‘சட்னி சாம்பார்’ – இணைய தொடரின் விமர்சனம்
ராதா மோகன் இயக்கத்தில் ‘சட்னி சாம்பார்’ எனும் தொடர் ஜூலை 26 அன்று டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளிவந்துள்ளது. யோகி பாபு, வாணி போஜன், சந்திரன், சார்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். ரத்தினசாமி என்பவர் ஊட்டியில் உணவு விடுதி நடத்துகிறார். மனைவி, மகள், மருமகன் மற்றும் மகனுடன் வாழ்ந்துவரும் அவர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலைக்கு சென்றுவிடுகிறார். தன் மகனை அழைத்து தான் சென்னையில் இருக்கும்போது ஒரு பெண்ணுடன் வாழ்ந்ததாகவும் தங்களுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் அவனை அழைத்து வர சொல்கிறார். அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்கும்படி கூறிவிட்டு இறந்துவிடுகிறார். ரத்தினசாமி குடும்பத்தினர் பாபுவை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் மய்யக் கதை. அதோடு அங்கு சமையல் வேலை செய்யும் சோஃபி என்பவரது கதையும் சொல்லப்படுகிறது.
தொடர் எடுக்கப்பட்ட விதம், ஒளிப்பதிவு, வசனங்கள், நடிப்பு ஆகியவை பாராட்டப்படும்படியாக உள்ளன.
“எங்களுக்கு லீவு விட்டா ஊட்டிக்கு வருவோம். உங்களுக்கு லீவு விட்டா எங்க போவீங்க?’
“ நானெல்லாம் வேர்வையில வேல செய்யறவன். இங்க வேர்க்கவே மாட்டேங்குது”
போன்ற வசனங்கள் நகைச்சுவையாகவும் ஊட்டி மக்களின் வாழ்வை புதிய கோணத்திலும் காட்டுகின்றன.
“குடிச்சா கல்லறைக்கு போவாங்க. குடிக்கறதுக்கே கல்லறைக்குப் போற ஆளு நீதான்பா”
“என்ன மாதிரி இருக்கறவன் சொன்னா நம்ப மாட்டீங்க. பேன்ட், ஷர்ட் போட்டுகிட்டு வெள்ளையா இருக்கறவன் சொன்னா நம்புவீங்க”
குறிப்பிடத்தக்கவை. குடியின் கொடுமை, நடுத்தர வர்க்கத்தின் மனப்பான்மைகள், உழைப்பு, நேர்மை ஆகியவற்றில் அடித்தள மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஆகியவற்றை சித்தரித்துள்ளதற்காகவும் இயக்குனரை பாராட்டலாம். பெரும்பாலான பத்திரிக்கைகள் பாராட்டியுள்ளன.
கதையின் மய்ய கரு மட்டும் விவாதத்திற்கு உரியது. தன்னைக் காதலித்து இல்லற வாழ்க்கை நடத்தி பிள்ளையையும் கொடுத்துவிட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிந்து சென்று இன்னொரு திருமணம் செய்து கொண்டு வசதியான வாழ்க்கை நடத்தும் ஆணை அந்தப் பெண் தவறாக நினைக்கவில்லை. அவருடய இரண்டாவது வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருப்பதே தான் அவன் மீது கொண்ட உண்மையான அன்பு என்று அந்தப் பெண்ணையே சொல்ல வைப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் தாயை கைவிட்டு சென்ற தந்தையை கடுமையாக விமர்சித்துக் கொண்டே இருக்கும் பாபுவும் அவர் ஊட்டியில் அறுபது குடும்பங்களுக்கு வாழ்வளித்திருக்கிறார்; ஆகவே அவர் நல்லவர்தான் என்று இறுதியில் ஏற்றுக் கொள்வதும் சற்று நெருடலாக இருக்கிறது. பழய தமிழ்ப் படங்கள் போல் கதாநாயகன் ஒவ்வொரு சிக்கலாக தீர்த்து இறுதியில் எல்லாம் சுபமாக முடிகிறது. வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருப்பதில்லை.
ஷோபிடா கிருஷ்ணமூர்த்தி
நீயும் நானும் காதலிக்கிறோம்..
ஆனால்,
உன் காதல் வேறு..
என் காதல் வேறு..
உன் காதல் மொழி வேறு..
என் காதல் மொழி வேறு..
என்னிடம் உன் எதிர்பார்ப்புகள் வேறு..
உன்னிடம் என் எதிர்பார்ப்புகள் வேறு..
உனக்குள் இருக்கும் அச்சங்கள் வேறு..
எனக்குள் இருக்கும் அச்சங்கள் வேறு..
ஏனென்றால்,
அடிப்படையில் நீயும் நானும்
வேறு வேறு மனிதர்கள்..
காதலொன்றும்,
மனிதர்களின் இயல்பை
மாயமாய் மாற்றும் மாயாவியல்ல..
அதற்கு அந்த சக்தியெல்லாம் இருப்பதில்லை..
உண்மையில் காதலின் சக்தியெல்லாம்
உன்னிடமும் என்னிடமும் மட்டுமே உள்ளன..
உனது காதல் என்னவென்று சொல்..
உனது காதல் மொழியை எனக்கும் கொஞ்சம் கற்றுக்கொடு..
உனது எதிர்ப்பார்ப்புகள் என்னவெல்லாம் சொல்..
உனக்குள் இருக்கும் அச்சங்கள் என்னவென்ன?
எல்லாம் என்னிடத்தில் சொல்..
நானும் இவற்றையெல்லாம் சொல்வேன்..
அதற்கும் இடம் கொடு..
செவிமடு..
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வோம்..
தேவைப்பட்டால் இருவரும் கொஞ்சம் மாற்றம் கொள்வோம்..
அதற்கு உடன்படு..
சிவனின் சரிபாதி சக்தி என்பதுபோல்
நம் காதலில் சரிபாதி நான் என்பேன்..
அது என் உரிமையும் என்பேன்
என் உரிமைகளுக்காகப் போராடவும் செய்வேன்..
தயாராக இரு!
காதலென்னும் சாய்ந்தாடி மரம்
ஒரு பக்கமே சாய்ந்திருந்தால்
சுவாரசியமும் இல்லை..
சாய்ந்த பக்கம் வழியே
காதல் சரிந்துவிழும் அபாயமும் உண்டு..
புரிகிறதா உனக்கு?
மேலும் கீழும் சென்றாலும்
காதலென்னும் சாய்ந்தாடி மரத்தின்
சுழல் மையம் ‘சமத்துவம்’ என்றால்
சூறாவளி வந்தாலும்
நம் காதல் அதை சமாளித்துவிடும்..
ஆம், நீயும் நானும் காதலிக்கிறோம்..
ஆனால்,
உன் காதல் வேறு..
என் காதல் வேறுதான்..
இருந்தும், வா.. பெருங்காதல் செய்வோம்.
எழுதியவர் :
ஆர்.ரமணன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
இந்த விமர்சனத்தின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள கவிதை ஷோபிடா கிருஷ்ணமூர்த்தி என்பவருடயது. படத்தில் வரும் அமுதாவின்காதலையும் இந்தக் கவிதை சொல்லும் காதலையும் ஒப்பிட்டு பார்ப்பதற்காக கொடுத்துள்ளேன்.
சட்னி, சாம்பார் Hot Star ல் பார்த்தேன் உங்களின் விமர்சனம் மிகச் சிறப்பாக உள்ளது
சட்னி/சாம்பார் வெப் சீரியலின் எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக அமைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக பெண்களின் பாத்திரப்படைப்பு அழுத்தமாக உறுதிமிக்கவர்களாக படைக்கப்பெற்றுள்ளது.
(உறுதி எந்த விதத்தில், எந்த விசயத்தில் என்பது விவாதத்திற்குட்பட்டாலும்)
குளு குளு ஊட்டியில் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
இரண்டு மனைவி கதையில் முதல் மனைவி சமரசம் செய்து கொள்வது எல்லா படங்களை போலவே அமைக்கப் பெற்றுள்ளது.
சட்னி பார்முலா, சாம்பார் பார்முலா என சின்னச் சின்ன சுவாரசியங்களுடன் கதை சொல்லப்பட்டாலும் லாஜிக் இல்லாமல் சில சீன்கள் உள்ளது.
ஆடிட்டர் மோகன்ராம் கதாநாயகனுக்கு பெண் தர மறுப்பதும் பிறகு சமாதானம் ஆகி பெண் தர சம்மதிப்பதும்
எல்லாம் மாறுதலுக்குட்பட்டது என்ற விதியின் பாற்பட்டது
வசனங்கள் நறுக் யோகி பாபுவின் பஞ்ச் டயலாக் ம் அங்கங்கே மிளிர்கிறது