கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு முடிந்து 5 ஆண்டுகளுக்கு பின், 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, கல்கத்தாவில் இரண்டாவது மாநாடு தொடங்கியது. அப்போது இந்தியா விடுதலை பெற்று சில மாதங்களே ஆகியிருந்தன.
உலக அரங்கில் பாசிச சக்திகளை வீழ்த்துவதில் சோசலிச சோவியத் ஒன்றியம் முக்கியமான பங்கினை ஆற்றியது. ‘மக்கள் யுத்தம்’ பற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பீடு சரியானது என்பதை காலம் நிரூபித்தது. மேலும், கட்சி எதிர்பார்த்ததை போலவே உலகில் ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு செலுத்தும் காலனி ஆதிக்க முறை முடிவுக்கு வருவதற்கும் அது வழிவகுத்தது.
இரண்டாம் உலகப்போர் காலத்தில், இந்தியாவில் நடந்த வரம்பற்ற ஏகாதிபத்திய சுரண்டல் மக்களை பஞ்சத்தில் தள்ளியது. அதற்கு எதிராக, மக்களோடு துணையாக கம்யூனிஸ்ட் கட்சி நின்றது. 1946 ஆம் ஆண்டில் ‘இறுதி தாக்குதலுக்கான’ தீர்மானத்தை கட்சி நிறைவேற்றியது. அதனைத் தொடர்ந்து தெபாகா போராட்டம், தெலங்கானா போராட்டம் (1946-1951), புன்னப்புரா-வயலார் போராட்டம், பீகார் – உ.பி மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம், அசாம் பழங்குடியினரின் ஆயுதமேந்திய தற்காப்புப் போர் ஆகியவை எழுச்சிகளாக வெடித்தன. இவைகளில் பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு அஞ்சாமல் வீரச் சமர் புரிந்தார்கள் கம்யூனிஸ்டுகள்.
கப்பற்படை எழுச்சிக்கு ஆதரவாகவும், இந்திய தேசிய ராணுவத்தினர் விடுதலையைக் கோரியும் மக்கள் எழுந்து அலையடித்தன.
விடுதலை பற்றிய மதிப்பீடு:
மேற்சொன்ன பின்னணியிலேயே இந்திய விடுதலை சாத்தியமானது. ஆனால், ஏகாதிபத்தியத்துடனான சமரசத்தின் விளைவாக இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை நிகழ்த்தி முடிக்கப்பட்டது. (பிரிவினையின் போது, வகுப்புவாத சக்திகளின் கலவர முயற்சிகளை தடுப்பதில் கம்யூனிஸ்ட் கட்சி முன் நின்றது).
இந்தியா பெற்ற விடுதலையை எப்படி மதிப்பிடுவது? ஆள்வது யார்? ஆளப்படுவது யார்? இனி கம்யூனிஸ்டுகளின் கடமை என்ன? என்ற கேள்விகள் இயல்பாக எழுந்தன.
கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு இதனை விவாதித்து, “நாட்டின் சுதந்திரம் ஒரு யதார்த்தமான நிலையாகி விட்டதால் கட்சி தன் சக்தி முழுமையையும் செலுத்தி, மக்களின் கோரிக்கைகள் நிறைவேறிட சுதந்திரத்தைப் பயன்படுத்த முயல வேண்டும்” என்ற முடிவிற்கு வந்தது என்பதை சுட்டிக்காட்டும் இ.எம்.எஸ். கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஒரு வலுவான பிரிவு இந்த முடிவில் இருந்து மாறுபட்டதையும் குறிப்பிடுகிறார்.
“இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது உண்மையான சுதந்திரம் அல்ல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் அதிகாரப்பூர்வமாக ஆட்சியதிகாரத்தைக் கைவிட்டாலும் கூட நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளின் உதவியோடு மறைமுகமாக ஆட்சியில் நீடிக்கவே செய்கிறார்கள்” என்று மதிப்பீடு செய்ததுடன், “புதிய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி தொலைநோக்குடன் ஒரு புரட்சிகர சக்தியாக கட்சி செயல்பட வேண்டும்” என்று அவர்கள் வாதிட்டார்கள். இந்த கருத்துக்கள் கட்சிக்குள் மோதிக்கொண்டன.
மேலும் தெலங்கானாவில் கம்யூனிஸ்டுகளில் தலைமையில் நடந்துவந்த எழுச்சியில், 2 ஆயிரம் கொரில்லா வீரர்களும், 10 ஆயிரம் தன்னார்வளர்களும் 3 ஆயிரம் கிராமங்களை கைப்பற்றி நிர்வகித்துவந்தார்கள். அங்கே 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் மக்களிடம் மறுவினியாகம் செய்யப்பட்டன. இப்படியான சூழலில், அதுவரை ஹைதராபாத் நிஜாமின் ஆளுகையில் இருந்த அந்த பகுதிகளில் 1948 ஆம் ஆண்டில் இந்திய ராணுவம் நுழைந்து, தனது ஆளுகையில் எடுத்துக் கொண்டதும் இந்த காலத்தில் நடைபெற்ற ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
உலக நிலைமைகளில் மாற்றம்:
உலகப்போர் முடிந்தவுடனே, சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக கெடுபிடிகளை உருவாக்கி முன்னெடுத்தது (பனிப்போர்) அமெரிக்கா. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த போக்கிற்கு எதிரான சோசலிச நாடுகள் உறுதியான நிலையை எடுத்தார்கள். ஆனால் உலக கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிலர் இதில் மாறுபட்டார்கள். பாசிச எதிர்ப்பு போரில் ஏற்பட்ட ஒற்றுமையை தொடர்வதற்காக நெளிவு சுழிவாக இயங்கவேண்டும் என்றார்கள். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏர்ல் பிரௌடர் அங்கு கட்சியைக் கலைத்து விடவும் முடிவு செய்தார்.
இப்படியான திருத்தல்வாத போக்கின் தாக்கம் இந்தியாவிலும் இருந்தது. (1943 ஆம் ஆண்டிலேயே கம்யூனிஸ்ட் அகிலம் கலைக்கப்பட்டுவிட்டது என்பதால் தத்துவார்த்த குழப்பங்களை தீர்ப்பதற்கான வாய்ப்புகள் அருகியிருந்தன).
கட்சிக்குள் அதிரடியான மாற்றங்கள்:
மேற்சொன்ன சூழல்கள் கட்சியின் இரண்டாவது மாநாட்டில் எதிரொலித்தன. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பி.சி.ஜோசி, திருத்தல்வாத போக்கின் பிரதிநிதி என்ற விமர்சனத்திற்கு ஆளானார். அது தொடர்பான தீர்மானத்தை பி.டி.ரணதிவே முன்மொழிந்தார். பாகிஸ்தான் தொடர்பாக ஒரு தீர்மானத்தை பவானி சென் முன்மொழிந்தார். மாநாட்டின் முடிவில் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், மத்தியக் குழுவிலும் இருந்தும் ஜோசி நீக்கப்பட்டார். பி.டி. ரணதிவே பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் நிரந்தர எதிரிநாடுகளாக இருக்க வேண்டும் என்பதுதான் ஏகாதிபத்தியத்தின் விருப்பம் என்பதை அந்த மாநாடு சுட்டிக்காட்டியது.
குழப்பங்களின் ஆண்டுகள்:
ஆனால், கட்சியின் இரண்டாவது மாநாட்டில் தேர்வான மத்தியக்குழு, அடுத்த 2 ஆண்டுகளுக்கு கூடவே இல்லை. அரசியல் தலைமைக்குழு ஒருமுறை மட்டுமே கூடியது. அந்த மத்தியக்குழுவின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. எனவே, மத்தியக் குழுவின் முழுமையான சிறப்புக்கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் கட்சி தன்னை சுய விமர்சனம் செய்துகொண்டதுடன் பி.டி.ரணதிவே பொதுச் செயலாளர் பதவியிலிருந்து மாற்றப்பட்டதுடன், இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரின் செயல்பாடுகளை பரிசீலிக்க ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது.
தெலுங்கானா போராட்டத்தின் ஒரு முன்னணி தலைவரான சி.ராஜேஸ்வரராவ் பொதுச் செயலாளராகவும் பி.சுந்தரய்யா, எம். பசவபுன்னையா மற்றும் ஆந்திராவின் வேறு சில தோழர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு புதிய மத்திய குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த மத்திய குழு ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்க முடியவில்லை. பி.டி.ஆர்., தலைமை போன்றே இந்த தலைமையும் தனிக் குழுவாதத்தன்மை கொண்டதாக விமர்சனத்திற்கு ஆளானது.
பிறகு, மேற்சொன்ன இரண்டுவிதமான போக்குகளுக்கு எதிராக ஒரு புதிய மத்தியக் குழுவும், அரசியல் தலைமைக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதன் செயற்குழு அமைப்பாளராக அஜாய் கோஷ் முடிவுசெய்யப்பட்டார் என்கிறார் இ.எம்.எஸ்.
சோவியத் ரஷ்யாவின் உதவி:
விடுதலை பெற்ற இந்தியாவிற்கு, சோவியத் ரஷ்யாவின் உதவி தேவைப்பட்டது. அதைப் போலவே, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட தத்துவார்த்த சிக்கலை தீர்க்கவும் சோவியத் கம்யூனிஸ்டுகள் கைகொடுத்தார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர்கள் அஜாய் கோஷ், எஸ்.ஏ. டாங்கே, பசவபுன்னையா, ராஜேஸ்வரராவ் ஆகியோர், ஸ்டாலின் தலைமையிலான சோவிய ரஷ்யாவின் பிரதிநிதிகள் குழுவை, அங்கு சென்று சந்தித்தார்கள். உரையாடினார்கள்.
இந்த சந்திப்பில், கம்யூனிஸ்ட் கட்சிக்கென்று ஒரு திட்ட ஆவணமும், கொள்கை அறிக்கையும் உருவாக்குவது அவசியம் என்று முடிவானது. அதற்கான உதவியை செய்த சோவியத் ஒன்றியம், இந்த ஆவணங்களை உருவாக்குவதற்கான மார்க்சிய – லெனினிய அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கு தெளிவு உண்டு ஆனால் இந்தியாவின் கள நிலைமைகள் குறித்த தகவல்கள் எங்களிடம் இல்லை. எனவே இந்த ஆவணங்கள், இந்தியாவில் கம்யூனிஸ்டுகளால் விவாதிக்கப்பட்டு திருத்தவோ, ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
எதிர்க் கட்சியானது கம்யூனிஸ்ட் கட்சி:
அந்த ஆவணங்கள் விவாதிக்கப்பட்டு திருத்தங்களோடு ஏற்கப்பட்டன. எனினும், கட்சிக்குள் வீசிக்கொண்டிருந்த புயல் சாதாரணமாக அடங்கவில்லை. அந்த குழப்பம் நடைமுறை பணிகளோடு சேர்த்து நீண்டகால இலக்கான சோசலிசத்தை எவ்வாறு எட்டுவது என்ற பாதையை தீர்மானிப்பதிலேயே பாதிப்பை ஏற்படுத்தியது.
மறுபக்கம், மக்களிடையே செல்வாக்கு அதிகரித்தது. விடுதலைக்கு முன்பே கட்சியால் தலைமைதாங்கப்பட்ட அடுக்கடுக்கான போராட்டங்களும், அளப்பரிய தியாகங்களும் தனித்துவமான இடத்தை கட்சிக்கு ஏற்படுத்தின. மற்ற எல்லா எதிர்க் கட்சிகளும், நாடாளுமன்றத்துடன் தங்கள் பணிகளை நிறுத்திக்கொண்டார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் இயக்கம் மக்களோடு நின்றது.
வீரம் செறிந்த போராட்டங்களை வழிநடத்திக் கொண்டேதான் தலைவர்கள் இந்த தத்துவார்த்த போராட்டத்தையும் முன்னெடுத்தார்கள். இந்த பின்னணியை விவரித்து எழுதும் தோழர் இ.எம்.எஸ் கூட மாநாடுகளில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்ததையும். பிறகு கூட்டான முடிவுகளுக்கு வந்து சேர்ந்ததையும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
முந்தைய தொடர்களை வாசிக்க :
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 2 : தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.