வகுப்பறைகள்: மாத்தியோசி – 1 |சுந்தர்பிச்சையின் வகுப்பறை| ஆயிஷா .இரா. நடராசன்

வகுப்பறைகள்: மாத்தியோசி – 1 |சுந்தர்பிச்சையின் வகுப்பறை| ஆயிஷா .இரா. நடராசன்

 

2015ஆம் வருடம் மார்ச் மாதம் 5ஆம் நாள் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில்  உலகின் பல மூலைமுடுக்கிலிருந்து மொபைல் இயலின் வல்லுநர்கள், 9400 பேர் இந்த உலக மொபைல் மாநாட்டில் கூடி இருந்தார்கள். மாநாட்டு அரங்கில் உட்கார இடமில்லை. 200 நாடுகளைச் சார்ந்த 2000 மொபைல் நிறுவனங்களில் இருந்து அவர்கள் வந்திருந்தது ஒரே ஒருவரது பேச்சை கேட்கத்தான். அந்த ஒருவர் வேறுயாருமல்ல அப்போது கூகுளின் துணைத் .தலைவர்களில் ஒருவராக இருந்த நம் சுந்தர்பிச்சை. அவர் பின்னர் அதேவருடம் ஆகஸ்ட் பத்தாம்நாள் கூகுள் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மதுரையில் அம்மா (லெட்சுமி) வீட்டில் பிறந்து சென்னையில் அசோக்நகரில் தன்  பள்ளிபடிப்பை முடித்த சுந்தரராஜன், சுந்தர்பிச்சை ஆனது எப்படி அதற்கான வகுப்பறை என்னவாக இருந்திருக்க முடியும். இன்று சுந்தர்பிச்சையை இத்தனை உயரத்திற்கு எடுத்துச் சென்ற கல்வி எது. ஒரு குட்டி பிளாஷ்பேக்.

சென்னையில் உள்ள ஜெனரல் எலெக்ட்ரிகல் கம்பெனிதான் சுந்தர்பிச்சையின் தந்தை (ரகுநாதன்) மின்பொறியாளராக வேலைபார்த்த இடம். சுந்தர்பிச்சைக்கு சீனிவாசன் என்ற ஒருதம்பி இருக்கிறார். அம்மா லட்சுமி தனக்கு மகன்கள் பிறக்கும் வரை ஸ்டெனோவாக வேலைபார்த்தவர். அசோக்நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு பெட்ரூம் கொண்ட ஃபிளாட்டில் அவர்கள் வசித்தார்கள். 1976ஆம் ஆண்டு தன் நான்காவது வயதில் அசோக்நகர் ஜவஹர் வித்யாலயாவில் சுந்தர்பிச்சை சேர்க்கப்பட்டார். பத்தாம் வகுப்பில் சராசரிக்கு சற்று கூடுதலான மதிப்பெண் பெற்று கிண்டி ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள வனவாணியில் 12 ம்வகுப்பை 1989ல் முடித்தார்.

Google's Sundar Pichai travelled in buses, had no television while ...

1984ல் ராஜீவ்அரசு  கொண்டு வந்த புதிய (தொழிற்) கல்வி கொள்கையின் படி எல்லா மத்தியதர வர்க்கத்து குழந்தைகளும் செய்ததைப் போல உயர்வகுப்பில் பொறியியல் பிரிவை எடுத்துப் படித்தார். லட்சகணக்கான நம் குழந்தைகள் பொறியியல் கல்லூரியின் இறுதி ஆண்டில் வளாக – நேர்காணல் மூலம் வேலை கிடைப்பதை கருத்தில் கொண்டு அலைஅலையாக ‘அமெரிக்க’ கனவுகளுடன் புற்றீசல் போல முளைத்த பொறியியல் கல்லூரிகளுக்கு சென்ற காலம். ரகுநாத் சாரும் அதே நோக்கத்தோடுதான் மகனை சேர்த்தார்.

2004ல் சுந்தர்பிச்சை முன்பு பணியில் இருந்த மெக்கின்ஸே நிறுவனத்திலிருந்து கூகுளின் விளைபொருள் நிர்வாகத்தில் ஒரு துணை வல்லுநராக சேர்ந்தார். இரண்டே ஆண்டுகளில் கூகுள் குரோம் முதல் கூகுள்மேப் நேவிகேஷன் என பல புதிய மாற்றங்களைத் தருகிறார். ஜிமெயிலை அனைவருக்குமானதாக்குகிறார். கூகுல் ஸ்தாபகர்களான  லாரிபேஜ் மற்றும் செர்ஜிபிரின் இருவரும் தங்களது அறையிலேயே அவருக்கு  ஒரு மேசையை ஒதுக்குகிறார்கள். பலசந்தேகங்கள், மின் அணுவியல் வித்கைள் பற்றி அவர்கள் இவரிடம் கேட்டு தெளிவுபெற தொடங்கும் அளவுக்கு தன்னை சுந்தர்பிச்சை வளர்த்துகொண்டது எப்படி?. நம் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பிளஸ்டூ படிப்பை முடிக்கும் பல லட்சம் மாணவர்களிலிருந்து தனக்கான தனித்திறனை அவர் எப்படி வளர்த்துக் கொண்டார்?.

சுந்தர்பிச்சையின் உண்மையான வகுப்பறை பள்ளி போக மீதி நேரத்தில் அவரால் உய்த்து உணர்ந்து வென்றெடுக்கப்பட்ட சுயமாக கற்றல் (Self – Learning) எனும் வகுப்பறை ஆகும். தனித்துவம் என்பது சுய-கற்றலில்தான் சாத்தியம்.

மேல்நிலை முதலாமாண்டு படித்தபோது ஏனைய மாணவர்கள் டியூஷனுக்கும் கிரிக்கெட் ஆட்டத்திற்கும் போனபோது சுந்தர்பிச்சை வீட்டில் ஒரு அழகான நிபந்தனை வைத்தார். அசோக்நகர் வீட்டில் இருந்து கிண்டி வனவாணி பள்ளிக்கு செல்ல தனக்கென்று தனியாக சைக்கிள் ரிக்க்ஷா மாதவாடகைக்கு வைத்துக்கொண்டார். காலை வெகுநேரம் முன்னதாக கிளம்ப வேண்டி இருந்தது. தன் தந்தையின் தொழிற்கூட அனுபவங்களை கேட்டு கேட்டு வளர்ந்தவருக்கு எலெக்ட்ரானிக் துறை தனிக் கவர்ச்சியைக் கொடுத்தது. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த (பாடபுத்தகம் அல்லாத) புத்தகம் ஒன்று எப்போதும் அவருடன் இருக்கும். சைக்கிள் ரிக்க்ஷாவில் பள்ளிக்கு போகும்போது புத்தகம் வாசித்தபடியே செல்வார். புத்தகங்கள் வழியே சுயதேடல் இதுதான் சுந்தர்பிச்சை‘ வகுப்பறை’ அதைத் தவிர வீட்டில் அப்போதிருந்த எண் சுழற்றும் பெரியமேசை தொலைபேசி,  டிவிபெட்டி, அகல ஏணி வடிவ ஆண்டனா அமைப்புகளை அக்குவேறு ஆணிவேராக பிரித்து ஆராய்வது அவரது பள்ளிப்பருவ பொழுதுபோக்கு கற்றல் செயல்பாடு.

1989ம் வருடம் கனிணி பெரிதாக அறிமுகம் ஆகவில்லை. அறிவுத்தேடல் புத்தகங்கள் வழியே நடந்த காலம். அந்த காலக்கட்டத்தில் தாமாகவே தேடல் மூலம் பல நூல்நிலையங்களை படையெடுத்து தான் ‘வாங்கி’ வந்த நூல்களை வாசித்து பாடப்புத்தக அறிவுக்கும் பொதுவகுப்பறை செயல்பாட்டிற்கும் வெளியே ஒரு சுய-சிந்தனை மனிதனாக தன்னை வளர்த்தெடுத்தவர் அவர். ஆர்வத்தோடான சுயவிருப்ப கற்றல்தான் நம் குழந்தைகளை நம்மை விட கைபேசியை நுணுக்கமாக கையாள்பவர்களாக மாற்றியுள்ளது என்பது முக்கியசான்று.

சுயகற்றல் எனும் கல்விக்கோட்பாடு 1919ல் அறிமுகம் ஆனது. பள்ளி எனும் அடிமை அமைப்பே தேவை இல்லை எனும் ரூசோவின் பிரகடனத்தில் இருந்து அது முளைத்தது. கல்வியாளர் ருடோல்ஃப்ஸ்டீனர்( Rudolf Steiner)  ஜெர்மனியில் உருவாக்கிய கல்வி அது. சுதந்திர கற்றல் என்பதே அக்கல்வியின் அடிப்படை ஸ்டீனர் எழுதிய விடுதலையின் தத்துவம் எனும் புத்தகம் சுயகற்றல் தான் ஞானத்தை மறக்க முடியாத  நிரந்தரமான புதையலாக தக்கவைக்கும் என்பதை நிறுவியது. 

What are some excellent facts about Sundar Pichai? - Quora

உங்களை கவரும் ஒரு துறையை உங்களது விருப்பத்துறையாக தேர்ந்தெடுக்க பள்ளிக்கல்வி உதவாது. பள்ளிப்படிப்பை முடித்து என்ன படிப்பது என பல்லாயிரம் சிறார்கள் திக்கற்று திணறுவதை பார்க்கலாம். சுய-கற்றல் எனும் தேடலில் சிறந்த ஒருவர் அப்படி இருக்கமாட்டார். வால்டார்ப் பள்ளிகள் என ஸ்டீனரின் பள்ளிகள் அழைக்கப்பட்டன. ஆந்த்ரோபோஸோஃபி (Anthro posophy)  எனும் தேடல் கோட்பாடும் அவருடையதே. சுயவிருப்பம் –ஹாபி சார்ந்த கற்றல் மட்டுமே நிலையானது அறிவுஜீவிகளை உருவாக்கவல்லது என்பதே அக்கோட்பாட்டின் அடிப்படை . 

சுயகற்றல் கோட்பாடு பற்றி இன்னும் சற்று விரிவாக பார்க்கலாம். இந்த ‘மாத்தியோசி’ வகை கற்றல் கோட்பாடு கேம்ப்ஃபில்  இயக்கம் என பிரபலமாக அறியப்பட்ட  கல்வியியல் இயக்கத்தை அடித்தளமாகக் கொண்டது ஆந்த்ரோ போசொஃபி (மானுட – ஞானம்) எனும் தத்துவ பள்ளியை  தோற்றுவித்தவர்கள் பவாரியா, சுசெக்ஸ் (இங்கிலாந்து) போன்ற இடங்களில் சுய-தேடல் மூலம் ஒரு துறையை ஆழமான ஞானமாக தீவிர ஈடுபாட்டோடு கற்றுத் தெளியும் வகையிலான கல்வியை அறிமுகம் செய்தார்கள்.

1919ல் உலகே பிளேக் நோய்க்கு ஆட்பட்டு முற்றிலும் தகர்ந்துபோன காலத்தில் சுயகற்றல் ‘மாத்தியோசி’ வகைக்கல்வி ஜெர்மனியிலும் அறிமுகமானது. வால்டோர்ஃப்(Waldorf) பள்ளிகள் என இவை அழைக்கப்பட்டன. 1922ல் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் தனது சுய-கற்றல் கோட்பாட்டை முன்வைத்து ஸ்டீனர் தொடர் உரைகள் ஆற்றியபோது இவ்வகை கல்விக்கோட்பாடு உலகெங்கும் பரவியது.

ஸ்டீனரது விடுதலையின் தத்துவம் நூலின் படி சுயத்தேடல் மூலமான விருப்பக்கற்றல்  என்பது நான்கு படிநிலைகளை கொண்டது.

  1. பள்ளிக்கல்வி ஏற்படுத்தும் எந்திரத்தனமான பணிச்சுமையில் இருந்து விடுபட்டு பொது வெளியில் தனக்கான விருப்ப பொழுதுபோக்கு  அம்சத்தை கற்றல் செயல்பாடாக மாற்றுதல்
  2. சுய –விருப்பத்துறை சார்ந்த அறிவுத்தேடலில் தனக்குத்தானே கற்றலில் ஈடுபட சொந்த படிநிலைகளை நிறுவுதல்.
  3. சுய-விருப்ப தேடல் மூலம் கற்றவைகளை தக்கவைக்க தொடர் பரிசோதனைகளில் ஈடுபட்டு வல்லுநர் நிலை நோக்கி தற்-கல்வி வழியே முன்னேறுதல்.
  4. தன் சுய-விருப்ப தேடல் கல்வி மூலம் தான் தேர்வு செய்த துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பங்கெடுத்த அதை அடுத்த படி நிலைக்கு உயர்த்துதல்.

ஐசக் நியூட்டன், முதல் கால்பந்தாட்ட வீரர் பீலே வரை சுய விருப்பத்தேடல் கற்றல் முறையில் சாதித்த பலரை வரலாறு பதிவுசெய்து வைத்துள்ளது. அந்த வரிசையில் நாம் வாழும் காலத்து உலகளாவிய இந்திய, தமிழக உதாரணம்தான் சுந்தர்பிச்சை.

Google CEO Sundar Pichai's Love story with her wifey Anjali Pichai ...

தனது பள்ளிப்படிப்பிற்கு பிறகு கர்காபூர் ஐ.ஐ.டி வளாகத்தில் சுந்தர்பிச்சைக்கு மின்அணுவியல் பாடம் கிடைக்காமல் உலோகவியல் (Metalorgy) எடுத்து படித்தார்.

எலெக்ட்ரானிக் எனும் ஒருதுறையே அப்போது அங்கே கிடையாது. ஆனால் அவரது அப்போதைய பேராசிரியர் சனத்ராய் சொல்கிறார். ‘அப்போது எலெக்ட்ரானிக் துறையே இல்லை…. ஆனால் சுந்தர் இறுதி ஆண்டில் எலெக்ட்ரானிக்துறை சார்ந்த ஆய்வுகட்டுரை சமர்பிக்க அனுமதிகேட்டார். சிலிக்கான் மேல்புற அடுக்கில் பிற உலோக மூலக்கூறுகளை கலக்கும்போது அந்தமூலக்கூறுகள் எப்படியான புதியபண்புகளை பெறுகின்றன. என்பது பற்றிய அக்கட்டுரையை உலகம் மறக்காது.’ சுய-கற்றல் என்பது பல்கலைகழக கெடுபிடி தாண்டிய உயரத்தை அவருக்கு வழங்கியதில் ஆச்சரியமில்லை. 2004ல் கூகுளில் இணைந்தபோது அவரது நிறுவன ஸ்தாபகர்களான லாரிபேஜ் மற்றும் செர்ஜிபிரின் இருவருக்கும் மென்பொருள் (சாப்ட்வேர்) தெரியும். ஆனால் கணிணியின் உள்ளே உள்ள வன்பொருள் (ஹார்டுவேர்) குறித்த விஷயங்களுக்கு பலவகை வல்லுநர்கள் தேவைப்பட்டார்கள் இரண்டையும் ஒருசேர வைக்கும் கல்வி என்பது உலகில் இல்லை. ஆனால் தன்சுயகற்றல் படி அவை இரண்டையும் வாழ்வின் வெறித்தேடலாக்கி இணைத்து அறிந்த ஒரு சுந்தர்பிச்சை கிடைத்தபோது அவர்கள் தங்கள் நிலையைவிட உயர்ந்த ஸ்தானத்தை அவருக்கு தந்தார்கள். இது சுய – கற்றல் கோட்பாட்டில் அவர் அடைந்த நான்காம் படி நிலை நோக்கி சுந்தர்பிச்சையை எடுத்துச்சென்றது. அது முடியாது இன்றும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

சுயதேடல் வழியே தானாகவே ஆர்வ மேலீட்டில் கற்கும் வகுப்பறைகளைதான் 21ம் நூற்றாண்டு கல்வி நம்பி இருக்கிறது. எதையும் பாடமுறையாக்கி திணிக்காத கற்றல் கோட்பாடுஅது.

எது எப்படியோ சுந்தர்பிச்சையின் கல்வி எப்போது முடிவுக்கு வந்திருக்கும். ஏனெனில் கல்வியாளர் ரூடோல்ஃப்ஸ்டீனர் சொல்வார் ‘சுயதேடல் வழிகற்றல் தொடங்கி விட்டால் ஒருவரது வாழ்நாள் முழுதும் அது தொடர்ந்து கொண்டே இருக்கும்….  மனிதனின் ஆர்வத்திற்கு முடிவோ எல்லையோ ஏது?’ பட்டம் வாங்கியதோடு முடிவுக்கு வரும் சாதாரண வகுப்பறை கல்விக்கும் சுந்தர்பிச்சையின் சுயமாக தேடிக்கற்கும் (Self Search Learning) _வகுப்பறை கல்விக்கும் இடையிலான பிரதான வேறுபாடு இங்கேதான்உள்ளது.

இன்றைய பேரிடர்  நோய் தொற்று காலத்தில் நாம் அவசியம் பரிசீலிக்க வேண்டிய ‘மாத்தி யோசி’ வகுப்பறை இது என்பதில் சந்தேகமே இல்லை.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *