நூலைப் பற்றி கூறுவதற்கு முன் இந்நூலின் ஆசிரியரைப்பற்றி – திரு ஆயிஷா நடராசன் அவர்களைப் பற்றி நான் கூறவில்லை எனில் எனது இந்தக் கட்டுரை ஒரு முழுமையானதாக இருக்காது என்றே கருதுகிறேன். காரணம் 2012ல் ஆசிரியராக பணியில் சேர்ந்த பொழுது நான் செல்லும் புத்தகத் திருவிழாக்களில் எல்லாம் தேடித்தேடி அலைந்து வாங்கிய புத்தகங்கள் அவருடையவை.
அதுவும் ஒரு சென்னை புத்தகத் திருவிழாவில் இவர் என்னை கடந்து சென்ற பொழுது அதையே ஒரு பெரிய விஷயமாக – “நான் ஆயிஷா நடராசன் அவர்களைப் பார்த்தேன் தெரியுமா?” என்று எனது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்ட மகிழ்வான நாட்கள் நினைவில் ஆடுகின்றன. ஏனெனில் நூலாசிரியர்கள் வாசகர்களிடம் சகஜமாக பேசுவார்கள் என்பதை எல்லாம் நான் உணராத காலம் அது.
ஆயிஷா நடராசன் அவர்கள் சிறுவர் இலக்கியத்திற்காக *”பால சாகித்ய அகாடமி”* விருது பெற்றவர். கணிதம், அறிவியல் குறித்து பலவிதமான கல்வியியல் நூல்களை சிறார்களுக்கு எளிதில் புரிகின்ற வகையில் எழுதியவர். எழுதிக் கொண்டிருக்கிறவர். இவரின் நூல்களை வாசிக்கையில் எந்த ஒரு இடத்திலும் சலிப்பு ஏற்படுவதாக உங்களால் உணர இயலாது. அதுவும் இவருடைய *”ஆயிஷா”* என்ற சிறு நூலைப் படித்து கண்ணீர் விடாதவர்கள் அனேகமாக யாரும் இருக்க முடியாது.
*”டார்வின் ஸ்கூல், கணிதத்தின் கதை, கணித மேதைகளின் ஃபேஸ்புக், ரோஸ், ரஃப் நோட், பூஜ்ஜியமாம் ஆண்டு……..”* போன்ற இவரது பல நூல்களை வாசித்து மாணவர்களிடம் அதையெல்லாம் தினம் ஒரு தகவல் போல வகுப்பில் நான் கூறி வந்த நாட்கள் மறக்க முடியாதவை.
இனி நூலைப்பற்றி…….
எல்லை இல்லா இந்த பால்வெளி அண்டத்தில் இப்பூமி தவிர்த்த வேறு ஏதேனும் கிரகங்களில் வாழ வேண்டும், அந்த கிரகங்களுக்கு ஒரு பயணமாவது சென்று வர வேண்டும் என்ற ஆசை என்னைப் போன்றே உங்களுக்கும் இருக்கிறதா? இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பூமி எப்படி இருக்கும்? என்று அறிந்து கொள்ளும் ஆவல் உங்களின் மனதில் ஏதேனும் ஒரு மூலையிலாவது என்றைக்கேனும் தோன்றியிருக்கிறதா? அப்படியாயின், நீங்கள் அவசியம் வாசிக்கவேண்டிய நூல் “சர்க்யூட் தமிழன்”.
“அருட்பெருஞ்சோதி, டிகிரி காபி, வைட்டா- எக்ஸ்……” முதலிய 13 அறிவியல் புனைக்கதைகளின் தொகுப்பே *”சர்க்யூட் தமிழன்”* என்ற இந்நூல்.
இன்றைக்கு நாம் வாழும் இந்த இடம் நம் மண்ணைச் சேர்ந்த தமிழர்களுக்கு மட்டுமே அன்னியர்களுக்கு இடமில்லை என்றெல்லாம் பேசி பூசலை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வருங்காலம் மனிதர்களுக்கானதா அல்லது எந்திரங்களைக்கானதா என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்க போகிறது. இதில் முதல் கதையான *”டோக்கன் எண் 666″* இல் அதுபோலத்தான் ஒரு ஹோட்டலில் சர்வர்களாக மனிதர்களின்றி வெறும் ரோபோக்களே அமைந்திருப்பதை கூறுகிறார்.
அத்தோடு ரசாயன ஆலைகளால் மனிதர்களுக்கு நேரும் தீங்குகளையும், அதன் பாதிப்புகளிலிருந்து சாதாரண மக்களால் மீளவே முடியாது துயருறுவதையும் மிக அழகாக ஒரு கதைபோல விவரித்துச் சொல்லும் விதம் அருமை. இந்த முதல் கதையில் ரோபோ, டோக்கன் எண் 666 என்ற எண்ணுடைய நடேசன் அவர்களிடம் கேட்கும் அதே கேள்வியை நானும் உங்களிடம் கேட்கிறேன். முடிந்தால் விடை சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த கேள்விக்கு விடை சொன்னால் ஒரு கோடி ரூபாய் பரிசு என அந்த ரோபோ அறிவிக்கிறது.
கேள்வி இதுதான்: *”முக்கி எடுக்கும் அமிலம், பேட்டரி அமிலம், நொர்தாசென் அமிலம் அது எந்த அமிலம்?”* இதற்கு ஒரு க்ளூவும் கொடுக்கிறது. *”கிரேக்க மருத்துவர் டையோஸ்கோரிடஸ் அதை மருந்தாக பயன்படுத்தினார். லுயிஸ் கே லூசாக் சாயமாக பயன்படுத்தினார்”* முடிந்தால் விடை சொல்லுங்களேன் பார்க்கலாம் இந்த கேள்விக்கு….
இரண்டாவது கதையான *”ரெஜி”* வாசிக்கும் பொழுதே என் கண்கள் கலங்கியதை உணர முடிந்தது. ஒருவேளை நீங்கள் வாசித்தால் நிச்சயம் இந்த கதையை படித்து கண் கலங்குவீர்கள் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும். ஒருவேளை இந்த கதையைப் பற்றி இக்கட்டுரையில் ஏதாவது கூற நான் விரும்பினால் எழுதும் இந்த கணமே கண்ணீர் விட வாய்ப்புண்டு என்பதால் அதைப் பற்றி எழுதாமல் தவிர்க்கிறேன். மன்னியுங்கள்…. நீங்களே வாசித்துக் கொள்ளுங்கள்…..
அடுத்ததாக *”வாழைப்பழ சோம்பேறி”* என்ற கதை. பள்ளியில் எப்போதும் “வாழைப்பழ சோம்பேறி” என்று திட்டு வாங்கும் ஒரு சிறுவன், வாழைப்பழத்தால் முழுக்க முழுக்க ஆன ஒரு உலகத்தில் சஞ்சரித்தால் எப்படி இருக்கும் என்பதை மிக சிறப்பாக – சிரிப்பாக சொல்கிறது இக்கதை.
வீடியோ கேம்களிலேயே முழுவதுமாக மூழ்கிக் கிடக்கும் சிறுவர்கள் அதற்கு எப்படி அடிமையாகிப் போகிறார்கள் என்பதை தெளிவாக விளக்குகிறது *”பிள்ளை பிடிக்கிறவன்”* என்ற கதை.
தேர்வு, பாடம், மதிப்பெண், தேர்வுப்பணி என அன்றாடம் அல்லலுறும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்படும் பயங்களை (போபியாக்கள்) 11 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் மூலம் விளக்குகிறது *”சந்திரன் காம்ப்ளக்ஸ்”* என்ற புனைக்கதை.
நூலில் என்னை மிகவும் கவர்ந்த வித்தியாசமான கதை *”பிறந்தநாள் ராவுத்தர் கடை”* இப்படி யோசித்துப் பாருங்களேன்……. இப்போதைய உங்களின் வயதிலிருந்து குறைந்து நீங்கள் விரும்பும் உங்களின் சிறிய வயதிற்கு உங்களால் செல்லமுடியும்; நீங்கள் விரும்பியபடி அப்போது நடந்து கொள்ள முடியும்; அந்த வயதுக்கான உருவத்தோடு இப்போது இருக்கும் உங்களோடு நீங்கள் பேசி மகிழ முடியும் என்பதாக இருந்தால் எப்படி இருக்கும்!? வளர்ந்து வரும் அறிவியல் யுகத்தில் ஒருவேளை இதெல்லாம் சாத்தியமாகும் வாய்ப்புகள் உண்டு தானே? அப்படி ஒரு கதைதான் இது. வியப்பும் அழுகையும் ஒருங்கே கலந்த அறிவியல் புனைக்கதையிது. வாசித்துப் பாருங்கள் நிச்சயம் உங்களுக்கும் இந்த கதை பிடித்துப் போகும்.
அணுக்கதிர் வீச்சால் ஏற்படும் அபாயம், அதனால் மனித இனமே முற்றிலும் செயலிழந்து போகும் துயரங்களை வலிமிகுந்த வரிகளால் பேசுகிறது *”சர்க்யூட் தமிழன்”* என்ற சிறுகதை.
முழுவதும் ஐஸ்கிரீம்களாலும், சாக்லேட்டுகளாலும் நிரம்பிய ஒரு கோள் இருந்தால் எப்படி இருக்கும்…..!!! அதில் நீங்கள் உங்கள் விருப்பப்படி உண்ணலாம்; எடை கூடவே கூடாது; வயதும் அதிகரிக்காமல் அப்படியேத் தான் இருக்கும் என்பதாக ஒரு கிரகம் இருப்பதாக தெரிந்தால் அங்கு செல்ல நாம் விரும்புவோம் தானே…… அப்படிப்பட்ட ஒரு கிரகம் பற்றிய கதைதான் *”ஐ….. ஜாலி”* ஆனால் அந்த கிரகத்திற்கு செல்ல ஒரே ஒரு கண்டிஷன் தான். நீங்கள் குழந்தைகளைப் போல அனைத்தையும் உற்சாகமாக “ஐ….! ஜாலி…! சூப்பர்…!!” என்று கைதட்டி, மகிழ்ந்து ரசிக்கவேண்டும். முடியுமா உங்களால்…?
பொதுவாகவே, ஆயிஷா நடராசன் அவர்களின் கதைகளில் கதைநாயகர்கள் எப்பொழுதுமே சிறுவர்கள் தான். இத்தொகுப்பிலுள்ள கதைகளுக்கும் இது விதிவிலக்கல்ல. அவர்களின் மூலமாய் படிப்பின் மீதும், அறிவியலின் மீதும் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையிலான கதைகளையே இந்நூலில் அவர் புனைந்துள்ளார்.
மாறிவரும் உலகில் – வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில், இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எத்தனையோ சாதனைகளைப் படைக்க இருக்கிறது மனித இனம். இந்த கதைகளை எல்லாம் வெறும் அறிவியல் புனைகதைகளாக மட்டுமே எண்ண முடியவில்லை. நிச்சயம் வரும் காலங்களில் இந்நூலில் உள்ளது போல பல சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது. மிகச்சிறந்த அறிவியல் புனைக்கதைகளைப் படிக்க விரும்புவோர் நிச்சயம் இந்நூலை வாசிக்கலாம். நூலை வாசித்து முடிக்கையில் ஒரு….. அல்ல அல்ல …. பல ஹாலிவுட் படங்களை ஒரே நேரத்தில் கண்டு, ரசித்து, பிரமித்த உணர்வு உங்களுக்குள் மீதம் இருக்கும்….
இந்த உலக புத்தக தின நாளில் ஒரு ஆகச் சிறந்த நூலைத் தான் வாசித்து இருக்கிறேன் என்ற மகிழ்வை “சர்க்யூட் தமிழன்” நூல் என்னுள் ஏற்படுத்தி இருக்கிறது.
நிறைய வாசியுங்கள்…… தினமும் வாசியுங்கள்….. வாழ்வில் வளம் பெற அது ஒன்றே சிறந்த வழி…..
வாசிப்பும் பகிர்வும்……
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/circuit-tamizhan/
நூல் : சர்க்யூட் தமிழன்
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராஜன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 125
விலை : ரூ. 100
*திவாகர். ஜெ*