கதல் 2023 மே மாதம் வெளிவந்துள்ள இந்தி திரைப்படம்.
நெட்பிளிக்சில் பார்க்கலாம். அசோக் மிஸ்ரா என்பவர் எழுதி யசோவர்தன் மிஸ்ரா இயக்கியுள்ளார். சன்யா மல்ஹோத்ரா, ஆனந் வி.ஜோஷி, விஜய் ராஸ், ராஜபால் யாதவ், பிரஜேந்திர கலா, நேஹா சராஃப் மற்றும் ரகுபீர் யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
எம்எல்ஏ வீட்டில் காணாமல் போன பலாப்பழத்தை தேடுவதற்கு ஒரு போலீஸ் குழுவே அமைக்கப்படுகிறது. அதனூடே காணாமல் போன ஒரு சிறுமி மீட்கப்படுவதே கதை. ஒரு சில விஷயங்களை மட்டும் சொன்னாலே இந்த படத்தின் சிறப்பை புரிந்து கொள்ளலாம்.
காணாமல் போன அமையா எனும் பெண்ணை பற்றி காவல் ஆய்வாளர் மகிமா ஒருவனிடம் கேட்கிறார். அதற்கு அவன் ‘அவளா? ஜீன்ஸ் பேன்ட்டைக் கிழித்துவிட்டுப் போட்டுக் கொண்டு திரியும் தாழ்ந்த ஜாதி பெண்’ என்பான். ‘தாழ்ந்த ஜாதி பெண் என்றால் உனக்கு அவ்வளவு கேவலமாக போய்விட்டதா? இதோ பார்.என் சீருடையில் என்ன பெயர் எழுதியிருக்கிறது என்று. மகிமா பஸூர்’ என்பாள்.
பஸூர் என்பது உபி, எம்பி மாநிலங்களில் வசிக்கும் பட்டியிலனத்தவர்கள். ‘மேல் ஜாதிகாரர்கள்’ தங்கள் சாதியை பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்வதை பெருமையாக நினைக்கலாம்.ஆனால் ‘தாழ்த்தப்பட்ட’ சாதியை சேர்ந்தவர்கள் போட்டுக்கொள்வது என்பது ஒரு புதிய பார்வையாக தெரிகிறது. ‘மஹிமா பஸூர்’ ‘காவல் ஆய்வாளர்’ என்கிற பெயர்ப்பல்கலையை அவ்வப்போது படத்தில் காட்டுவது சாதாரணமாகத்தான் தோன்றும். ஆனால் அந்த பெயர் எதைக் குறிக்கிறது என்று தெரிந்தபின் நமக்கு இயக்குனரின் மேல் மரியாதை கூடுகிறது.
அதைப்போலவே நீதிமன்றத்திலும் ‘அந்தப் பெண் பான் பராக் போடுவாள் அதனால் ஒழுக்கம் இல்லாதவள்; அவள் திருடியிருப்பாள் ‘ என்று எதிர்தரப்பு வழக்கறிஞர் கூறும்போது ‘நீங்களும் பான் பராக் போடுபவர்தானே? அப்படியானால் நீங்களும் ஒழுக்கம் குறைந்தவரா?’ என்று கேட்குமிடம் சிறப்பு.
கான்ஸ்டபிளுக்கும் காவல் ஆய்வாளருக்குமிடையே மலரும் காதல், சாதியைக் கடந்து பதவி வித்தியாசங்களைக் கடந்து பரிணமிப்பது பாராட்டிற்குரிய விஷயம். 33 பெண்கள் காணாமல் போனதை தேச அவமானமாக கருதாமல் அதை தொலைக்காட்சியில் வெளிக்கொணர்ந்த நபரின் மீது தேச துரோக வழக்கு போடுவது போன்ற நுட்பமான அங்கத விமர்சனத்தை இந்த படம் செய்கிறது. பான் பராக் ரகசியமாக விற்பது, பெண்களைக் கடத்தி விற்பனை செய்வது போன்ற பல சமூக அவலங்களை பிரச்சாரமாக இல்லாமல் நகைச்சுவையின் மூலமே படம் காட்டுகிறது. நடிகர்கள் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காவல் ஆய்வாளராக நடிக்கும் சன்யா மல்ஹோத்ரா மற்றும் கான்ஸ்டபிளாக நடிக்கும் நேஹா சராஃப் ஆகியோரைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
அரசியல் சமூக நிலைமைகளை கூர்மையாகவும் அதே சமயம் நுட்பமாகவும் அங்கத சுவையுடன் விமர்சிக்கும் ஒரு திரைப்படம் இது.

