திரைப்பார்வை : சியான்கள்-  திரைப்படம் | கதையும் கதை சார்ந்தும்- பாவெல்பாரதிஆசாபாசங்கள் அற்றுப்போய் வெற்றாய் நாட்களை நகர்த்தச் சபிக்கப்பட்டதல்ல முதுமை. வயிற்றுப்பாடு, புறக்கணிப்பு, உடல் உபாதை இவற்றையும் தாண்டி உள்ளுக்குள் புதைந்து கிடைக்கும் நிறைவேறா நெடுநாள் ஆசைகளும் கலந்ததுதான் முதுமை. கட்டாயம் கடந்தே தீரவேண்டிய வாழ்வின் ஒரு பகுதிதான் முதுமை. அதன் இன்னொரு முகத்தை  இரத்தமும் சதையுமாக;  அச்சும் அசலுமாக தேனி மாவட்டத்தின் வறண்ட மேட்டு நிலக் கிராமம் ஒன்றின் பின்னணியில் சொல்லும் யதார்த்தக் கதைதான் ‘சியான்கள்’. ( இன்னொரு யகரமெய் சேர்த்து சிய்யான் என்றழைப்பதே வழக்கு)
தேனி மாவட்டத்தில் சிய்யான்கள் என்பது தாத்தா என்ற பொருள் குறித்த முதியவர்களைக்குறித்து வரும் உறவு முறைச்சொல். அம்மாவைப் பெத்த சிய்யான், அப்பாவைப் பெத்த சிய்யான் என்று தாய் வழி தந்தை வழி இருமரபிலும் அழைக்கும் வழக்கம் உண்டு. இப்பகுதியில் இஸ்லாமியர்களும் மற்ற சமூகத்தவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் அழைத்துக்கொள்ளும் விளிச்சொல்லும் கூட சிய்யான்.
திரைவெளியிலும் பொதுவெளியிலும் அறியப்பட்ட தேனி மாவட்டம் என்பது  வனமும் வயலும் முல்லைக்காடும் மலைத்தோட்டமும் தோப்பும் துரவும் செறிந்த ரம்மியமும் வளப்புமிக்கது.  ஆனால்  தேனிமாவட்டத்துக்கு பெரிதும் கவனப்படாத இன்னொரு முகமுண்டு.  கரட்டுக்காட்டு மேட்டா நிலம் சார்ந்த வறண்ட மானாவாரிச் சாகுபடி நடக்கும் வருசநாட்டுக் குன்றுப்பகுதியும்;  அம்மக்களின் கையிக்கும் மெய்யுக்குமான வாழ்வும். அத்தகைய வாழ்வின் சமகாலப் பிரதியே சியான்கள் படம்.
சடையன்,  செவனாண்டி, செவ்வாழை, மில்ட்ரி, ரஷ்யா, ஒண்டிக்கட்ட, மணியாட்டி ஆகிய ஏழு சிய்யான்கள்,  அவர்களின் குடும்பம், காய்ச்சலுக்கு மருந்து மாத்திரையும் ஊசியும் போடும் அனுபவ வழி கிராம டாக்டர் ( கதை நாயகன்) ,  மருத்துவம் பார்க்கும் கம்பவுண்டர், டீக்கடைக்காரர் அவரது மனைவி,  மகள் மலர் ( கதை நாயகி)  ஆகியோரைப் பிண்ணி சிய்யான்களின் பக்கம் நின்று சமூகத்தைப் பேசுகிறது இப்படம்.
கிராமம் தண்ணி தெளித்து ஒதுக்கிய; கிராமத்தைத் தண்ணி தெளித்து ஒதுக்கிய
ஏழு சிய்யான்களும் குடும்பப் பொருளுற்பத்தியில் ( வருமானத்தில்) பங்குபெறாதவர்கள்.  ஆனாலும் எப்பொழுதும் வெழுத்தவேட்டி மங்காதவர்கள். ஒன்றாகக் கூடியே திரிவார்கள். மகன்கள் ஆக்கிப்போடாத கறிக்கஞ்சியை ஈடுசெய்ய கெடாவைக் கவர்ந்து சென்று உறித்துத்திண்ணப்போக,  அது திருவிழாவுக்கு நேர்ந்து விட்ட  சாமிகிடா என்று தெரிந்ததும் திருப்பிக்கொண்டு வந்து ஒப்படைத்து ஏழு பேர் திண்ண வேண்டியதை  ஊருக்கே பங்குவைத்த நியாயம் கொண்டவர்கள்.
சியான்கள் || Tamil cinema chiyangal movie preview in tamil
ஆற்றாமைகளைப் பகிர்ந்து கொள்ள; பாரம் இறக்கிவைக்க; சோகம் சுமந்த வயதொத்த கூட்டாளிகள் அமைவது அரிது. முதுமைகளின் குரல்களைக் கேட்கச் செவிகளுக்கும், உணர்வுகளைப் புரிய உள்ளங்களுக்கும் ஏது நேரம்? ஒரு வகையில் இந்த ஏழு சிய்யான்களும் சுமைகளை மாற்றி மாற்றி இறக்கி வைத்துக்கொள்ள சோட்டுக் கிழவன்களும், ஒரு இளைஞனும் (கிராம டாக்டரும்) கிடைத்த நல்வாய்ப்பு
வாய்க்கப்பெற்றவர்கள்தான்.
கம்பவுண்டரின் பாலியல் இச்சையிலிருந்து  கதை நாயகி மலரைக் காப்பாற்றியதிலும் கதை நாயகர்களுக்குத் திருமணம் முடித்துவைத்ததிலும்,   தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராகப் பணியாற்றும் டாக்டரின் நண்பர் நடத்திய தொலைக்காட்சி சமையல் நிகழ்வொன்றில்  ஆபத்பாந்தவர்களாகக் கலந்து கொண்டு அந்நிகழ்வு வரவேற்பு பெறக்காரணமாக இருந்து அத்தொகுப்பாளருக்குப் பேருதவி செய்ததிலும் ஏழு சிய்யான்களுக்குப் பெரும்பங்குண்டு.  ஏழு சிய்யான்களில் இரண்டு பேர் அகால மரணமடைந்துவிட அவர்களை இழந்த மற்ற ஐவரும் தமக்கும் இது போல் எதுவும் நடப்பதற்குள் நமது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமென கலந்துபேசி முடிவெடுக்கிறார்கள்.
முதலில் ரஷ்யா என்ற சிய்யானின் நெடு நாள் எதிரிக்குப் பாடம் கற்பிக்கிறார்கள். பின்பு  விமானத்தில் ஏற வேண்டுமென்ற,  சடையன் சிய்யானின்நெடுநாள் கனவை நிறைவேற்றச் சென்னைக்குச் செல்கிறார்கள். அங்கு எதிர்பாராமல் நடந்த விபத்தில் சடையன் தலைக்காயம் அடைந்து நினைவில்லாமல் கிடக்க சிய்யான்களின் கனவை நனவாக்கும் முயற்சியில் இருந்த டாக்டரும் அவர் நண்பரான நிகழ்ச்சித் தொகுப்பாளரும் அதிர்ச்சியடைந்து சமூக ஊடகங்கள் மூலம் உதவிகளைப் பெற்று சடையனின் உயிரைக் காப்பாற்றியும் சிய்யான்களை விமானத்தில் பயணிக்க வைத்து கனவை நனவாக்கியதோடு ‘முதுமையில்  அடைவோம் புதுமை ‘ என்ற தொலைக்காட்சி விவாத நிகழ்வின் மூலம் முதியவர்களைக் காக்கும் அறக்கட்டளையையும் துவக்குவதாக நெகிழ்ச்சியுடன் படம் முடிகிறது. கிராமத்திருவிழா, ஊர்ப்பஞ்சாயத்து, நாயகன் – நாயகி காதல், கிராமத்தின் வாழ்க்கைப்பாடு, சிய்யான்களின் முதுகாதல், வயித்துப்பாடு, குடும்பக்கஷ்டம், கூடவே நக்கல் நையாண்டி   என்று நகைச்சுவையாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் கதை நகர்கிறது.
முதுமையில் திருமணம் செய்து கொள்ளும் ஒரு சிய்யான், அகால மரணமடையும் இரண்டு சிய்யான்கள், அன்பான மனைவி வாய்க்கப்பட்ட சிய்யான், எப்போதும் புரட்சிகரமாகவே பேசும் ஒரு சிய்யான் என்று சிய்யான்களின் கதையே படத்தின் மையம்.
இளமையில் கைகூடாத காதலால் திருமணமே ஆகாமல் இருந்து விட்ட சிய்யான்களில் ஒருவர் திருவிழா நாளொன்றில், திருமணம் முடித்து பேரன் பேத்தியெடுத்து கணவனையிழந்த சந்ததிகளின் பாராமுகத்தால் வயோதிகமடைந்து போன பழங்காதலியோடு ( பாட்டியோடு) சேர்வதும் ; ஊர்ப்பஞ்சாயத்தில் அந்தப்பாட்டி தன் நிலையிலிருந்து கொட்டித்தீர்த்த நியாயமும்,  தர்க்கமும் ஊர்ப்பஞ்சாயத்தின் மனதை மாற்றி முதுகாதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பதும் இதுவரை தமிழ் சினிமாவில் பேசப்படாதது.
செவனாண்டி, செவ்வாழையின் அகால மரணம், மனதை உறைய வைக்கும் கொடுமையானது. வீட்டில் கறிச்சோறு சமைத்த நாளில் தண்ணிஞ்சோறு மட்டும் கிடைக்கப்பெற்ற செவனாண்டி இரவில் விட்டத்தின் மேலிருந்த சட்டியில் ஆட்டுக்கறியை எடுத்துத்திண்ணப்போய் அதைப்பார்த்த மருமகள் கன்னத்தில் அறைந்து விட அவமானம் தாங்காமல் தூக்குமாட்டித் தொங்கிவிடுகிறான்.
செவ்வாழை தன் மகன்களின் பராமரிப்புக் குறைவால் மனம் வெறுத்துப் போய்  பக்கத்து ஊரில் உள்ள தன் மனதுக்குப்பிப்டித்த சலவைத்தொழிலாளி பெண்ணுடன் சேர்ந்து வாழ நினைத்து ஊரைவிட்டு வந்துவிட, மகன்கள்  செவ்வாழையைத்தேடிக் கண்டுபிடித்து  அவரின் கால்கள் இரண்டையும்,  இடுப்பையும் அடித்து ஒடித்துத் தூக்கி வீட்டில் வந்து போட்டு சொத்தை எழுதி வாங்க நினைக்கையில் அவர் சம்மதிக்க மறுக்கவே,  கம்பவுண்டரை வைத்து விச ஊசி போட்டுக் கொன்றுவிடுகிறார்கள்.  பற்றாக்குறை வாழ்வு மனித மனங்களில் ஏற்படுத்தும் வறட்சியை வறண்ட நிலத்தின் பின்னணியில் காட்சிப்படுத்தியிருக்கும் இச்சித்திரம் மனதை உலுக்கிவிடுகிறது.
செவனாண்டி, செவ்வாழை போலல்லாமல் புரிந்து கொண்ட மனைவியும், பாசமிக்க மகளும் வாய்க்கப்பெற்றவர் சடையன். சிய்யானுக்கும் அவர் மனைவிக்குமான நேசம் காவியத்தன்மை கொண்டது. ஆங்கிலக் கதையொன்றில் கூந்தலழகியான தன் மனைவிக்குத் திருமண நாள் பரிசளிக்கக் கணவன் தன் விருப்பத்திற்குரிய கைக்கடிகாரத்தை விற்று அவளின் கூந்தலைப் பராமரிக்க சீப்பு வாங்கி வர; மனைவி தன் கூந்தலை விற்று கணவனின் வார் அந்து போன கைக்கடிகாரத்திற்கு புது வார் வாங்கி வர ; இல்லாத கைக்கடிகாரத்திற்கு வாரும் அறுந்துபோன கூந்தலுக்குச் சீப்பும் வந்து சேரும். அக்காவியக்காதலுக்கு இணையாக கிராமத்துச் சிய்யான் சடையன் – பொன்னுத்தாய் தம்பதிகள் காட்டப்பட்டிருப்பது கதையின் உச்சம்.
விமானத்தில் ஏற வேண்டுமென்பது சடையன் சிய்யானின் பெருங்கனவு. அதற்காகவே யாருக்கும் தெரியாமல் உண்டியலில் காசு சேர்த்துவருகிறார்.  பேரனின் பொம்மை விமானம் ஒன்றைக் குழுக்கையில் ஒளித்து வைத்து அவ்வப்பொழுது ஓட்டிப் பார்த்துக்கொள்வார். இது தாமதமாகவே மனைவிக்கும் தெரியவருகிறது. பொன்னுத்தாயிக்கு அவள் ஆத்தா வீட்டுச் சீதனமான தண்டட்டி என்றால் உயிர்.  திருகாணி உடைந்து போன தண்டட்டியைச் சரி செய்யக் காசில்லாமல் பையில் முடிந்து வைத்திருக்கிறாள்.
டிசம்பர் 25 முதல் திரையரங்குகளில் மட்டும் சியான்கள் திரைப்படம்  வெளியிடப்படுகிறது.! வீடியோ இதோ - tamil360newz
 விருந்தாளியாக வந்த பேரன் அதை எடுத்து விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது,  விமானம் சேதமாகிப் போகவிருந்த சூழலில் அதை எடுக்கப் பதறி ஓடுகிறாள் மனைவி பொன்னுத்தாய். பொம்மை விமானம்  நொறுங்கி விடக்கூடாது என ஓடியவளின்  மண்டை நொறுங்கிப்போய் மரணப் படுக்கையில் விழுந்து கிடக்கிறாள். பொன்னுத்தாய் இறக்கும் தருவாயில் நீண்ட நாள் சரிசெய்ய முடியாமல் உயிராய் நினைத்து வைத்திருந்த மனைவியின்  உடைந்த தண்டட்டியைத் தன் உண்டியல் பணத்தை எடுத்துச் சென்று சரிசெய்து அவள் காதில் மாட்டுகிறார் சடையன். அந்த நிலையிலும்  கை சைகையில் விமானத்தில் பறப்பது போல  ஓட்டிக்காட்டியபடியே பொன்னுத்தாயின் உயிர் பிரிகிறது. முதுமைக்குள் ஈரம் காயாமலிருக்கும்  குழந்தைமையையும்; காதலையும் இதற்குமேல் காட்டமுடியுமாவென்று தெரியவில்லை.
காவியக் காதலின் குறியீடாகப் பொம்மை விமானமும்; தண்டட்டியும் படம் முழுவது குறியீடாய் நகர்ந்து கொண்டிருப்பது புது மாதிரியான உக்தி.
இப்படம் அழகியலோடு பேசியிருக்கும் சமூக  அரசியல்கள் முக்கியமானவ.
 * எத்தனை மருத்துவக்கல்லூரிகள் வந்தாலும் பெரும்பாலான கிராமப்புறங்கள் அனுபவ டாக்டர்களின் சேவையில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
* எத்தனை செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டாலும் மலைக்கிராமங்களில் செல்போன் சிக்னல் கிடைக்க அவர்கள் குறிப்பிட்ட மலை உச்சிக்கு ஓடித்தான் பேசியாக வேண்டும்.
* எத்தனை புல்லட் ரயில்கள் வந்தாலும் மலைக்கிராம மக்களின் பயணம் கியர் விழுகாத ஜீப்பில்தான் அமைகிறது.
* வெள்ளைக்காரன் போட்ட குற்றப்பரைம்பரச்சட்டம்தான்
இன்றைய ஆதர் அட்டை, பெருவிரல் ரேகை என்பதற்கெல்லாம் முன்னோடி.
போன்ற சமூக அரசியல்களைச் சொல்லாமல் சொல்லிச்செல்கிறது கதை. கதையின் ஓரிரண்டிடத்தில் செல்போனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியும், சிமெண்ட் ரோடும் இல்லையென்றால் இதனை  தொண்ணூறுகளின் தமிழகக் கிராம வாழ்க்கையாகத்தான் கொள்ளமுடியும். இருபத்தொன்றாம் நூற்றாண்டின் சமூக வளர்ச்சியின் அசைவை இன்னும் நெருங்காத வகைமாதிரிக் கிராம வாழ்வைக் கண்முன் வைக்கிறது படம்.
* ‘மாட்டுக்குத்தெரியும் நீரோட்டம். ரெண்டு நாள் சுத்தி சுத்தி எங்க படுக்குதோ அங்க தோண்டனும்’. என்று நிலத்தில் போர் போடுவதற்கு  நீரோட்டம் பார்க்கும் நம் மண்ணின் மரபார்ந்த அறிவை செவனாண்டியின் குரலில் கச்சிதமாகப் பதிவு செய்கிறது படம்.
* இன்றும் வருசநாட்டுக் கிராமங்களின் வீடுகளில்  லெனின், ஸ்டாலின் , ஜீவா புகைப்படங்களும் இவர்கள்  பெயர்களுடன் மனிதர்கள் இருப்பதையும் ; சிவப்புத்துண்டு போட்டவரை வில்லங்கமான ஆளு, கேள்விகேட்பவர் என்று பார்க்கும் பொதுப்புத்தியையும் ரஷ்யா என்ற பாத்திர வார்ப்பின் மூலம் அழகாகக் காட்டியுள்ளார்.
* குழந்தையின் கையை முகர்ந்து பார்த்து இன்னைக்கு என்ன குளம்பு என்று ஊகிக்கும் சிய்யான், தழுகைச் சோறு, கட்டிலில் இருக்கும் மூட்டைப்பூச்சியைக் கொல்லுதல், ஊராட்சி மன்ற பொதுத்தொலைக்காட்சிப் பெட்டி போன்ற நடுத்தரவர்க்கம் மறந்து போன பழைய வாழ்க்கையை நினைவூட்டுகிறது.
* நளினிகாந்த் என்ற பழம்பெரு நடிகர், மகாலட்சுமி போன்ற அண்மைக்கால நடிகர்கள் போக பெரும்பாலும் இயல்பான மனிதர்களையே நடிக்க வைத்து எளிய மனிதர்களின் வாழ்வை  நல்ல கதையாகச்  சொல்லியுள்ளார் இயக்குநர்.  நடிகர்களின் உச்சரிப்பு, உடல்மொழி, இயல்பான வசனம், நகைச்சுவைக்கென்று தனித்த நடிகர் இல்லாமல் இயல்பான நகைச்சுவை என்பது படத்தின் தனித்தன்மை.
* இன்னும் அழுத்தமான பாடல்,  நகைச்சுவையில்  கொஞ்சம், ஒளிப்பதிவில் கொஞ்சம் ( இன்னும் நல்ல தியேட்டரில் பார்த்திருந்தால் ஒருவேளை  இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.) என்று சிறிது கூடியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமென்று தோன்றுகிறது.
* எளிமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்து,  கடிகார மனிதர்கள், சிய்யான்கள் ஆகிய இரண்டு படங்களின் மூலம் தம் ஆற்றலை நிரூபித்துள்ள இயக்குநர் வைகறை பாலனுக்கும் இப்படக்குழுவுக்கும்  வாழ்த்துகள்…
தோழமையுடன் 
பாவெல் பாரதி @
ப மோகன் குமாரமங்கலம்.