சென்னையின் காலநிலை மாற்றம்: சவால்களும் தீர்வுகளும்
ஆதி வள்ளியப்பன்
தொகுப்பு:
மோசஸ் பிரபு
(உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சென்னை கேரள சமாஜத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசப்பட்டதன் தொகுப்பு)
காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சியை நாம் ஏசி அறைக்குள் நடத்துகிறோம். இது ஒருவித குற்ற உணர்வை ஏற்படுத்துகிறதா என்ற கேள்வியுடன் இந்த உரையைத் தொடங்கலாம் என நினைக்கிறேன். என் வீட்டில் ஏசி இல்லை. ஆனால், வாங்க வேண்டும் என்கிற விவாதம் ஆண்டுதோறும் அடிக்கடி நடக்கும்.
பெரும்பாலும் ஏசி வாங்குவதை தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறோம். இந்த வருடம் வாங்கியே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு நிர்பந்தத்தை கோடை வெப்பநிலை உருவாக்கியுள்ளது. ஒருவேளை பலருக்கும் இதுபோலவே தோன்றுமெனில் நிலைமை என்ன ஆகும்? முதலுக்கே மோசமாகிவிடும். அதாவது அடிப்படைக்கே சேதாரம் என்கிற நிலைமைக்கு சென்றுவிடுவோம். ஆறு அறிவு இருக்கும் மனிதர்களாகிய நமக்கு இது சார்ந்த குற்ற உணர்வு ஏற்படுகிறதா என்கிற கேள்வியை முன்வைத்து உரைக்குள் செல்வோம்.
காலநிலை மாற்றம் தொடர்பாக பல குழந்தைகள் ஒன்றிணைந்து எழுதிய ‘நாங்கள் நம்புகிறோம்’ என்கிற புத்தகத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இதைத் தமிழில் நான் மொழிபெயர்த்துள்ளேன். “எங்கள் கிராமங்களில் உள்ள குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. நானும் அம்மாவும் நீண்ட தூரம் தண்ணீருக்காக நடக்கிறோம்” என்கிற வாசகத்தை மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த யாஷ் ராஜேந்திரன் என்ற 13 வயது சிறுவன் எழுதியிருக்கிறான். இதுபோல் ஏராளமான கருத்துகளை சிறுவர்கள் இப்புத்தகத்தில் எழுதியுள்ளனர். ‘அனைத்துக் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அனைத்து எதிர்கால தலைமுறையும் நான் பாதுகாக்க விரும்புகிறேன்’ என்று இந்தியாவின் இளம் காலநிலை போராளி ரிதிமா பாண்டே இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். உலக அளவில் ஸ்வீடனிந் கிரெட்டா துன்பர்க் போன்ற சூழலியல் செயல்பாட்டாளர்கள் சிறிதளவு நம்பிக்கையை நம்மிடையே ஏற்படுத்துகிறார்கள்.

சென்னையின் நவீன வரலாறு 16ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதற்கு முன் சிறுசிறு மீனவ கிராமங்களின் தொகுப்பாக இருந்த சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் கட்டிய பிறகுதான் நவீன சென்னையாக உருவாகத் தொடங்கியது. அதற்கு பிறகுதான் நவீன அறிவியல் சிந்தனைகள் பரவலாகின.
சென்னையில் 1792இல் சென்னை வானிலை மையம் தொடங்கப்பட்டது இந்தியாவிலே முதன் முதலில் சென்னையில்தான் மழைப் பொழிவின் அளவு கணக்கிடப்பட்டது. அந்த வகையல் காலநிலை மாற்றம் குறித்து அறிவியல்பூர்வமான பதிவுகள் இந்தக் காலத்துக்குப் பிறகு சென்னையில் பதிவாகத் தொடங்கின.
சரி, எதிர்காலத்தில் சென்னை எப்படி இருக்க போகிறது? வரலாற்றில் கடற்கரையை, துறைமுகத்தைக் கொண்ட முக்கிய நகரமாக இருக்கிறது சென்னை. இதேபோல் துறைமுக நகராக வரலாற்றில் நீடிக்குமா என்ற கேள்வியை காலநிலை மாற்றம் நம்முன் வைத்திருக்கிறது. இந்தியாவின் ஆறாவது பெரிய நகரம், உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாகவும் சென்னை திகழ்கிறது. இந்தியாவில் அதிகத் தொழில்மயமான மாநிலம் தமிழ்நாடு, நகரம் சென்னை. இந்த பெருமைக்குரிய வளர்ச்சிக்கு எதை நாம் பலிகொடுத்திருக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும், யோசிக்க வேண்டும்.
ஒரு காலத்தில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் மத்திய கைலாஷ் பகுதி வரை சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் வரை மிகப் பெரிதாக இருந்திருக்கிறது. கடந்த 2000ஆம் ஆண்டு நான் வேளச்சேரிக்கு சென்றிருந்தபோது வேளச்சேரியில் பறக்கும் ரயில் நிலையம் இல்லை. அங்கே சதுப்புநிலமே இருந்தது. அந்த சதுப்பு நிலத்தின் மீதுதான் ரயில் நிலையமே கட்டப்பட்டுள்ளது. ஒருபக்கம் குப்பை கொட்டப்பட்டு மோசமான பகுதியாகவும் இன்னொரு பக்கம் வளர்ச்சி என்ற பெயரில் இதுபோல் நீர்நிலை ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளது. 1970களில் 5 ஆயிரம் ஹெக்டேராக இருந்த சதுப்புநிலத்தில் தற்போது 10% தான் அதாவது 500 ஹெக்டேர்தான் எஞ்யிருக்கிறது. அதுவும் ஆரோக்கியமான சூழலில் இல்லை. காலநிலை மாற்றத்திற்காக வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதற்கும் ஒன்றிய அரசின் நிதியைப் பெறுவதற்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை ராம்சார் பாதுகாக்கப்பட்ட தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பெருமழை பொழிந்து வெள்ளமோ, புயலோ வரும். பிறகு தண்ணீர் இல்லாமல் வறட்சியும் ஏற்படும். இந்த சுழற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கு தீர்வு என்ன? இதற்கான தீர்வை நாம் ஏற்கெனவே தொலைத்துவிட்டோம். பழைய ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டம் ஏரிகளின் மாவட்டம் என்று பெயர்பெற்றது. தற்போது அந்த நீர்நிலைகளில் பெருமளவை நாம் இழந்துவிட்டோம். கடந்த 120 ஆண்டுகளில் 12.6 சதுர கி.மீ பரப்பளவுக்கு இருந்த நீர்நிலைகள், தற்போது வெறும் 3 சதுர கி.மீ. அளவுக்கு சுருங்கிவிட்டன. சென்னையின் ஐடி பூங்கா பகுதியில் மட்டும் சுமார் 230 சதுர கி.மீ பரப்பளவில் நீர்நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்பாக்கம் பகுதியில் ஏற்கெனவே நீர் நிலைகள் இருந்த பகுதியில்தான் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதெல்லாம் எந்த மாதிரியான பாதிப்புகளை உருவாக்கியுள்ளது?
சென்னை ஒரு கடலோர மாவட்டம், நீர்நிலைகள் அதிகம் உள்ள மாவட்டம். மழைக் காலங்களில் பெருகிவரும் நீரை சேமிக்க நீர்நிலைகள் பயன்படும். தற்போது நீர்நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டதால் நீரைச் சேமிக்க வாய்ப்பின்றி வெள்ளத்தால் சென்னை மக்கள் பாதிப்படைகிறார்கள். இன்னொரு பக்கம் மழைநீர் வீணாகக் கடலில் கலக்க நேரிடுகிறது. இதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் என்ன தொடர்பு? காலநிலை மாற்றம் கார்பன் வெளியேற்றத்தால் நடைபெறுகிறது. கார்பனை உட்கிரகிக்கும் ஆற்றல் தண்ணீருக்கும் தாவரங்களுக்கும் மட்டுமே உண்டு. சென்னையில் தற்போது ஓடும் ஆறுகள் பற்றி தெரியுமா?
கூவம் என்ற பெயரை அனைவரும் கேள்விபட்டிருப்போம். அது உலக புகழ்பெற்ற சாக்கடையாக அடையாளம் பெற்றுள்ளது. பிறகு அடையாறு பெயரில் மட்டுமே ஆறு உள்ளது. அந்த ஆற்றில் தண்ணீர் இல்லை. மற்றொன்று கொசஸ்தலை ஆறு திருவள்ளூர் மாவட்டத்தில் ஓடுகிறது, அதுவும் பரவலாக மாசுபட்டுள்ளது. இந்த மூன்று முக்கிய ஆறுகளும் கார்பனை உட்கிரப்பதற்கு பதிலாக மாசுபட்ட நீரால் மீத்தேனை உருவாக்குகின்றன. இந்த மீதேனும் காலநிலை மாற்றத்தை தீவிரமடையச் செய்யும் பசுங்குடில் வாயுக்களில் ஒன்று.
சென்னைக்கும் காலநிலை மாற்றத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதிலொரு ஆராய்ச்சியில் 2027ஆம் ஆண்டிற்குள் சென்னையின் கடல்நீர் மட்டம் 7 செ.மீ அளவில் உயரும் அபாயம் உள்ளதாகவும் கடலோரத்தில் 100 மீ. வரையுள்ள பகுதிகளை கடல் உள்வாங்கும் எனவும் கூறப்படுகிறது. தென் சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மெரினா கடற்கரை காந்தி சிலையில் தொடங்கி சிறுசேரி வரை பணிகள் நீண்டுக்கொண்டே போகிறது. அடுத்த 70 அல்லது 80 ஆண்டுகளில் மொத்த மெட்ரோ ரயில் தடப் பகுதிகளும் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக சென்னை மாநாகராட்சியின் காலநிலை மாற்ற செயல்திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் இறுதியில் சென்னையின் கடல் மட்டம் 3 அடி வரை உயரக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சென்னையின் குடிசைப்பகுதிகள் சுமார் 17% அழியக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் டெல்லி அறிவியல் இயக்க தலைவர்களில் ஒருவரான ரகுநந்தன் சென்னையையும் காலநிலை மாற்றத்தையும் இணைத்து தி இந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் பல முக்கியமான விஷயங்கள் கவனப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி சுருக்கமாகக் கூறுகிறேன். அதற்கு முன் ஒரு முக்கியமான விஷயம். காலநிலை மாற்றமும் புவி வெப்பமாதலும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தவை. அதே நேரம் இரண்டும் ஒன்று கிடையாது. காலநிலை மாற்றம் நடைபெறுவதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் புவி வெப்பமாதல் முதன்மைக் காரணம். அதன் தொடர்ச்சியாக வேறு பல காரணங்களும் இருக்கின்றன.
கிராமப்புற பகுதியைவிட நகர்ப்புற பகுதியில் புவி வெப்பம் அதிகம் உணரப்படும். காரணம் நகர்ப்புற பகுதிகளில் போதிய மரங்கள் இல்லை. முழுக்க முழுக்க காங்கிரீட் வீடுகள், கட்டிடங்கள்தான் அதிகம் நிரம்பியுள்ளன. இந்த காங்கிரீட் கட்டிடங்கள் பகலில் வெப்பத்தை உள்வாங்கி சூரியன் மறைந்த பிறகு வெப்பத்தை வெளிவிடும். இதற்கு நகர்புற வெப்பத்தீவு விளைவு (URBAN HEAT ISLAND Effect) என பெயர்.
சென்னையில் கடந்த மாதம் முழுவதும் இரவில் அதிக வெப்பம் உணரப்பட்டது இதற்கு காடுகள், நீர்நிலைகள், தாவரங்கள் குறைந்ததும், குளிர்சாதன பெட்டிகளை அதிகமாகப் பயன்படுத்துவதும்தான் காரணம். குளிர்சாதனப் பெட்டி அறையை மட்டும் குளிர்விக்கும், ஆனால் வெளியில் வெப்பத்தை வெளியிடும். ஒவ்வொரு விளைவுக்கும் அதற்கு சமமான எதிர்விளைவு உண்டு என்பது போல் இதன் செயல்பாடு உள்ளது.

WET BULB TEMPERATURE என்கிற புதிய வார்த்தையின் அர்த்தம் என்னவெனில், சென்னை ஒரு கடற்கரையோர நகரம். மற்ற நகரங்களில் இல்லாத அம்சம் – இங்கே காற்றில் ஈரப்பதம் உண்டு. திருச்சி, டெல்லி போன்ற நகரங்களில் இவ்வாறு இல்லை. பொதுவாக உடலில் வியர்வை வந்தால் உடல் குளிர்ச்சியடையும். ஆனால், WET BULB TEMPERATURE கணக்குப்படி உடல் குளிச்சியடையாது. இந்த வெப்பநிலை அளவின்படி 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை உடல் தாங்கிக்கொள்ளும். அதற்கு மேல் சென்றால் உடலால் தாங்கிக்கொள்ள முடியாது. அந்த வெப்பநிலைகளில் வியர்த்தாலும் உடல் குளிர்ச்சி அடையாது. வெப்பமே அதிகமாகும் கடந்த வாரம் முழுவதும் சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைதான் நிலவியது. இதை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்?
உண்மை வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் என்றால், வெப்பத் தீவு விளைவால் நமது உடல் 44 டிகிரி வெப்பநிலையை உணரும். அதிகமும் கட்டிட தொழிலாளிகள் உள்ளிட்ட சாதாரண மக்கள்தான் இதனால் மோசமாக பாதிப்படைவார்கள். மரணங்கள்கூட நிகழும். அந்த கட்டுரையில் ரகுநந்தன் கூறியுள்ள தகவல்களின்படி இந்தியாவில் சென்னையில்தான் மிக குறைவான பசுமை பரப்பு உள்ளது. அதாவது மரங்கள். மொத்த நிலப்பரப்பில் 12% அளவில்தான் மரங்கள் உள்ளன. ஆனால் பெங்களூருவில் 20% அளவில் மரங்கள் உள்ளன. சிங்கப்பூர் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட 47% மரங்கள் உள்ளன. ஐரோப்பாவில் உள்ள நகரங்களில் 30% மரங்கள் வளர்ந்துள்ளன.
சென்னையில் நீர் நிலைகள், தாவரங்கள் ஆகியவை பெருமளவு அழிக்கப்பட்டுள்ளன. அதனால்தான் வெப்பத்தை உட்கிரகிக்கும் சூழல் இல்லாததால், வெப்பம் மக்களை பாதிக்கிறது. குறிப்பாக ஏழை மக்களை அதிகம் பாதிக்கிறது. கோடை கால ஒட்டுமொத்த மின் பயன்பாட்டில் சுமார் 50% குளிர்சாதனப் பெட்டிகள் பயன்படுத்துவதன் மூலம் வீணாகிறது. அதேபோல் சுமார் 60 லட்சம் தனிநபர் வாகனங்கள் சென்னையில் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், வெறும் 4 ஆயிரம் பேருந்துகள்தான் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமான சென்னையில் 4 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவது என்பது மிக குறைவு. அந்த வகையில் அரசே தனிநபர் வாகனங்களை ஊக்குவிக்கிறது, இதில் மாற்றம் வேண்டும்.
காலநிலை மாற்றத்தை அறிவியல்பூர்வமாக புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் தீர்வு முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமாக மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. தமிழக அரசு பெண்களுக்கு பொது போக்குவரத்தான பேருந்தில் இலவச பயணத்தை அறிவித்தது. இது மிக முக்கியமான முயற்சி. புதுகோட்டையில் அறிவொளி இயக்க காலத்தில் பெண்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது. இதில் ஏற்பட்ட சமூக மாற்றம் முக்கியமானது. இது போல் பல செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் வரும் ஆபத்துகளை குறைத்தாக வேண்டும்.
கட்டுரையாளர்

ஆதி வள்ளியப்பன் : இதழாளர், எழுத்தாளர், சூழலியலாளர் இதழாளர், எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், சுற்றுச்சூழல் / சிறார் செயற்பாட்டாளர். இந்து தமிழ் நாளிதழின் தலையங்கப் பக்கம்- இணைப்பிதழ் பிரிவு ஆசிரியர். சுற்றுச்சூழல், அறிவியல், வரலாறு, குழந்தைகள் சார்ந்த எழுத்து, பேச்சு, செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர். காலநிலை மாற்றம் குறித்து தமிழில் கவனப்படுத்தி எழுதிவருபவர்களில் ஒருவர். 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழல், குழந்தைகள் சார்ந்து வெகுஜன இதழ்கள், துறை சார்ந்த இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். நேரடியாகவும் மொழிபெயர்ப்பாகவும் 60-க்கும் மேற்பட்ட நூல்களைத் தந்துள்ளார். ‘சிட்டு’, ‘கொதிக்குதே கொதிக்குதே’, ‘எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள்’, ‘வாவுப் பறவை‘, ‘கிரெட்டா துன்பர்க்’ உள்ளிட்ட சூழலியல் நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமையான கட்டுரை!வாழ்த்துக்கள்
Excellent..Aathi..Congrats..
சிறப்பான கருத்துக்கள்.
இதனை நேர்த்தியாக தொகுத்திருப்பது சிறப்பு.
இருவருக்கும்
வாழ்த்துக்கள்
இந்தப் புள்ளி விபரக் கணக்குகளுக்கு மட்டும் ஒரு குறைச்சலும் இல்லை. ஆனால் உங்களுக்கெல்லாம் ஏசி வேண்டும், கார் வேண்டும், மின்சாரம் வேண்டும், ரயில் வேண்டும், விமானம் வேண்டும், ஆனால் உலகம் மட்டும் குளு குளு என்று குளிர்ச்சியாக இருக்க வேண்டும். அதாவது மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை. எவ்வளவு பேராசையடா உங்களுக்கெல்லாம். இயற்கையின் விதிகள்தான் தெள்ளத் தெளிவாக இருக்கிறதே. “Every action has its own equival and opposite reaction” என்று. அறிவியல் வளர்ச்சியை மட்டும் ஒருபோதும் குறை சொல்லாதே. புலம்பாதே.அது உன் பேச்சுத்திறனைக் காட்டுவதாக இருக்கலாம், ஆனால் ஒரு ‘தயிரு’க்கும் பயன்படாது. அறிவியலில்தான் இதற்கும் தீர்வு உண்டு. விஞ்ஞானிகள், பல்வேறு துறை நிபுணர்கள் கொண்ட குழுவைக் கூட்டித்தான் இதற்கும் தீர்வு கண்டாக வேண்டும். இது எதிர் கருத்தாக இருப்பதால் இதை ஒருபோதும் நீக்கக் கூடாது.
காலநிலை மாற்றமும் சென்னையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் எழுத்தாளர்/பேச்சாளர் பேசிய பேச்சு மிக அருமை. தொகுத்த ஆசிரியருக்கும் மிக்க நன்றி… தொகுப்பில் பல்வேறு நகரங்களில் மரங்கள் நட்டு வளர்த்திருப்பதை சுட்டிகாட்டியிருக்கிறார்கள். நாம் சென்னையில் என்ன செய்தோம்.. போர்க்கால அடிப்படையில் வெப்பத்தை குறைக்க புதைபடிம எரிபொருளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வார விடுமுறை நாட்களில் யாரும் தங்கள் சொந்த வாகனத்தை எடுத்துச் செல்லக் கூடாது. பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்.. மிதிவண்டியில் செல்லலாம். எந்த வாகனத்தை ஓட்டினாலும் தூசி கட்டாயம் எழும்பும் .ஆகவே ஒரு மாதத்தில் “தூசி இல்லா ஊர்” அல்லது “இன்று எங்கள் பகுதி தூசி இல்லா நாள்” என மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தூசி இல்லா நாளை கடைபிடிக்க நாம் அனைவரும் இணைந்து செய்யலாம். நிச்சயம் நம்மால் முடியும். கடினமான ஒன்றை மக்களுக்கு தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சாதிக்க முடியும் .தூசி இல்லாத நாள் அல்லது புதைபடிம எரிப்பொருள் பயன்படுத்தாத நாள் என்பதை தமிழகத்தின் எல்லா நகரத்திலும் செய்யலாம். ஊராட்சி, பேருராட்சி, நகராட்சி மற்றும் மாநகரட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றி ஒவ்வொரு வார்டு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளில் செய்ய முயல வேண்டும்.
Pingback: காலநிலை மாற்ற சிக்கலுக்கு மக்கள் தொகை பெருக்கம் தான் காரணமா? - த.வி. வெங்கடேஸ்வரன் - Book Day