ஏப்ரல் 22ஆம் தேதியை புவி தினமாகக் கொண்டாடுகிறோம். அன்று அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் பருவநிலை மாற்றம் குறித்த ஒரு உச்சி மாநாட்டை நடத்தினார். இது அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றும் முன்னாள் அதிபர் டிரம்ப் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் கைவிட்டதுமாகும். பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளும் அதிக பசுமை வாயுக்கள் உமிழ்வு கொண்ட நாடுகளான சீனா, ரசியா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளுமாக 40நாடுகள் இதில் கலந்து கொண்டன.

போன மச்சான் திரும்பி வந்தான்

அமெரிக்கா பருவநிலை மாறுதல் குறித்த ஒப்பந்தங்களிலிருந்து வெளியேறுவதும் மீண்டும் உள்ளே வருவதும் புதிதல்ல. 2001இல் ஜார்ஜ்.டபிள்யு.புஷ் வெளியேறினார். 2016 பாரிஸ் ஒப்பந்தத்திற்கு போகும் வழியில் 2009இல் கோபென்ஹேகனில் நுழைந்தது. ஒவ்வொரு முறை அமெரிக்கா வெளியேறும் போதும் மீண்டும் உள்ளே வரும் போதும் துக்கமும் மகிழ்ச்சியும் வருகிறது. ஏனெனில் அமெரிக்கா வெளியேறும்போது சர்வதேச உமிழ்வு குறைப்பு இலக்குகளில் பெரும் இடைவெளி ஏற்படுகிறது. மேலும் ஐநா சபை உறுப்பினர் என்கிற முறையில் உலகளாவிய பேச்சு வார்த்தைகளில் அது பெரும் தாக்கத்தை செலுத்துகிறது. மீண்டும் உள்ளே வரும்போது அடங்காத பையன் திரும்பி விட்டான் என்கிற நிம்மதியும் உண்டாகிறது. ஆனால் அது நீடிப்பதில்லை. ஏனெனில் இலக்குகளில் பின் தங்கியிருந்தாலும் அது தலைமையிடத்தை கைப்பற்றிக் கொள்கிறது.

பருவநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடு சபையின் மாநாட்டு கட்டமைப்புக்குள் (the United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) அமெரிக்கா மீண்டும் வந்தபின் நடைபெறும் மாநாடு என்பதாலும் அதிகாரபூர்வ கிளாஸ்கோ மாநாடு கொரோனா தொற்றினால் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாலும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆரவார அறிவிப்பு

எதிர்பாரத்தபடியே இந்த மாநாட்டில் அமெரிக்கா சில அறிவிப்புகளை செய்தது. இதற்கு முன் 2005 ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 2025ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வை 26-28% குறைப்பதாக சொல்லியிருந்தது. இப்பொழுது அதை மாற்றி 2030ஆம் ஆண்டிற்குள் 50-52%குறைப்பதாகவும் 2050ஆம் ஆண்டிற்குள் நிகர உமிழ்வை சீரோ(0) ஆக குறைப்பதாகவும் கூறியுள்ளது. அமெரிக்கா தனது இலக்கை ‘இரட்டிப்பாக்கி’யிருப்பது குறித்து விமர்சகர்கள் மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார்கள். இங்கிலாந்து(UK) பிரதமர் ஒரு படி மேலே போய் இது எல்லாவற்றையும் புரட்டிப் போடும் மாபெரும் செயல் என்கிறார். அமெரிக்கா அறிவித்துள்ள இலக்கு இவர்கள் சொல்வதைப் போல பிரம்மாண்டமும் இல்லை;மற்ற வளர்ச்சியடைந்த நாடுகள் உறுதியளித்துள்ள இலக்கிற்கு அருகில் கூட வரவில்லை.

1.பழைய இலக்கான 2025ஆம் ஆண்டிற்குள் 28% குறைப்பு என்பது 2030க்குள் 38%ஆக மாறியிருக்கும். எனவே இப்பொழுது அறிவித்துள்ள 50-52% என்பது இரட்டிப்பு இல்லை. 10%மே அதிகரித்துள்ளார்கள்.

2.2005இலிருந்து அமெரிக்க உமிழ்வு அளவு ஆண்டிற்கு 1%குறைந்துகொண்டே வந்துள்ளது. அவர்கள் தனியாக எதுவும் செய்யாமலேயே.

3.1990ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால் இன்னும் தீவிரமாக குறைந்துள்ளது.

4.உமிழ்வு குறைப்பு உறுதிமொழிகளிலும் அவற்றை செயல்படுத்துவதிலும் ஐரோப்பிய நாடுகளைவிட அமெரிக்கா மிகவும் பின்தங்கி இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.



புள்ளிவிவர ஜாலங்கள்

பருவ நிலை மாறுதல் குறித்த கியாட்டோ ஒப்பந்தம் அடிப்படை ஆண்டாக 1990ஐ எடுத்துக் கொள்கிறது. இதையே ஐரோப்பிய நாடுகளும் இங்கிலாந்தும் பின்பற்றுகின்றன. ஆனால் அமெரிக்கா 2005ஐ எடுத்துக் கொள்கிறது. இதனால் பல நாடுகள் அமெரிக்காவை பின்பற்றி 2005ஐ அடிப்படையாகக் கொண்டு குறைந்த இலக்குகளையே வைத்துக் கொள்கின்றன.1990ஐ அடிப்படையாகக் கொண்டால் ஒபாமா அரசு பாரிஸ் மாநாட்டில் ஒத்துக்கொண்ட 26-28% குறைப்பு உண்மையில் 9-11% குறைப்பே. இப்பொழுது பைடன் அறிவித்துள்ள 50-52% குறைப்பும் உண்மையில் 33-35% குறைப்பே.

இப்படிப் பார்க்கும்போது அமெரிக்காவின் புதிய இலக்குகள் அப்படி ஒன்றும் சிறப்பானதாக இல்லை. இருந்தாலும் தானம் கொடுத்த மாட்டின் பல்லை பிடித்து பார்க்க வேண்டாம் என்கிற அடிப்படையில் அதை விட்டு விடுவோம்.

நடைமுறைக்கு வருமா?

அமெரிக்க பருவநிலை மாறுதல் திட்டத்தின் ஒரு பகுதியாக புதுப்பிக்கும் சக்தி துறைகளுக்கு $2.8 டிரில்லியன் (ரூ 196 இலட்சம் கோடிகள்) முன்மொழிந்துள்ளது. இது ஒரு பேராவல் திட்டம் என்றே சொல்லலாம். இது அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இன்றைக்கு இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கும் அமெரிக்க அரசியலில் இது நிறைவேறுவது சந்தேகமே. மேலும் மின் வாகனங்கள், சூரிய சக்தி, காற்று சக்தி போன்ற புதுப்பிக்கும் சக்திகளுக்கு ஆதரவு என்று கூறினாலும் நிலக்கரி,இயற்கை எரிவாயு போன்ற தொழில் துறைகளுக்கு தொடர்ந்து கொள்கை ரீதியாகவும் நிதிரீதியாகவும் ஆதரவு தரப்படுகிறது.. எடுத்துக்காட்டாக கொரோனா தொற்று ஏற்படுத்திய பொருளாதார பின்னடைவுகளை சமாளிக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட நிவாரண திட்டத்தில் புதிதாக 700 எண்ணெய் எடுக்கும் ஆலைகள் அனுமதிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இதன் மூலம் பல ஆண்டுகளுக்கு படிம எண்ணெய் பயன்பாட்டில் சிக்கி புதிப்பிக்கும் ஆற்றல் துறைகள் மூலம் கிடைக்கும் சுற்று சூழல் பயன்கள் பிரயோசனமில்லாமல் ஆகிவிடும்.

பருவநிலை மாற்ற திட்டத்திற்காக வளரும் நாடுகளுக்கு செய்யும் நிதி உதவியையும் 2024ஆம் ஆண்டிற்குள் ஒபாமா ஒதுக்கீடை விட இரு மடங்கு அதிகரிப்பதாக பைடன் அரசு அறிவித்துள்ளது. புதிய திட்டங்களை ஏற்பதற்கான நிதி உதவியையும் மூன்று மடங்கு அதிகரிப்பதாக கூறியுள்ளது. இவை எல்லாமே அமெரிக்க பாராளுமன்ற ஒப்பதலுக்கு உட்பட்டது.

மற்ற நாடுகளின் நிலைபாடுகள்

பல வளரும் நாடுகள் இந்த மாநாட்டிலும் அதற்கு முன்னாலும் உயர்த்தப்பட்ட இலக்குகளை அறிவித்தன. இலக்குகளை நிறைவேற்றாத சில நாடுகள் அமெரிக்காவின் கூட்டாளிகள் என்பதால் அதன் அழுத்தத்தினால் இவ்வாறு செய்தன என்பது தெளிவு.

ஜப்பான் 2013ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஏற்கனவே அறிவித்திருந்த 26%குறைப்பு இலக்கை உயர்த்தி 2030க்குள் தனது உமிழ்வை 46%ஆக குறைப்பதாக உறுதியளித்தது. 50%ஆக குறைக்க முயற்சி செய்வதாகவும் கூறியது. 46% குறைப்பும் அல்லது 50% குறைப்பும் சரி, ஜப்பான் போன்ற பொருளாதார வல்லரசிற்கு அதுவும் அமெரிக்கா மற்றும் சில கூட்டணி நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள 2005ஆம் ஆண்டு கூட இல்லாமல் 2013என்ற அடிப்படை ஆண்டை வைத்திருப்பதால் மிகவும் குறைவானதே. ஜப்பானின் ஆற்றல் திட்டங்களில் புதிப்பிக்கும் சக்திகள் 22-24%ம் ,அணுசக்தி 20-22%ம் மீதிப் பெரும் பங்கு(56%) நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்றவற்றின் மூலமும் உள்ளது என்பதிலிருந்தே உமிழ்வைக் குறைக்கும் இலக்குகள் மிகக் குறைவாக வைக்கப்பட்டுள்ளன என்பது தெரிகிறது. கனடாவின் இலக்கான 40-45% குறைப்பு அதற்கு முன்பு அறிவித்திருந்த பரிதாபமான 30% ஐ ஒப்பிடும்போது பரவாயில்லை என்று தோன்றுகிறது.



பிரேசில்

பருவ நிலை மாற்றத்தை மறுப்பவரும் அமேசான் காட்டை அழிப்பவருமான பிரேசில் நாட்டு அதிபர் போல்சனரோ சர்வதேச விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிவந்தது. அதனால் அவர் இதற்கு முன் 2060 ஆம் ஆண்டிற்குள் நிகர உமிழ்வை சீரோ(0) ஆக குறைப்பதாக கூறியிருந்ததை இப்போது 2050க்குள் அடைவதாக அறிவித்தார். ஆனால் இது சும்மா வரவில்லை. அமேசான் காடுகளை அழிப்பதை 30-40% குறைப்பதற்காக மாதம் ஒரு பில்லியன் டாலர்கள் தர வேண்டும் என்கிற கோரிக்கையுடன் வந்துள்ளது.இல்லாவிட்டால் எந்தவித உமிழ்வுக் குறைப்பும் இயலாது என்கிறது. இந்த நிபந்தனையை பிரேசில் நாட்டு மற்றும் பன்னாட்டு குடியுரிமை அமைப்புகளும் வன்மையாக கண்டித்துள்ளன. இது ஒரு பண பறிப்பு செயல் என்றும் அமேசான் காட்டை அழிக்கும் பிரேசில் அரசு,மரம் வெட்டுபவர்கள், விவசாயிகள் போன்றோருக்கு வெகுமதி அளிக்கும் செயல் என்றும் கருதப்படுகிறது. மேலும் போல்சனரோ அரசின் கைகளில் ஏராளமான பணத்தை அளிக்கும் செயல் இது.

ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்தும்

மாநாட்டிற்கு முந்திய நாள் ஐரோப்பிய ஒன்றியம் பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடி 1990ஆம் ஆண்டை அடிப்படையாக கொண்டு 2030ஆம் ஆண்டிற்குள் குறைந்த பட்சம் 55% குறைப்பதென முடிவு செய்தன. இது இதற்கு முன் அவை ஒப்புக்கொண்டிருந்த அளவான 40%தத்தை விட கூடுதலாகும். அமெரிக்கா ஏற்றுக்கொண்டிருப்பதை விட 15-20% கூடுதல். மேலும் கார்பனை உறிஞ்சிக் கொள்ளும் காடு, புல்வெளிகள், சதுப்பு நிலங்கள் போன்றவற்றில் கூடுதல் முதலீடு செய்வதன் மூலம் 55%குறைப்பிற்கு கூடுதலாக ஏழு சதம் குறைப்பிற்கு இட்டு செல்லும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்துவிட்ட இங்கிலாந்து பருவநிலை மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன் 1990ஆம் ஆண்டை அடிப்படையாக கொண்டு 2035க்குள் 78% கார்பன் உமிழ்வு குறைப்பு செய்யும் என்று அறிவித்தது.

சீரோ(0) நிகர உமிழ்வு – புதிய தாரக மந்திரம்

நிகர உமிழ்வு சீரோ(0) என்பது புவியெங்கும் வெளியிடப்படும் பசுமைக் குடில் வாயுக்களின் அளவு அவற்றை இயற்கை தளங்கள் உறிஞ்சும் அளவுக்கு சமமாக இருப்பதாகும். இந்த இலக்கை 2050ஆம் ஆண்டிற்குள் அடைவது என்பது புதிய தாரக மந்திரமாக உள்ளது. இதன் பொருள் ஒவ்வொரு நாடும் சீரோ(0) நிகர உமிழ்வு இலக்கை 2050க்குள் அடைய உறுதி செய்யவேண்டும் என்று தவறாக வியாக்கியானம் செய்யப்படுகிறது. இந்த தவறை ஐநா சபையின் பொதுச் செயாலாளர் முதற்கொண்டு சுற்று சூழல் செயற்பாட்டாளர்கள் வரை செய்கிறார்கள்.இது முற்றிலும் தவறானதாகும். மேலும் வெவ்வேறு வகைப்பட்ட பொது பொறுப்புகள்(common but differential responsibilities (CBDR) என்கிற கொள்கைக்கு முரணானதாகும்.

சராசரி புவி வெப்ப உயர்வை 2டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு கீழ் குறைப்பதற்கு 2050ஆம் ஆண்டிற்குள் நிகர உமிழ்வு சீரோ(0) என்ற இலக்கு அவசியமான ஒன்று என்பது ஐபிசிசி (நாடுகளுக்கிடையேயான பருவ நிலைக் குழு)யின் பரிந்துரையாகும். இதற்கான சிபிடிஆர் கொள்கையின் உட்பொருள் வளர்ந்த நாடுகள் 2050க்குள் சீரோ உமிழ்வைவிட அதிக குறைப்பு செய்யவேண்டும். வளரும் நாடுகள் சீரோ உமிழ்வை அடைய சற்று அதிக காலம் பிடிக்கும். இரண்டையும் சேர்க்கும்போது நிகர உமிழ்வு சீரோ ஆக இருக்கும். ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற வளர்ந்த நாடுகள் தாங்கள் 2050க்குள் சீரோ உமிழ்வை அடைந்தால் போதும் என்று உலக நாடுகளை தவறாக வழி நடத்துகின்றன.

இதில் இன்னொரு சூட்சுமமும் உள்ளது. ‘2050க்குள் சீரோ நிகர உமிழ்வு’ என்பது நீண்ட கால திட்டம். இதை வாக்குறுதியாக அளிப்பது எளிது. கண்காணிப்பது கடினம்.தேர்தல் வாக்குறுதி போல கவர்ச்சிகரமானது. ஆனால் உண்மையில் இதை அடைவதற்கான குறுகிய கால இலக்குகளையும் வழிமுறைகளையும் தெளிவாக சொல்லாமல் பொறுப்புகளை தட்டிக் கழிக்கின்ற செயலாகும்.

இந்த இடத்தில் ஜெர்மனி நாட்டின் உயர்ந்த அரசியல் சாசன நீதிமன்றம் நீண்ட கால திட்டங்கள் சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவை தலைமுறை சமுத்துவத்தையும் இளைய தலைமுறையினரின் உரிமைகளையும் மீறுவதாகும் என்று கூறியுள்ளது. 2030க்குள் அடைய வேண்டிய இலக்கை இன்னும் முன்னதாக மாற்றி அமைக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கும் ஜெர்மனியில் 2022- 2050 ஆண்டு காலத்தில் அடைய வேண்டிய இலக்குகளுக்கு ஆண்டு தோறும் செய்ய வேண்டிய குறைப்புகளை அறிவிக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது.

இங்கிலாந்தில் பருவநிலை ஆலோசகரின் பரிந்துரையை ஏற்று ஐந்தாண்டு உமிழ்வுக் குறைப்பு இலக்குகள் அறிவிக்கப்பட வேண்டும்.இவை ஆண்டு தோறும் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.



இந்தியாவும் சீனாவும்

இந்தியாவும் சீனாவும் பாரிஸ் ஒப்பந்தத்தில் ஒத்துக்கொண்டதற்கு மேல் எந்த உறுதியையும் அளிக்க முடியாது என்ற நிலைப்பாட்டினை எடுத்திருப்பது சரியானதே. சீனா 2005ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட இலக்கான 2030க்குள் 60-65% குறைப்பு என்பதை 65%க்கு மேல் என உயர்த்தி அறிவித்தது. அமெரிக்க மாநாட்டிலிருந்து பிரித்துக் காட்டுவதற்காக இதை மாநாட்டிற்கு சற்று முன்னர் அறிவித்தது. மேலும் 2030க்குள் சூரிய ஒளி மற்றும் காற்று சக்திகள் மூலம் கிடைப்பதை 1200கிகாவாட்டாக உயர்த்துவது எனவும் முடிவெடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் சீனா தனது உமிழ்வின் உச்ச பட்சத்தை 2025-2030 காலத்தில் எட்ட இயலும்.

இந்தியா எப்பொழுது உமிழ்வின் உச்சபட்சத்தை அடையும் என்று சரியான மதிப்பீடுகளை இன்றுள்ள வளர்ச்சி நிலையில் கூற இயலாது. கூறுமாறு வற்புறுத்தவும் கூடாது. மாநாட்டிற்கு முன்பாக இந்தியா சூரிய சக்தி மற்றும் காற்று சக்திகள் மூலம் கிடைக்கும் ஆற்றலை 2022ஆம் ஆண்டிற்குள் 100கிகா வாட்டாக உயர்த்துவது என்ற இலக்கை 2030க்குள் 450கிகா வாட்டாக உயர்த்துவது என்று மாற்றி அறிவித்தது. கோட்பாட்டு ரீதியாக இதை ஒரு பேராவல் இலக்கு என்று கருத முடியாது. ஆனால் 100கிகா வாட்டை எட்டுவதிலேயே முதலீட்டுப் பிரச்சினைகளும் இணைப்பு தடைகளும் உள்ளன.

இந்திய அமெரிக்க ஒப்பந்தம்

இந்தியா அமெரிக்கா இடையே ‘பருவநிலை மற்றும் தூய ஆற்றல் திட்டம் 2030’ எனும் புதிய ஒப்பந்தம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையே பிரதமர் மோடி பருவநிலை மாநாட்டில் பெரிதாக தம்பட்டம் அடித்தார்.இந்த ஒப்பந்தத்தில் 2030க்குள் 450கிகா வாட் எனும் இலக்கு முதன்மை படுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளும் இதற்கான தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகியவை நோக்கி செயல்படும் என்றும் தொழில்துறை, போக்குவரத்து, கட்டிடங்கள் ஆகியவற்றில் கார்பன் நீக்கம்(decarbonaisation) அமுல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைப்பும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இவைகளுக்கான குறிப்பான தகவல்கள் இல்லை என்பதால் விவரங்கள் வெளிவர நம் மாதக்கணக்கிலோ வருடக்கணக்கிலோ காத்திருக்க வேண்டும்.

ஆனால் பருவநிலை மாற்றத்தில் அமெரிக்க முந்தானையை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதிலிருந்து இந்தியா விடுபட வேண்டும். இந்த ஒப்பந்தமானது அமெரிக்க மற்றும் பிற வளர்ந்த நாடுகளின் அழுத்தத்தை சமாளிக்க உதவும் குறுகிய கால உத்தியாக தோன்றலாம்.;ஆனால் இடைக்கால வெளியில் இந்திய நலனுக்கும் சுயாட்சிக்கும் எதிராக போகக்கூடும்.

இந்திய அரசியல் சூழலில் சுற்று சூழல் பாதுகாக்கப்படுமா?

பன்னாட்டு உறவுகளிலும் வியூகங்களிலும் இந்தியா ஏற்கனவே அமெரிக்காவுடன் நெருக்கமாக இணைத்துக் கொண்டுள்ளது. இதனால் அதற்கு மிகக் குறைந்த கூட்டாளிகளே உள்ளனர். மேலும் சுயேச்சையாக முடிவெடுக்கவும் முடிவதில்லை. இப்போது கொரோனா பெருந்தொற்றில் இந்தியா பெரும் தோல்வி அடைந்துள்ளது.இதன் மூலம் இந்தியாவின் மிகப் பலவீனமான சுகாதார மற்ற பிற கட்டமைப்புகள் அம்பலப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நிய முதலீடு மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த காரணிகளால் உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டில் பருவ நிலை மாற்றத்தில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பில்லாமல் உள்ளது. ஆனால் பருவநிலை மாற்றம் விவசாயத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், கடல்மட்டம் உயர்வு, முக்கிய கடல்கரையோர நகரங்களுக்குள்ள ஆபத்துகள்,காலநிலை மாற்றத்தால் பெரும் மழைப் பொழிவும் அதனால் நகர்ப்புற வெள்ளப் பெருக்கும் ஆகிய பிரச்சினைகள் காத்திருக்கின்றன.உண்மையில் இந்த அரசின் கடந்த கால சார்புத் தன்மைகளை வைத்துப் பார்க்கும்போது கடினமான சர்வ தேச நிதிச் சூழலில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேலும் சுற்று சூழல் தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி தோழர் ரகு அவர்களது கட்டுரையின் தமிழாக்கம்)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *