முனைவர் பா. ஜம்புலிங்கம் எழுதிய சோழ நாட்டில் பௌத்தம் - நூல் அறிமுகம் | Chozha Naatil Boutham - budhar - jambulingam - https://bookday.in/

சோழ நாட்டில் பௌத்தம் – நூல் அறிமுகம்

சோழ நாட்டில் பௌத்தம் – நூல் அறிமுகம்

 

நூலின் தகவல்கள் :

நூல்: சோழ நாட்டில் பௌத்தம் (ஆங்கிலப் பதிப்பு)
ஆசிரியர் : முனைவர் பா. ஜம்புலிங்கம்
பதிப்பகம் : படிமம், புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம் 635 112, கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு (அலைபேசி: +91 98426 47101,
+91 63742 30985, மின்னஞ்சல்: editorpudhuezuthu@gmail.com)
பதிப்பாண்டு : டிசம்பர் 2023
விலை : ரூ.1500

முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள் எதையும் சிறப்போடு செய்யக் கூடியவர் என்பதை தமிழ் உலகம் அறியும்.

சோழ நாட்டில் பௌத்தம் குறித்து தொடர்ந்து 30, 40 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து கொண்டே வருபவர். “ஆய்வெனப்படுவது உள்ளதன் நுணுக்கம்” என்று தொல்காப்பியர் கூறுவார். சிறிய பகுதியா அல்லது சிறிய பொருளா அல்லது பரந்த ஒரு பரப்பா என்பது முக்கியமல்ல ஒரு விடயத்தை எவ்வளவு நுட்பமாக உள்ளே கூர்ந்து கவனித்து எழுதுகிறோம் என்பது ஆய்வில் மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் சோழ நாட்டை பௌத்தம் எந்த அளவுக்கு ஆட்சி கொண்டது என்பதைத் தமிழ் அறிவுலகில் ஆய்வுலகில், கள ஆய்வுகளில் தொடர்ந்து நிலை நிறுத்தி வருபவர் முனைவர் பா. ஜம்புலிங்கம் என்றால் மிகை இல்லை. 1990களிலேயே தமது ஆய்வுகளைத் தொடங்கி மிக விரிவாக தமிழில் ஏற்கனவே நூலாக வெளியிட்டவர். இப்பொழுது அதை ஆங்கிலத்திலும் கொண்டு வந்துள்ளார்.

அஷ்டாங்க மார்க்கத்தை, பௌத்தத்தின் அடி நாதமாக விளங்கக்கூடிய மிக முக்கியமான பகுதியாகிய எண் மார்க்கத்தை நினைவுபடுத்தும் விதமாகவே எட்டு தலைப்புகளில் மிக அருமையாக நூலைக் கட்டமைத்துள்ளார் நூலாசிரியர்.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பிற்காலச் சோழப் பேரரசு பேரளவில் உருவாக்கி ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு மேலாக சோழப் பேரரசு கடல் கடந்து இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமல்லாமல் ஆசிய நாடுகள் பலவற்றிலும் மாபெரும் ஆதிக்கத்தை செலுத்தியது. அது சைவப் பெரும் பேரரசாக விளங்கியது. அதன் வரலாற்று நீட்சியாக இன்றைக்கும் நம்மிடையே நின்று நிலைத்து பெரும் புகழ் ஒளி வீசி நிற்கும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் தொடங்கி தஞ்சை மண்டலம் முழுவதும் வியாபித்து நிற்கும் பல்வேறு சைவ பெருங் கோயில்கள் அதன் சாட்சிகளாக உள்ளன. இன்னும் தென்னிந்தியாவிலும் பல இடங்களிலும் உள்ள ஆலயங்கள் கூட சோழர் கலை மரபு ஆலயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சோழர் கலைப்பாணி என்று அருமையான நூல் ஒன்று 1960களில் தமிழில் எழுதப்பட்டதும் நினைவிற்கு உரியதே.

அதே நேரம் வரலாறு சைவப்பெரும் பேரரசு உருவானது என்றாலும் அதன் ஊடாக பிற சமயங்களும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்துடன் சோழமண்டலத்தில் விளங்கியது. பிற்காலச் சோழர்கள் ஆட்சிக்கு முன்னர் ஏறத்தாழ 1300 ஆண்டுகளாக அசோகர் காலம் தொடங்கி சோழமண்டலத்தில் மாபெரும் பௌத்த வரலாற்றுத் தடயங்கள் இருந்தன என்பதை வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், அயல் நாட்டார் குறிப்புகள், கள ஆய்வுகள், ஊர்ப்பெயர் ஆய்வுகள் என்று பலவற்றையும் எடுத்து மிக நுட்பமாக நூலாசிரியர் இந்த நூலில் எழுதியுள்ளார். முன்னோடி அறிஞர்களின் கருத்துக்களையும் எடுத்துக்கொண்டு மேலும் முன்னேறிச் செல்லுகிறார். எந்தச் சிறு தகவல்களையும் எந்த நூலில் இருந்து பெற்றோம், எந்த அறிஞர் வழங்கியது எந்த தகவலை யார் கொடுத்தது என்ற விவரங்களையும் மிக நேர்மையோடு பதிவு செய்துள்ளார். ஆய்வாளர்கள் அனைவரும் கற்க வேண்டிய விடயம் இது.

தமிழில் சம காலத்தில் பவுத்தம் குறித்த ஆய்வுகளில் முக்கியமான ஐந்து களங்கள் உள்ளன என்று கூறலாம்.

ஒன்று புற வடிவங்களில் அதாவது பருப்பொருள் வடிவத்தில் உள்ள பௌத்த தடையங்கள் சிலைகள் ஆலயங்கள் மாற்றப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட புத்தர் உருவங்கள் ஆலயங்கள் குறித்து பல்வேறு செய்திகள் தொடர்ந்து ஒரு பக்கம் நடக்கின்றன இந்த ஆய்வு வரலாறு தொல்லியல் கள ஆய்வு என்று குறிக்கலாம்.

இரண்டாவதாக பண்பாட்டு களத்தில் பௌத்தம் எந்த அளவுக்கு தாக்கத்தை நிகழ்த்தியுள்ளது என்பது குறித்த ஆய்வுகளை பண்டித அயோத்திதாசர் தொடங்கி வைத்தார் என்றால் மிகை இல்லை. இத்தகு கண்ணோட்டத்தில் பண்பாடுகள், விழாக்கள் இன்னும் பல்வேறு விதமான சடக்குகள் எல்லாம் எவ்வாறு பௌத்தத்திலிருந்து உள்வாங்கப்பட்டன அல்லது பௌத்த தொடக்கப் புள்ளிகள் எவ்வாறு விரித்து எழுதப்பட்டன என்பது குறித்து நடக்கின்ற ஆய்வுகளை பண்பாட்டு ஆய்வுகள் என்று குறிக்கலாம்.

மூன்றாவதாக பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் தந்தை பெரியார், பாபாசாகேப் அம்பேத்கர், பேராசிரியர் லட்சுமி நரசு, பேராசிரியர் தம்மானந்த கோசாமபி, இராகுல சாங்கிருத்தியாயன் உள்ளிட்ட சிந்தனையாளர்களின் தாக்கத்தின் மூலமாக உந்துதல் பெற்று பௌத்த ஆய்வுகளின் மீதான ஈடுபாட்டை கொண்டுள்ள பகுத்தறிவாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள் உள்ளிட்டோரின் விரிந்த ஆய்வு கண்ணோட்டங்களை குறிப்பிடலாம்.

நான்காவதாக இந்து மதத்தின் மிக விரிவான ஞான மரபில் பௌத்தமும் ஒரு கூறாக உள்ளது. எனவே பௌத்தத்தை விட்டுத் தர முடியாது. பௌத்தம் நமது இந்திய மரபின் மிக ஆழமான உச்சபட்சமான சிந்தனை மரபு என்று பேசுகின்ற பார்வையும் ஒரு புறத்தில் உண்டு இத்தகு சிந்தனை மரபை சுவாமி விவேகானந்தர், அண்ணல் காந்தியடிகள் தொடங்கி டாக்டர் ராதாகிருஷ்ணன் கடந்து சமகாலத்திலும் பலர் கொண்டுள்ளனர்.

இதைக் கடந்தும் இன்னொரு மரபு உள்ளது அது பயன்பாட்டு நோக்கில் தியானம் மருத்துவம் உடல்நலம் சார்ந்து பௌத்த ஞானக் கோட்பாடுகளை மரபுகளை எடுத்து பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கூறு ஆகும். இத்தகு பயன்பாட்டு மரபுகளை அண்மைக்காலத்தில் தியானம், யோகம் குறித்து எளிமையான மொழியில் மக்கள் நலம் சார்ந்து இயங்கி வருகின்ற வேதாத்திரி மகரிஷி அவர்களின் கண்ணோட்டங்கள் முக்கியமானவை. இத்தகு ஞான நல்லோர்கள் புத்தரின் பல சிறந்த சிந்தனைகளை மிக எளிமைப்படுத்தி மக்களுக்கு வழங்கி வருகின்றனர் எனலாம்.

இவ்வாறு பன்முக கண்ணோட்டங்களில் வளர்ந்து வருகின்ற பௌத்த ஆய்வியல் கண்ணோட்டங்களில் வரலாறு தொல்லியல் சார்ந்து சிலைகள் சார்ந்த ஆய்வில் மிகக் குறிப்பிடத்தக்க நூல் சோழ நாட்டில் பௌத்தம் என்ற முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்களின் பணியாகும்.

“பார்த்துக் கொண்டே இருக்கலாம்” “கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்” என்று கூறுகின்ற மொழிகள் யாவும் இந்த நூலுக்கு மிகவும் பொருந்தும். அந்த அளவுக்கு மிகச் சிறந்த செம்பதிப்பாக அழகிய வண்ணத் தாள்களில் மிக அருமையாக நூல் உருவாக்கப்பட்டுள்ளது புது எழுத்து பதிப்பகத்திற்கு இனிய நல்வாழ்த்துக்கள்.

சிந்து சமவெளி ஆய்வுகள் கண்டறியப்பட்டு அது திராவிட நாகரிகத்தோடு தொடர்புடையது என்று சர் ஜான் மார்ஷல் கூறியதன் நூறாவது ஆண்டை கொண்டாடி இருக்கும் இன்றைய சூழலில் சிந்து சமவெளி நாகரிக பண்பாடு எந்த அளவுக்கு திராவிட பண்பாட்டோடு தொடர்புடையது என்று ஹீராஸ் பாதிரியார் காலம் தொடங்கி கில்பெட் சிலேட்டர் கடந்த காலத்தில் டாக்டர் மா. இராசமாணிக்கனார், டாக்டர் க.த. திருநாவுக்கரசு, ஐராவதம் மகாதேவன் நம் சம காலத்தில் ஆர். பாலகிருஷ்ணன் எனப் பலரும் விரிந்த ஆய்வுகளை செய்து கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில் பௌத்தம் குறித்து மிக விரிவான ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நற்செய்தி ஆகும்.

சிந்து சமவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பை போலவே நம் சமகாலத்தில் கண்டறிக்கப்பட்ட கீழடி அகழ்வு ஆய்வுகளைப் போலவே பௌத்தத்தின் கண்டுபிடிப்பு என்பது ஓலைச்சுவடிகளாக இருந்து தமிழ் அச்சுக்கு கொண்டுவரப்பட்டதை போல மாபெரும் புதைபாடுகளில் இருந்து இந்திய துணைக்கண்டத்தில் பௌத்தம் மீட்டெடுக்கப்பட்டது. அதனுடைய நீட்சியாக 21ஆம் நூற்றாண்டிலும் இத்தகு ஆய்வுகள் மிக வலிமையாக வெளி வருகின்றன என்பது மகிழ்ச்சிக்குரியது.

தமிழின் பன்முகத்தன்மை என்பது அனைத்து சமயங்களையும் அனைத்து முற்போக்கு கூறுகளையும் நன்கு உள்வாங்கிக் கொள்ளுகின்ற பார்வையாகும். அத்தகு பார்வையை இன்னும் விரிவுபடுத்தக்கூடிய தன்மையில் இவ்வாறான நூல்களின் வருகை தமிழுக்கும் தமிழ்நாட்டின் ஆய்வுகள் குறித்து ஆங்கிலத்தில் வெளிவருகின்ற காரணத்தினால் தமிழர் அல்லாதவருக்கும் இந்த நூல்கள் விருந்தாக, நற்செய்தியாக அமைகின்றன.

இத்தகு செம்பதிப்பான நூல்கள் நிறைய வெளிவர வேண்டும். நூலாசிரியர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் பணி பாராட்டுக்குரியது. மென்மேலும் இவ்வாறான நூல்களை அவர்கள் வெளியிட இனிய நல்வாழ்த்துக்கள்.

 

நூல்  அறிமுகம் எழுதியவர் : 

– பேராசிரியர் க.ஜெயபாலன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 3 Comments

3 Comments

  1. என் சோழ நாட்டில் பௌத்தம் (ஆங்கிலப் பதிப்பு) நூலை அறிமுகம் செய்துள்ள பேராசிரியர் க.ஜெயபாலன் அவர்களுக்கும் வெளியிட்டுள்ள புக் டே தளத்திற்கும் நன்றிய.

  2. Senthil Kumar

    ஐயா வணக்கம் ஆசிரியர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுடன் பணியாற்றி உள்ளேன். ஆய்வு,மொழிப் புலமை,அலுவல் பணி என பன்முகத் தன்மையுடன் எவ்வாறு இவரால் இயங்க முடிகிறது என வியந்தேன். இன்றும் அது தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *