கிறித்துவமும் தீண்டாமையும் | ‘மாற்கு படைப்புலகம்’ | Christianity And Untouchability In Tamilnadu | தலித் கிறித்துவர்கள் | யாத்திரை நாவல்

கிறித்துவமும் தீண்டாமையும் – முனைவர். அ.ப.அருண்கண்ணன்

கிறித்துவமும் தீண்டாமையும்

– முனைவர். அ.ப.அருண்கண்ணன்

இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்குப் பெறும் தடையாக உள்ளது சாதி. அது இந்திய சமூகத்தில் ஆழமாக வேர் பிடித்து வளர்ந்துள்ள ஒரு கொடிய நோய். இங்கேயே தோன்றி வளர்ந்த மதங்கள் மட்டுமின்றி வெளியில் இருந்து வந்து பரவிய கிறித்துவம் போன்ற மதங்களும் சாதியப் பாகுபாடுகளை ஏற்றுக்கொண்டே இந்தியாவில் வளர்ச்சி பெற்றன.

சாதிய அமைப்பு முறை உருவாக்கிய தீண்டாமையை சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனம் தண்டனைக்குரிய சட்டமாக்கியது. ஆனாலும் நடைமுறையில் தீண்டாமைத் தொடரவே செய்கிறது. இந்து மதத்தில் தொடர்வதால்தான் இந்த தீண்டாமை தொடர்கிறது எனக் கூறி 1956 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரே 3,65,000 பேருடன் புத்தமதத்திற்கு மாறினார். இந்திய துணைக் கண்டத்தில் அம்பேத்கருக்கு முன்பும் பின்பும் பலரும் குழுவாக இந்து மதத்தின் சாதிய தீண்டாமையிலிருந்து விடுபடுவதற்கு வேறு மார்க்கத்திற்கு மாறியுள்ளனர் (காண்க:அசோக் குமார் & சுந்தர் ஜே பூபாலன் 2015). இருப்பினும் இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை மதம் மாறினாலும் சாதியும் தீண்டாமையும் தொடரவே செய்கிறது.

இந்தியாவில் 1970 மற்றும் 1980 களில் சாதிய தீண்டாமைக்கு எதிராக வலுவான போராட்டங்கள் தொடங்கின. இதனால் தலித் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதன் தாக்கம் கிறித்துவ தலித்துகளிடமும் ஏற்பட்டது. அப்படி விழிப்புணர்வு ஏற்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்து தலித் கிறித்துவர்கள் எப்படி சாதி கிறித்துவர்களுக்கு எதிராகப் போராடினார்கள் என்பதையும் அப்படியான போராட்டத்தின் ஒரு பகுதியாக எப்படி “தலித் கிறித்துவ இயக்கம்” உருவானது என்பதையும் விவரிக்கிறது இயேசு சபை துறவியான மாற்கு அவர்களின் யாத்திரை நாவல்.

1990 களில் தலித் கிறித்துவ மக்களின் எழுச்சியையும் அதை எப்படி திருச்சபைகள் எதிர்கொண்டன என்பதைப் புரிந்துகொள்வதற்கு மிக முக்கியமான ஆவணமாகவே மாற்கு அவர்களின் இந்த நாவல் விளங்குகின்றது. எனவே இந்த நாவலை ஆய்வு செய்வதின் வாயிலாக கடந்த கால வரலாற்றையும் அது இந்த சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் ஒருசேர அலசிப் பார்க்க முயலுகிறது இக்கட்டுரை.

கிறித்துவத்திற்குள் கத்தோலிக்கம் மற்றும் சீர்திருத்த கிறித்தவத்தைப் பின்பற்றும் இரண்டு பிரிவினர் உள்ளனர். மாற்கு அவர்களின் நாவலும் இந்த கட்டுரையிலும் கத்தோலிக்கப் பிரிவுக்குள் இருக்கும் தீண்டாமை தொடர்பான விடயங்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாவலில் பதிவு செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வுகளில் மாற்கு அவர்களும் பங்கெடுத்துள்ளதால் அவருடைய தன்வரலாற்று நூலான பேருவகை நூலிலிருந்தும் பல விசயங்கள் இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கிறித்துவமும் தீண்டாமையும் | ‘மாற்கு படைப்புலகம்’ | Christianity And Untouchability In Tamilnadu | தலித் கிறித்துவர்கள் | யாத்திரை நாவல்

தமிழ்நாட்டில் கிறுத்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்குள் மறை பரப்புவதற்காக வருகை புரிந்த இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மறை பரப்பியதாகவும், அதற்காக சென்னையில் கொலையுண்டார் என்பதும் பாரம்பரியமான நம்பிக்கை (காண்க:ஆ. சிவசுப்பிரமணியன், 2023). அதற்கு போதுமான வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்றாலும் 2 ஆம் நூற்றாண்டில் இருந்து இந்திய துணைக் கண்டத்தின் கடலோர பகுதிகளில் கிறித்துவ சமூகம் வாழந்ததற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன (காண்க:ராபர்ட் எரிக் ஃப்ரைகென்பெர்க், 2023).

தாமஸிற்கு பிறகு இந்திய பகுதிக்குள் நீண்ட காலத்திற்கு கிறித்துவ மறை பரப்பு பணிக்கு யாரும் வந்ததாகத் தரவுகள் இல்லை. 1498 ஆம் ஆண்டு வாஸ் கோட காமா குழுவினரால் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு வருவதற்கான புதிய பாதை கண்டுபிடிக்கப்பட்ட பிறகே மீண்டும் கிறித்துவர்களின் வருகையும் மறை பரப்பு பணிகளும் இந்தியாவில் தொடங்கியுள்ளது. தமிழ்ப் பகுதியை பொருத்தவரை 1542 ஆம் ஆண்டு இயேசு சபை துறவியான புனித பிரான்சிஸ் சவேரியார் மறை பரப்பும் பணிகளுக்கு வருகை புரிந்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஹென்ரிக் ஹென்ரிக்ஸ், ராபர்ட் டி நோபிலி, ஜான் டி பிரிட்டோ போன்ற இயேசு சபை துறவிகள் தமிழ் நாட்டில் மறை பரப்பும் பணியில் ஈடுபட்டு கிறித்துவ மதத்தை வளர்த்துள்ளனர். அதன் பிறகு 18 ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த கிறித்துவப் பிரிவினரைச் சேர்ந்த பாதிரியார் சீகன் பால்க் உட்பட பலரும் தரங்கம்பாடியின் ஊடாக தமிழ் பகுதிக்குள் மறை பரப்பும் பணியினை மேற்கொண்டணர். அவ்வாறு பரவிய கிறித்துவ மதத்தை 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2.78 கோடி பேரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 44, 78,550 பேரும் பின்பற்றுகின்றனர்.

கிறித்துவ மதமும் சாதியும்

தமிழ் பேசும் பகுதியில் உள்ள 44,78,550 கிறித்துவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலித் கிறித்துவர்களே (காண்க: டேவிட் முசெ, 2010). தமிழ்ப் பகுதியைப் பொறுத்தவரை 17 ஆம் நூற்றாண்டி முதலே தலித்துகள் கிறித்துவ மதத்திற்கு மாறியுள்ளதை அறியமுடிகிறது. தலித் கிறித்துவர்கள் பெரும்பாலும் இந்து மதத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமைகளில் இருந்து விடுபடவே கிறித்துவ மதத்தை தழுவியுள்ளனர். சமத்துவத்தை போதிக்கிற கிறித்துவ மதத்திற்குள் ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் சமமாக நடத்தப்படவில்லை என்றும் அதற்கு திருச்சபையும் துணைபோனது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

அதற்கு உதாரணமாக 18ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் உள்ள புனித பவுள் தேவாலயத்தில் (St Paul’s Church) இருந்து சாதியப் பாகுபாட்டை எடுத்துக்காட்டாக குறிப்பிடுகின்றனர். இந்தக் கோவிலில் சாதி கிறிஸ்தவர்களும்’, தலித் கிறிஸ்தவர்களும் தனித்தனியே அமர்ந்து பூசை காண குறுக்குச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. 16 ஆம் தேதி அக்டோபர் மாதம் 1745 ஆம் ஆண்டு அதற்கு தலித் கிறித்துவர்கள் எதிர்பு தெரிவித்துள்ளனர் அதற்கு பிறகு அந்த பிரிவினைச் சுவர் இடிக்கப்பட்டது. 1761ஆம் ஆண்டு ஆங்கிலேயே படையின் தாக்குதல் காரணமாக தேவாலயம் இடிந்தது. பிற்காலத்தில் அந்த தேவாலயத்தை புனரமைக்க திட்டமிட்ட இயேசு சபையினர் பிரிவினை சுவர் இன்றிதான் அதை செய்ய விரும்பினர். ஆனால் சாதி கிறித்துவர்களின் எதிர்ப்பு காரணமாக அத்திட்டத்தை கைவிட்டுள்ளனர் (காண்க: ஆர். வேல்முருகன், 1999).

அதன் பிறகு 19 ஆம் நூற்றாண்டில் 1839 ஆம் ஆண்டு திருச்சியில் சாதி கிறித்துவர்களுக்கும் தலித் கிறித்துவர்களுக்கும் தனித் தனியாக கல்லறை கட்டப்பட்டுள்ளது (காண்க: பிரகாஷ் லூயிஸ், 2007). இதுபோன்று கிறித்துவத்திற்குள் உள்ள தீண்டாமை குறித்த எண்ணற்ற உதாரணங்களைச் சுட்டிக் காட்டலாம். ஏற்கனவே குறிப்பட்டது போல ஆரம்பம் முதலே இவற்றிற்கு எதிராக தலித் கிறித்துவர்கள் போர் கொடி உயர்த்தியுள்ளனர். இதுபோன்ற எதிர்ப்புகள் தமிழகத்தில் மக்கள் இயக்கமாக 1980 களில் மாறுகிறது. அப்படி தொடங்கிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றுதான் செங்கல்பட்டு பகுதியில் உள்ள தச்சூர் கிராமத்தில் நடைபெற்ற தலித் கிறித்துவர்களின் போராட்டம். அந்த ஊரில் நிலவிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தலித் கிறித்துவர்கள் இயக்கமாக இணைந்து முன்னெடுத்த போராட்டங்களை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் மாற்கு அவர்களின் யாத்திரை நாவல்.

விடுதலை இறையியலும் இயேசு சபையும்

1971 ஆம் ஆண்டு பெரு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை துறவியான ‘குஸ்டாவோ குட்டியரஸ்’ அவர்களால் உருவாக்கப்பட்டது விடுதலை இறையியல். லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களுடன் இணைந்து அவர்களின் சார்பாக செயல்படுவதே உண்மையான இறைப்பணி என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்தது விடுதலை இறையியல். அதை ஏற்றுக்கொண்டு லத்தீன் அமெரிக்க பகுதிகளில் உள்ள பல பாதிரிமார்கள்அதற்காக உழைக்கத் தொடங்கினார். அதற்காக சிலர் அரசு படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1989 ஆம் ஆண்டு எல் சால்வடாரில் பணி செய்த 6 இயேசு சபை துறவிகளை அந் நாட்டின் ராணுவம் போராளிகளுக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறி நடுஇரவில் அவர்கள் பணி செய்த பல்கலைக்கழக வளாகத்திற்குள் வைத்து சுட்டு கொன்றது.

கிறித்துவமும் தீண்டாமையும் | ‘மாற்கு படைப்புலகம்’ | Christianity And Untouchability In Tamilnadu | தலித் கிறித்துவர்கள் | யாத்திரை நாவல்
லயோலா கல்லூரி தமிழ்த்துறை மற்றும் திராவிட பல்கலைகழகம் இணைந்து நடத்திய ‘மாற்கு படைப்புலகம்’ கருத்தரங்கு

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பணி செய்வதற்கு திருச்சபை தடையாக இருந்தபோது சிலர் துறவறத்தை விட்டுவிட்டு திருச்சபையில் இருந்தே வெளியேறினார்கள். அதில் ஒருவர்தான் கொலம்பியா நாட்டில் பணி புரிந்த கமிலோ டோரஸ் ரெஸ்ட்ரெபோ திருச்சபையில் இருந்து வெளியேறி அந் நாட்டில் அரசை எதிர்த்து போராடியவர்களுடன் சேர்ந்தார். மாற்கு அவர்கள் குரு பட்டம் பெறுவதற்கான இறையியல் படிப்பின் இறுதி ஆண்டில் கமிலோ டோரஸ் ரெஸ்ட்ரெபோ பற்றி ஆய்வு செய்து கட்டுரை ஒன்றை எழுதினார்.

விடுதலை இறையியலின் தாக்கம் திருச்சபைக்குள்ளும் இயேசு சபை போன்ற துறவுச் சபைக்குள்ளும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக 1975 ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற 32 வது இயேசு சபையின் பொதுக் குழுவில் தங்களுடைய விசுவாசமானது நீதியை வளர்ப்பதாக இருக்கவேண்டும் என்கிற கருத்து வலியுறுத்தப்பட்டது (காண்க: மாற்கு 2019). விடுதலை இறையியலில் ஈர்க்கப்பட்டதாலும், சபையின் இத்தகைய முடிவின் காரணமாகவும் தமிழக இயேசு சபையினர் கிழக்கு ராமநாதபுரம் பகுதியில் ‘கிழக்கு ராமநாதபுரம் மக்களின் செயல்பாடு, விடுதலைக்கான இயக்கம்’ (பல்மேரா) என்கிற அமைப்பை உருவாக்கி ஏழை மக்களுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கினர். அந்த குழுவில் மாற்கு அவர்களும் இணைந்து ஓரியூர் பகுதியில் மக்களை ஓருங்கிணைக்கும் பணியினை மேற்கொண்டார். திருச்சபை மற்றும் துறவு சபைகளின் இது போன்ற செயல்பாடுகளின் நீட்சியாக தலித் இறையியல் என்கிற கருத்தாக்கம் 1980 களில் இந்தியாவில் உருவானது. இதன் காரணமாக திருச்சபைக்குள் இருக்கிற சாதிய பாகுபாடுகள் பேசு பொருளானது.

தச்சூரில் மாற்கு

1982 ஆம் ஆண்டு குருபட்டம் பெற்ற மாற்கு முதல் இரண்டு ஆண்டுகள் கன்னியாகுமரி மாவட்டம் கோடிமுனை பங்கில் பணிபுரிந்தார். 1984 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓங்குர் பங்கில் பணி செய்வதற்கு வருகிறார். அந்த பகுதியில் உள்ள தச்சூர் பங்குக்கு பணியாளர் அருள் ஓங்கூருக்கு வருகிறார். அப்போது மாற்கு அவர்களிடம் தச்சூர் பங்கிற்கு பூசை வைக்க வருமாறு அழைப்பு விடுக்கிறார். அந்த அழைப்பை ஏற்று டிசம்பர் மாதம் 08 ஆம் தேதி அமலோற்பவ அன்னையின் திருவிழா அன்று தச்சூரில் பூசை வைத்தார். அவர் தமிழில் செபம் சொல்லும்போது அங்குள்ளவர்கள் தெலுங்கில் பதில் செபம் சொல்லியுள்ளனர் அவர் சற்று குழம்பினார் இருப்பினும் பூசையை தொடர்ந்தார். அதில் சாதிதான் ஜென்மபாவம் என்றும் சாதியம் ஒரு மிகப்பெரிய சமூகக் கொடுமை என்றும் நாம் அதிலிருந்து விடுபட வேண்டும் என்று மறையுரை கொடுத்துள்ளார்.

பூசையின் முடிவில் அந்த ஊரில் உள்ள ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை எப்படி தப்பாக பேசலாம் என மாற்கு அவர்களை அடிக்கச் சென்றுள்ளனர். ஒரு வழியாக அந்த பங்கு குருவின் தலையீட்டிற்கு பிறகு அங்கிருந்து பாதுகாப்பாக மாற்கு வெளியேறியுள்ளார். அதே கால கட்டத்தில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியான சூசை ஒரு தலித் கிறித்துவர். அரசு செருப்பு தைக்கும் தலித்துகளுக்கு பெட்டிக் கடை வைத்துக் கொள்வதற்கு பொருளாதார உதவி தொகை அறிவிக்கிறது. அதற்கு விண்ணப்பித்திருந்த சூசைகக்கு தலித் கிறித்துவர் என்கிற காரணத்திற்காக அரசின் சலுகை கிடைக்கவில்லை. அதை எதிர்த்து 1983 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு 1985 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதில் கிறித்துவத்தில் தீண்டாமை இல்லை என்றும் அப்படி கிறித்துவத்தில் தீண்டாமை இருப்பதாக நிரூபித்தால் தலித் கிறித்துவர்களுக்கும் \அந்த சலுகை வழங்கப்படலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதை கவனித்த மாற்கு தச்சூரில் நடைபெறும் தீண்டாமைக் கொடுமைகளைப் பற்றி வெளி உலகம் அறியச் செய்ய வேண்டுமென பத்திரிகையில் எழுதினார். அதன் மூலம் தலித் கிறித்துவர்களுக்கு இந்து மதத்தில் உள்ள தலித்துகளுக்கு கிடைக்கும் அரசின் சலுகைகள் கிடைக்கலாம் எனவும் எண்ணுகிறார். அந்த கட்டுரை நீதிபதியின் பார்வைக்கு சென்றதோ இல்லையோ அந்த ஊரின் ரெட்டியார்களின் பார்வைக்கு சென்றுவிடுகிறது. மாற்குக்கு எதிராக ஆயரிடம் முறையிடுகின்றனர் ரெட்டியார்கள். ஆயரும் இரு தரப்பையும் ஒன்றாக கூப்பிட்டு சமாதானம் செய்ய முயல்கிறார். ரெட்டியார்கள் பற்றி தவறாக எழுதியதற்கு மாற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் ஆனால் அதற்கு மாற்கு உடன்படவில்லை ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி ஆயர் இனிமேல் அவர் உங்களைப் பற்றி எழுதமாட்டார் என வாக்குறுதி அளிக்கிறார். அந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் ‘நீ வெளியதான வரணும் வா உன்னைக் கொல்லாமல் விடமாட்டோம்’ என மிரட்டி விட்டு வெளியேறினார்கள் ரெட்டியார்கள். எனவே உடனடியாக வெளியே செல்ல வேண்டாம் என்று கூறினார் ஆயர். இருப்பினும் தான் அந்த ஊரில் நடைபெற்ற கொடுமைகளைப் பதிவு செய்வதை யாராலும் தடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார் எனவேதான் 1993 ஆம் ஆண்டு யாத்திரை நாவல் வெளியானது.

யாத்திரை - Yaathirai – The Ignorant Books

யாத்திரை நாவல்

இந்த நாவலில் தச்சூரை பிச்சுர் என்றும் மாற்கு அவர்கள் பணி புரிந்த ஓங்கூரை ஓமலூர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தச்சூர் முழுமையான கிறித்தவ கிராமம் அது தமிழக திருச்சபையில் மிகவும் முக்கியமான ஊராக கருதப்படுகிறது. அந்த கிராமத்தில் உள்ள ரெட்டியார் சமுகத்திலிருந்து 3 ஆயர்கள், 20 துறவிகள், 60 கன்னியாஸ்திரீகளும் உருவாகியுள்ளனர். இப்படி கடவுளுக்கு ஊழியம் செய்வதற்கு வீட்டிலிருந்து ஒருவர் சென்றபோதும் அந்த கிராமத்தில் இருந்த தீண்டாமைக்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்பதை வருத்தத்துடன் பேருவகை நூலில் பதிவு செய்துள்ளார் மாற்கு அவர்கள். ஓங்கூர் பங்கு முழுமையாக தலித் கிறித்துவர்கள் மட்டுமே வசிக்கும் ஒரு பங்கு.

1828ஆம் ஆண்டில் இருந்து தச்சூரில் கிறித்துவர்கள் வசிப்பதாக கருதப்படுகிறது. அந்த ஊரில் வசிக்கும் ரெட்டியார்களின் முன்னோர்கள் ஆந்திராவில் உள்ள அனந்தபூரைச் சேர்ந்தவர்கள். அந்தப் பகுதியில் பணி புரிந்த இயேசு சபை துறவியான லே கோக் ( Le Gac) அவர்களின் உதவியுடன் 1715 ஆம் ஆண்டு கிறித்துவ மதத்திற்கு மாறியுள்ளனர். பிறகு பஞ்சம் மற்றும் சண்டை போன்ற காரணங்களுக்காக அங்கு இருந்து புலம் பெயர்ந்து வேறு வேறு ஊர்களுக்கு சென்று இறுதியாக தச்சூரில் வந்து 1828 ஆம் ஆண்டு குடியேறுகின்றனர். இப்படித்தான் கிறித்துவம் தச்சூருக்கு வந்தது என நாவலில் அந்த ஊரின் தலைமை தர்மகர்த்தா ராயப்ப ரெட்டியின் வழியாக அறிவிக்கிறார் நூலின் ஆசிரியர்.

பாதர் ராஜா தச்சூரில் சாதி பாகுபாடு இருப்பதாக பத்திரிகையில் எழுதி வெளியானபோது நடந்த ஊர் கூட்டத்தில் அந்த ஊரில் வசிக்கும் சேவியர் ரெட்டி “கிறித்துவ மதத்தில சாதி பார்க்கலாமா? பாக்குறது தப்புதான்” என்று கூறுவார்.

அவருக்கு பதில் சொல்வதற்குத்தான் அவர்களுடைய கடந்த கால வரலாற்றை விவரிப்பார் ராயப்ப ரெட்டி. அந்த சமயத்தில் தாங்கள் கடைப்பிடிக்கும் சாதிய பாகுபாட்டை நியாயப்படுத்துவதற்கு மேலும் சில விசயங்களை அந்த ஊர் ரெட்டியார்களிடம் சொல்லுவார்.

“இதையெல்லாம் எதுக்கு சொல்லுறம் தெரியுமா? நமக்கு சரித்திரம் தெரிஞ்சிருக்கணும். தெரிஞ்சாத்தான் நாம ஏன் இப்படி இருக்கமுன்னு தெரியும். நம்ம சாதியில முதல் முதல்ல மனந்திரும்பிய தும்மா ராயப்ப ரெட்டி அவரு மதம் மாறுனபோது சாதிய விடச்சொல்லி கேக்கல.. அவர் ரெட்டியாராகத்தான் கிறித்துவத்துல சேர்ந்தாரு. ரெட்டியாராகத்தான் செத்தாரு. அவருக்குப் பின்னால் மாறினவுங்களும் ரெட்டியாராகத்தான் மதம் மாறினாங்க. சாதிய விடவே இல்ல. சாதியை விடலன்னு சொல்லுறத விட, சாதிய விடச் சொல்லி நம் முன்னோர்கள அப்ப மதம் மாத்திய வெள்ளக்கார சாமியாருக கேக்கவே இல்லை”

எனவே நாம் சாதியப் பாகுபாடு பார்ப்பது தவறு இல்லை என்று அவர்கள் தரப்பை நியாயப்படுத்தும் ராயப்ப ரெட்டி “சாதி பாக்குறது பாவம்னா அன்றைய தினம் இஸ்ராயேல் மக்களை அழிச்சது போல நம்ம ஏன் கடவுள் அழிக்கல? அதனால சாதி வேறு மதம் வேறு. சாதி இவ்வுலக வாழ்க்கமுற. மதம் மறு உலக வாழ்க்கமுற. ரெண்டையும் ஒன்னாக்கி குழப்ப சிலர் பாக்குராங்க” என பேசும் ராயப்ப ரெட்டி கடைசியாக சேவியர் ரெட்டியைப் பார்த்து “ இப்ப இவ்வளவையும் கேட்ட பிறகு நீங்க சொல்லுங்க சாதிக்கும் கிறித்துவ மதத்திற்கும் தொடர்பிருக்கா? சேவியர் ரெட்டி சொல்வதற்கு முன்பாகவே உணர்ச்சிவசப்பட்ட ரெட்டியார்கள் தொடர்பு இல்லை”

இப்படி வெறி ஊட்டப்பட்ட கூட்டம்தான் ஆயர் இல்லத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது மாற்கு அவர்களை வெளிய வா உன்னைக் கொல்கிறேன் என மிரட்டியது.

அந்த ஊரில் தெலுங்கு பேசும் ரெட்டியார்கள் மட்டுமின்றி தெலுங்கு பேசும் அருந்ததியர்களும் தமிழ் பேசும் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வசிக்கின்றனர்.

அந்த ஊரில் தற்போது உள்ள ஆரோக்கிய மாதா கோவில் 1922 ஆம் ஆண்டு கட்டப்பட்டது ( காண்க: எஸ். துரைராஜ், 2011). அந்த சிலுவை வடிவ கோயிலில் சிலுவையின் ஒரு பகுதியில் அருந்ததியர்களும் மறு பகுதியில் பறையர்களும் அமர வேண்டும் நடுப்பகுதியில் ரெட்டியார்கள் மட்டுமே உட்காரமுடியும். அந்த கோவில் வளாகத்தின் பிரதான பாதை வழியாக ரெட்டியார்கள் மட்டுமே கோவிலுக்குள் நுழைய முடியும். தலித்துகள் கல்லறையை ஒட்டி அமைந்திருந்த பாதையின் வழியாகத்தான் கோவிலுக்குள் செல்ல முடியும். கோவிலுக்கு பின்புறம் உள்ள கல்லறையில் ரெட்டியார் வீட்டை சேர்ந்தவர்களை மட்டுமே புதைக்க முடியும்.

அருந்ததியர் மற்றும் பறையர் சமூகத்திற்கு என தனியான கல்லறைகள் இருந்தன. கோவில் திருவிழாவின் போது தேர் ரெட்டியார்கள் வசிக்கும் பகுதிக்குள் மட்டுமே வலம் வரும். ரெட்டியார்கள் மட்டுமே வரி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். இப்படி பல்வேறு தீண்டாமைக் கொடுமைகளை சந்தித்துவந்தனர் அந்த ஊரின் தலித் மக்கள். இருப்பினும் வாழ்வாதாரத்திற்கு ரெட்டியார்களிடம் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. பெரும்பாலான விவசாய நிலங்கள் ரெட்டியார்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. மேலும் கோயில் நிலத்தையும் அவர்களே விவசாயம் செய்து வந்தனர். எனவே இக் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழ வேண்டிய நிலைமை இருந்தது.

நிலைமை இப்படி இருக்கையில் தலைமை தர்மகர்த்தா ராயப்ப ரெட்டியின் வீட்டில் கூலி வேலை பார்க்கும் பறையர் சமூகத்தை சேர்ந்த இஞ்ஞாசியின் மகனின் திருமணம் நடைபெற இருந்த அதே நேரத்தில் ராயப்ப ரெட்டி தன்னுடைய வீட்டு திருமணத்தை நடத்த விரும்பினார். அவருடைய அண்ணன் திருச்சபையில் ஆயராக இருக்கிறார். அவர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்பதால் அந்த தேதியில்தான் தன்னால் மந்திரிக்க முடியும் என கூறிவிடுகிறார். எனவே ராயப்ப ரெட்டி அந்தோனியின் திருமணத்தை வேறு ஒரு நேரத்தில் வைத்துக் கொள்ளுமாறு இஞ்ஞாசியிடம் சொல்கிறார் அதற்கு அவரும் வேறு வழி இல்லை என ஒத்துக்கொள்கிறார். ஆனால் அவருடைய மகன் அந்தோனி ஏற்கனவே முடிவு செய்த நேரத்தில்தான் திருமணம் நடைபெற வேண்டும் என உறுதியாக இருக்கிறார்.

அந்தோனி நினைத்தது போலவே குறித்த நேரத்தில் திருமணம் நடக்கிறது ஆனால் அது தச்சூர் கோவிலில் நடைபெறவில்லை. அந்தோனி திருமணம் செய்து கொள்ளும் இசக்கி ஓங்கூரை சேர்ந்தவர். நாவலில் அந்த ஊரின் பங்கு சாமியாராக வரும் ராஜாவை நாம் மாற்கு என்றே புரிந்துகொள்ளவேண்டும். அந்தோனிக்கு ஏற்பட்ட கொடுமைகளை அறிந்த பங்கு குரு ராஜா அவர்களுடைய திருமணத்தை மந்திரிக்கிறார். இசக்கியின் வளர்ப்பு தந்தையான கித்தேரியான் ஏற்கனவே இடதுசாரி இயக்கத்தில் செயல்பட்டவர். இந்த திருமணம் நடைபெற்றாலும் இந்த கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்ட மக்களைத் திரட்டி போராட வேண்டும் என பாதர் ராஜாவும் கித்தேரியானும் எண்ணுகின்றனர்.

கிறித்துவமும் தீண்டாமையும் | ‘மாற்கு படைப்புலகம்’ | Christianity And Untouchability In Tamilnadu | தலித் கிறித்துவர்கள் | யாத்திரை நாவல்

1986 ஆம் ஆண்டு பள்ளியகரத்தில் தலித் மக்கள் ஒன்று கூடி “தலித் கிறித்துவ இயக்கத்தை” உருவாக்கினர். அதன் மூலமாகத்தான் அந்த பகுதியில் உள்ள தச்சூர் உட்பட பல ஊர்களில் நிலவிய தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க திருச்சபைக்கு எதிராகவும், இந்து தலித்துகளுக்கு இணையான அரசின் சலுகைகளைப் பெறவும் போராடுவது என முடிவு செய்தனர். அதில் மாற்கு அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது நாவலிலும் அது பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாவலில் அந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கிய கித்தேரியானின் வழிகாட்டுதலில் தச்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்துகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இல்லாத பங்கு குருக்களை பங்குகளில் இருந்தே விரட்டியடிக்கின்றனர். ஆயர் இல்லத்திற்கு சென்று ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்துகின்றனர் தலித் கிறித்துவ அமைப்பை சேர்ந்தவர்கள். ஆனால் ஆரம்பத்தில் பாதர் ராஜாவின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்ட இயக்கத்தினர். ஒரு கட்டத்தில் தாங்களாகவே போராட்ட வடிவத்தை தீர்மானித்து போராடுகின்ரனர்.

ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டது போன்ற போராட்டங்கள் இயக்கத்திற்கு சற்று அவப்பெயரை பெற்றுத் தந்தது என எண்ணிய ராஜா தன்னை சந்திக்க வந்த இயக்கத்தினரிடம் இப்படியான போராட்டங்கள் மூலம் என்னத்த சாதிச்சிங்க என கேட்பார். அதற்கு கூட்டத்தில் இருந்த கித்தேரியான் மிகவும் நிதானமாக பதில் சொல்லுவார்.

“சாமி.. நாங்க சொல்றத நல்லா கேட்டுக்கோங்க.. ஓர் இயக்கமா நாங்க உருவாக்குறதுக்கு நீங்க எவ்வளவோ செஞ்சீங்க. நீங்க இல்லாட்டா இயக்கம் கூட உருவாகியிருக்காது. அது எல்லாம் இல்லன்னு சொல்லல. ஆனா நீங்க உருவாக்குனீங்ககிறதுக்காக அடிமையா இருக்கனுமுன்னு நினைக்காதீங்க. இயக்கத்த உருவாக்குன உங்களால இயக்கம் போற வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது.ஏன்னா நாங்க யாருக்கு எதிரா போராடுகிறோமோ அந்த அமைப்பின் உறுப்பினர் நீங்க. ஆனா நாங்க மேல் சாதிக்கு எதிரா போராடுகிறோம். நீங்கள் மேல் சாதிக்காரங்க. அதனால் மேல் மட்ட சிந்தனைதான் இருக்கு.”
என விமர்சிக்கும் கித்தேரியான் “ சாமி .. நீங்க சொன்னீங்களே நாங்க நடத்திய போராட்டத்தில என்ன சாதிச்சோம்னு .. இப்ப சொல்லுரோம். ஆண்டவரும் எங்க பிரச்சனையை தீர்க்கமாட்டாறுன்னு புரிஞ்சுகிட்டோம்” “விசுவாசமுன்னா கோயிலுக்கு மட்டும் போறதுல இல்ல.. மாறாக அநீதியை எதிர்ப்பதில்தான் விசுவாசம் இருக்குன்னு புரிஞ்சுகிட்டோம். நாங்க அதாவது இயக்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்க மட்டும் இத உணரல எங்க தலித் மக்க ஒவ்வொருவரும் உணர்ந்துகிட்டாங்க இதுதான் எங்க போராட்டம் கண்ட மாபெரும் வெற்றி”

ராஜா கதாபாத்திரத்தை விமர்சிப்பதின் மூலம் மாற்கு தன்னை சுய விமர்சனம் செய்துகொள்கிறார் என்றே புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. மேலும் இதில் ஆயர் கதாபாத்திரத்தை அவர் சித்தரிக்கும் விதம் மிகவும் முக்கியமானது. நியாயம் என்று தெரிந்தும் தலித்துகள் பக்கம் நிற்காமல் சாதி கிறித்துவர்களின் சார்பாக அவர் எடுக்கும் நிலைப்பாட்டையும் அதை தனக்குள் நடக்கும் உரையாடல் ஊடாக வந்தடைவதையும் பார்க்கும் போது அவர் மேல் கடுமையான கோபம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

மேலும் சாதி கிறித்துவர்கள் தரப்பை எதிரிகளாக சித்தரிக்காமல் இரு தரப்பையும் தங்களுடைய பக்க நியாயங்களை பதிவு செய்ய அனுமதிக்கிறது நாவல். வாசகனையே தான் எந்தப் பக்கம் இருக்க வேண்டும் என முடிவு செய்ய அனுமதிப்பது நாவலின் மிக சிறந்த அம்சமாகும்.

தலித் கிறித்துவ இயக்கம் தச்சூர் கோயிலுக்குள் தடையை மீறி சம உரிமை கோரி நுழைவதுடன் நிறைவுபெறுகிறது. இந் நாவலின் இறுதிப் பகுதியில் ஒரே முடிவை முன்வைக்காமல் ஆறுவிதமான முடிவுகளை முன் வைத்துவிட்டு இந்த ஆறும் பிடிக்கவில்லை என்றால் நீங்களே உங்கள் கற்பனையை பறக்கவிடுங்கள் என கூறுவது நாவல் வடிவில் அந்த நாவல் வெளியான கால கட்டத்தில் புதுவிதமான அணுகுமுறை எனத்தான் பார்க்கப்பட்டது. தலித் கிறித்துவ மக்களின் போராட்ட வரலாற்றை பதிவு செய்த முதல் நாவல் யாத்திரைதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது.

போராட்டம் நடைபெற்ற பிறகு கடந்த நாற்பது ஆண்டுகளில் தச்சூரில் ஏற்பட்ட மாற்றங்கள்

நாவல் பதிவு செய்த போராட்டங்கள் நடைபெற்ற உடனேயே பெரிய மாற்றங்கள் தச்சூரில் ஏற்பட்டுவிடவில்லை. தொடர்ந்து அந்த ஊர் தலித் மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. கோயிலில் சம உரிமை கோரி 1995 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தனர் இதனால் கோயில் மூடப்பட்டது. அந்த வழக்கை 1998 ஆம் ஆண்டு இயேசு சபை துறவியான வழக்கறிஞர் இயேசு மரியான் எடுத்து நடத்தத் தொடங்கினார்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு 2006 ஆம் ஆண்டு நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் மீண்டும் கோயில் திறக்கப்பட்டது. அதற்கு பிறகு கோவிலுக்குள் அமருவதில் இருந்த பாகுபாடு நீக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழாவின் போது தேர் அனைத்து தெருக்களுக்கும் செல்லத் தொடங்கியது.
கோயில் வளாகத்தில் உள்ள கல்லறையில் 2011 ஆம் ஆண்டுதான் முதல் முறையாக வேளாங்கண்ணி என்கிற தலித் புதைக்கப்படுகிறார். அதை ஓட்டி பெறும் பிரச்சனைகள் எழுந்தது. வேளாங்கண்ணியை அடக்கம் செய்வதற்கு உதவி புரிந்த ராஜேந்திரன் இரண்டு நாட்களுக்குப் பிறகு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு ராஜேந்திரன் கோயில் வளாகத்தில் உள்ள கல்லறையில் புதைக்கப்பட்டார். இந்நிகழ்வுகளுக்கு பிறகு எந்த பிரச்சனையும் இன்றி பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கல்லறையில் புதைத்து வருகின்றனர். ஆனால் அருந்ததியர்கள் தொடர்ந்து தனி கல்லறையைப் பயன்படுத்துகின்றார்.

கிறித்துவமும் தீண்டாமையும் | ‘மாற்கு படைப்புலகம்’ | Christianity And Untouchability In Tamilnadu | தலித் கிறித்துவர்கள் | யாத்திரை நாவல்
லயோலா கல்லூரி தமிழ்த்துறை மற்றும் திராவிட பல்கலைகழகம் இணைந்து நடத்திய ‘மாற்கு படைப்புலகம்’ கருத்தரங்கில் பங்கேற்றவர்கள்

ஒப்பீட்டளவில் போராட்டத்தை நடத்திய பறையர் சமூகத்தை சேர்ந்தவர்களிடம் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. அந்த சமூகத்திலிருந்து இதுவரை 7 பேர் குருப்பட்டம் பெற்று. திருச்சபை மற்றும் துறவுச் சபைகளில் பணி புரிகின்றனர். படித்தவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது அதில் சிலர் அரசுப் பணிகளுக்கும் சென்றுள்ளனர். மேலும் அந்த ஊரின் பங்கு குருவாக ஒரு தலித் உள்ளார் என்பது போன்ற பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது.

இறுதியாக

வட தமிழகத்தில் கிறித்துவ மதத்திற்குள் இருந்த தீண்டாமைக்கு எதிராக போராட உருவான தலித் கிறுத்துவ இயக்கம் சில ஆண்டுகளில் தமிழக அளவில் செயல்படும் பரந்துபட்ட தலித் கிறித்துவ விடுதலை இயக்கமாக பரிணமிக்கிறது. இந்த இயக்கம் அரசுக்கு எதிராகவும் திருச்சபைக்கு எதிராகவும் 1990 களில் வீரம் செறிந்த பல போராட்டங்களை நடத்தியுள்ளது.

இந்த இயக்கங்கள் தச்சூர் மட்டுமின்றி தமிழ்நாடு உட்பட இந்திய அளவில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயக்கங்களால் தச்சூரில் ஏற்படுத்தியதைப் போன்று சில முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை மறுக்க முடியாது. இந்த போராட்டங்களுக்கு பிறகுதான் தலித் ஆயரை நியமிக்க தொடங்கியது திருச்சபை. ஆனாலும் இன்னும் தலித் ஆயர்கள் நியமிக்கப்படுவதில் சிக்கல் தொடரத்தான் செய்கிறது. இத்தனை ஆண்டு போராட்டங்களுக்கு பிறகும் இந்திய அளவில் சொற்ப எண்ணிக்கையிலான தலித் ஆயர்களே உள்ளனர் என்பது கிறித்துவத்திற்குள் இருக்கும் சாதிய இருக்கத்தைக் காட்டுகிறது.
சூசை வழக்கிற்கு பிறகு எத்தனையோ பதிவு செய்யபட்ட தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேறியே பிறகும் அரசு சலுகைகளை பெற முடியாமல் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் தலித் கிறித்துவர்கள். அரசு சலுகைகள் தலித் கிறித்துவர்களுக்கு நீட்டிப்பது தொடர்பான ஒன்றிய அரசால் 2022ஆம் ஆண்டு நியமிக்கபட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு சென்ற ஆண்டே அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு அதற்கான கால கெடுவை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீடித்துள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் தற்போது உள்ள பாஜக தலைமையிலான அரசு தலித் கிறித்துவர்களுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுக்கும் என்கிற மூடநம்பிக்கையில் இருப்பது அபத்தம்.

2023 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் துறையூர் அருகில் உள்ள கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த தலித் கிறித்துவர்கள் தங்களை கோவில் நிர்வாகம் பாகுபாட்டுடன் நடத்துகிறது என குற்றம் சாட்டினர் அந்த செய்தி ஆங்கில இந்து நாளிதழில் வெளியானது. இது போன்ற செய்திகள் இன்றைக்கும் திருச்சபைக்குள் சாதிய பாகுபாடுகள் தொடர்வதை உறுதி செய்கின்றன.

தலித் கிறித்துவர்கள் மதத்திற்குள் சாதி கிறித்துவர்களுக்கு ஆதரவாக செயல்படும் திருச்சபைக்கு எதிராகவும் அரசின் சலுகைகளை பெறுவதற்கு அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து போராட வேண்டய தேவையுள்ளதையே இத்தகைய செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

தலித் கிறித்துவர்கள் மட்டும் தனியாகப் போராடாமல் இங்குள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் போராட்டத்தில் இணைக்க வேண்டும். அதற்கு தலித் கிறித்துவர்களின் ஒடுக்குமுறையை பொது வெளியில் விவாதிப்பது அவசியம் அதற்கு யாத்திரை போன்ற இலக்கிய படைப்புகள் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.

உதவிய புத்தகங்கள்

1. ஆ. சிவசுப்பிரமணியன், கிறித்துவமும் தமிழ்ச் சுழலும், காலச்சுவடு பதிப்பகம், 2023.
2. நிவேதிதா லூயிஸ், கிறிஸ்த்தவத்தில் ஜாதி, ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம், 2023.
3. மாற்கு , பேருவகை, தமிழினி பதிப்பகம், 2019.
4. மாற்கு, முன்னத்தி, தமிழினி பதிப்பகம், 2021.
5. திருமதி.மரியம்மாள் லூர்துநாதன், தீண்டாமையின் திருவிளையாடல்கள், தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கம், 1994,
உதவிய கட்டுரைகள்
6. S. Doorairaj, Caste Divide, Frontline Magazine, 25 February 2011.
7. David Mosse, The Catholic Church and Dalit Christian Activism in Contemporary Tamil Nadu (PP 235-262), MARGINS OF FAITH: Dalit and Tribal Christianity in India Edited by Rowena Robinson & Joseph Marianus Kujur, SAGE Publications India Pvt Ltd,2010.
8. Robert Eric Frykenberg, Christianity in India: An Overview of Origins and Growth (pp. 226-274), India’s History India’s Raj, Primus Books, 2023.
9. Jebamalai Raja S.J., The Problem of Caste Within the Church, Journal of Dharma XXIV.l,28-39, 1999.
10. M. Ashok Kumar and Sunder J. Boopalan, Indian Christians in Conflict: Dalit Christian Movement in Contemporary India (PP 308–324), Handbook of Global Contemporary Christianity, edited by Stephen J. Hunt, Brill, 2015.
11. Andrew K.J. Wyatt, Dalit Christians and identity politics in India, Bulletin of Concerned Asian Scholars, 30:4, 16-23, 1998.
12. Prakash Louis, Dalit Christians: Betrayed by State and Church, Economic and Political Weekly, Vol. 42, No. 16 (Apr. 21-27, 2007), pp. 1410-1414
13. Vinod Chakkittakudiyil Varghese, Dalit Christian Life in the Interactional Milieu: A Social Dominance Perspective, Contemporary Voice of Dalit, 8(2) 220–238, 2016 SAGE Publications.
14. R. Velmurugan, The Upper Caste and The Lower Caste Christians in Pondicherry During the 18th Century A.D., Vol. 60, DIAMOND JUBILEE, (pp. 456-459), Indian History Congress, 1999.

லயோலா கல்லூரி தமிழ்த்துறை மற்றும் திராவிட பல்கலைகழகம் இணைந்து நடத்திய ‘மாற்கு படைப்புலகம்’ கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

கட்டுரையாளர்:
கிறித்துவமும் தீண்டாமையும் | ‘மாற்கு படைப்புலகம்’ | Christianity And Untouchability In Tamilnadu | தலித் கிறித்துவர்கள் | யாத்திரை நாவல்
முனைவர் அ.ப.அருண்கண்ணன்
தொடர்புக்கு: [email protected]
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. சுபாஷ்

    வணக்கம் தோழர் கட்டுரை அருமையாக இருக்கிறது . இந்த கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்ட ஒரு செய்தி மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன் பறையர் சமுகத்தை சார்ந்த மக்களும் அருந்ததியர் சமுத்திரம் தீண்டாமையை கடை பிடிக்கின்றனர் அவர்கள் விடுதலையை நோக்கி போராடவில்லை மாறாக தங்களுக்கு மேலானவர்கள் என்று அவர்கள் கருதுபவர்கள் போல் அவர்கள் செய்து தங்களையும் மேல்நிலைப் படுத்தி கொள்ள நினைக்கிறார்கள்.இதற்கு எண்ண தீர்வு இருக்கிறது. சாதி மனிதர்களின் மனதில் தான் இருக்கிறது . இந்தியாவில் சாதி அமைப்பின் பலம் என்பது தனக்கு கீழ் ஒரு சாதி இருக்கிறது நான் அவனை விட உயர்ந்தவன் என்று என்னும் மன பார்வையே இதை சரி செய்ய என்ன வழி இருக்கிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *