சினிமா விமர்சனம்  : Mrs Chatterjee Vs Norway -இரமணன்

சினிமா விமர்சனம் : Mrs Chatterjee Vs Norway -இரமணன்

 

2023 மார்ச் 17 அன்று திரைக்கு வந்துள்ள இந்தி மொழிப்படம். 2011ஆண்டில் நார்வே நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த சங்கரிகா சாட்டர்ஜி என்பவரின் உண்மை அனுபவத்தின் திரையாக்கம். அஷிமா சிப்பர் இயக்கியுள்ள இப்படத்தில் ராணி முகர்ஜி, அனிர்பன் பட்டாச்சார்யா, ஜிம் சர்ப், பாலாஜி கவுரி, வருண் சந்தா, நீனா  குப்தா ஆகியோர் நடித்துள்ளனர். இப்போது நெட்பிளிக்சில் காணலாம்.

தேவிகா சாட்டர்ஜியும் அநிருத்தா சாட்டர்ஜியும் திருமணமாகி நார்வே செல்கிறார்கள். இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன.மகிழ்ச்சியாக செல்லும் வாழ்க்கையில் நார்வே நாட்டின் குழந்தை பாதுகாப்பு சங்கம் குறுக்கிடுகிறது. அனிருத்தா  தேவிகாவை ஒருமுறை பலமாக அடித்ததை அங்கேயே பணிபுரியும் இந்திய நண்பர்களிடம் சொல்வதன் மூலம் பிரச்சனை வருகிறது. மேலும்  தேவிகா தன்  மகனின் பள்ளி பாடங்களில் உதவி செய்ய முடியவில்லை, கையால் உணவு ஊட்டுகிறார்கள், தங்களுடன்  படுக்கையில் குழந்தைகளை படுக்க வைத்துக் கொள்கிறார்கள், பொட்டு வைக்கிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி குழந்தைகளை வளர்ப்பு மையத்திற்கு எடுத்து சென்றுவிடுகிறார்கள். தேவிகாஅனிருத் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில்  தோற்றுவிடுகிறது. தேவிகா உணர்ச்சி வசப்படுவதால்  மனப்பிறழ்வு கொண்டவள் என்று காட்டிவிடுகிறார்கள். தேவிகா குழந்தைகளை மீட்டு வர பல முயற்சிகள் செய்கிறாள். இறுதியாக குழந்தைகளை ரகசியமாக எடுத்துக் கொண்டு சுவீடனுக்கு தப்பி  செல்லும்போது பிடிபட்டு சிறை அல்லது நாடு கடத்துதல் என்கிற நிலைமைக்கு வருகிறாள். அவள் கணவனுக்கு தான் நார்வே நாட்டு குடியுரிமை  பெறுவதுதான் முக்கியமாக இருக்கிறது. இதற்கிடையில் நார்வே வரும் இந்திய வெளிநாட்டு அமைச்சரை தேவிகா சந்தித்து முறையிடுகிறாள். இந்தியாவில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. வேறு வழியில்லாமல் குழந்தைகளை இந்தியாவிற்கு அனுப்ப நார்வே நாடு ஒத்துக்கொள்கிறது. ஆனால் அந்த நாட்டின் வழக்கறிஞர்களும் தேவிகாவின் கணவரும் ரகசியமாக பேசி குழந்தைகள் அவளது மைத்துனர் வீட்டில்தான் வளரும் என்ற உடன்படிக்கையில் அவளை கையெழுத்திட வைக்கிறார்கள். குழந்தைகளை வளர்க்க  நார்வே நாட்டிடமிருந்து வரும் பெரும் தொகையைப் பெற்றுக்  கொண்டு அவளது மைத்துனரும் மாமனாரும் தேவிகாவை விரட்டி அடிக்கிறார்கள். நார்வே நாட்டிலேயே இருக்கும் அனிருத் அவளிடமிருந்து விவாகரத்து பெறுகிறான்இறுதியாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தன் குழந்தைகளை மீட்கிறாள் தேவிகா.

 

ஒரு பெண் அந்நிய நாட்டில் அந்த மொழியும் தெரியாமல் கணவனின் ஆதரவும் இல்லாமல் போராடி பிறகு சொந்த நாட்டில்,  புகுந்த வீட்டினரின் கொடுமையையும் எதிர்கொண்டு இறுதியில் வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு அவளது தாய்மை உணர்வே முக்கிய காரணம். அதை இறுதிக் காட்சியில் சரியாக காட்டியிருக்கிறார்கள். அவளுக்கு உதவும் இந்திய வழக்கறிஞர் சரியான ஆதாரங்களை எடுத்து வைக்கிறார். நார்வே நாட்டு வழக்கறிஞரையே குறுக்கு விசாரணை செய்து அவரும் வளர்ப்பு தாயைவிட சொந்த தாய்தான் சிறப்பாக வளர்க்க முடியும் என்று ஒத்துக்க கொள்ள வைக்கிறார். ‘என் தந்தை பட்டப்  படிப்பு படிக்க சொன்னார். படித்தேன். தாயார் திருமணம் செய்து கொள்ள சொன்னார். செய்து கொண்டேன். கணவர் நார்வே போகலாம் என்கிறார். அதற்கும் ஒத்துக்கொண்டேன். இதெல்லாம் சரியா தவறா என்று தெரியாமலேயே செய்தேன். இப்போது முதன் முதலாக நானே சிந்தித்து எது சரி என்று முடிவு செய்கிறேன்என்று கூறும் வசனம் சிறப்பானது. அதேபோல் இந்தக் குழந்தைகள் நல்ல முறையில் வளர நார்வே நாட்டில்தான் முடியும் என்கிற வாதத்தை மறுத்து இந்த நாட்டிலேயே அதை செய்ய முடியும் என்கிற நீதிபதியின் வாதமும் பாராட்டபப்ட்ட வேண்டும்.

உண்மை சம்பவத்தில் இந்தப் பெண்ணின் போராட்டத்திற்கு உதவிய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பிருந்தா காரத் (சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக்கு குழு உறுப்பினர்) ஆகியோர் பெயர்கள் இறுதியில் காட்டப்படுகிறது.’அயோத்திதிரைப்படத்தில் ராமேஸ்வரத்தில் இறந்துவிட்ட பெண்மணியை  வட இந்தியா எடுத்து செல்ல உதவிய வங்கி ஊழியர்களின் பெயரை போடுவதற்கு தோழர் மாதவராஜ்  நடத்திய போராட்டம் நினைவிற்கு வருகிறது.

 

பாலிவுட் என்றாலே நாடகத்தன்மை மிகுந்து இருக்கும்.அது இதிலும் இருக்கிறது என்று ஒரு விமர்சகர் கூறுவது உண்மை என்றாலும் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. இன்னொரு விமர்சகர் கூறுவது போல சில நேரங்களில் நம்மை மகிழ்விப்பதை உதறிவிட்டு படங்கள் பார்க்க வேண்டும். நார்வே மகிழ்ச்சியான நாடுகளில் முன்னணியில் இருக்கும் நாடு என்றாலும் அங்கு குடியேறும் பிற நாட்டவர்களின் கலாச்சாரத்தை மதிப்பதில்லை;அதை குற்றமாக பார்க்கிறது என்கிற உண்மை சுடுகிறது. மேலும் இதுபோல் குழந்தைகளை எடுத்து சென்று வளர்ப்பு பெற்றோர்களும்  வழக்கறிஞர்களும்  பெரும் பணம் பெறும் மோசடியும் நடைபெறுகிறது என்பதையும் படம் சுட்டிக் காட்டுகிறது. ஆண்களின் மேலாதிக்கம், பணி ,குடியுரிமை ஆகியவற்றையே பிரதானமாக பார்ப்பது போன்றவற்றையும் படம் வெளிக்கொணர்ந்துள்ளது.   

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *