Co-leadership of the Communist Movement Web series by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்




‘தனி நபர்கள் அல்ல கட்சியே முதன்மையானது’ என்பதை வலியுறுத்தி ஒரு மூத்த தோழரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் ‘கட்சி என்பது என்ன? அதைக் காட்ட முடியுமா?’ என்ற ஒரு எளிய கேள்வியின் மூலம் எனது சிந்தனையை தூண்டிவிட்டார்.

நானும் அவரிடம், ‘நானும் நீங்களும் கூட்டாக இயங்கும்போது, அது அமைப்பு. நான், நீங்கள் என்ற அகந்தையோடு மோதிக்கொண்டால், தனி நபர்கள்’ என்று சமாளிப்பாக ஒரு பதிலைச் சொல்லி வைத்தேன். உண்மையில் அதுவும் சரியான பதில் அல்ல.

கொள்கையால் இணைந்த தனிநபர்கள்:
சமீபத்தில் தோழர் குமரேசன் (மூத்த பத்திரிக்கையாளர்), கம்யூனிஸ்ட் மாநாடுகள் பற்றி எழுதியிருந்த ஒரு பதிவு பரவலாக பகிரப்பட்டது. அதில், கட்சி கூட்டத்தில் பங்கெடுக்கும் ஒரு இளம் தோழர், மூத்த தோழர்களிடையிலான வாக்குவாதத்தை பார்த்து அதிர்ந்து போவார். பிறகு கிளை கூட்டத்தை தாண்டி அந்த வாக்குவாதம் தொடராது என்பதையும், மிக இயல்பாகவும் தோழமையுடனும் அவர்கள் நடந்துகொள்வதை குறிப்பிட்டிருந்தார். பலரும் அதை பெருமையோடு பகிர்ந்திருந்தார்கள். எனவே நான் முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாட்டில் பங்கேற்று வந்திருந்த சக இளம் தோழர்களிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தேன், அதில் வேறு ஒரு பதில் கிடைத்தது.

நாம் தனிப்பட்ட நபர்களாகத்தான் நாம் சமூகத்தில் இயங்குகிறோம். பொதுவாக பிற கட்சிகள் என்று வரும்போது, அவர்கள் வசதிக்கு தக்க திரட்டுகிறார்கள். எனவே, முதலாளித்துவ கட்சிகள் தங்கள் உண்மையான இலக்குகளை மறைத்த முலாம் பூச்சு வேலைகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கோ, பிற கட்சிகளின் முலாம் பூச்சை நீக்குவதுடன், தனி நபர்களை கூட்டு முடிவுக்கு உட்படுத்துவதும், கூட்டு முடிவுகளில் பங்கேற்கச் செய்வதும் நிபந்தனையாகிவிடுகிறது.

அந்த இளம் தோழர்கள் சொன்னார்கள், ‘நாங்கள் எங்கள் பலவீனங்களை இன்னொருவரின் பலம் கொண்டு சரிப்படுத்துகிறோம். காழ்ப்புணர்ச்சியை அகற்றிவிட்டு, விமர்சனங்களை கூர்தீட்டுவது எப்படி என்று கற்றுக் கொண்டிருக்கிறோம். மொத்தத்தில் கூட்டாக இயங்குவது எப்படி என்பதை கிளை மாநாட்டின் முடிவில் கற்றுக் கொண்டோம்’

தோழர்களும், தலைவர்களும்:
நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதற்கு முன்பாகவே, எங்கள் பகுதியில் வசித்துவந்த தொழிலாளர்களிடம் பேசும்போது, ‘கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் என்பது, நாம் வாழும் சமுதாயத்திற்கு வழிகாட்ட வேண்டிய கடமையை கொண்டுவருகிறது. எனவே, தோழர்கள் என்பவர்கள் ‘புரட்சியின் தலைவர்கள்’. கட்சியில் நாம் பார்க்கும் ‘தலைவர்கள்’ என்போர் உண்மையான பொருளில் ‘பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட’ தோழர்களே’ – என்பார்கள். எனக்கு அதற்கான பொருளும் கூட அப்போதைக்கு முழுமையாக புரிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது.

பின்னர் தோழர் இ.எம்.சங்கரன் நம்பூதிரிபாட் (இ.எம்.எஸ்) எழுதிய ‘சோசலிசத்திற்கான இந்தியப் பாதை’ என்ற ஒரு புத்தகம் கிடைத்தது. அதில் அவர் பொதுவான பத்திரிக்கைகள் எழுதும் ‘கிசுகிசுக்களுக்கு’ பதில் சொல்கிற விதமாக – கம்யூனிஸ்ட் இயக்கம் இயங்கும் முறையை விளக்கியிருந்தார்.

“கட்சி மேலிடத்தலைவர்கள் கீழ் மட்டத் தலைவர்களை நியமிப்பது என்கிற வழக்கம் இந்தக் கட்சியில் கிடையாது. கீழ்மட்டக் கிளையிலிருந்து சகல மட்டங்களிலும் மாநாடுகள் நடக்கின்றன. கிளை மாநாடுகளில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். கடந்த மாநாட்டிலிருந்து நடப்பு மாநாடு வரையிலான செயல்பாடுகள் குறித்து விமர்சன – சுயவிமர்சன அடிப்படையில் விவாதிக்கிறார்கள். கிளைக்கான புதிய குழுவையும், அடுத்த உயர்நிலை மாநாட்டிற்கான பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுப்பதோடு கிளை மாநாடு முடிகிறது.”

எனவே, கம்யூனிஸ்ட் கட்சி என்றால், அமைப்பாக இயங்கக் கூடிய தோழர்களின் தொகுப்புதான். அவர்கள் தன்னை மட்டும் மையப்படுத்தி செயல்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட விசயத்தை விவாதிக்கிறார்கள், பின் முடிவுகளை மேற்கொண்டு அவைகளை செயல்படுத்துகிறார்கள், பிறகு அந்த செயல்பாடுகளைக் குறித்து பரிசீலனை செய்கிறார்கள். வெற்றியோ, தோல்வியோ எல்லாவற்றில் இருந்தும் கற்றுக்கொண்டு அடுத்த பணிகளுக்குச் செல்கிறார்கள்.  தலைவர்களே இல்லை என்பதல்ல கம்யூனிஸ்ட் அமைப்பின் மையச் சரடு. மாறாக, கூட்டுச் செயல்பாடு – சரியாகச் சொன்னால் ‘கூட்டுத் தலைமை’.

நபர்களும், கொள்கைத் திசையும் :
இப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் பல மட்டங்களில் கிளை மாநாடுகள் முடிந்து, பகுதிக்குழு அல்லது ஒன்றிய/நகரக் குழு மாநாடுகள் நடந்துவருகின்றன. சில மாவட்டங்களில், மாவட்டக் குழு மாநாடுகள் முடிந்துவிட்டன. இன்னும் சில மாதங்களில் கட்சியின் மாநில மாநாடும், அகில இந்திய மாநாடும் நடக்கவிருக்கிறது.

கூட்டுத் தலைமை என்று சொல்லும்போது, யார் தலைமையேற்கிறார் என்பது மட்டுமல்லாமல், எந்த திசையில் பயணிப்பது என்ற கேள்வியும் வந்து சேர்கிறது. அகில இந்திய மாநாடு (கட்சி காங்கிரஸ்) – திசை வழி நோக்கிய பயணத்தை முடிவு செய்கிறது. அப்படியானால், எங்கோ அமர்ந்துகொண்டு முடிவு செய்யப்படுகிற போக்கிற்கு ஒட்டுமொத்த கட்சியின் கட்டுப்படுமா? அதில் எங்கே ஜனநாயகம்? என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து யாரும் கேள்வி எழுப்பக் கூடும்.

அதற்கும் தோழர் இ.எம்.எஸ் பதில் சொல்லியிருக்கிறார்,
கட்சி காங்கிரசில் விவாதிக்கப்படவுள்ள அரசியல் நகல் தீர்மானம், மத்தியக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும். பிறகு அந்த தீர்மானம் பொதுமக்களுக்கும், அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அவரவருக்கு புரிகிற மொழியில் வெளியிடப்படும்.

“கட்சிக் குழுக்கள் இந்த ஆவணத்தின் மீது விவாதம் நடத்த இரண்டு மாத அவகாசம் உள்ளது. கட்சிக் குழுக்கள் தீர்மானத்தில் அவசியம் செய்யப்பட்டாக வேண்டும் எனக் கருதுகிற திருத்தங்களை மத்திய குழுவுக்கு அனுப்ப முடியும். (13 வதுஅகில இந்திய மாநாட்டின் போது இத்தகைய 5000 திருத்தங்கள் மத்திய குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்தன.) இவ்வாறுபெறப்பட்ட அனைத்துத் திருத்தங்களையும் மத்திய குழு பரிசீலித்து, அவற்றில் எவையெவை ஏற்கத்தக்கவை, மற்றவை ஏன் ஏற்கத்தக்கவை அல்ல என்பது குறித்து ஒரு அறிக்கையை தயாரிக்கும். அந்த அறிக்கையுடன் சேர்த்து அரசியல் தீர்மானம் அகில இந்திய மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும். மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள், அந்தக் கட்டத்திலும் கூட. அரசியல் தீர்மானத்துக்கான திருத்தங்களைக் கொண்டு வர முடியும். தீர்மானமும், திருத்தங்களும் முழுவிவாதத்துக்குப் பின்னர் ஓட்டெடுப்புக்கும் விடப்படும்.”

முடிவற்ற விவாதங்களா?
இதுபோன்ற ஆவணங்களை படித்து, அதன் மீதான கருத்துக்களை அனுப்பும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் நாம் அனுப்புகிற திருத்தத்தை உண்மையாகவே அவர்கள் வாசிப்பார்களா? அல்லது எல்லாம் கண்கட்டு வித்தையா? என்கிற கேள்வி மனதில் எழுந்திருக்கிறது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியராகி, நடைமுறைகளை நெருக்கமாக பார்க்கிற வாய்ப்பு கிடைத்த பிறகு – உட்கட்சி ஜனநாயகத்திற்காக நமது உழைப்பில் இத்தனை பெரும் பகுதியை செலவு செய்கிறோமா? என்ற பெருமித உணர்வும், கம்யூனிஸ்ட் கட்சிமீதான பற்றும் அதிகரித்தது.

இத்துடன் தோழர் இ.எம்.எஸ் எழுதியிருக்கும் மற்றொரு அம்சம் இங்கே கவனிக்க வேண்டியது என்றே நினைக்கிறேன். உலக அளவில் சோசலிச நாடுகள் பின்னடைவை சந்தித்தபோது, அதுபற்றிய மதிப்பீட்டையும், இந்தியாவில் சோசலிசத்திற்கான பயணம் எப்படி அமைய வேண்டும் என்பதையும் கூட கட்சி தனது அனைத்து அணிகளுக்கும் வரைவு அறிக்கையாக வெளியிட்டு பின் அதனை விவாதித்து இறுதி செய்தது. எனவே, மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் மாநாடுகள் மேல் பூச்சு முலாம்கள் அல்ல, தலைவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வகைப்பட்ட நடவடிக்கைகள் மட்டுமல்ல, மாறாக அது மெய்யான ‘கூட்டுத் தலைமை’. ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கான தொடர் கல்வி. எனவே கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடப்பது முடிவற்ற விவாதங்கள் அல்ல. கூட்டுச் செயல்பாடுகளை நோக்கிய விவாதங்கள். ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாட்டின் இரண்டு பிரிக்கமுடியாத பகுதிகளின் வெளிப்பாடுகள். இந்தக் கோட்பாடே கட்சியின் எல்லா நடவடிக்கைகளுக்கு அடிப்படையாகும்.

ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் கிளையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும். கிளை, பகுதிக்குழு, மாவட்டக் குழு போன்று ஒவ்வொரு அமைப்பும் தனக்கு அடுத்த மேல் நிலையில் உள்ள குழு எடுக்கிற முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும். இந்த எல்லா குழுக்களிலும் பெரும்பான்மையோர் எடுக்கும் முடிவுகளுக்கு, சிறுபான்மை கருத்துக் கொண்டவர்கள் கட்டுப்பட வேண்டும். மாநாட்டுக் காலம், கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தின் கொண்டாட்டமாக அமைந்த காலம். எனவே தோழர் இ.எம்.எஸ் தரும் வெளிச்சத்தில், மாநாடுகளின் ஊடாக ஒரு கற்றலை மேற்கொள்ள முயற்சிக்கிறேன்.

தொடரும் …

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 2 Comments

2 Comments

  1. Suresh Esakkipandi

    அருமையான கட்டுரை தோழர்..

  2. கற்றலுக்கான பதிவாக உணர்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக பதிவு செய்து கொண்ட பிறகு, களத்தில் செயல்படும் நேரத்தில் இப்படியான கேள்விகள் எழுவது உண்மை. இக்கேள்விகளை மனதில் எழுப்பியதும் அதற்கான பதிலை புரிந்து கொண்டதும் உண்மை. மூத்த தோழர்களின் நட்பின் தொடக்கம் மேலும் மேலும் கற்றுக் கொள்ள உதவியாக இருந்தது. யாரெல்லாம் இந்த பதிவில் வரும் கேள்விக்கு உட்படுத்தி கொண்டு ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யின் நான்காவது பாகத்தில் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் ” என்ற கார்ல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் அவர்களின் அறைகூவல் குரலுக்கு முன் உள்ள பாராவின் கருத்துக்களை உள்வாங்கினார்களோ அவர்கள் எல்லோரும் கட்சியில் விவாதத்தோடும் விமர்சனத்தோடும் சுயவிமர்சனத்தோடும் மக்களுக்காக சிந்திப்போம்நள்ளிரவு செயல்படுவோம் என இயக்கம் காண்கின்றனர். புரட்சிகர பதிவு தோழர் சிந்தனின் பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *