சமூக ஆய்வாளர், பேராசிரியர் ராஜ்கௌதமன் எழுதியுள்ள ‘கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப்போக…! ‘ நூல் இராமலிங்கர் எனும் ஆளுமையை அவரது சிந்தனைய அவர் கண்ட மார்க்கத்தை இயங்கியல் நோக்கில் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான நூல். தமிழ் பொதுவெளியில் ‘ வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வாசகத்தின் நினைவோடு இராமலிங்கர் பற்றிய புரிதல் முற்றுபெற்று விடுகிறது. இராமலிங்கரின் ஆளுமை உருவாக்கத்தில் தமிழ் சித்தர் மரபுக்கும் 19 ஆம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்த காலனிய சூழலுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

இந்த நூல் இந்த விஷயத்தை மிக ஆழமாக ஆய்வு செய்துள்ளது. நூலாசிரியரின் வரிகளில் சொல்லப்போனால் இந்த நூல் ‘ஒரு வித்வானாக, சைவ சமயவாதியாக மரபான தோத்திரப் பாடல்களை இயற்றிக்கொண்டிருந்த ஒருவர் எவ்வாறு இவற்றைக் கடந்து, நிராகரித்து, இறுதியில் சாதி சமய விகற்பங்களைக் கடந்து, உயிர் இரக்கம், ஆன்மநேய ஒருமைப்பாடு, சமத்துவம் ஆகிய அடிப்படைகளைக் கொண்ட சுத்த சமரச சன்மார்க்கப்பாதை ஒன்றைச் சித்தர் மரபின் செழுமையை உள்வாங்கி நிர்மாணித்தார் என்ற வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் முக்கியப் பணி’ யை செய்துள்ளது.

Image

நூலின் ஏழு அதிகாரங்களும் ஆழமும் செரியும் தொடர்ச்சியும் கொண்டவை. இதனை பறவைப் பார்வை வாசிப்பால் உள்வாங்க முடியாது. ஒவ்வொரு அதிகாரமும் நம் புரிதலை மேம்படுத்தி மேம்படுத்தி அடுத்த அதிகாரத்திற்கு அழைத்துச் செல்கின்றன. இராமலிங்கர் தன் 30 வயது வரை சென்னையில் இருந்தார். கந்தகோட்டம் முருகனையும், திருவொற்றியூர் சிவனையும் போற்றி எழுதிக் கொண்டே குழந்தைகளுக்கு திருக்குறள் வகுப்பு நடத்தினார். அவர் காலத்து வித்வான்களைப்போல் அவர் ஜமீன்தார்களையோ, சைவ மடாதிபதிகளையோ நத்திப் பிழைக்கவில்லை. அவர் சுய கற்றலினாலும் உயிர்களின் மீதான நேசத்தாலும் ஆராய்ச்சி மனோபாவத்தாலும் தன்னை செதுக்கிக்கொண்டார்.

சென்னையை விட்டு வெளியேறி கருங்குழிக்கு வந்தார். இங்கிருந்து அவரது அடுத்த பரிமாணம் ஆரம்பமாகிறது. கருங்குழி மேட்டுக்குப்பம் என திரிந்துகொண்டிருந்த அவர் யோகியாக சித்தராக பரிணமிக்கிறார். 19 ஆம் நூற்றாண்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட பஞ்சங்களில் மக்களும், கால்நடைக்கும் செத்து மடிந்தது இராமலிங்கரை உலுக்கியது. உயிர் இரக்கத்தால் மட்டுமே ஆணவத்தை அழிக்க முடியும் அதன்பிறகே இறை அனுபவத்தை பொமுடியும் என்ற கருத்துநிலையை அடைகிறார். இதை நோக்கிய பயணம்தான் அவரது வாழ்வின் கடைசி பத்தாண்டுகள். இந்த பயணம் அவரை ஒரு புரட்சித் துறவியாக ஆக்குகிறது.

Sanadhana Dharma - சனாதன தர்மம் (Tamil) - Raja Yoga ...

“நால்வருணம் ஆசிரம் ஆசாரம் முதலா
நவின்றகலை அத்தனையும் பிள்ளை விளையாட்டே” என்று பிரகடனப்படுத்துகிறார். சனாதனம் அவரை வெறுக்கிறது. அவரை போலிச் சாமியர் எனத் தூற்றுகிறது. ஆனால் அவர் அத்தகு பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பை புறந்தள்ளினார். 1867 ல் சத்திய தருமச்சாலையை வடலூரில் அமைத்தார். சாதி மத பேதமற்ற சமபந்தி உணவு வழங்கினார். மக்களின் உடல் பிணி போக்க இலவச சித்த மருத்துவம் பார்த்தார். சித்த மருத்துவம் அவருக்கு தொழில் அல்ல. அது ஒரு ஜீவகாருண்யம்.1871ல் அவர் உருவாக்கிய சத்திய ஞானசபை சித்தர் மரபில் வந்த அக வழிபாட்டுச் சபை. அங்கு கடவுளர்களுக்கு இடமில்லை. ஒரு தகர விளக்கின் ஒளி மட்டுமே. 1873 ல் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் கண்ட இராமலிங்கர் தன்னைப் பின்பற்றுபவர்களை “எதையும் விசாரம் (ஆராய்ச்சி) செய்யக்” கேட்டுக்கொண்டார். காது மூக்கில் பொத்தல் போட்டு நகை அணிவது கடவுளுக்கு சம்மதம் எனில் அவரே பொத்தல் போட்டு பிறக்கவைத்திருப்பாரே என்றார்! வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலான அனைத்து நூல்களுமே ஜாலம்தான் என்று மறுத்தார் ( பாடல்4176) .

நரகக்குழிக்கு இணையாக சாதிக்குழி, சமயக்குழி இருப்பதாக எழுதினார்(பாடல் 4729). சமூக ஏற்றத்தாழ்வு மட்டும் அல்லாமல் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அவரை வாட்டியது. பணம்படைத்தவர்களுக்கு பணம் எப்படி வருவகிறது என்ற தெளிவு இராமலிங்கருக்கு இருந்தது. வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை’ ளை கொள்ளையடித்தவர்களைப் பார்த்து ‘பட்டினி கிடப்பாரை பார்க்கவும் நேரீர் , பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர் என்று சாடினார்.
அவர் தன் நெறியைப் ‘பொது நெறி’ என்று அறிவித்தார். தன்பாட்டை (செய்யுள்) பொதுப்பாட்டு என்றார்.

நூலின் 6வது அதிகாரத்தில் இராமலிங்கரின் ‘மறைவு’ குறித்த அற்புதமான ஆய்வை ராஜ்கௌதமன் செய்துள்ளார். இறுதி (7வது) அதிகாரம் இராமலிங்கரின் ஆளுமை பற்றிய நுட்டமான ஆய்வு பகுதி. இராமலிங்கரின் மனம் உளவியல் நோக்கில் இப்பகுதியில் அனுகப்பட்டுள்ளது. இராமலிங்கரின் சமரச சுத்த சன்மார்க்கம் எனும் ஆன்மிகப்பயணத்தில் அவரோடு யாருமே வரவில்லை. இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு விவேகானந்தர் கிடைத்தது போல் இராமலிங்கருக்கு ஒரு வாரிசு கிடைக்கவில்லை என ராஜ்கெளதமன் குறிப்பிடுகிறார். அப்படி நடக்காமல் போனதே நல்லது என நான் நினைக்கிறேன். வேதத்தை வேதாந்தத்தை உயர்த்தி பிடித்தவர் விவேகானந்தர். இன்று அவரது பாசறையில் என்ன நடக்கிறது என நாம் அறிவோம். இராமலிங்கர் ‘வேத ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர் வேத ஆகமத்தின் விளைவறியீர் என எச்சரித்தவர்.

அருட்பெரும் ஜோதி: "வள்ளலாரும் ...

சாதி, சமயம், தத்துவம், சாத்திரம் எல்லாவற்றையும் குழி கொட்டி மூட முனைந்தவர். அவரது சிந்தனைகள் அநீதியான சிஸ்டத்தை தகர்த்து சமத்துவமான சிஸ்டம் ஒன்றை உருவாக்குவதற்கானது. இதற்கு உண்மை சீடர்கள் கிடைப்பது கடினம்தானே. கடைவிரித்தேன் கொள்வாரில்லை கடை கட்டினேன் என அவரை பின்வாங்க வைத்தது அவர் காலம். எனினும் “இலட்சியவாதிகளின் வாழ்க்கை ஒருநாள் பந்தயமல்ல- வெற்றிதோல்விகளை மாலைக்குள் அறிவதற்கு. அது யுகங்களின் மீது எட்டு வைத்து நடக்கும் பயணம்” என்று வள்ளலார் குறித்த வைரமுத்துவின் வரிகள் சிந்திக்கத்தக்கதே.

சித்தர் மரபை வள்ளலார் உள்வாங்கிக்கொண்டார். வள்ளலார் மரபு பெரியாரியத்தில் பொதிந்துள்ளது.  தமிழகத்தின் இனிவரும் சிந்தனைகளும் வள்ளுவர், சித்தர்கள், வள்ளலார், அயோத்திதாசர், பெரியார் என ஒரு மரபின் தொடர்ச்சியாகவே சமத்துவத்திற்கான பாதையை சமைக்க முடியும்.
தமிழில் படித்தே ஆகவேண்டிய நூல்களில் “கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப்போக…! ” எனும் நூலும் ஒன்று.

ராஜ்கௌதமன் நம் நன்றிக்குரியவர்.

என்சிபிஎச் வெளியீடு.

– தேவிகாபுரம் சிவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *