நூல் அறிமுகம்: மாதவராஜின் “க்ளிக்” நாவல் – சு.பொ.அகத்தியலிங்கம்.

நூல் அறிமுகம்: மாதவராஜின் “க்ளிக்” நாவல் – சு.பொ.அகத்தியலிங்கம்.
“இப்படியா ஒரு பெண் இருப்பாள் ?”
“ ஏன் அப்படி இருக்கக்கூடாதா என்ன..?”

[ மார்ச் 8 ] உலக பெண்கள் தினத்தில் மாதவராஜின் “க்ளிக்” நாவல் படித்தேன். வாசிக்கத் தூண்டும் நடை , எடுப்பு , தொடுப்பு, முடிவு மொத்தத்தில் விறுவிறு இப்படி என் பொது வாசக மனோநிலையிலும் சொல்லலாம்.

காதல்  செக்ஸ், திருமணம், பாசம், நட்பு போன்றவைகளின் பார்வையில் மாற்றம் தேவை என்பதை சொல்லும் படைப்பு என இன்னொரு நிலையில் சொல்லலாம்.

இன்றைய ஆண் /பெண் இளைய தலைமுறையின் உளவியல் போக்குகளை படம் பிடிப்பதாக வேறொரு வகையில் பார்க்கலாம் .

கரிசல் இலக்கிய வட்டத்தினர் நிறைய சொல்லிவிட்டனர் ஆகவே சாதாரண வாசகன் நான் புதிதாக என்ன சொல்ல முடியும் ?

பூங்குழலி, ஸ்ரீஜா, சோஃபியா, பவித்ரா, ஆஷா, மெர்சி, சித்ரா, பத்மாவதி, சந்திரா, கல்யாணி, அமுதா ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அலையடிக்கும் உணர்வுகள் வெவ்வேறானவை ஆனால் எங்கும் பெண்ணின் குரல் நிராகரிக்கப்படுவதும் அதை எதிர்த்த போராட்டமும் அவரவர் புரிதல் மட்டத்தில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. எது சரி? எது தவறு? எதைக் கொண்டு தீர்மானிப்பது?

“மனித இனத்தின் சரிபாதி, சகமனுஷியான பெண் எப்படி இருக்க வேண்டும்? எல்லா பெண்களும் ஒரே போல் இருக்க முடியுமா? இருக்க வேண்டுமா? பெண்ணின் படிப்பு, உடை, வேலை, நண்பர்கள், திருமணம், பேசும் வார்த்தைகள் வரை எல்லோராலும் கேள்விக்குள்ளாக்கப் படுவது ஏன்?…. பெண்கள் புரியாத புதிரா? புரிந்து கொள்வதில் ஆண்களுக்கு உணர்வுத் திறன் குறைபாடா? திருமணம் எதற்காக குடும்பத்தால் நடத்தி வைக்கப்படுகிறது? திருமணம் அவசியம் தானா? தன் விருப்பத் திருமணமோ, குடும்ப விருப்பத் திருமணமோ இணையும் ஆண் பெண இருவருக்குள்ளும் அன்பு, நட்பு, புரிதல், மதித்தல், சகிப்புத்தன்மை உருவாக்குகிறதா? உருவாக்காத திருமணமோ உறவோ எதற்காக? பல கேள்விகளோடு உள்ள இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் மனோநிலையை வாசிப்போர் மத்தியிலும் எழச் செய்வதே இந்நாவலின் சிறப்பு!” என்கிற சூலக்கரை சுமதியின் விமர்சனத்தோடு நான் உடன் படுகிறேன் .

சிஸ்டம், மானிட்டர், புராஜக்ட், கோடிங், டீம் மீட்டிங், மெயில், கன்சுயூமர் என தலையை பியத்துக் கொள்ள வைக்கும் ஐ.டி பீல்ட் [கணினித்துறை] தரும் கவர்ச்சி, மயக்கம், யதார்த்தம், உளவியல் சிக்கல் இவற்றோடும் இந்நாவல் பின்னப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பென்பேன்.

சுதந்திரமாக வாழத்துடிக்கும் பூங்குழலி ,அம்மாகோந்தாக ஒட்டிக் கிடக்கும் நரேன் இவர்களைச் சுற்றித்தான் நாவல் . நிச்சயதார்த்தம் ஆனதாலேயே கல்யாணம் செய்துதான் ஆக வேண்டுமா? நாலுபேர் நாலுநாள் அப்படியும் இப்படியும் பேசத்தான் செய்வார்கள், ஆனால் வாழவேண்டியவர் அவர்களல்லவா? வெட்டிக் கவுரவத்துக்கு நெருப்புக் குழியில் விழுவதைவிட ஊரார் வாயில் விழுதல் மேலானதல்லவா!

நரேன், ரவிச்சந்திரன், பூசைப்பழம், முருகேசன், மூர்த்தி, சபாபதி, கலைச் செல்வன், விக்னேஷ், அசோக், பிரகாஷ், மகேஷ், இஸ்மாயில், அலையரசன், மூர்த்தி, லியோ என ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு உலகத்தில் உலவிக்கொண்டிருக்கிறார்கள். யாரும் கெட்டவர்களில்லை. சூழ்நிலையின் கைதிகள்தாம். ஆண் மைய பண்பாட்டு போதையின் அடிமைகள்தாம். பருவதாகம், பேராசை, யதார்த்தம், பாலின புரிதல் இவைகளை சரியாக உள்வாங்கி உணர்ந்து தன்னைச் செதுக்குவதில் இடறுகிறார்கள். விசாலப்பார்வையை தொலைத்து விடுகிறார்கள்.

அதீத பாசமும் ஆர்வக் கோளாறும்கூட அனைத்தையும் நாசம் செய்துவிடும் என்பதன் உருவகமாய் நரேனின் தாய் சந்திரா பாத்திரம். இது போல் பலரை நான் பார்த்திருக்கிறேன். இந்த சமூகம் கட்டியமைத்த ஆண்மைய ஆதிக்கத்தின் இன்னொரு வடிவமே இவர்களும்.

அதீத நுகர்வுப் பெரும் பசியின் எதிர் விளைவைச் சொல்லும் சோஃபியா – விக்னேஷ் மற்றும் ஆஷாவின் கணவர் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை. இதுவும் நாம் சந்திக்கிற காட்சிகள்தாம்.

செக்ஸ், ஒழுக்கம் தொடர்பாக நம் பொது புத்தியில் உறைதிருப்பதை கேள்விக்குள்ளாக்க வேண்டிய கட்டாயத்தினை இந்நாவல் வலுவாய்ச் சொல்கிறது .

“ நாவல் ஒரு சார்பாக எழுதப்படவில்லை. நாவலின் கதாபாத்திரங்கள் மூலமாக எதிரெதிர் நிலைகளைப் பற்றி கேள்விகளும் வருகிறது.” என ராஜேஷ் விமர்சனமும் ஒரு வகையில் சரிதான். ஆயின் தெளிவான பாலின புரிதலை நோக்கியே நாவலை மாதவராஜ் நகர்த்துகிறார் என்பதே என் அவதானிப்பு .

கற்பதற்கும் விவாதிப்பதற்குமான பல செய்திகளைப் பொதிந்த இந்நாவலை என நான் லெப்ட் க்ளிக் செய்கிறேன் . ரைட் க்ளிக் செய்வோரும் இருக்கக்கூடும் ஆயினும் படித்து முடித்தபின் என் முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

சு.பொ.அகத்தியலிங்கம்.

நூல் : க்ளிக் [நாவல்]
ஆசிரியர் : மாதவராஜ்
விலை : ரூ.₹ 250/
பக்கங்கள் : 248
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *