விவேக் இரங்கற்பா: விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – பா. அசோக்குமார்விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை…..
“இன்னைக்குச் செத்தா
நாளைக்குப் பாலு”
என்ற வசனத்தில் உன்னுள்
விழுந்த ரசிகன் நான்…
இயக்குநர் இமயத்தால்
அறிமுகப்படுத்தப்பட்டு
சிரிப்பு சிகரமாய்
உயர்ந்து நிற்கும் உத்தமரே…
சிரிக்க வைக்கும் பணியில்
சிந்திக்க வைக்கும் பாணியைப்
புகுத்தி அசத்திக் காட்டிய அசூரனே…
கலைவாணரை ரசித்த
கலைஞரின் வாயால்
“சின்னக் கலைவாணர்”
பட்டம் பெற்ற கலைஞனே…
நகைச்சுவைக் காட்சிகளில்
நக்கலும் நையாண்டியுமாக
மூட நம்பிக்கைகளைச்
சாடிய பகுத்தறிவுச் சீடனே…
தன்னுடன் நடிக்கும்
துணை நடிகர்களையெல்லாம்
ஏற்றிவிட்டு அழகு
பார்த்து ரசிக்கும் சீமானே…
கதாநாயகர்களைப் பார்த்து
படம்பார்க்கச் சென்றவர்களை
காமெடி யாரென்று
பார்த்து வரச்செய்த சாதனையாளனே…
சூப்பர் ஸ்டாருக்கே
மாமாவாக நடித்து
அசத்தியது ஒருபுறமிருக்க
மருமகனுடனும் மல்லுக்கட்டிய மல்லனே…
ஐந்து முறை
தமிழக அரசு விருது
பெற்றதோடு நில்லாமல்
பத்ம ஸ்ரீ பட்டமும்
பெற்ற சரித்திர நாயகனே…
காமெடிக்கென “தனி ட்ராக்”
என்றிருந்த டிரெண்டை மாற்றி
கதாநாயகனுடன் இணைந்தே
பயணிக்கும் “புது ரூட்” படைத்தவனே…
கதையை நகர்த்தும்
காரணகர்த்தாவாகவே இருந்துவிட்டு
கதையின் நாயகனாகவும்
வலம்வரத் துணிந்த தீரனே…
“பஞ்ச் டயலாக்” ஹீரோ
மட்டும்தான் பேசணுமா
என்பதை மாற்றிக்
காட்டி அசத்திய சூரனே…
இளைஞர்களின் நாயகனாக
அப்துல் கலாம் ஐயாவை
பேட்டி எடுக்கும் பெரும்
பாக்கியம் பெற்ற புண்ணியவானே…
அன்று விதைத்த
அவரின் கனவு விதையை
நெஞ்சில் தாங்கி
பூமிப்பந்தில் விதைத்த லட்சியவாதியே…
கோடி மரக்கன்றுகள்
நட வேண்டுமென்ற
அன்புக் கட்டளையை
உயிராய் பாவித்து செயலாற்றிய செயல்வீரனே…
விதைத்த விதைகளெல்லாம்
விருட்சங்களாக மாறுவதைப் போல்
இளைஞர்களின் மனதில்
சூழல்விதை ஊன்றிய சூரியனே…
தமிழக அரசின் சமூக
விழிப்புணர்வுப் படங்களிலெல்லாம்
விரும்பி நடித்து
அறிவுரைப் பகர்ந்த ஆசானே…
மிமிக்ரி கலையில்
உச்சம்தொட்டு அசத்தியதில்
மணிமகுடமாய் திகழ்வது
வைரமுத்து அவர்களின் குரலன்றோ….
கலைஞனாக மட்டுமே
அறியப்பட்ட உம்மை
சூழலியல் ஆர்வலராக
மாற்றிய தருணம் வரமன்றோ!
கலைஞானியுடன் மட்டும்
கரம்கோர்க்கவில்லையே
என்ற எமது ஏக்கம்
நிறைவேறாமல் போனது சாபமே…
அறிமுகமான உமது
முதல் படம்
“மனதில் உறுதி வேண்டும்”
இன்று எமக்கும்
அதுவே வேண்டும்…
இன்சுவை விருந்து படைத்து
மகிழ்வித்த இதயம் இன்று
இளைப்பாற செல்கிறதோ…
இதயம் கனக்கிறதே…
கோடி மரங்களை விதைத்த உம்மை
கோடானுகோடி கரங்களும்
தொழுது வணங்குமய்யா…
கோடி மரங்களும் மலர்த்தூவி
வாழ்த்துமய்யா…
“விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள் உறங்குவதில்லை”
“சின்னக் கலைவாணர்” விவேக்
அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்…

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)