சிந்துவெளிப் பண்பாட்டின் தடங்கள் – நூல் அறிமுகம்
நூற்றாண்டு விழா :
சிந்துவெளி அகழாய்வின் நூற்றாண்டு விழா செப்டம்பர் 2024 முதல் தொடங்கியது. இந்த இந்திய பெரு நிலைப்பரப்பின் பூர்வ குடிகள் யார் , அவர்களது மொழி என்ன , எத்தகைய பண்பாட்டு விழுமியங்களை அவர்கள் கொண்டவர்கள் என்கிற உண்மைகளை அறிவதற்கு சிந்துவெளிப் பகுதியில் ஜான் மார்ஷல் தொடங்கி ஒரு நூற்றாண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வுகளை சாமானிய மக்களும் அறிந்து கொள்வது அவசியம் என்ற கருத்தில் இந்த நூல் தமுஎகச முகாமில் பங்கெடுப்பவர்களுக்கு வழங்குவதற்காக தொகுக்கக்கப்பட்டது.
இப்புத்தகம் மொத்தம் நான்கு பிரிவுகளாக உள்ளது. அவ்வளவு எளிதாக மற்ற புத்தகங்களைப் போல வாசித்து பொருள் புரிந்து கொள்ளுதல் சிரமம். சிந்தனை தெளிவாக இருப்பின் கருத்தை உள்வாங்கி புரிந்து கொள்ளலாம். மேலும் , மறு வாசிப்பு கருத்தை ஓரளவு உட்கிரகிக்க உதவலாம் . இது முற்றிலும் எனது பார்வை மட்டுமே.
இனி புத்தகம் பற்றி…
———————————————————–
சிந்துவெளியின் நிலமும் – அகழாய்வுத் திட்டப் பணிகளும் -சர் ஜான் மார்ஷல்
தமிழில்: இரா. விஜயகுமார்
———————————————————–
தண்ணீர் காற்று மற்றும் மண்ணில் உப்பு நீர் கலந்ததால் ஏற்பட்ட தாது மாற்றங்களாலும் தீவிர வளர்ச்சியினாலும் மொகஞ்சதாரவின் கட்டமைப்பு மிகப்பெரிய அளவில் மாற்றங்களை சந்தித்திருக்கிறது . 5000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் நீர்மட்டம் சுமால் 10 முதல் 15 அடி வரை ஆழத்தில் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது. மொகஞ்சதாரோ முழுவதும் ஏழு அடுக்குகளில் காணப்படும் தொல்பொருள் எச்சங்களின் தன்மையாகும். ஏழு அடுக்குகளும் ஒரே மாதிரியானவை என்று நாம் புரிந்து கொள்ளக்கூடாது .
1922 ஆம் ஆண்டு இதில் அகழ்வாராய்ச்சியாளராக இருந்த பானர்ஜி இந்த இடத்தில் அகழாய்வை தொடங்கிய போது இங்கு கிடைத்த தொல்பொருள் எச்சங்கள் மூலம் அதன் முந்தைய கால வரலாற்று முக்கியத்துவம் இங்கு புதைந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இது ஒரு பௌத்த நினைவு சின்னம் என்று சொல்வதற்கு பெரிய கண்டுபிடிப்புகள் ஒன்றும் தேவைப்படவில்லை . தளத்தின் வடமேற்கு மூலையில் உள்ள புத்த ஸ்தூபி மற்றும் அதன் மடாலயம் மட்டுமே அப்போது தெளிவாகக் காணக்கூடியதாக இருந்துள்ளது.
ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாராவில் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற குடியேற்றங்கள் குறித்து சில கூறுகள் ஆதாரமாக உள்ளது. மொகஞ்சதாரோவில் ஏழு அடுக்குகளில் கட்டிடங்கள் உள்ள மேல் மூன்று அடுக்குகள் சமீப காலத்தைச் சேர்ந்தவையாகும் , அதற்கு கீழே உள்ள மூன்று அடுக்குகள் மத்திய காலகட்டத்தையும் , ஏழாவது அடுக்கில் காணப்படும் கட்டிடம் மிகவும் பழமையான காலத்தைச் சேர்ந்தது எனவும் அடையாளம் காணப்படுகிறது . இன்னும் சொல்லப்போனால் ஏழாவது அடுக்குக்கு கீழேயும் கட்டுமானங்கள் இருந்திருக்கலாம் காலப்போக்கில் அவையாவும் மண் அரிப்பு மற்றும் உப்பு நீர் கலப்பு போன்ற இயற்கை காரணங்களால் சிதைந்திருக்கக் கூடும் என்று நிச்சயமாக கருதலாம்.
டிராய் , நாகோஸ் , ஏதேன்ஸ் மற்றும் ரோம் போன்ற நன்கு அறியப்பட்ட பழமையான நகர நாகரிகங்களோடு ஒப்பிடும்போது மொகஞ்சதாரோ குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கக் கூடும் என்று உறுதியாக கூறலாம் என்கிறார் ஆசிரியர்.
சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதன் அகழ்வாராய்ச்சியாளர்களிடம் அவர்கள் பூர்வ குடிகளா அல்லது சமவெளியை நோக்கி குடியேறியவர்களாக , குடியேறியவர்கள் என்றால் அவர்கள் எந்த திசையில் இருந்து வந்தவர்கள் போன்ற பல்வேறு கேள்விகள் எழும் . இதுகுறித்து பல்வேறு கோணங்களின் வழியாகவும் கருத்தாக்கங்களின் அடிப்படையில் ஆராய்ச்சிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன . சில ஆராய்ச்சியாளர்கள் அவசர அவசரமாக அவர்களை வைதீக ஆரியர்கள் என்று முடிவு செய்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.
நாகரீகம் இந்தியாவின் மேற்கு விளம்பில் இருப்பதால் மேற்காசியாவின் தெற்கு கடற்கரை மற்றும் அதன் தரைப்பகுதிகளில் மக்கள் இயல்பாக கலந்து இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சிந்துவெளி மற்றும் சுமேரிய நாகரிகங்களை தொடர்புப்படுத்துவதற்கு முன்பு சுமேரியர்கள் மெசபடோமியாவின் கிழக்கு பகுதியைச் சார்ந்தவர்கள் என்றும் ஹால் குறிப்பிடும் கருதுகோளை நாம் நினைவு கூற வேண்டும் . மேலும் அவர்கள் இந்தியாவின் திராவிடர்களைப் போன்று அதே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் பரிந்துரைத்தார் . ஆனால் இன்று திராவிடர்கள் என்று அழைக்கப்படும் மனிதர்கள் இந்தியாவின் தென்பகுதியில் மட்டும் நிலை கொண்டிருந்தாலும் , திராவிட இனத்தவர்கள் ஒரு காலத்தில் பஞ்சாப் உட்பட இந்திய தீபகற்பம் முழுவதும் வசித்தவர்களாக இனவியல் மற்றும் மொழியியல் ரீதியாக நம்பப்படுகிறது.
மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா மக்களுக்கு குதிரைகள் குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை . வேதகால ஆரியர்கள் மற்ற விலங்குகளை விடவும் பசுவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதற்கு சிறப்பு வழிபாடுகளை செய்துள்ளனர் . ஆனால் சிந்துவெளி மக்களது முக்கியத்துவம் காளைகள் மீது இருந்ததை ஏராளமான சித்திரங்கள் மற்றும் முத்திரைகள் மூலம் நாம் அறிகிறோம்.
எது பழமையானது என்று வேத நாகரிகத்தை சிந்துவுடன் ஒப்பிடும்போது ஒரு நிலையான தனித்துவமிக்க வளர்ச்சியை கொண்டிருந்த சிந்துவெளி மக்களின் நாகரீகமே என்று தீர்க்கமாக கருத முடிகிறது என்கிறார் ஜான் மார்ஷல்.
————————————————————
ஒரு பண்பாட்டின் பயணம் :
சிந்து முதல் வைகை வரை
– ஆர் பாலகிருஷ்ணன்
————————————————————–
பல்வேறு உயிர் வகைகளில் ஏற்படுகிற இயற்கை மாற்றங்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி தகவமைத்துக் கொள்ளும் பண்பு, பின்னர் ஒரு நிலையில் புவிபரப்பிலிருந்து அழிந்து போகும் தொடர் நிகழ்வு “பரிணாமம்” என்று அழைக்கப்படுகிறது.
உடற்கூறின் அடிப்படையில் நவீன மனிதனுடன் தொடர்புடையவர்கள் தொடக்கத்தில் ஆப்பிரிக்காவில் தான் இருந்தார்கள். சுமார் 85 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இவர்கள் ஆப்பிரிக்காவை விட்ட புறப்பட்டு ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா ,அமெரிக்கா வரை சென்றார்கள்.
ஜான் மார்ஷல் இந்திய தொல்லியல் கழகத்தின் தலைவராக இருந்த காலகட்டம் (1902- 1928) “இந்திய தொல்லியலின் பொற்காலம்” என்று கருதப்படுகிறது. அப்போதுதான் சிந்துவெளிப் பண்பாடு பற்றிய கண்டுபிடிப்பு உலகுக்கு அறிவிக்கப்பட்டது.
ஹரப்பா , மொகஞ்சதாரோ ஆகிய இரு இடங்களுக்கும் இடையிலான தூரம் 700 km . ஆனால் இந்த இரு இடங்களிலும் கிடைத்த முத்திரைகளையும் ஏனைய அகழாய்வு பொருட்களையும் ஒப்பிட்டு பார்த்தபோது அவற்றில் தென்பட்ட மிக துல்லியமான ஒற்றுமைகள் ஆய்வாளர்களை வியக்க வைத்தன . வண்ணம் தீட்டப்பட்ட பானைகள் , செதுக்கு கருவிகள் , குத்துவாள் மேலும் குறிப்பாக ஒரே மாதிரியான முத்திரைகள், சித்திர குறியீடுகள் ஆகியவை அச்சு அசலாக ஒரே மாதிரியாக இருந்தன.
இவற்றுக்கெல்லாம் மேலாக பக்க எண் 57 ல் திராவிட மக்களை மலை மக்கள் என்று அழைக்கும் கமில் சுவலபில் அம்மக்கள் பொதுயுகத்திற்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பு வடகிழக்கு ஈரானிய மலைப்பகுதிகளில் வாழ்ந்திருக்க கூடும் என்றும் , அவர்கள் சிந்துவெளிப் பண்பாட்டின் இனவெறி அடையாளத்தில் பெரும் பங்காற்றி இருக்கக்கூடும் என்றும் குறிப்பிடுகிறார்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வசித்த மனிதர்களின் இனப் பின்னணி, குலம் , குடிப்பின்னணி , மொழி அடையாளங்கள் , குடியிருப்புகளின் தன்மை, குடியேறி வசித்தவர்களின் வாழ்வாதாரமான தொழில்கள் , பண்பாட்டு இயல்புகள் , பகுதிகளில் நிகழ்ந்த படையெடுப்புகள் மற்றும் குடியேற்றங்கள் என்று பல்வேறு தகவல்களை அளிக்கும் திறன் இடப்பெயர்களுக்கு உண்டு.
பிறகு திசைகளின் வரலாறு , நிறங்களின் வரலாறு என்று விளக்குகிறார் . இப்பகுதியில் “வன்னி மரம்” குறித்து அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைவரும் வாசிக்க வேண்டியது. வன்னி மரம் நீர் வளமற்ற வறண்ட பகுதிகளிலும் வளரக்கூடிய நடுத்தரமான உயரம் கொண்ட மரமாகும் . மரத்தின் இலைகள் மற்றும் நெற்றியக் காய்கள் ஒட்டகம் ஆடு கழுதை போன்ற விலங்குகளுக்கு உணவாகின்றன.ஸ மிகவும் வறண்ட நிலப் பகுதிகளிலும் பசுமை மாறாமல் வளர்வதால் நிலத்தடி நீரின் இருப்புக்கு இம்மரத்தை ஒரு உயிரியல் அறிகுறியாகக் கருதுகிறார்கள்.
சிந்து முதல் வைகை வரையிலான பண்பாட்டு பயணத்தை ஆராயும்போது வன்னியின் வேர்களை தேடும் தேவையும் இருக்கிறது என்பதை இது சார்ந்த தொன்மைக் கலைகள் , நம்பிக்கைகள் இம்மரத்துக்கும் பழந்தமிழ் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றையும் ஆராயப் பயன்படுகிறது.
———————————————————–
3. முதல் நகரவாசிகள் ஹரப்பர்கள்
டோனி ஜோசப்
தமிழில் :பி எஸ் வி குமாரசாமி
————————————————————
வரலாறு பால் காதல் கொண்ட அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. சிந்து மற்றும் கக்கர் – ஹக்ரா எனும் இரண்டு முக்கிய ஆறுகளின் சமவெளியை ஒட்டி விரிந்து பறந்து இருந்த நாகரீகம் , கிட்டத்தட்ட மொத்த பாகிஸ்தான் வடகிழக்கு ஆப்கானிஸ்தான் ஆகியவற்றையும் பஞ்சாப், ராஜஸ்தான் , ஹரியானா , உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ளடக்கிய மேற்கு இந்தியாவையும் உள்ளடக்கி இருந்தது ஹரப்பா .
மெசப்பொடாமியாவில் இருந்தது போல அரசர்களுக்கான அரண்மனைகள் என்று அடையாளம் காணத் தக்கது எதுவும் ஹரப்பாவில் இருக்கவில்லை . அதேபோல அரசர்களையும் அவர்களுடைய பெருமையையும் தூக்கி பிடிக்கும் சிற்பங்கள் எதுவும் ஹரப்பர்கள் உருவாக்கி இருக்கவில்லை.
வீடுகளில் இருந்த கழிவறைகளில் குவளைகள் இருந்தன என்ற கண்டுபிடிப்பு , தெற்காசியார்கள் இன்றும் கடைபிடித்துக் கொண்டிருக்கும் பழக்கத்தை சுட்டிக்காட்டுகிறது . ஆனால் ஹரப்பர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த அது போன்ற ஆடம்பர வசதிகள் இன்று கூட பெரும்பாலான தெற்காசியர்களுக்கு கிடைத்திருக்கவில்லை என்பதுதான் பரிதாபம்…!
ஹரப்பா நாகரிகம் எவ்வளவு பெரிய இடத்தை ஆக்கிரமித்து இருந்தது என்பதை கற்பனை செய்ய வேண்டுமானால் சுமார் பத்து லட்சம் சதுர கிலோ மீட்டர் பகுதியை உள்ளடக்கிய ஒன்றாக இருந்திருக்கிறது. மெசபட்டோமியா நாகரிகத்தையும் எகிப்திய நாகரிகத்தையும் சேர்த்தால் கூட அந்த அளவு வராது.
அவ்வளவு பெரிய நாகரீகத்தை ஒரே எடை கற்கள், முத்திரைகள் ,எழுத்து வரிவடிவம், நகர அமைப்பு, சுட்ட செங்கற்கள் போன்றவற்றால் இணைத்துப் பிடித்து வைத்திருப்பது எவ்வளவு பெரிய காரியமாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இவை அனைத்தும் நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் நவீன பயண முறைகள் இல்லாமலேயே..!!
ஹரப்பர்களுக்கே உரிய தனித்துவமான மற்றொரு பொருள் வளையல்கள். முக்கியமாக அரண்மனைகளும் ஆடம்பர கல்லறைகளும் இல்லாமல் இருந்தது , ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயத்தை ஹரப்பர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிய முடிகிறது.
————————————————————–
4. சிந்துவெளிப் பண்பாட்டில் தொல் திராவிட மொழிகள்:
பாதுகாக்கப்பட்டு வரும் திராவிடப் ‘ பல்’ விளக்கும் மொழியியல் பழமையும் மரபணுவியல் ஏற்பும்
-பகதா அனுசுமலி
—————————————————————
இந்தப் பகுதியில் ஒரு சில சொற்களின் ஆதிமூலம் எங்கிருந்து வந்தது போன்ற தகவல்கள் கொடுத்துள்ளார்கள். சுருக்கமாக சொல்லப் போனால் ஆராய்ச்சி செய்வதுபோல் ஒவ்வொரு சொற்களுக்கும் விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது.
இதுவே போதுமான தகவலாக இருக்கும் என்று நான்காம் பகுதியை இரத்தினச் சுருக்கமாக சுருக்கி விட்டேன்.
இறுதியாக நான் கூற விளைவது , மேலே குறிப்பிட்டுள்ள நான்கு புத்தகங்களில் உள்ள கருத்தாக்கங்களை கருத்தில் கொண்டு எந்த புத்தகத்தை நீங்கள் வாசிக்க வேண்டும் என்று முடிவை உங்கள் கையில் அளித்து விடுகிறேன்.
இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் தேவையில்லாத பல விஷயங்களை போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறோம். இது போன்ற புத்தகங்களை வாசித்தால் மனிதனின் ஆதி முதல் மனிதன் பெற்ற பரிணாமம் , நம் மனதில் பல மாற்றங்களை கொண்டு வந்து விடும். மொத்தத்தில் மனிதமாக இருப்போம் . இன்றைய நம் தடங்கள் கூட நாளைய தலைமுறைகளால் அழித்து எறியப்படக்கூடியவையே..
இப்புத்தகத்தை வாசிக்க பரிந்துரைத்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திற்கும் நன்றி
நூலின் தகவல்கள் :
புத்தகத்தின் பெயர் : சிந்துவெளிப் பண்பாட்டின் தடங்கள் (Cinthuvelip Panpattin thadangal)
ஆசிரியர் : ஜான் மார்ஷல், ஆர்.பாலகிருஷ்ணன் , டோனி ஜோசஃப், பக்தா அனுசுமலி
தலைப்பு : வரலாறு
பக்கங்கள்: 143
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
நூல் அறிமுகம் எழுதியவர் :
பா விமலா தேவி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சிறப்பான Review. நல்ல நடையில் செறிவாக எழுதி உள்ளார். வாழ்த்துகள். நன்றிகள்.
Review முடிந்த பிறகு கடைசியில் தேவையற்ற 4 வரிகளில் ஏன் நெகடிவ்வாக எழுதி சறுக்கி உள்ளார்.
தவிர்த்து இருக்கலாம்.
இப்போது கூட எடிட் செய்யலாம்.
பாசிட்டிவ் ஆக இருக்க வலியுறுத்த அந்த நெகடிவ் தேவைப்பட்டது என கருதினேன்.
கருத்துக்கு நன்றி 👍
அறிமுகம் சிறப்பு – நன்றி
நன்றி