​சினிமாவின் ஆன்மா, சினிமா ரசனைக் கல்வி - சீனு ராமசாமி | Cinemavin Aanma Book Author Seenu Ramasamy Introduction in Tamil | www.bookday.in

​சினிமாவின் ஆன்மா, சினிமா ரசனைக் கல்வி – சீனு ராமசாமி

சினிமாவின் ஆன்மா, சினிமா ரசனைக் கல்வி.
….

​எங்கள் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் என் குழந்தைகளின் நண்பர்களோடு, அவ்வப்போது உலகத் திரைப்படங்களைப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை நான் உண்டாக்கிக் கொண்டே இருந்தேன்.

​ஆரம்பத்தில், ‘குழந்தைகள் திரைப்படங்கள்’ என்றால் அதை அவர்கள் கண்டிப்பாகப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்பொழுதுமே இருந்தது.

நண்பர்களிடம் சில இடங்களில் இது பற்றி நான் பேசிக் கொண்டே இருப்பேன். என்னோடு நெருங்கிப் பழகிய ஒரு சில நண்பர்களுக்குத் தெரியும்

நான் சதா அவர்களுக்குப் புத்தகங்களைப் பரிசளிப்பதும்,

அவர்களிடமிருந்து வாங்கிக் கொள்வதும், அவற்றைப் பற்றிப் பேசுவதுமாகவே இருப்பேன்.

​ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை எல்லாமே நினைவுகளாக மாறிவிடுகிறது.
​இன்னும் ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தின் அலைகள் என் நெஞ்சில் அடித்தபடி இருக்கின்றன.

நான் அந்தப் பருவத்தில்தான் அந்தப் படத்தைப் பார்த்தேன். உலகத் திரைப்படங்கள் என்பது எப்பொழுதுமே குழந்தைகளின் ரசனையைத் தூண்டும் விதமாகவே இருக்கும்.

​அப்படி ஒரு நாள், எங்களுடைய குடியிருப்பில் இருக்கக்கூடிய, முப்பது பேர் வரை அமரக்கூடிய அந்தச் சிறிய திரையரங்கில் நான் ‘பதேர் பாஞ்சாலி’ படத்தை ஓட்டினேன்.

சத்யஜித் ரேயின் அந்தப் படத்தை எல்லோரும் பல வருடங்களாகப் பார்த்துவிட்டார்கள். ஆனால்,

நான் அதை மீண்டும்
எச்டி (HD) பிரிண்ட்டில் பார்க்கிறேன்.

​அப்படி ஒரு மன அமைதி அந்தப் படத்தைப்பார்க்கும் பொழுது உண்டாகிக்கொண்டே இருக்கும். சாகாவரம் பெற்ற தன்மை அந்தப் படத்திற்கு உண்டு. நீண்ட பொறுமை, ஒரு கிளாசிக்கல் இன்பம், மனதை மென் சுகத்திற்கு கொண்டு செல்லும் ஒரு நிலை அதே சமயம் புதிய தன்னம்பிக்கையைத் தரும் ஓர் எளிமையான திரைப்படம் அது.
​200 கோடி, 300 கோடி, 1000 கோடி எனப் பேசப்படும் வணிகச் சினிமாக்களுக்கு மத்தியில், பொன் போன்ற கலைஞர்களுக்கு இம்மாதிரியான எளிமையான படங்கள் தரும் தன்னம்பிக்கை அளவிடற்கரியது.

​”நாமும் ஏதேனும் செய்து பிழைத்துக் கொள்ளலாம்

சிறிய பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்து, நாமும் இயக்குநராக இந்த வாழ்க்கையில் நம்மைத் தக்க வைத்துக் கொள்ளலாம்” என்ற தன்னம்பிக்கையைப் பெறுவது இப்படித்தான்.

​அப்படி ஒரு நாள், நான் அதே ‘பதேர் பாஞ்சாலி’ படத்தை அங்கிருந்த குழந்தைகளுக்குப் போட்டுக் காட்டினேன். என் மூத்த மகளோடும், இளைய மகளோடும் வந்திருந்த பிள்ளைகள் அவர்கள்; கொஞ்சம் சிறுவர்கள்.

​படம் தொடங்கியதுமே எல்லோர் முகத்திலும் ஒரு கனத்த மௌனம் நிலவியது. என் மகள் அடிக்கடி என்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். நேரம் ஆக ஆக, அனைவரும் அந்தப் படத்தை ரசிக்கத் தொடங்கினார்கள். ரயிலின் வருகையைப் பார்க்கும் கணத்தில், அவர்களின் மகிழ்ச்சி கூச்சலாக வெளிப்படத் தொடங்கியது.
​ஒருவழியாகப் படம் நிறைவடைந்தது.
​பிறகு நான் அவர்களிடம்,

“இந்தப் படத்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னைக் கேளுங்கள்” என்று சொன்னேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வியைக் கேட்டார்கள்.

​அதில் ஒரு குழந்தை, “இதை கலராக மாற்ற முடியாதா?” என்று கேட்டது. மற்றொரு குட்டிப் பாப்பா, “இந்த மாதிரி டிரெயின் பார்க்கணும்னா எங்கே போய் பார்க்கிறது?” என்று கேட்டது.

நான் பொதுவாக எதையுமே முன்கூட்டியோ அல்லது வலுக்கட்டாயமாகவோ கேட்பதில்லை; அவர்கள் கேட்பதற்கு மட்டும்தான் பதில் சொல்வேன். அதுவும் குறிப்பாக, படம் முடிந்ததும் நானாக எதையும் கேட்கவே மாட்டேன். ஆனால், அவர்களாகவே என்னிடம் தங்கள் கருத்துகளைச் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

​இருப்பினும், அடுத்த நாள்தான் நண்பர்களே அந்த அதிசயமும் ஆச்சரியமும் நடந்தது!
​எப்பொழுதும் தலையில் தொப்பியும், அதில் ஒரு வெள்ளை ரோஜா பூவும் வைத்துக் கொண்டு, ஒரு கவனத்தோடு ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு குழந்தை.

என் இளைய மகளின் சினேகிதி அவள். மூன்றாம் வகுப்புதான் படிக்கிறாள்; ஒரு மருத்துவரின் மகள்.
​அடுத்த நாள் காலையில், என் மகளை விளையாட அழைப்பதற்காக ஐந்தாறு பிள்ளைகள் என் வீட்டின் வாசலில் வந்து நின்றார்கள். நான் தான் கதவைத் திறந்தேன். அந்தச் சிறுமியின் கையில் ஒரு பூ இருந்தது
சிகப்பு வண்ண மலர்.
​”என்ன பாப்பா, என்ன பண்ற?” என்றேன்.
​”அங்கிள், அந்த துர்கா அக்காவுக்கு இதை வச்சிருங்க…” என்று என் கையில் தந்தாள்.
​சத்யஜித் ரே என்ற மாபெரும் படைப்பாளி, நூறு வருடங்களுக்குப் பிறகும் அந்தப் பூவின் வழியாக உயிரோடு மலர்ந்திருப்பதை நான் அன்று பார்த்தேன்

​இங்குதான் எனக்குத் தோன்றியது
இதை ஒரு புத்தகமாக எழுத வேண்டும் என்று. பிறகு எழுதத் தொடங்கினேன்.

​இந்தப் நூலில் நான் குறிப்பிட்டிருக்கும் எல்லாப் படங்களைப் பற்றியும் ஏற்கனவே பல அறிஞர்கள் விரிவாக எழுதி விட்டார்கள்.

உலக சினிமா செழியன் தொடங்கி, அஜயன் பாலா, எஸ். ராமகிருஷ்ணன், ஸ்ரீரசா, யுவன், உலக சினிமா பாஸ்கரன் என எண்ணற்ற ஆளுமைகள் இன்றும் உலகத் திரைப்படங்கள் பற்றித் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

தமிழில் இதைப் பற்றி வேண்டிய அளவு எழுதப்பட்டுவிட்டது.
​இருப்பினும், நானும் நம்பிக்கையோடு எழுதத் தொடங்கினேன்.

​அந்தக் குழந்தை என் கையில் கொடுத்த பூவை எங்கே வைப்பது என்று தெரியாமல், துர்கா தன் தம்பியோடு ஓடும் அந்தப் பாதையை என் மனதில் பார்த்தபடி நின்றேன்.

எழுதியவர்:

​சீனு ராமசாமி

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:சினிமாவின் ஆன்மா (Cinemavin Aanma)
ஆசிரியர்:​சீனு ராமசாமி
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
விலை: 5% சலுகை விலையில்
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *