கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 2 : தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் !

Co-leadership of the Communist Movement (Individual, Project, Philosophy) Web series by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் !)
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகளும், விவாதங்களும் தனித்துவமானவை என்கிறபோது இரண்டு பொதுவான கேள்விகள் எழுகின்றன.
1) திறன் மிக்க தலைவர்களையும், அவர்களின் பங்களிப்பையும் எப்படி வகைப்படுத்துவது?
2) கூட்டாக முடிவுகளை மேற்கொள்வதற்கு அடிப்படையாக அமைவது எது?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திட்டம் உருவான பின்னணி என்ற நூலில், எம்.பசவபுன்னையா ஒரு மாறுபட்ட சூழ்நிலையை முன்வைத்திருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவர் உறுப்பினராக வேண்டும் என்றால் அவர் ஆணோ, பெண்ணோ “முதலில் கட்சியின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்; இரண்டாவதாக கட்சியின் அமைப்புச் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். – இந்த வரலாற்றின் விசித்திரமான ஒரு விசயம் என்னவென்றால் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியில் அதற்கென்று ஒரு திட்டமோ, அமைப்புச் சட்டமோ, சில சமயங்களில் இவை இரண்டுமே இல்லாமல் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வந்தார்கள்”

செயல் திட்டத்திற்கான போராட்டம்:
மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் உருவான பின்னணியையே இயக்கவியல் அடிப்படையில்தான் பார்க்க முடியும் என்பதை பசவபுன்னையாவின் எழுத்துக்கள் உணர்த்தின. முதலில் அவர் குறிப்பிட்ட சில முக்கியமான விபரங்களை பார்ப்போம்.

· 1920 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவானது.
· 1928 ஆம் ஆண்டில் ‘செயல் தளத்திற்கான வரைவு’ அறிக்கை வெளியிடப்பட்டது. அவ்வப்போது வெளியிடப்பட்ட அரசியல் தீர்மானங்களும், கொள்கை அறிக்கைகளும் கட்சிக்கு வழிகாட்டிவந்தன.
· கட்சி தடை செய்யப்பட்ட சூழல்களில் கட்சியின் கீழ்மட்ட மாநாடுகளோ அகில இந்திய மாநாடுகளோ கூட முடியவில்லை. (1936-39) கட்சியின் அரசியல் தலைமைக் குழுவும் மத்திய குழுவும் செயல்பட்டன – கட்சியின் முதலாவது அகில இந்திய மாநாடு கூட முடியவில்லை.
· 1942ம் ஆண்டில்தான் கட்சி மீதான தடை விலக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து – ஒரே ஆண்டுக்குள் – 1943 மே மாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு பம்பாய் நகரில் கூடியது.
· 1951 ஆம் ஆண்டில், கட்சி திட்டத்திற்கான நகல் உருவாக்கப்பட்டு சுற்றுக்குவிடப்பட்டது.
· 1953 ஆம் ஆண்டு நடந்த கட்சியின் அகில இந்திய மாநாட்டில் விவாதிக்கப்பட்டு அந்த திட்டத்தை ஏற்று செயல்படுத்தினார்கள். ஆனால்
· 1955 ஆம் ஆண்டில் அந்த திட்டத்தின் பொருத்தப்பாடு விவாதத்திற்கு உள்ளாகியது.
· 1956 ஆம் ஆண்டில் நடைபெற்ற நான்காவது அகில இந்திய மாநாட்டில் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதென்று முடிவு எடுக்கப்பட்டது.
· 1964 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் உருவாக்கப்பட்டது.

மேற்சொன்ன விபரங்களை மட்டும் தனியாக பார்க்க முடியாது. இத்தனை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்தான் கம்யூனிஸ்ட் இயக்கம் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் அளப்பறிய தியாகங்களைச் செய்து முன்னேறியும் வந்தது.

வரலாற்றுச் சுவடுகள்:
1920களில் கம்யூனிஸ்டுகளின் கடும் உழைப்பால் தொழிற்சங்கங்கள் உருவாகின. வங்கத்தின் ரயில்வே தொழிலாளர், பம்பாயில் நூற்பாலைத் தொழிலாளர் என போராட்டங்கள் 1928-29 காலகட்டத்தில் அலையாக எழுந்தன.

பிரிட்டிஷ் ஆட்சியின் சதி வழக்குகளின் மேடைகளை தங்கள் பிரச்சார மேடையாக மாற்றிக் கொண்டு கம்யூனிஸ்டுகள் துணிச்சலுடன் இயங்கினார்கள். கட்சி தடை செய்யப்பட்டது.

1937 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேலை நிறுத்தங்களில் மட்டும் 6 லட்சத்து 6 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர். ஊரகப் பகுதிகளில் நடைபெற்ற அநீதிகளுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது (1936). இரண்டாவது உலகப் போருக்கு பின் இந்தியாவில் வெகுமக்கள் போராட்ட எழுச்சி ஏற்பட்டது. அவற்றில் பல போராட்டங்களுக்கு கம்யூனிஸ்டுகள் தலைமைதாங்கினார்கள். 1946 ஆம் ஆண்டில் தபால் ஊழியர்கள், ரயில்வே பணியாளர்கள், தந்தி பணியாளர்கள் உள்ளிட்டு போராட்டக் களத்திற்கு வந்தனர்.

1946 பிப்ரவரி மாதத்தில் நடந்த கப்பல் படை கிளர்ச்சி தீரம்மிக்க ஒரு போராட்டமாக இருந்தது. பொது வேலை நிறுத்த அறிவிப்பை ஒட்டி, கிளர்ச்சியை தொடங்கிய கப்பல் படையினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை வழங்கியது. தொழிலாளர்கள் இக்கிளர்ச்சிக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் செய்தார்கள்.

தெபாகா எழுச்சி, புன்னப்புரா வயலார், தெலங்கானா ஆயுதப் போராட்டம் ஆகிய வரலாறுகள் அளவிலடங்கா தியாகங்களின் வெளிப்பாடுகளாக அமைந்தன. 1957 ஆம் ஆண்டில், தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான அமைச்சரவை பொருப்பேற்றது.

லெனினின் வழிகாட்டுதல்:
இந்தியா உள்ளிட்ட காலனி ஆதிக்க நாடுகளில் நடக்க வேண்டிய போராட்டங்கள் குறித்து, லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் அகிலம் நடத்திய விவாதங்களும், முன்வைத்த வழிகாட்டுதல்களும்தான் அந்த காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு அச்சாணியாக அமைந்தன. இ.எம்.எஸ் அதனை குறிப்பிடுகிறார், “லெனின் தலைமையிலிருந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைமை பின்வரும் மூன்று முடிவுகளுக்கு வந்தது.

மூன்று முக்கிய முடிவுகள்
முதலாவதாக-இந்தியா, சீனா உள்ளிட்ட கீழை நாடுகளில் உள்ள முக்கியமான உடனடிப் பணி என்பது ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம்தான் என முடிவு செய்யப்பட்டது. எனவே தேசிய முதலாளிகளுக்கும் ஒரு பங்குள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியாக வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இரண்டாவதாக, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான இந்த இயக்கத்தில் பிரதானமான முக்கிய சக்தி விவசாயிகள்தான்…எனவே விவசாயிகளுக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே ஒரு உறுதியான கூட்டை உருவாக்கினால் மட்டுமே தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளிகளிடையே உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரிவினருக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இதைப் புரிந்து கொள்ளாமல், விவசாயிகளின் புரட்சி பற்றிய தொலைநோக்கு இல்லாமல், முதலாளிகளுடன் ஒரு கூட்டினை ஏற்படுத்துவதற்கான எந்த ஒரு முயற்சியும் சந்தர்ப்பவாதத்துக்கே இட்டுச் செல்லும்…

மூன்றாவதாக இந்தியா முதலான கீழை நாடுகளில் தொழிலாளி வர்க்கம் ஒரு பலவீனமான சமுதாய சக்திதான். எனினும், இருக்கக்கூடிய தொழிலாளி வர்க்க ஊழியர்களும், தேசிய புரட்சிக்காரர்களின் முன்னணிப் படையினரும் உள்ளிட்டதாக கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்ட வேண்டும்…“

தனிநபர்களின் பாத்திரம்:
மார்க்சிய தத்துவத்திலும், உழைக்கும் மக்களின் விடுதலையின் மீதும் மாறாப் பற்றுக்கொண்ட கம்யூனிஸ்டுகள் – தத்துவத்தின் மனித வடிவங்களாக இயங்கினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வரலாற்றின் வளர்ச்சி விதிகள் மனிதர்களின் ஊடாகத்தான் செயல்படுகின்றன. எனவே, தனிச் சிறப்பான தலைவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டங்களுக்கு வழிகாட்டி இயக்கத்தை முன்னெடுத்தார்கள்.

அதே சமயம் அந்த தலைவர்கள், கட்சி திட்டத்திற்கான அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். அந்த போராட்டத்தின் விளைவாகவே மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் உருவானது. திட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, வரலாற்றின் வளர்ச்சிப் போக்குக்கு ஏற்ப அதனை அமலாக்கும் பணிகளில், தனித்துவம் மிக்க தலைவர்களின் பாத்திரம் தொடர்ந்து வெளிப்பட்டது.

கூட்டான முடிவுகளுக்கு அடிப்படை:
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமும், அமைப்புச் சட்டமும் கூட்டான முடிவுகளை மேற்கொள்வதற்கான அடிப்படையான ஆவணங்கள் ஆகும்.

கட்சியின் திட்டம் என்பது, ஒரு நாட்டின் புரட்சிப் போராட்டம் எந்தக் கட்டத்தில் உள்ளது, அதன் தன்மை எப்படி அமைய வேண்டும் என்பதை தெளிவாக்க வேண்டும். இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற கட்டத்தை நாம் கடந்துவிட்டோம். இப்போது மக்கள் ஜனநாயக புரட்சி என்ற கட்டத்திற்கு வந்துள்ளோம். மக்கள் ஜனநாயக புரட்சியை முன்னெடுக்க தேவையான அணிச் சேர்க்கை எது என்பதையும், யாருக்கு எதிரான போராட்டமாக இது அமையும் என்பதையும் கட்சியின் திட்டம் விளக்குகிறது. அதாவது கட்சி திட்டம் முன்வைப்பது இந்த வரலாற்று காலகட்டத்திற்கான இலக்கு ஆகும்.

அந்த இலக்கை நோக்கிய பயணம் ஒரே நேர்கோட்டுப் பாதையாக அமையாது. அதனால்தான் “மார்க்சிய லெனினிய சிந்தனைகளால் வழிநாடத்தப்படுகிற, பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகர கட்சி … குறிப்பிட்ட சூழ்நிலையில் ஆழமான தன்மைகளை கூர்ந்து ஆராய்வதன் அடிப்படையில் தனது பிரச்சாரத்தையும், போராட்ட முழக்கங்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் தோழர் பசவபுன்னையா. புரட்சிக்கான எழுச்சி அல்லது தளர்ச்சிக்கு ஏற்றபடி நமது அணுகுமுறைகளை தீர்மானிப்பதுதான் உத்தி (tactics) என்கிறார் அவர். எனவே, உத்திகள் அவ்வப்போது மாறும், அது இலக்கை நோக்கியதாக அமைந்திடும்.

எனவே, ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு திட்ட ஆவணமே வழிகாட்டியாக உள்ளது. மார்க்சிய – லெனினிய தத்துவ தெளிவோடு அந்த திட்டத்தை முன்னெடுக்கும் தரமான உறுப்பினர்களும், தனித்துவமான தலைவர்களும், கூட்டுத் தலைமையின் பிரிக்க முடியாத அங்கங்களாக, புரட்சிகர இயக்கத்தை வழிநடத்துகிறார்கள்.

முந்தைய தொடரை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.