவல்) பெண்களின் அக உலகத்தைப் பேசும் நாவல் இது. இதுபோல் பெண்களை மட்டுமே பிரதானப் பாத்திரங்களாக்கி, அவர்களின் அக உலகத்தை, உணர்வைப் பேசும் நாவலை இதற்கு முன் வந்திருக்கலாம் ஆனால் நான் வாசித்ததில்லை. எல்லா வகையிலும் மிகச் சிறப்பான நாவலாய் மலர்ந்திருக்கிறது அத்தினி. அதனால்தான் இது 2024-ஆம் ஆண்டு ஜீரோ டிகிரி இலக்கிய விருது -மூன்றாம் பரிசு – பெற்றிருக்கிறது.

அமீரகத்தில் கேலக்ஸியின் சார்பாக மாதாமாதம் ‘கதைப்போமா’ என்றொரு நிகழ்வை நடத்தி வருகிறோம். வாசித்த புத்தகத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் பேசுவோம். இந்த மாதம் 17-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பாலாஜி அண்ணன் அத்தினி பற்றி அனுபவித்து, ரசித்துப் பேசினார். கேலக்ஸியின் புத்தகப் பூங்கா மூலம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக புத்தகங்களைச் சுற்றுக்கு விட்டு வாசிக்க வைக்கும் செயலைத் தொடங்கியிருக்கிறோம். அதில் பாலாஜி அண்ணன் இந்தப்புக்கை ‘நீ வாசிக்கணும் தம்பி’ என என்னிடம் கொடுத்தார். என்னைப் பொறுத்தவரை ரொம்ப நாளைக்குப் பின் மூன்றே நாளில் வாசித்து முடித்த நாவல் இது.

நாவலை ஆரம்பிக்கும் போது மனசுக்குள் அமர்ந்து எண்ணம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்ட பவித்ராதேவி, இப்போது வரை அங்குதான் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளார். என்ன மனுசி இவள்… என்ற ஆச்சர்யத்தை விதைத்திருக்கிறாள்.

அத்தினி என்றால் பெண் யானை என்பது பெரும்பாலானோருக்குத் தெரியும். ‘மனிதர்கள் மறந்தே போய்விட்ட தாய் வழிச் சமூக அமைப்பை இன்று வரை பின்பற்றுவன யானைகள். எனவேதான் யானையைப் போன்ற பலம் பொருந்திய பெண்களின் உலகைப் பேசும் இந்தப் புதினத்துக்கு ‘அத்தினி’ என்று தலைப்பிட்டேன்’ என்று இந்நாவலின் ஆசிரியர் சித்ரா சிவன் – அம்மு ராகவ் – தனது முன்னுரையில் சொல்லியிருப்பார்.

ஆம் இங்கே பவித்ராதேவி என்னும் பெண் யானை தனது ஆளுமைத் திறனாலும் அன்பாலும் அனைவரையும் அரவணைத்துச் செல்வதுடன் எதைப் பற்றியும் கவலையின்றி எல்லாவற்றையும் என்னால் முடியும் எனச் செய்து கொண்டே போகிறார். அத்தினி நாவலை வாசித்த அனைவரையும் பவித்ராதேவி தன்னுள் இழுத்துக் கொள்வாள் என்பது நிச்சயம்.

பவித்ராதேவி, உமையாள், பூங்கொடி, மல்லிகா, பாண்டியம்மாள், அன்னக்கொடி, உமாபாரதி, மல்லிகா, டாக்டர் அருணா, வாசவதத்தை, கமலா, ரெபேக்காள், வானதி, வசந்தமுல்லை, சரிதா எனப் பெண்கள் சூழ்ந்த அந்த ஏஜேபி மருத்துவமனைக்குள் மாறன், இளங்கோ, சேதுராமன், சின்ன விருமாண்டி, அந்தோணி முத்து, கணேசன், சிக்கந்தர் சுல்தான், சேதுராமன் என அவ்வப்போது ஆண்களும் வந்து போகிறார்கள்.

முதல் அத்தியாயத்தில் உமையாள் வைகையில் இறங்கிக் குளிக்கும் போதே இவள்தான் இந்த நாவலின் அத்தினியாக இருக்குமோ, இந்த நாவல் முழுவதும் இவளின் ஆதிக்கம்தான் இருக்குமோ என நினைக்க வைத்தாள். அந்த நினைப்பை அடுத்த அத்தியாயத்தில் உடைத்த பவித்ராதேவி, இறுதிவரை அவள் ‘தேவி’யாக, ஒரு அத்தினி அல்ல, பல அத்தினியாக தனது சுக துக்கங்களை எல்லாம் துவம்சம் செய்து, பாசம், நேசம், காதல், மென்மை, அன்பு என அடித்து ஆடியிருக்கிறாள்.

ஒரு கடை வைத்திருந்தாலே நம் கடைக்கு வருவோருடன் மிக நெருங்க நட்பு உருவாகும். அதில் சிலர் நமது எண்ணங்களை, வருத்தங்களை, சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்ளும் நட்பாக மாறுவதுண்டு. ஒரு மருத்துவமனையில் அதுவும் பாகப்பிரிவினைக்குப் பின் இரண்டாக மாறிப் போனாலும் இரண்டுக்குக்கும் பொதுவாய் ஒரே கேன்டீனாய் இருக்கும் போது அந்த இடம் தினம் தினம் எத்தனை பேரைச் சந்திக்கும். எத்தனை பிறப்பு இறப்புக்களைப் பார்க்கும்.

அதுவும் மருத்துவமனை கேன்டீன் என்றாலே நெடுஞ்சாலைகளில் மோட்டல் என்ற பெயரில் வாய்க்கும் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுக்கு சொத்தை எழுதி வாங்குவதைப் போல்தான் நடந்து கொள்வார்கள். நோயாளிகளுக்கு மட்டுமல்ல அவருடன் தங்குபவர்களுக்கும் பத்தியச் சாப்பாடு கொடுத்து மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுங்க எனச் சொல்லும் ஆட்டோ போல் பணம் பறிப்பார்கள். ஆனால் இங்கே அப்படியெல்லாம் எதுவும் செய்துவிடவில்லை பவித்ராதேவி. எத்தனை மணிக்கு வந்து சுடு தண்ணீர் கேட்டாலும், மருந்துக்கு இது வேணும் எனக் கேட்டாலும் முகம் சுளிக்காமல் செய்து கொடுத்து எல்லோரையும் தனது அன்பால் கட்டிப் போட்டதுடன் மருத்துவமனை தாண்டியும் அவர்களுடனான நட்பைத் தொடர்கிறாள். அவளுக்குப் பணம் ஒரு பொருட்டல்ல, மனிதர்களின் அதுவும் குறிப்பாக பெண்களின் நேசமே போதுமானதாகிப் போகிறது.

ஆரம்பத்திலேயே பவித்ராதேவி நமக்குப் பிடித்த ஒரு மனுசியின் பிம்பமாய், உருவமாய் நமக்குள் அமர்ந்து விடுகிறாள். அம்மாவின் இறப்பு, அப்பா மீதான கோபம், தங்கை மீதான அதீத பாசம், நட்புக்களுக்குக் கொடுக்கும் மரியாதை, நம்பி வந்தோருக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க நினைக்கும் மனசு, எல்லாமே முடிஞ்சிருச்சு இனி என்ன இருக்கு என நினைக்கும் வயதில் மலரும் காதல், அதன் ஊடான அழகான பயணங்கள், யாரா இருந்தாலும் எடுத்தெறிந்து பேசாமல் தன் ஆளுமையான பேச்சால் அசால்டாய் கையாளும் பக்குவம் என பவித்ராவே நாவல் முழுவதும் நிரவிக் கிடக்கிறாள் தேவியாய். அவள் நினைத்தால் முடியாதது எதுவுமேயில்லை என்பதற்கான சான்றுதான் காரோட்டுவது எனவும் வைத்துக் கொள்ளலாம். ஆம் பவித்ரா அத்தனை அழகில்லைதான்… புற அழகு யாருக்கு வேண்டும். அவள் மனதளவில் அழகி, பேரழகி.

உமையாள் அக்காவை அம்மாவாய் பார்க்கும் தங்கையாய்… நான் இப்படித்தான் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடக்கும் மனுசி என ஆரம்பத்திலேயே காட்டி விடுகிறாள். அக்காவுக்கான ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என நினைக்கும் போது அவளுக்குத் தாயாகிப் போகிறாள். அம்மா, அப்பா மீதான பாசம். உறவில்லாக் குழந்தைகளைப் படிக்க வைப்பதிலும் பராமரிப்பு இல்லாத வீட்டை எடுத்துக் கட்டுவதிலும் அவளுக்கு இருக்கும் ஆர்வம், நட்புக்களுடன் போடும் ஆட்டம் என அவளும் ஒரு சக்தியாகவே இருக்கிறாள். உமையாளை அறியாதவர்களுக்கு அவள் ஆம்பளை போல் திரிவதாய் தெரியலாம் ஆனால் தெரிந்தவர்களுக்கு அவள் ஒரு அன்பான மனுசி.

இவர்களின் அம்மா அன்னக்கொடி, சுத்தமான கிராமத்து, அதே நேரம் எதையும் எதிர்கொள்ளத் தயாராய் இருக்கும், யாருக்கும் பயப்படாத கிராமத்துப் பொம்பளை. அவள் ஏலச் சீட்டு நடத்துவதை விவரிக்கும் இடத்தில் அவள் எப்படிப்பட்ட ஆளுமை என்பதைச் சொல்லியிருப்பார் ஆசிரியர். அப்படிப்பட்ட ஆளுமைதான் கணவனின் தொந்தரவாலும் கொடுத்த கடனை தம்பிக்காரன் கொடுக்கவில்லை என்பதாலும் தன்னையே அழித்துக் கொள்கிறாள். எத்தனை துன்பம் வந்தாலும் தற்கொலை என்பது தீர்வாகாது என்றாலும் அவளோட வலியும் வேதனையுமே அப்படியான ஒரு முடிவை எடுக்க வைக்கிறது. அவளின் இறப்புக்குப் பதில் சொல்லும் விதமாகவே தம்பி கணேசனின் வீடும் ஆள் வாழ முடியாத வீடாகிப் போகிறது.

இப்படித்தான் இந்த நாவல் முழுவதும் பெண்கள் நிரவிக் கிடக்கிறார்கள். இதில் ரசித்த ஒரு விசயம் என்னவென்றால் எந்தப் பெண்ணும் தான் வாழ தகுதியற்றவள் என்றோ, நான் கொடுமையை அனுபவிக்கிறேன் என்றோ, வேதனையைச் சுமக்கிறேன் என்றோ புலம்பிக் கொண்டிருக்கவில்லை. அவரவர் அவரவரின் வாழ்க்கையை ஆனந்தமாகவே வாழ்கிறார்கள். அதுவும் ஆண்கள் கூடிக் களிப்பது போல் இவர்கள் அனைவரும் சேதுராமன் தோட்டத்தில் கூடிக் களிப்பதும், ஓட்கா அருந்தி ஆனந்தக் கூத்தாடுவதும் ரசிக்க வைத்தது. சிந்திக்கவும் வைத்தது. பெண்களின் உலகம் இப்படியான பேரானந்தத்தைக் கொண்டதுதான் அதைத் திருமணம், குழந்தைகள், குடும்பம் என ஒரு வட்டத்துக்குள் அடைத்து விடுகிறோம் என்ற எண்ணம் மனசுக்குள் அரிக்கத்தான் செய்தது.

உமையாளைக் கட்டிக் கொள்ள ஒற்றைக் காலில் நிற்கும் மாறனும், பவித்ராதேவியை விரும்பும் இளங்கோவும் கதையின் போக்கை சற்றே மாற்றி பயணிக்க வைத்திருந்தார்கள். அதுவும் மாறன் எதற்காக இவ்வளவு தூரம் அலைகிறான் என்பதை திருமணத்துக்குப் பின் உமையாள் ஒரு வரியில் சொல்லிக் கடக்கிறாள், எங்கே ஆண்களே தவறானவர்கள் என நினைக்கும் பவித்ராதேவி கடக்காமல் இருந்து விடுவாளோ என நினைத்தாலும் அவள் கூட அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்துக் கடக்கிறாள். அவளின் வாழ்வைக்கூட அவள் அப்படித்தானே கடந்து பயணிக்கிறாள்… அதுதான் பவித்ரா.

தனக்காக எல்லாமே செய்யும் அக்காவை திருமணத்துக்குப் பின் உமையாள் அதிகம் கண்டு கொள்ளாமல் தனக்கான வாழ்க்கை, தன் குடும்பம், தன் உறவு என மாறிப் போவதில் பவித்ராதேவிக்கு கொஞ்சம் வருத்தம் தலை தூக்கினாலும் அவள் நல்லா இருக்கணும் என ஒரு தாயாய் மாறி நெஞ்சார நினைக்கிறாள். நமக்குத்தான் உமையாள் ஏன் இப்படி ஆகிப் போனால் எனத் தோன்றி இம்சிக்கிறது என்றாலும் அதுதானே நிதர்சனம்.

பவித்ராதேவியைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என வந்து நிற்கும் டாக்டர் இளங்கோவைப் பார்த்ததும் சமீபத்தில் வந்த மாமன் படத்தில் அக்கா தம்பியின் பாசத்தைப் பார்த்துக் கட்டிக் கொள்ளும் டாக்டர் மாதிரி, சினிமா டாக்டர் போல எனத் தோன்றினாலும் அவர் அப்படி இருக்கவில்லை, நிஜ வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை உணர்ந்தவராகத்தான் இருந்திருக்கிறார், அதை பவித்ராதேவிக்கும் உணர்த்தவும் செய்கிறார்.

‘மசுரு’ என்பது எங்கள் பக்கம் எல்லாருடைய வாயிலும் சாதாரணமாகப் புழங்கும் வார்த்தைதான் என்றாலும் வாத்தியார் சிறுகதைத் தொகுப்பில் ஒரு கதையில் எழுதியிருந்த போது ‘தம்பி இதெல்லாம் ஊருப்பக்கம் பேசினாலும் எழுத்தில் கொண்டு வராதீங்க… எடுத்துருங்க’ என பாலாஜி அண்ணன் சொல்லி எடுக்க வைத்தார். கிராமங்களின் சண்டை, சந்தோசம் என எதிலும் சில வார்த்தைகள் சரமாரியாக வந்து விழத்தான் செய்யும். அதைக் கெட்ட வார்த்தை என்றோ, அய்யோ இதையெல்லாம் நீ பேசலாமா, எழுதலாமோ என்றோ நினைக்கத் தேவையில்லை. இதில் கூட தன்னுள் முனி வந்து இறங்கியது போல் கணவன் மாயவனை வெளுத்து வாங்கும் பூங்கொடி பேசும்போது அழகான -ஆபாசமான, அருவெறுப்பான எனவும் வைத்துக் கொள்ளலாம் – கிராமத்து வார்த்தையில்தான் ஆரம்பிக்கிறாள். இந்த இடத்தில் ஒரு பொண்ணு இப்படியெல்லாம் எழுதலாமா என வந்து நிற்காமல் அடித்து ஆடியிருக்கும் ஆசிரியரைப் பாராட்டலாம். எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டுதான் எழுத்து வரவேண்டும். வரணும். வாசிப்போம், வாழ்த்துவோம்.

சமீபத்தில் நண்பர் பாரியின் வட்டார வழக்கு சிறுகதை ஒன்றைப் படித்தேன். அதில் கூட நாம் பேச யோசிக்கும் வார்த்தை மிகச் சகஜமாகப் பேசப்பட்டிருக்கும். அதுதான் நிஜமான மண்ணின் வழக்கு… ‘நொக்காலி’ என்ற வார்த்தை இல்லாமல் மச்சினர்களுக்குள் உரையாடல் நிகழ்வதில்லை.

அழகிய மனிதர்களால்… இல்லையில்லை மனுசிகளால் நிறைந்திருக்கும் அத்தினியில் குறைகள் என்று எதுவுமில்லையா என்றால் இருக்கத்தான் செய்கிறது. டாக்டர் இளங்கோ திருச்சி என்றும் மதுரையில் வேலை செய்தேன் என்றும் ஆரம்பத்தில் சொல்வார். அம்மா மதுரையில் இருப்பதாய் சொல்லியிருக்கவும் மாட்டார், ஆனால் கதையின் பிற்பகுதியில் அம்மா மதுரையில் இருப்பதாக வரும். ஆரம்பத்தில் அவரின் குடும்பம் திருச்சியில் இருப்பதாய்த்தான் நான் நினைத்துக் கொண்டேன், ஒருவேளை மதுரையில் வேலை பார்க்கும் போது அம்மாவையும் மதுரைக்கு அழைத்து வந்திருக்கலாம். அத்தனை பாசமான உமையாளின் உடனடி மாற்றங்கள் தேவையில்லையோ எனத் தோன்ற வைத்தது. அன்னக்கொடி என்ற பெயர் இளங்கோவின் அம்மாவுக்கு அமைந்தது கூட இயற்கை என எடுத்துக் கொண்டாலும் சேதுராமன் என்ற பெயர் கமலாவின் பையனுக்கு இருப்பது எதார்த்தமாய் இல்லை வலிந்து திணித்தது போல் இருந்தது. இரு மருத்துவமனையாய் பிரிந்த போதிலும் பெண்களே அதிகம் ஆக்கிரமித்திருப்பதால் பெரும்பாலும் கதை டாக்டர் அருணாவின் மருத்துவமனைப் பக்கமே நகர்கிறதோ எனத் தோன்றவும் செய்தது. இப்படிச் சில சின்ன சின்ன விசயங்கள் எனக்குத் தோன்றியது, குறையாய் இல்லை. இப்படி இருந்திருக்க வேண்டாமோ எனத் தோன்றின என்றாலும் மொத்தத்தில் அத்தினி அத்தனை இனிமையான, அருமையான நாவலாய் மலர்ந்திருக்கிறது.

கதையின் ஓட்டத்தில் யாரைத் திருமணம் செய்வார்கள், பவித்ராதேவிக்கான வாழ்வு என்னவாக இருக்கும் என்பதை என்னால் ஊகித்துக் கொள்ள முடிந்தது. அப்படியான முடிவை வாசித்து முடித்தபோது பவித்ராதேவி என்னுள்ளே உயர்ந்து நிற்க, பரவாயில்லையே நாம கூட இப்படித்தான் ஆகும் எனச் சரியாகவே நினைத்திருக்கிறோம் போல என நினைத்துக் கொண்டேன்.

அன்னக்கொடி, பவித்ராதேவி, உமையாள் என எல்லாருக்கும் எதற்கும் முடியாது எனச் சொல்லாமல் ‘ம்ம்… பார்க்கலாம்’ எனச் சொல்வதைப் போல, ‘ம்ம்ம்… (இது மகிழ்வான ம்-தான்) நிச்சயமாக வாசிக்கலாம். பெண்களின் சிறப்பான வாழ்க்கையை வாசித்த அனுபவத்தைப் பெறலாம்’ என்பதை வாசித்து முடித்த போது உணர வைத்தது ‘அத்தினி’.

எழுத்தாளர் சித்ரா சிவன் அவர்களுக்கு வாழ்த்துகள். மண்ணின் மணத்தோடு இன்னும் நிறைய நாவல்கள் மலரட்டும்.

அத்தினி – பெண் யானையாய், தாயாய் அரவணைக்கும் பவித்ராதேவியின் கதை.

————————–
அத்தினி (நாவல்)
சித்ரா சிவன்
பக்கம் : 230
விலை : 280
பிறகு பிரசுரம்
————————-

எழுதியவர்:

பரிவை சே.குமார்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *