நடிகர் விவேக் இரங்கற்பா: நீ நட்டது மரங்களை அல்ல….. மனித நேயத்தை – ஆதித் சக்திவேல்கறுப்பிலும் வெள்ளையிலும்
கோடி கோடியாய் வாங்கும் நடிகருள்
கோடி மரம் இம்மண்ணில் நடுவேன் என தேடித் தேடி இடம் பிடித்து
ஓடி ஓடி நட்டு நீர் வார்த்தவனே

இன்று
அழுது கொண்டிருக்கும்
அம்மரங்களுக்கு
நாங்கள் ஊற்றுவது தண்ணீர் அல்ல
எங்கள் கண்ணீர்

பகுத்தறிவுவாதிகள் என
அரிதாரம் பூசியோர் முன்னே
அரிதாரம் பூசி
பகுத்தறிவுவாதியாய் வலம் வந்தவனே
உன்
சிரிப்பு சிந்திக்க வைத்தது
சிந்தனை சிரிக்க வைத்தது

சிரிப்பால் மனங்களையும்
சிந்தனையால் மரங்களையும்
கவர்ந்தவனே

சாலையோர மைல் கல்லுக்குக் கூட மாலையிட்டுப் பொட்டு வைத்து
சாமி ஆக்கிடுவர் எனக் கேலி செய்து ஆசாமிகளுக்குப்பகுத்தறிவுப் பாடம் எடுத்தே நடிகருள் மைல் கல் ஆனவனே

இம்மண்ணில் பிழைக்க உழைத்தாய்
ஒரு நடிகனாய்
இம்மண்ணே பிழைக்க உழைத்தாய்
ஒரு சூழலியலாளனாய்

வெறும் நடிகன் என
சிறு வட்டத்தில்
சுருக்கிட முடியாது உன்னை
முதலில் நீ
சூழலியலாளர்
பகுத்தறிவுவாதி
மூடநம்பிக்கைகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்க முனைந்தவன்…
………………………………
இன்னும் இப்படி எவ்வளவோ……..

மலர் வளையம் தொடுக்க எண்ணி
மலர் பறிக்கலாம் என
மரங்களை நாடிப் போனேன்
“நாங்கள் என்ன மரங்களா?
இதற்கில்லா மலர்கள் எமக்கெதற்கு?” என
இருந்ததை எல்லாம் உதிர்த்தன அவை
இடை இடையே கண்ணீர் சிந்தி

மனித நேயம் கலந்து நீ நட்டவை
மனித நேயத்துடன் வளர்ந்து நிற்பது கண்டு
மனம் நிறைந்து மகிழ்வதா ?
மரம் நட்ட அம்மாமனிதனுக்கு
மலர் வளையம் வைக்க நேர்ந்ததை எண்ணி
மனம் நொந்து அழுவதா?

இன்று
உன் உடல் எரிந்து பறந்த
கரி அமில வாயு மூலக்கூறினை உறிஞ்சி பச்சையமாய் மாற்ற ஒவ்வொரு மரமும் நிச்சயமாய் போட்டியிட்டிருக்கும்
அழுது கொண்டே
தன்னை நட்டு நீரூற்றி வளர்த்த
உன்னைத் தம் உடலில்,நினைவில்
எந்நாளும் வைத்துக் கொள்ள

நீ எங்கே போய்விடப் போகிறாய்?
நான் தான் பார்ப்பேனே உன்னை
தினம் தினம்
சாலை ஓரங்களில்
பூங்காக்களில்
நீ நட்ட மரங்களில்
மரங்களின் மலர்களில்
மலர்களின் கனிகளில்
கனிகளின் விதைகளில்
விதைகளில் மீண்டும் வளர இருக்கும்
மரங்களில்……..
நான் தான் பார்ப்பேனே உன்னை

போ……போ…… அங்கே
கலாம் அய்யா உன்னை
சலாம் போட்டு வரவேற்பார்
நிலா மீது கைகோர்த்து
சிலாகித்துப் பேசிக் காலாற நடந்திட
சாலச் சிறந்தவன் கிடைத்தான் என எண்ணி

“மனதில் உறுதி வேண்டும்”
இந்த நேரத்தில்
நீ நடித்த அந்த முதல் படம் தான்
என் நினைவுக்கு வருகிறது
ஆம்……
ஏதேச்சையாய் நடந்திருக்காது அது
அன்றே ஏதோ செய்தி சொல்லியிருக்கிறாய்
இன்று அதுவே
என் மனதுக்கு ஒத்தடம் தரும்
மருந்தாய் மாறி
அதன் வலியைக் குறைக்க முயல்கிறது

குறையுமா வலி…………?

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)