1953 ஆம் ஆண்டில் மதுரையில் நடந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 வது அகில இந்திய மாநாட்டுக்கு பின், நாட்டின் அரசியல் நிலைமைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த மாற்றங்கள், காங்கிரஸ் கட்சி தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை பற்றிய விவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டுவந்தன.
ஆவடி சோசலிசம்:
அதாவது, அந்த காலகட்டத்தில் இந்திய அரசாங்கம் தனது இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்திருந்தது. அந்த திட்டத்தை அமலாக்குவதற்கு சோவியத் ரஷ்யா உள்ளிட்ட சோசலிச நாடுகள் உதவி செய்தன. எனவே சோசலிச நாடுகளுடன் ஒத்துழைக்கும் போக்கினை வலதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி மேற்கொண்டது நேருவின் அரசாங்கம். மேலும், 1955 ஆம் ஆண்டில் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாடு ‘சோசலிச பாணியே தேசிய லட்சியம்’ என்ற அறிவிப்பையும் மேற்கொண்டது. இவையெல்லாம் காங்கிரஸ் அரசாங்கம் பற்றிய மதிப்பீடு குறித்த விவாதத்தை மீண்டும் எழச்செய்தன.
எனவே, 1956 ஆம் ஆண்டு பாலக்காட்டில் நடந்த, கம்யூனிஸ்ட் கட்சியின் 4 வது அகில இந்திய மாநாட்டிற்கு முன்பாகவே, மத்தியக் குழுவில் பல்வேறு கருத்துக்கள் மோதின. அந்த விவாதங்களுக்கு பின் மாநாட்டில் ஒரே அரசியல் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ஆனால் மாநாட்டில் இந்த தீர்மானத்திற்கு எதிராக புதிய தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது. பி.சி.ஜோசி, ராஜேஸ்வர ராவ், ரவி நாராயண ரெட்டி, எஸ்.எஸ்.யூசுப், பவானி சென், சோம்நாத் லகிரி, கே.தாமோதரன், அவதார் சிங் மல்ஹோத்ரா, ரமேஷ் சந்திரா ஆகியோர் அதில் ஈடுபட்டார்கள். அந்த தீர்மானம் ‘காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஜனநாயக முன்னணி அமைப்பது பொருத்தமானதல்ல’ என்றும் காங்கிரசோடு நெருக்கமான உறவு கொள்ள வலியுறுத்துவதாகவும் அமைந்தது. இவர்களே பிற்காலத்தில் கட்சி பிளவுபட்ட பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக இருந்தார்கள் என்பதும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஆகும்.
நான்காவது மாநாட்டின் விவாதத்தில் பங்கெடுத்த ஒரு பிரதிநிதி ‘காங்கிரஸ் கட்சியோடு ஒத்துழைப்பது என்ற நிலைப்பாட்டைத் தாண்டி, காங்கிரசோடு சேர்ந்து கூட்டணி அரசாங்கம் அமைக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தி பேசினார். ஆளும் வர்க்கங்களுடைய பிரதான கட்சியாக அமைந்த காங்கிரஸ் கட்சியோடு கம்யூனிஸ்டுகள் அணி சேர வேண்டும் என்ற அந்தக் கருத்து மாநாட்டு அரங்கத்தில் கடும் விவாதங்களை உருவாக்கியது. அந்த விவாதத்தின் முடிவில் சரியான நிலைப்பாட்டுக்கு மாநாடு வந்து சேர்ந்தது என்றபோதிலும், மாற்றுக் கருத்துக்கு மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருந்தது என்பதையும் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் பதிவு செய்கிறார்.
அரசியல் தீர்மானம்:
மாநாடு நிறைவேற்றிய அரசியல் தீர்மானத்தில் 6 பகுதிகள் இருந்தன. தேசிய விடுதலையையும், உலக சமாதானத்தையும், ஆசிய நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையையும் இந்தியா உயர்த்திப்பிடிப்பதை அந்த தீர்மானம் அங்கீகரித்தது. அதே சமயத்தில் உள்நாட்டில் அது கடைப்பிடித்த அரசியல், பொருளாதார கொள்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தியது.

அதன்படி நேருவின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம், இந்தியாவின் திட்டமிடல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் என்று மாநாட்டு தீர்மானம் அங்கீகரித்தது. ஆனால் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சனையில் அரசு கடைப்பிடித்த அணுகுமுறை, ஆளும் வர்க்கங்களுக்கே சாதகமாக இருந்ததையும் சுட்டிக்காட்டியது.
நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்மய நடவடிக்கைகள் மிக அவசியம். அதற்கு அடிப்படையாக, நாட்டில் நிலச்சீர்திருத்தம் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், நிலவுடைமையாளர்களிடம் குவிந்திருக்கும் நிலக் குவியல் உடைக்கப்பட்டால்தான் அது சாத்தியம். இந்தியாவின் ஆட்சியாளர்கள், நிலவுடைமையாளர்களுடன் சமசரப் போக்கையே கடைப்பிடித்தார்கள். அது அரசின் வர்க்கத்தன்மையின் வெளிப்பாடே ஆகும். எனவே கம்யூனிஸ்டுகள் இந்தப் போக்கோடு ஒத்துழைப்பதோ, அணி சேர்வதோ சாத்தியமே இல்லை என்ற சரியான முடிவே மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழிலாளிவர்க்கத்தின் ஒத்துழைப்பு அவசியம். அதற்கேற்ற விதத்தில் அரசின் வரிக்கொள்கையும், இதர கொள்கைகளும் மாற வேண்டும் என்று மிகச் சரியாகவே மாநாடு அரைகூவியது. எனவே, இவற்றை முன்னெடுக்கும் ஒரு புரட்சிகர எதிர்க் கட்சியாக செயல்படவேண்டும் என முடிவு செய்தார்கள்.
இதில் ‘புரட்சிகர எதிர்க் கட்சி’ என்பதன் பொருளை சற்று சுருக்கமாகப் பார்க்கலாம். நாடாளுமன்றத்தில் மட்டும் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் செயல்பாட்டை அனைத்துக் கட்சிகளுமே மேற்கொள்வார்கள். ஆனால், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, நாடாளுமன்றத்தில் போராடுவதோடு, களத்திலும் மக்களைத் திரட்டி போராட வேண்டும். முதலாளித்துவ – நிலவுடைமை அமைப்பிற்கு எதிராக தொழிலாளர்களையும், விவசாயிகளையும் திரட்டி, சட்டப்பூர்வமாகவும், சட்டப்பூர்வமற்ற வழிகளிலும் போராட வேண்டும் என்ற முடிவினையும் கட்சி முன்னெடுத்தது.
மொழிவழி மாநிலங்கள்:
மாநாட்டின் பிற தீர்மானங்களில் மாநிலங்களை வலிமைப்படுத்துவதுடன், நாட்டின் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. (சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநாட்டிற்கு சென்று திரும்பிய அஜாய் கோஷ் [பொதுச் செயலாளார்] ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். மேலும் மொழி அடிப்படையிலேயே மாநிலங்கள் அமைய வேண்டும் என்ற தீர்மானமும் முன்வைக்கப்பட்டு இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது)
இந்திய ஆளும் வர்க்கத்திற்கு மொழிவழி மாநிலங்களை ஏற்படுத்துவதில் உடன்பாடில்லை என்பதையும், மிகப்பெரும் மக்கள் போரட்டங்களை முன்னெடுத்ததன் பின்னணியில் ஆளும் வர்க்கங்கள் அதனை ஏற்றுக்கொண்டன என்பதையும் கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட சரியான நிலைப்பாட்டுக்கு உதாரணமாக பார்க்கலாம்.
ஒரு லட்சம் உறுப்பினர்கள்:
இந்த மாநாட்டில் தோழர் கே.டி.கே.தங்கமணி உள்ளிட்ட தோழர்களை கொண்டு செயல்பட தகுதி ஆய்வுக் குழு அறிக்கையை சமர்ப்பித்தது. அதன்படி நாட்டில் மொத்தம் 75 ஆயிரம் கட்சி உறுப்பினர்களும், 30 ஆயிரம் பரிச்சார்த்த உறுப்பினர்களும் இருந்தார்கள். 427 பிரதிநிதிகள் வந்திருக்க வேண்டும், மாநாட்டில் பங்கேற்பு 407 ஆக இருந்தது.

மேலும், 4 வது மாநாட்டின் விவாதம் அரசியல், தத்துவார்த்த பிரச்சனைகள் தொடர்பாகவே அமைந்திருந்த காரணத்தால், அமைப்பு விதிகளை மேம்படுத்துவது தொடர்பான விவதங்களை மேற்கொள்வதற்காக 6 மாத காலத்தில் ஒரு பிளீனம் (சிறப்பு மாநாடு) நடத்தவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், 1957 தேர்தல் காரணமாக அந்த சிறப்பு மாநாட்டை நடத்த முடியவில்லை.
முந்தைய தொடர்களை வாசிக்க :
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 6 : வெளியே கடவுள், உள்ளே மிருகம் ! – இரா. சிந்தன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


மிக சிறப்பான கட்டுரை. 1950-களில் இந்திய கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாட்டை இக்கட்டுரை அருமையாக விளக்குகிறது. சோஷலிசம் மற்றும் நேரு அரசாங்கத்திடம் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளவேண்டிய நடைமுறை திட்டத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறது.