நீரும் நெருப்பும் (Neerum Neruppum) ஆசிரியர் பற்றி
1981ம் ஆண்டில் தமிழ் ஆசிரியராக பணியேற்றவர் திரு . சாரதா நாகரத்தினம் அவர்கள். ஆணின் பெயரும் பெண்ணின் பெயரும் இணைந்து இருப்பதால் ஆண்பாலா பெண்பாலா என்று குழப்பம் இருக்கும். சாரதா எனும் தன் இல்லாள் பெயரை தன் பெயரோடு சேர்த்து ,எழுதும் படைப்புகளுக்கு பெயர் வைத்துள்ளார்.
திருமணம் ஆவதற்கு முன்பு தான் தங்கி இருந்த விடுதியை எழுத்தாளர்களின் இலக்கிய சந்திப்பு இடமாக மாற்றி இருக்கிறார் ஆசிரியர். எழுத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களையும் தன்னிடம் பயிலும் மாணவர்களையும் , வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் ஊக்கப்படுத்தியதன் விளைவு தான் , இன்று அவர் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். ஆம் அவர் இறந்து 20 வருடம் சென்ற பின்னர் , அவர் சிந்தனைகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள் அவரோடு பயணித்தவர்கள். அவரிடம் படித்த மாணவரின் நூலும் இந்த சிறுகதை தொகுப்போடு வெளியிடப்பட்டது கூடுதல் சிறப்பு.
ஆசிரியர் மாணவர்கள் மனதில் விதைக்கும் விதைகள் எல்லாம் , அவர்களின் வாழ்நாளில் என்றேனும் ஒரு நாள் விருட்சகமாக செழித்தோங்கி வளர்ந்து நிற்கும் என்பதற்கு இந்த ஒரு நிகழ்வு போதும் என்று நினைக்கின்றேன்.
இனி நூல் குறித்து…..
சிறார் சிறுகதைகள் எழுத வேண்டும் என்றால் நாம் மெத்த படித்தவர்களாக இருந்தாலும் சிறுவர்களின் உலகத்திற்குள் வாழ வேண்டும் . அந்த வகையில் ஆசிரியர் சாரதா நாகரத்தினம் அவர்கள் புன்சரிப்போடு எப்போதும் உலா வந்ததோடு , குழந்தைகளின் மனதைக் கொண்டதால் தான் சிறார் கதைகளை அவரால் சிறப்பாக எழுத முடிந்திருக்கிறது என்பது புரிகிறது.
“நீரும் நெருப்பும் (Neerum Neruppum)” என்ற இந்த சிறார் கதைத் தொகுப்பில் மொத்தம் 33 சிறுகதைகள் உள்ளன. மிகச் சிறிய கதைகள் தான். ஆனால் மிகப் பெரிய அர்த்தங்களை பொதிந்தவையாக இருக்கின்றது. சில சிறுகதைகள் ஒரு பக்கத்தில் முடிந்து விடுகின்றன . ஆனாலும் சொல்ல வேண்டிய கருத்தை அழுத்தமாகச் சொல்கிறது. கதைக்கு ஏற்றார் போல கொடுத்துள்ள படமும் குழந்தைகளின் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
கூடாரம் பதிப்பகத்தால் வெளியிடப்படும் முதல் நூல் என்பதால் , ஒரு சில இடங்களில் சில பிழைகளை என்னால் காண முடிந்தது. குழந்தைகளை கவரும் கதாபாத்திரங்களான விலங்குகள் , ஊர்வன, பூக்கள் போன்ற கதாபாத்திரங்களைக் கொண்டு இருப்பதும் , கதைக்கேற்ற தலைப்பு, கதைக்கரு இருப்பதும் சிறப்பு. அதேபோல நற்கருத்துக்களை மாணவர்கள் மனதில் விதைக்கும் வண்ணமும் , மாணவர்களை சிந்திக்க வைக்கும் நோக்கில் சில கதைகளும் அமைந்துள்ளது.
கதை சொல்லிகளாக குடும்ப உறவுகள் இல்லாத காலத்தில் இந்த கதைகளை வாசிக்கும் மாணவர்கள் சிறந்த கதை சொல்லிகளாக மாறுவார்கள். குழந்தைகளிடம் எப்படி ஒரு கருத்தை சொல்ல வேண்டும் என்பதை அறிந்து ஆசிரியர் சில கதைகளை அமைத்திருப்பது நேர்மறையான தாக்கங்களை மாணவர் மனதில் நிச்சயம் ஏற்படுத்தும்.
முயல் – ஆமை , காக்கை -கழுதை , சிங்கம்- நரி, கரடி- முயல் , ராஜா -மந்திரி, புல் -தென்றல் , கரடி- நரி , நாய்- எறும்பு, இராவணன் -வீடணன், கவிஞன் -கல் தாத்தா- பேரன்,அப்பா -மகன் இவ்வாறு இவர்களுக்கு நடுவே நடக்கும் களம் தான் கதை. எளிய சொற்களை அமைத்து , குழந்தைகள் மனதில் கதையை நீங்காது இறுத்தி விடும் வல்லமை கொண்ட எழுத்து.
சிறுவர்கள் தான் வாசிக்கணும் என்று இல்லை . சிறுவர்களுக்கான சிறுகதை எழுத விரும்புகிறோம் வாசிக்கலாம். ஐம்பூதங்களில் நீருக்கும் நெருப்புக்கும் இடையே நடக்கும் விவாதங்களும் , மூன்று குரங்குகளில் இரு கை எதற்கு என்ற தலைப்பில் உள்ள கதையும் நல்ல கதையை கருவை கொண்டுள்ளது.
சில கதைகள் நகைச்சுவையும் பல சிந்திக்கவும் செய்கிறது. ஒரு நாள் வாழ்ந்தாலும் ஒரு முறை பூக்கும் மலரின் புகழ் பெரிது , ஒரே முறை இறந்தாலும் வெளிச்சம் தரும் தீக்குச்சியின் பலமும் பெரிது என தத்துவங்களையும் பேசுவதற்கு சிறுகதைகள் தவறவில்லை.
இத்தனை சொல்லிட்டு புத்தகத்தோட பெயர் சொல்லலனா எப்படி…
நூலின் விவரம்:
படைப்பு: நீரும் நெருப்பும் (Neerum Neruppum)
படைத்தவர்: சாரதா நாகரத்தினம்
வகைமை: சிறார் இலக்கியம்
விலை : 100
வெளியீடு: கூடாரம்
நூல் அறிமுகம் எழுதியவர்:

பா விமலா தேவி
பட்டுக்கோட்டை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

