Co-leadership of the Communist Movement (Anti-fascism and national racial rights) Web series 3 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும்) 3

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்




(முதல் அகில இந்திய மாநாடு)

கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளுக்கு அடிப்படையாக அமைந்த ‘திட்ட ஆவணம்’ மற்றும் அவ்வப்போது உருவாக்கப்படவேண்டிய நடைமுறைக் கொள்கை ஆவணங்களை நிறைவேற்றுவது, கட்சியின் மாநாடுகள்தான் என்பதை பார்த்தோம். எனவே, கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டு சூழல் குறித்து இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் வெளிச்சத்தில் பார்ப்போம்.

உலகப்போரும், பாசிச அபாயமும்:
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் அகில இந்திய மாநாடு நடைபெற்றபோது, அதுவரை காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முனைப்புடன் இயங்கிவந்த கம்யூனிஸ்டுகள், சுயேட்சையான அரசியல் சக்தியாக வளரத் தொடங்கியிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மற்றும் பார்வேர்ட் பிளாக் ஆகிய சோசலிஸ்ட் கட்சிகளும் உருவாகியிருந்தன. இரண்டாம் உலகப்போரில், பாசிச அபாயம் உலகையே அச்சுருத்தியது.

இந்த நேரத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திற்கு ஆதரவாக தலைமறைவாக இயங்கியது, பார்வேர்ட் பிளாக் கட்சியோ, பாசிச முகாமின் உதவியைப் பெற்று இந்தியாவை விடுதலை செய்திட முடியுமா என்பதாக இயங்கியது. ஜப்பானின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவமும் உருவாக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ, பாசிச அபாயம் பற்றிய எச்சரிக்கை உணர்வோடு, புரட்சிகரத்தன்மை குன்றாமல் இயங்கியது. எனவே நாட்டில் இருந்த இரண்டு இடதுசாரி கட்சிகளின் போக்கில் இருந்தும் அது மாறுபட்டது. இதனால் ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளிடமிருந்து கம்யூனிஸ்ட் கட்சி தனிமைப்படும் சூழல் உருவானது என்கிறார்’

முதல் மாநாட்டின் விவாதப் பொருள்:
பம்பாயில் நடைபெற்ற முதல் அகில இந்திய மாநாடு இந்த பின்னணியில்தான் நடந்தது. அந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட அணுகுமுறை “ராய் கோஷ்டியைப் போன்று பிரிட்டிஷ் அரசை ஆதரிப்பதாக இருக்கவில்லை. மாறாக, பாசிச எதிர்ப்பு போருக்கு ஆதரவாக இந்திய மக்களைத் திரட்ட வேண்டுமானால், நாட்டிற்கு சுதந்திரம் அளிக்க பிரிட்டிஷ் அரசு ஒப்புக் கொண்டால்தான் அது சாத்தியம் என கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாகத் தெரிவித்தது. அதற்காக தேசிய இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர்களுடன் பிரிட்டிஷ் அரசு பேச்சு வார்த்தைகளைத் துவக்க வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது.” என்கிறார் இ.எம்.எஸ்.

ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியோ, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டுவந்த காங்கிரஸ் தலைவர்களை கைது செய்தது. கைது நடவடிக்கைகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி முன்நின்றது. சிறைகளில் இருந்து தேசிய தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றது.

அடிப்படை என்ன?
“பாசிச எதிர்ப்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உலக நிலைமையைப் பயன்படுத்தி, இந்திய சுதந்திரத்தை அடையும் நோக்கத்துடன் புரட்சிகரமான முறையில் இந்திய மக்களை திரட்டுவது” கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட அணுகுமுறையாகும். கட்சியின் முதல் மாநாடு மேற்கொண்ட இந்த அணுகுமுறையில் இருந்து காங்கிரசின் அணுகுமுறை வேறுபட்டதாக அமைந்தது. ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தைத் துவக்கிய காங்கிரஸ் தலைமை, இதன் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் விதத்தில் நிர்ப்பந்தம் தரவே விரும்பினார்கள்.

மூன்று கட்டங்கள்:
உலகப் போர் தொடங்கும்போது, அது இருவேறு ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான போராக இருந்தது. இந்த சூழலை பயன்படுத்தி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு பேரம் பேசுவதல்ல மாறாக பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்கள் இயக்கத்தை கட்டமைக்க வேண்டும் என்பது கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட நிலைப்பாடு.

1941 ஆம் ஆண்டு காலத்தில், நாஜி ஜெர்மனியானது சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. சோசலிச நாடுகளும், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் இணைந்து பாசிசத்தினை வீழ்த்துவதற்கான போரை முன்னெடுத்தார்கள். எனவே, அது மக்கள் யுத்தம் என்ற தன்மையை அடைந்தது. இப்படிப்பட்ட சூழலிலும், மக்கள் இயக்கத்தை கட்ட வேண்டும் என்ற கம்யூனிஸ்டுகளின் அடிப்படை நிலைப்பாடு மாறவில்லை. ஆனால் மக்களின் புரட்சிகர ஆற்றலைத் தட்டியெழுப்ப வேண்டுமானால் சோவியத் யூனியனும் சீனாவும் அங்கம் வகித்த பாசிச எதிர்ப்பு முகாமின் வெற்றி அவசியம். அந்த புரிதலுடன் மக்களை அணி திரட்டியாக வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் வலியுறுத்தினர்.

மூன்றாவது கட்டத்தில், இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பிறகு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. காங்கிரஸ் கட்சியுடன் முஸ்லிம் லீக் பேசியது. இந்த நடைமுறைகளின் விளைவாக, இந்தியப் பிரிவினைக்கான உடன்பாடே ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் இயக்கமோ பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் ஒரு பேரத்திற்குச் செல்வதற்கு மாறாக மக்களைத் திரட்டும் புரட்சிகரப் போராட்டத்திற்கான திட்டத்தை முன்வைத்தது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொலைநோக்கு இயக்கங்களின் பலனாக, நாடு தழுவிய வேலை நிறுத்தங்களும் விவசாயிகள் போராட்டங்களும் அனைத்துப் பிரிவு மக்களின் போராட்டங்களும் வெடித்தன. அவற்றின் உச்சகட்டமாக தெலுங்கானா, புன்னப்பரா-வயலார் போன்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த போராட்டங்கள் நடந்தன.

மேலே சொன்ன மூன்று கட்டங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த தொழிலாளி வர்க்க புரட்சிகர) அணுகுமுறைக்கும், காங்கிரசின் முதலாளித்துவ (பேரம் பேசும்) அணுகுமுறைக்கு இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரசின் முதலாளித்துவ அணுகுமுறைக்கு ஒரு தற்காலிக வெற்றி கிடைத்தது என்றாலும், இறுதி வெற்றி கம்யூனிஸ்டுகளின் தொழிலாளி வர்க்க அணுகுமுறைக்கே கிடைத்தது.

நடைமுறை பிழைகள்:
கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு எடுத்த நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்கும் தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட், அந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தும்போது சில தவறுகள் நேர்ந்தன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த தவறுகளின் காரணமாக ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளிடமிருந்து கட்சி தற்காலிகமாகத் தனிமைப்பட்டிருக்க நேர்ந்தது என்கிறார். கட்சியின் இரண்டாவது மாநாடு இதனை சுயவிமர்சனக் கண்ணோட்டத்துடன் பரிசீலித்தது என்கிறார்.

பாசிச சக்திகளை எதிர்ப்பதில், மிகத் தெளிவான பார்வையுடனும், உலகலாவிய ஏகாதிபத்திய இயக்கத்தின் அங்கமாகவும் கம்யூனிஸ்ட் இயக்கம் செயல்பட்டு வருவது இப்போதும் மனதில் நிறுத்தவேண்டியது ஆகும்.

பல தேசங்களின் நாடு:
அதே கட்டுரையில் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் கவனப்படுத்தும் இன்னொரு நிலைப்பாடு, பல தேசிய இனங்களின் நாடாகவே இந்தியா அமைய முடியும் என்பதை பற்றியது.

கட்சியின் முதல் மாநாட்டிலேயே “இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும். ஆனால் அதன் பல தேசிய இனத்தன்மை என்பது மதத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. மொழி மற்றும் கலாச்சார வாழ்வின் அடிப்படையில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தேசிய இனங்களைக்கொண்ட ஒரு நாடு தான் இந்தியா. இந்த யதார்த்த நிலைமையை அங்கீகரித்து சுயாட்சி உரிமை கொண்ட தேசிய இனங்களின் ஒரு புதிய ஜனநாயக (கூட்டமைப்பு) அரசு கட்டப்பட வேண்டும்.” என தெளிவாக எடுத்துரைத்தது.

மேலும் “மாநிலங்களுக்கு விரிவான அதிகாரங்களை அனுமதிக்கிற ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்” என்பதே நமது கட்சியின் முதல் மாநாட்டிலேயே எடுக்கப்பட்ட பெருமைக்குரிய நிலைப்பாடு என்கிறார் இ.எம்.எஸ்.

சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த முதல் பொதுத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறியது. நாடாளுமன்றத்திலும் நான்கு மாநில சட்டமன்றங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி பிரதான எதிர்க்கட்சி என்ற நிலைக்கு உயர்ந்தது. ஐந்து ஆண்டுகள் கழித்து, ஒரு மாநிலத்தின் (கேரளம்) ஆளும் கட்சி என்ற நிலையை எட்டியது அதே போல சோசலிச முகாமை பாதுகாப்பது, அவசியம் என்ற கருத்தும், இந்தியாவின் முதல் அரசாங்கத்திற்கு சோசலிச நாடுகளே உற்ற நண்பராக இருந்தது என்ற உண்மையின் மூலம் நிரூபனமானது.

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 2 : தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் ! – இரா. சிந்தன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *