பொதுவுடைமைப் போராளிகள் லீப்னெக்ட் – ரோசா லக்சம்பர்க்
ரோசா லக்சம்பர்க் மார்ச் 5, 1871 இல் யூத இன நடுத்தரக் குடும்பத்தில் உருசியக் கட்டுப்பாட்டில் இருந்த போலந்து நகரான சாமொஸ்க்கில் பிறந்தார்.
1873 இல் குடும்பத்துடன் வார்சாவுக்குக் குடிபெயர்ந்த ரோசா 1886 இல் இருந்து போலந்தின் இடது சாரி பாட்டாளிக் கட்சியில் சேர்ந்தார். பொது வேலைநிறுத்தமொன்றை முன்னின்று நடத்தினார். இதனை அடுத்து இவரது கட்சியின் 4 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதில் கட்சி கலைக்கப்பட்டது. ஆனாலும் ரோசா தனது சகாக்களை இரகசியமாகச் சந்தித்து வந்தார்.
1889 இல் இவர் சுவிட்சர்லாந்துக்குத் தப்பிச் சென்றார். அங்கு சூரிச் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், கணிதம் ஆகிய துறைகளில் உயர் கல்வியைப் பெற்றார். இங்குதான் லியோ ஜோகிசத்சேவை சந்தித்தார்.
1893 இல் ஜோகித்சேவுடன் இணைந்து “தொழிலாளர் குரல்” என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். போலந்து சோசலிசக் கட்சியினரின் தேசியவாதக் கொள்கையை எதிர்த்துத் தமது பத்திரிகையில் எழுதினார். புரட்சியின் மூலமே போலந்தை விடுவிக்க முடியும் என்று நம்பினார். குறிப்பாகச் ஜெர்மனி, ஆஸ்திரியா, மற்றும் ரஷ்யாவில் புரட்சி வெடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். முதலாளித்துவத்துக்கு எதிராக அணிதிரள வேண்டும் என்பதும் இவரது கொள்கையாக இருந்தது.
1898 இல் குஸ்தாவ் லூபெக் என்பாரைத் திருமணம் புரிந்து ஜெர்மானியக் குடியுரிமை பெற்று பெர்லின் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்குச் ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியில் இணைந்து பணியாற்றினார்.
1914, ஆகஸ்டில் கார்ல் லீப்னெக்ட், கிளாரா ஜெட்கின், பிரான்ஸ் மேரிங் ஆகியோருடன் இணைந்து Die Internationale என்ற இயக்கத்தை லக்சம்பர்க் ஆரம்பித்தார். இவ்வியக்கம் 1916 ஆம் ஆண்டில் ஸ்பர்டாசிஸ்ட் முன்னணி என்ற பெயராக மாற்றப்பட்டது. ஸ்பார்ட்டக்கஸ் என்ற பெயரில் போருக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை எழுதிச் சட்டவிரோதமாக அச்சிட்டு வெளியிட்டார்கள். லக்சம்பர்க் ஜூனியஸ் என்ற புனைபெயரில் எழுதினார். ஜெர்மனியில் பாட்டாளி வர்க்கத்தைப் போருக்கெதிராகத் திரட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டரை ஆண்டுகள் ரோசா, கார்ல் லீப்னெக்ட் ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டார்கள்.
சிறையிலிருந்து இவர் எழுதிய கட்டுரைகளை இவரது நண்பர்கள் இரகசியமாக வெளியே எடுத்து வெளியிட்டார்கள். இவற்றில் ஒன்று “ரஷ்யப் புரட்சி”. இது போல்ஷ்விக்குகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தது. அவர்களின் சர்வாதிகாரத் தன்மையை எடுத்துக் கூறியிருந்தார். ஆனாலும் ஒரு கட்சி ஆட்சியை இவர் வெறுத்தாலும் பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தை ஆதரித்து எழுதினார்.
1918, நவம்பர் 8 இல் சிறையிலிருந்து இருவரும் விடுதலையானார்கள். விடுதலையான அடுத்த நாள் லீப்னெக்டுடன் இணைந்து பெர்லினில் சுதந்திர சோஷலிசக் குடியரசை அறிவித்தார்கள். ஸ்பார்ட்டகஸ் அணியை மீள நிறுவி “செங்கொடி” என்ற பத்திரிகையை ஆரம்பித்தார்கள். அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், மரண தண்டனைகளை ஒழிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் எழுதினார்கள்.
1918, டிசம்பர் 29 முதல் 31 வரை நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். இதனை அடுத்து ஜெர்மானியப் பொதுவுடமைக் கட்சி கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பர்க் தலைமையில் 1919, ஜனவரி 1 இல் நிறுவப்பட்டது.
1919 ஜனவரியில் பெர்லின் நகரில் இரண்டாவது புரட்சி வெடித்தது. வன்முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதை லக்சம்பர்க் எதிர்த்தார். ஆனாலும் “செங்கொடி” இயக்கத்தினரை, லிபரல்களின் பத்திரிகை அலுவலகங்களைத் தமது குழுவினர் ஆக்கிரமித்துக் கொள்ள ஊக்குவித்தது. இதனை அடுத்து, ஜெர்மானிய அதிபர் பிரீட்ரிக் ஈபேர்ட் இடதுசாரிகளை ஒழிக்கத் தமது படையினருக்கு உத்தரவிட்டார். 1919, சனவரி 15 இல் ரோசா, மற்றும் லீப்னெக்ட் இருவரும் பெர்லினில் பிரீகோர்ப்ஸ் என்ற வலது சாரி துணை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். லக்சம்பர்க் ஒட்டோ ரூஞ்ச் (1875–1945) என்பவனால் துப்பாக்கியால் அடித்துக் காயப்படுத்தப்பட்டு, லெப். ஹெர்மன் சூக்கோன் (1894–1982) என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரது உடல் பெர்லினில் லாண்ட்வெர் கால்வாயில் எறியப்பட்டது. கார்ல் லீப்னெக்ட் சுட்டுக் கொல்லப்பட்டு பெயர் குறிப்பிடப்படாமல் சவச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதேபோல், கே.பி.டி.யின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனை அடுத்து ஜெர்மானியப் புரட்சி முடிவுக்கு வந்தது. நான்கு மாதங்களுக்குப் பின்னர் 1919, ஜுன் 1 இல் லக்சம்பர்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு பெர்லின் மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டது.
இக்கொலைக்காக ஒட்டோ ருஞ்ச் இரண்டாண்டுகள் சிறையிலடைக்கப்பட்டான். ஏனையோருக்கு எவ்விதத் தண்டனையும் வழங்கப்படவில்லை.
லக்சம்பர்க், லீப்னெக்ட் இருவரது உடல்களும் பெர்லினில் உள்ள பிரீட்ரிக்சுபெல்ட் மத்திய சவச்சாலையில் அடக்கம் செய்யப்பட்டது. சோசலிஸ்டுகளும், பொதுவுடமைவாதிகளும் இவ்விடத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் கூடி அவ்விருவரையும் நினைவு கூர்கிறார்கள்.
கட்டுரையாளர் :
பெரணமல்லூர் சேகரன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.