பாட்டின் கதைகள் – பாடலாசிரியர் யுகபாரதிஎது கவிதை எனும் கேள்வியெல்லாம் இன்றைக்கு இல்லை. கவிதையென்றால் அது, புதுக்கவிதை மட்டுமே என்றாகிவிட்டது. அதையும் புதுக்கவிதை என்றழைப்பதைவிட, நவீன கவிதை என்பதே நாகரீகமாகக் கருதப்படும் காலமிது. கவிதையென்றால் கவிதைதானே அதற்கேன் இத்தனை அடைமொழி எனக்கேட்க மனமில்லை. `வடிவம் அத்தனையிலும் எழுதிப்பழகி, இறுதியில் எவர் புது வடிவத்தை மொழிக்குத் தருகிறாரோ அவரே மகாகவி’ என்று தமிழறிஞர் கா. சிவத்தம்பி எழுதுவார்.
வள்ளுவன், கம்பன், இளங்கோ, பாரதி எனும் வரிசை அவ்விதமே உருவானது. இலக்கியத்தின் எண்கோணத்தையும் அலசி ஆராயும் திறனுடையவரே ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார். புதுக்கவிதைகள் வேர்விட்டு வளர்ந்த நிலையிலும் சந்தக்கவிதைகளையே அதிகமும் எழுதியவர் கண்ணதாசன். அவர், புதுக்கவிதையின் எதிர்க்கோஷ்யில் இருந்தவர்.
மனதில் பதிக்கவும் மனனம் செய்யவும் மரபுக்கவிதைகளே உதவும் என்று பலமுறை எழுதியும் பேசியும் இருக்கிறார். திரைப்பாடல் சொல்லாட்சிகளுக்கு புதுக்கவிதையைக் காட்டிலும் மரபுக்கவிதை வடிவமே தோது என அவர் நினைத்திருக்கலாம். சந்தத்தில் முதல் வரியை எழுதினால் அதன்பிறகு எதுகையும் மோனையுமே அக்கவிதையை வளர்த்துக்கொண்டுப் போகும் வசதி மரபுக்கவிதைக்குண்டு. இந்த வசதியே கவிதையிலிருந்து கவிதையை வெளியேற்றுவதாக எண்ணியவர்கள் ந. பிச்சமூர்த்தியின் தலைமையில் புதுக்கவிதையை முன்னெடுத்தனர். முற்றாகச் சந்தத்தைக் கைகழுவி, புதுக்கவிதைக்கு அவகள் அளித்த முகம், வெவ்வேறு சேஷ்டைகளுடன் வெளிப்படுத்துவதை அறியலாம்.
தொடக்கத்தில் வேண்டாமென்று விலக்கிய சந்தத்தைக் கடைசிவரை கவிஞர் ஞானக்கூத்தன் கைவிடவில்லை. சந்தமே கவிதைகளின் அழகையும் அமைதியையும் கெடுப்பதாகச் சொல்லப்பட்டக் குற்றச்சாட்டை அவர் பொருட்படுத்தவே இல்லை. அதையும் ஓர் அணியாகவே எண்ணியிருக்கிறார். படிமத்தையும் குறியீட்டையும் சந்ததிற்குள் கொண்டுவர முடியுமென நிரூபித்திருத்தவர்களில் அவரே முக்கியமானவர். கருத்தியலாக அவரிடம் முரண்பட நிறைய உண்டு. ஆனால், சொல்முறையில் நிச்சயமாக அவர் தவிர்க்கமுடியாதவர்.
யாப்பிலக்கணம் கற்காமல் புதுக்கவிதையோ நவீனக்கவிதையோ எழுதுவது பிசகில்லை. ஆனால், மரபுப்பயிற்சி இருந்தால் திரைப்பாடல் எழுதுவது எளிது. வைரமுத்துவிற்குப் பிறகு எழுதவந்த திரைப்பாடலாசிரியர்களில் ஒருசிலரே களத்தில் நிற்கிறார்கள். காரணம், மரபுப் பயிற்சி. மரபைப் புதிதாகக் கட்டமைக்கும் முயிற்சியுடையவர்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். நான் சொல்வது எழுத்துமுறையை, சிந்தனைப் போக்குகளை அல்ல.
Image
வெகுமக்களின் உணர்வுகளைச் சந்தத்தில் பொருத்திச்சொல்ல யாப்பைக் கற்பதொன்றோ சிறந்த வழி. கற்ற பிறகு மீறலாம் அல்லது மீறுவதற்கேனும் கற்கலாம். யாப்பைக் கற்கவோ அசை, சீர் தளைப்பட்ட கவிதைகளை வாசிக்கவோ மாட்டெனென்றால் இடைக்கால இலக்கியத்தை நுகரவும் முடியாது.
திரைப்பாடலைப் பொறுத்தவரை வரையறுக்கப்பட்ட வடிவத்திற்குள் எழுதவேண்டியக் கட்டாயம் இருக்கிறது. எனக்குத் தெரிய, சினிமா பாட்டுத்தானே எனச் சல்லிசாகக் கருதும் பல இலக்கிய விமர்சகர்களில் இந்த நுட்பத்தைச் சரியாக உள்வாங்கிக்கொண்டவர் வெங்கட் சுவாமிநாதன் மட்டுமே. அதுநிமித்தமே
அத்துறையில் கூடுதலாகக் கவனம் செலுத்தும்படி அவர் என்னை ஊக்கினார்.
வெளிவரவுள்ள `படித்துறை’ திரைப்படத்திற்குப் பாடல் எழுதிய அனுபவத்தை`எழுத்தே வாழ்க்கை’ எனும் நூலில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பகிர்ந்துள்ளார். அது அனுபவம் மட்டுமில்லை ஆழ்ந்த புரிதலும்கூட. `குறுந்தகடில் கொடுக்கப்பட்ட மெட்டை இரவு முழுதும் கேட்டுப் பார்த்தேன். ஒருவார்த்தைகூட மனதில் வரவில்லை. கதை எனில் கடகடவென்று ஒருமணிநேரத்தில் இருபது பக்கம் எழுதும் எனக்கு, பாடலின் முதல் சொல்லைக்கூட எழுத இயலவில்லை’ என வருந்தியிருக்கிறார்.
மணநாளுக்கு முந்தையநாள் இரவுபோல அச்சமும் தயக்கமும் நிறைந்த தவிப்புகள். இடையறாத ஏக்கத்துடன் எழுதிப் பழகினாலன்றித் திரைப்பாடல் சாத்தியமில்லை. முதல் மெட்டை வழங்கியபோது எனக்கேற்பட்ட அதே சிக்கலில் எஸ்.ரா.வும் மாட்டிக்கொண்டதை உணரமுடிந்தது. `பின்பு இளையராஜா முதல் வரியை எடுத்துத்தர முழுப்பாடலும் ஒருமணிநேரத்தில் முடிந்துவிட்டது’ என்றிருக்கிறார்.
தமிழின் ஆகப்பெரும் எழுத்தாளாராக அறியப்படும் எனக்குப் பாட்டெழுத வரவில்லை என்று வேறு எவராவது நேர்மையுடன் எழுதியிருக்கிறார்களா தெரியவில்லை. எழுதுவார்களா என்றும் தெரியவில்லை. எஸ்.ராவின் இந்த உண்மையும் உள்ளொளியும் தொழத்தக்கவை. ஆகாசம்பட்டு சேஷாசலத்தின் வெண்பாவெல்லாம் கரைத்துக்குடித்த கர்வதுடன் திரிந்த என் நடு மண்டையில், முதல் மெட்டு கொட்டிய கொட்டு இருக்கிறதே அது இன்னமுமே வலிக்கிறது. திரைப்பாடலை லாவகமாகக் கையாள நானெடுத்த பிரயத்தனங்களுக்கு மரபுக் கவிதைகளே பேருதவி புரிந்தன. பாரதியை நடுவில் வைத்துக்கொண்டு அவனுக்கு முன்னும் பின்னும் உள்ளோரை வாசிக்கவேண்டும்.
எழுத்தாளராக அறியப்பட்ட விந்தனும் ஜெயகாந்தனும் இன்னபிறரும் காலத்தால் அழிக்கமுடியாத திரைப்பாடலைத் தந்திருக்கின்றனர். மரபை உள்வாங்கினால் இலக்கியத்தின் எந்த வடிவத்திலும் மிளிரலாம். கல்கி எழுதிய `காற்றினிலே வரும் கீதம்’ கேட்கத் தெவிட்டாதது. நாஞ்சில் நாடன் எப்போதும் சொல்வதுபோல மரபைப் பயிலாமல் புதிது செய்வது முயற்கொம்பே. நவ கவிதைக்கு அணிசேர்த்துவரும் மனுஷ்ய புத்திரனும் குட்டிரேவதியும் இன்னும் அதிகமாகத் திரைப்பாடல் எழுதவேண்டுமென்பது என் அவா. கவிஞர் வெயில் விரைவிலேயே திரைப்பாடல் எழுதவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். ஆயிரம் பூக்கள் மலரட்டுமாக.
நன்றி: முகநூல் https://www.facebook.com/yuga.bharathi.3