தமிழும் யெச்சூரியும்
நான் தெலுங்கு குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டிலும் எனக்கு ஒரு பங்குண்டு என்று கோரும் உரிமை எனக்கு உண்டு. இன்று சென்னை என்று அழைக்கப்படுகிற மதராஸ் நகரில்தான் நான் பிறந்தேன். அந்தக் காலத்தில் பலராலும் அந்த நகரம் சென்னைப் பட்டணம் என்று அழைக்கப்பட்டது. மொழி மற்றும் பண்பாட்டில் நமக்குள் பல பொதுப் பண்புகள் உண்டு. யாதும் ஊரே யாவரும் கேளிர் அதில் ஒன்று. அனைத்து ஊரும் என் சொந்த ஊரே, அனைவரும் என் உறவினரே.
பி. பி. சி தொலைக்காட்சியில் சுவையான நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்தேன். அதன் பெயர் இந்தியாவின் கதை. ஆதி காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்தது குறித்து அந்தத் தொடரில் விளக்கப்பட்டது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், மனித மரபணுவியல் ஆய்விற்கும் நாம் நன்றி கூற வேண்டும். அந்த நிகழ்ச்சியில் ஆதி காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களின் மிச்ச சொச்சத்தில் காணப்பட்ட எம்130 மரபணு தமிழ் நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழ்ந்த கள்ளர் மக்களிடம் காணப்பட்ட மரபணுவுடன் ஒத்திருந்ததாக அந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏ. பிச்சப்பன் இதைப் பார்த்து வியந்து, இவர்கள் நம் எல்லோருக்கும் மூதாதையர்களாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆதாம் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தார் என்று கொண்டால், ஏவாள் இந்தியாவிலிருந்து வந்தார் என்று கூறலாம். எனவே உண்மையில் இது தாய்நாடு தான். மனித வளர்ச்சியின் துவக்கப்புள்ளியாக இருந்த தமிழகத்தில் வாழ்வதற்காக நாம் உண்மையிலேயே பெருமை கொள்ளலாம்.
மொழியின் பரிணாம வளர்ச்சி என்பது சமூகப் பரிணாம வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகும். காரல் மார்க்ஸ், மொழியை சிந்தனையின் உடனடி வெளிப்பாடு என்று கூறுவார். சிந்தனை தோன்றிய காலத்திலேயே மொழி தோன்றிவிட்டது. மொழி என்பது சிந்தனையின் நடைமுறை.
மொழி என்பது சமூகத்தின் விளைச்சல்களில் ஒன்று. சமூகத்தின் இயக்கத்தோடு இணைந்து மொழியும் இயங்குகிறது. சமூக வளர்ச்சியோடு இணைந்து மொழியும் வளர்ந்தோங்குகிறது. சமூகம் மறையும்போது மொழியும் மறைந்து விடும். சமூகத்திற்கு அப்பால் மொழி என்று ஒன்று இருக்க முடியாது. மொழி என்பது சமூகத்தின் வரலாற்றுடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளது. சமூகத்தின் வரலாற்றோடு இணைந்து மொழியின் வரலாற்றை ஆய்வு செய்யும்போதுதான் மொழியை உருவாக்கியவர்கள் மற்றும் வளர்த்தெடுத்தவர்கள் குறித்தும் மொழி மற்றும் அதன் வளர்ச்சிப்போக்கைக் குறித்தும் புரிந்து கொள்ள முடியும்.
மொழி என்பது சிந்தனையுடன் நேரடியாகப் பிணைக்கப்பட்டிருப்பதன் மூலம், வார்த்தைகளை உருவாக்கிப் பதிவு செய்கிறது. வார்த்தைகளிலிருந்து வாக்கியங்களைக் கோக்கிறது. இவ்வாறு மனிதனின் அறிவாற்றலுடன் கூடிய சிந்தனையும், சாதனையும் மனித சமூகத்திற்கிடையே சிந்தனைகளைப் பரிமாற்றம் செய்துகொள்வதை சாத்தியமாக்குகின்றன.
“ஒட்டுமொத்தத்தில் மொழி சமூகத்தில் சேவை செய்வதற்காக, மக்கள் தங்களுக்குள் கலந்துரையாடுவதற்காக சமூகத்தின் உறுப்பினர்கள் ஒத்திருப்பதற்காக, குறிப்பிட்ட சமூகம் தனிப்பட்ட மொழியினை உருவாக்கிக் கொள்வதற்காக, மக்களின் வர்க்க நிலை குறித்துப் பொருட்படுத்தாமல் அவர்கள் அத்தனை பேருக்கும் சமமாக சேவை செய்வதற்காக, மிகவும் நுட்பமான முறையில் மொழி உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஒட்டுமொத்த மக்களுக்கும் பொதுவானதொரு மொழியாக நிற்பதிலிருந்து அது தடம் மாறிச் செல்லுமானால், மற்ற சமூகக் குழுக்களிடமிருந்து அன்னியப்பட்டு, சில சமூகக் குழுக்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்குமானால், அது தன்னுடைய அறப்பண்புகளை இழந்து விடுமானால், சமூகத்தின் ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் ஊடாடும் சாதனமாக இருப்பதிலிருந்து அது தன்னைத் துண்டித்துக் கொண்டுவிடுகிறது. விரைவில் அது சில சமூகக் குழுக்களின் பிதற்றலாக மாறி தரம் தாழ்ந்துவிடும். விரைவில் அந்த மொழி மறைந்துவிடும்.
லத்தீன் போன்ற உலகின் ஏனைய செம்மொழிகளைப் போல் அல்லாமல் தமிழ் தழைத்தோங்கி வளர்ந்து கொண்டே இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், அது மக்கள் மத்தியில், குறிப்பாக எளிய மக்கள் மத்தியில் உயிரோட்டமான தொடர்பை இடையறாது வைத்துக் கொண்டிருப்பதே ஆகும்.
மாநாட்டின் சின்னத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின் உருவச் சித்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பாக ஒன்றைத் தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும். பெருமதிப்பிற்குரிய தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் ஐராவதம் மகாதேவன் முந்தைய மாநாட்டின்போது சமர்ப்பித்த ஒரு ஆய்வுக் கட்டுரையில், சிந்து சமவெளி நாகரிகக் கல்வெட்டுகள் திராவிடப் பண்பாட்டிற்குச் சொந்தமானவையாக இருக்கலாம் எனச் சுட்டிக் காட்டியிருந்தார். சிந்து சமவெளி நாகரிகத்தை ச் சேர்ந்த மக்களுக்கும் திராவிட இன மக்களுக்கும் இடையிலான நாகரிகத் தொடர்ச்சியை நிறுவிட அவர் முனைந்தார்.
சிந்து சமவெளி எழுத்துகளின் பொருளை உணர்தல் எனும் சீரிய பணியை ஆற்றி, அதற்காக கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினைப் பெற்றுள்ள டாக்டர் அஸ்கோ பர்போலாவும் கூட சிந்து சமவெளி எழுத்துகள் பழமையான தமிழுக்கு மிகவும் நெருக்கமாக உள்ள திராவிட எழுத்துகள் என்று கூறியிருப்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பல்வேறு மொழிகளுக்கிடையே காணப்படும் பொதுமைப்பண்புகள் மற்றும் அவை நவீன காலத்தில் பெற்றுள்ள வளர்ச்சி, அவற்றின் செறிவான பண்பாட்டு மரபு ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி, மேலும் வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளையும் எடுத்துக்காட்டாகக் கொள்வோம். 2005 ஆம் ஆண்டில் தமிழுக்கு மிகவும் பொருத்தமான முறையில் செம்மொழித் தகுதி வழங்கப்பட்டது. தொடர்ந்து 2008 ஆம் ஆண்டில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி வழங்கப்பட்டது.
கடந்த தலைமுறையில் காபியின் மணத்தை நுகர்ந்துகொண்டு வானொலியில் திருமதி. எம். எஸ் சுப்புலெட்சுமி அவர்களின் இசையைக் கேட்டுக்கொண்டும் அதிகாலையில் எழும் பழக்கத்தைக் கொண்டிருந்தோம். கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜர், ஷியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவருமே அவர்களது தாய்மொழி வேறு வேறாக இருந்தாலும் தெலுங்கு மொழியில் தான் தங்களது இசைப் பாடல்களை வடித்தார்கள். ஆயினும் இந்த இசை கர்நாடக இசை என்றுதான் அழைக்கப்படுகிறது. இவ்வாறு வேற்றுமைக்குள் இணக்கமான ஒற்றுமை காணும் பண்பு மிகவும் உன்னதமானது. தெலுங்கில் பாடப்பட்ட இசையைச் சிரமமின்றி தமிழிலோ அல்லது கன்னடத்திலோ மொழி மாற்றி இசைத்திட முடியும். இதுதான் நம்மிடையே உள்ள பொதுமைப்பண்பு.
இந்த எளிய உண்மையை மறுத்து, தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருவையாற்றில் நடைபெற்ற தியாகராசர் உற்சவத்தின்போது திருமதி. எம். எஸ். சுப்புலெட்சுமி அவர்களைக் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் பாட அனுமதிக்கவில்லையாம். அதற்கு ஒரே காரணம், அவர் தெலுங்கு மொழியில் பாடாமல் தமிழில் பாடினாராம். வரலாறு நமக்கு போதித்துள்ள உன்னதப் பண்புகளை மேம்படுத்துவதன் மூலம் இத்தகைய இழி முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும்.
தேசிய இனத்தை வரையறை செய்யும் நான்கு அவசியமான அம்சங்களில் ஒன்றாக மொழியை நாங்கள் கருதுகிறோம். விடுதலைப் போராட்டம் நடந்துகொண்டிருந்த காலத்தில் இத்தகைய உணர்வின் அடிப்படையில் தான் மொழிவழி மாநிலம் என்ற முழக்கத்தை முன்வைத்தோம். தெலுங்கு பேசும் மக்களுக்காக விசால ஆந்திரா, மலையாள மொழி பேசும் மக்களுக்காக ஐக்கிய கேரளம், மராத்தி மொழி பேசும் மக்களுக்காக சம்யுக்த மகாராஷ்ட்டிரா மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று போராடினோம். அதேபோல் தமிழ் நாட்டிலும் தமிழ் மொழியின் மேன்மைக்காக கம்யூனிஸ்ட்டுகள் மகத்தான பங்களிப்பினைச் செய்துள்ளனர்.
இந்த இடத்தில் தியாகி சங்கரலிங்கனாரை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். மதராஸ் ராஜதானி என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றக் கோரி அவர் 64 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். தாம் இறந்த பிறகு தன்னுடைய உடலை கம்யூனிஸ்ட் கட்சியிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.
முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும் தொழிற்சங்கத் தலைவருமான பி. ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம், என். சங்கரய்யா ஆகியோர் ஒன்றுபட்ட சென்னை ராஜதானி சட்டமன்றத்தில் தாய்மொழியில்தான் பேசுவோம் என்று பிரகடனம் செய்து, தமிழில்தான் பேசினார்கள். ஏ.நல்லசிவன் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது தமிழில் தந்தி கொடுக்கும் முறைக்காகப் போராடினார். இவர்கள் அனைவரும் உண்மையில் தமிழுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கான போராட்டத்தில் நம் முன்னோடிகளாக விளங்கினார்கள். மக்களின் மொழியில் ஆட்சி நடைபெறாவிட்டால் மக்களாட்சி என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லை என்று அவர்கள் நம்பினார்கள்.
திருவள்ளுவர் கூறியுள்ளது போல, ’காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்’ (அதாவது காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத மன்னனைத்தான் உலகம் புகழும் என்பது இதன் பொருள்). மக்களாட்சி வெற்றிகரமாக நடந்திட, அரசு நிர்வாகத்துடன் எளிதில் அணுகும் தன்மை மிகவும் முக்கியமாகும். ஆளுபவர்களையும் ஆளப்படுபவர்களையும் இணைத்திடும் ஒன்றாக மட்டுமின்றி, மொழி என்பது ஆளுபவர்களும் ஆளப்படுபவர்களும் எத்தகைய உறவைக் கொண்டுள்ளனர் என்பதை நிர்ணயிக்கும் கருவியாகவும் உள்ளது.
மொழி, சமூகத்தின் மிக முக்கியமான அடையாளமாக விளங்குகிறது. அரசியல், பண்பாடு மற்றும் சமூக வாழ்வில், மக்களின் அன்றாட நடவடிக்கைகளிலும் அவர்களுக்கு இடையே எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளும் கருவியாகவும் மொழி திகழ்கிறது.
இந்தப் பின்னணியில் அரசுகள் மிக முக்கியமான பணியை ஆற்ற வேண்டிய நிலையில் உள்ளன. மும்மொழியைத் திணிக்கும் நேரு மாடல் என்ற வலைக்குள் சிக்கி விடாமல், அந்தந்த மண்ணில் பேசப்படும் மொழிகளின் உரிமை நிலை நிறுத்தப்பட வேண்டும், குறுகிய மொழி வெறி மனப்பான்மையால் இதைச் சாதிக்க முடியாது. அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படுவதோடு அந்த மொழிகள் தழைத்தோங்கி வளர சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
இன்றைய உலகில் எந்தவொரு மனிதனும் தன்னைத் தனித்த அடையாளத்துடன் நிறுத்திக்கொள்ள முடியாது. இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள் பேசக்கூடிய சூழலில் பன்முக அடையாளத்தைப் பேண வேண்டியுள்ளது.
எழுதப்பட்ட வரலாறு நெடுகிலும் இன்றைய யதார்த்த வாழ்விலும் இந்தியர்களாகிய நாம் நமது தாய்மொழி, பணியாற்றுமிடத்தில் பயன்படும் மொழி, படைப்பாற்றலை வெளிப்படுத்தும் மொழி என்று குறைந்தபட்சம் மூன்று மொழிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் முன்பு குறிப்பிட்ட கர்நாடக இசை எடுத்துக்காட்டு இதற்கும் கூடப் பொருந்தும். இவ்வாறு நாட்டின் பல்வேறு அடையாளங்களில் எந்தவொரு குறிப்பிட்ட அடையாளத்திற்கும் தனி முக்கியத்துவம் அளித்துவிடாமல், அனைத்து அடையாளங்களையும் பேணி வளர்க்க வேண்டியது அரசின் கடமையாகும்.
எனது உரையை நான் நிறைவு செய்வதற்கு முன்பு, இந்த மாநாட்டின் கவனத்திற்குச் சில ஆலோசனைகளை முன்வைக்க விரும்புகிறேன்.
தமிழுக்குப் பழமையான மரபு உண்டு. இன்றைக்கும் மிகவும் பொருந்தக்கூடிய பெருமைமிகு இலக்கியங்களைத் தமிழ் தன்னகத்தே கொண்டுள்ளது. இது தவிர ஏட்டில் எழுதப்படாத வாய்மொழி வரலாற்றுச் செல்வங்களையும் அபரிமிதமாகக் கொண்டுள்ள மொழி தமிழ். இத்தகைய நாட்டுப்புற இலக்கியங்களை உடனடியாக ஆவணப்படுத்தி என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டதாக மாற்றிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நாட்டுப்புற இசை, நாடகம், கூத்து, நாட்டுப்புறக் கலைகள் அனைத்தும் மதிப்பு மிக்க பொக்கிஷங்களாக கிராமப்புற மக்கள் மத்தியில் விளங்குகின்றன. இவற்றைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை இம்மாநாடு எடுக்குமென்று நான் நம்புகிறேன்.
தமிழ்ச் சமூகம், தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், தலித் மற்றும் பெண்ணுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களால் செழுமையடைந்த ஒன்றாகும். இந்த இயக்கங்களின் இலக்கியப் பங்களிப்பு மூலம் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ள செல்வாக்கு மற்றும் வளர்ச்சி குறித்து இம்மாநாடு சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் போன்ற அமைப்புகளை இத்தகைய மாநாட்டின் அங்கமாக மட்டுமின்றி, இத்தகைய திட்டங்களிலும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
’பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்’ என்கிறது திருக்குறள். அதாவது அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமை உடையவர்கள் பெருமைக்குரியவர்கள் ஆவார்கள்.
தமிழ் மொழியை மேலும் தழைத்தோங்கச் செய்வதற்காகவும், மேலும் வளர்ப்பதற்காகவும் அதன் வளமான பாரம்பரியங்களிலிருந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து கற்றுக்கொள்வோம்.
– செம்மொழி மாநாட்டில் தோழர் சீத்தாராம் யெச்சூரி வழங்கிய உரை!
எழுதியவர் :
ராஜசங்கீதன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.