சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை 2024 | Communist Party of India (Marxist) Tamil Nadu State Committee appeals to Tamil Nadu voters

 

மதவெறி பாஜக அரசை வீழ்த்துவோம்!

மதச்சார்பற்ற அரசை மத்தியில் அமைத்திடுவோம்!!

இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்துப் 

புதிய வரலாறு படைத்திடுவோம்!!!

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மத்தியக் குழு சார்பில் புதுதில்லியில் விரிவான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் இணைப்பாகத் தமிழக வாக்காளர்களுக்கு இந்த வேண்டுகோள் வெளியிடப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

தமிழ்நாடு மாநிலக்குழு

11,வைத்தியராம் தெரு, தி.நகர், சென்னை-600 017

044 - 24341205

 

விடுதலைப் போராட்டக் களத்தில் உருவான இந்திய கம்யூனிச இயக்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குமுறை, சிறைவாசம், சித்ரவதை அனைத்தையும் நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டது. தேச விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியது.விடுதலைக்குப் பிறகும் மக்களுக்கான போராட்டங்கள் தொடர்ந்தன. 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது முதல்  இன்று வரை மக்கள் நலன் என்ற மையப் புள்ளியிலிருந்து வழுவாமல் செயலாற்றி வருகிறது. எண்ணற்ற தோழர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, நேர்மையான அரசியல் நெறிகள், மனித குல விடுதலைக்கான மார்க்சியத் தத்துவம், இந்திய முன்னேற்றத்துக்கான மாற்றுத் திட்டத்தோடு, இந்திய அரசியலில் இருள் அகற்றும் ஒளி விளக்காகச் சுடர்விட்டு வருகிறது. 

இடதுசாரிகளின் வலிமையைப் பொறுத்தே இந்திய அரசியலின் திசை வழி தீர்மானிக்கப்படும். வலதுசாரிகளின் வல்லாதிக்கத்தால், இந்திய மக்கள் அனைவரது வாழ்வும் சின்னாபின்னமாகச் சிதைக்கப்பட்டு வருகிற நிலையில், நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியமாகிறது. காலத்தின் குரலாகவும், களப்பணியின் நாயகர்களாகவும் செயல்பட்டு வருகிற கம்யூனிஸ்டுகள் சட்டங்களை உருவாக்குகிற மன்றங்களில் கணிசமாக இருப்பதன் மூலமே தேசத்தைப் பாதுகாக்க முடியும். 

வருகிற சில வாரங்களில் 18வது நாடாளுமன்றத் தேர்தலை நாடு சந்திக்க உள்ளது. தேசத்தை இருண்ட காலம் நோக்கி அழைத்துச் செல்லும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணியைத் தோற்கடித்து, மதச்சார்பற்ற மாற்று அரசாங்கத்தை ஆட்சியில் அமர வைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சூளுரைத்துள்ளது. 

தேர்தலின் முதல் கட்டமான ஏப்ரல் 19ம் தேதி, தமிழகமும், புதுவையும் தேசத்தின் திசைவழியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றப் போகின்றன. கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியின் வேதனைகளை எண்ணிப் பார்த்து, தமிழகத்தை அவர்கள் தொடர்ந்து வஞ்சித்த வரலாற்றை நெஞ்சில் நிறுத்தி, மாற்றத்தை நோக்கி அடி எடுத்து வைக்கக் கிடைத்திட்ட வாய்ப்பாக இந்தத் தேர்தலைப் பயன்படுத்திட வேண்டும்.

அகில இந்திய அளவில் “இந்தியா கூட்டணி” உருவெடுத்து மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்று வருகிறது.தேர்தல் பத்திர ஊழல் வெளிவந்த பின்னணியில் பாஜகவின் ஊழல் எதிர்ப்பு மாய பிம்பம் தவிடு பொடியாகி உள்ளது. அரசியல் ஊழலைத் தேர்தல் பத்திரத் திட்டம் சட்டரீதியாக்குகிறது என மிகச் சரியாக விமர்சித்ததோடு தேர்தல் பத்திரத்தின் மூலம் ஒரு ரூபாய் கூட நன்கொடை வாங்காமல் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு வெற்றியும் பெற்ற இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெழுந்துள்ளது. 

இத்தகைய நிகழ்வுகளால் பாஜக  பதட்டமடைந்து, அமலாக்கத் துறை மூலம் எதிர்க் கட்சிகளின் செயல்பாட்டைப் பல்வேறு விதங்களில் முடக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் டில்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆளுநர்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் செயல்பாடு சீர்குலைக்கப்பட்டு வருகிறது.தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசு பரிந்துரைப்பவர்களால் நிரப்பப்படுகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிச் சீர்குலைக்கப்படுகின்றன. மாநில உரிமைகள் சிதைக்கப்படுகின்றன.நாடாளுமன்ற ஜனநாயகம் காவு கொடுக்கப்படுகிறது. நாட்டையும் நாட்டு மக்களையும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை மாண்புகளையும் பாதுகாக்க வேண்டும் என்றால் பாஜகவை அதன் அணியை ஆட்சிப் பொறுப்பில் இருந்து தூக்கி எறிய வேண்டும்.

ஒன்றிய பாஜக அரசு கடந்த இரண்டு தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற வில்லை.“ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம், விலைவாசியைக் குறைப்போம், கருப்புப் பணத்தை மீட்டெடுத்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம், வேளாண்  விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு கூடுதல் விலை தருவோம், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்குவோம்”என அவர்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் தண்ணீர் மேல் கோலமாகத் தடம் அழிந்து விட்டன. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.வரி போன்ற நடவடிக்கைகள் மூலம் முறைசாராத் துறை, சிறு குறு நடுத்தர தொழில்கள் அனைத்தும் நொறுங்கியுள்ளன.

பட்டியலின, பழங்குடியின மக்கள், இசுலாமியர்கள் மீதான கொலை வெறித்தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை அதிர்ச்சியளிக்கும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை, கடன் ரத்து செய்தல் அதிகரித்துள்ளது.பெருமளவில் விவசாய நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்படுகின்றன. விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர். அனைவருக்கும் கல்வியும், ஆரோக்கியமும் என்பன வெற்று வார்த்தைகளாக நிறமிழந்து நிற்கின்றன.ரஃபேல் போர் விமான ஊழல் சந்தி சிரிக்கிறது. அதானி  பங்குச்சந்தை மோசடியில் திறமையான விசாரணை வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. CAG அறிக்கை 7.5 லட்சம் கோடி  பெறுமானம் உள்ள ஊழல்களைப் பட்டியலிட்டுள்ளது.தற்போது தேர்தல் பத்திர ஊழலிலும் பாஜக அம்பலப்பட்டு நிற்கிறது.மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைத் தேர்தல் ஜூம்லா என்று ஊடகங்கள் எள்ளி நகையாடுகின்றன.ராணுவ வீரர்களின் தியாகத்தையும், விஞ்ஞானிகளின் சாதனைகளையும் வாக்குகளாக்கும் மோசமான நடைமுறையைப் பின்பற்றுகின்றனர்.

தமிழகத்தில் நீட் தேர்வைத் திணித்தன் மூலம், மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு உலை வைத்தனர். இயற்கைப் பேரிடர் நிகழும் போதெல்லாம் தமிழக அரசு கேட்கும் நிவாரண தொகையில் சராசரியாக 5 சதவிகிதம் மட்டுமே கொடுப்பதும் கடைசியாகச் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களையும் தென் தமிழகத்தையும் கடுமையான மழை வெள்ளம் பாதித்த போது ஒரு ரூபாய் கூட நிவாரணம் கொடுக்காமல் தமிழகத்தை வஞ்சிப்பதும் பாஜக ஆட்சி என்பதை மறந்து விடக்கூடாது. தமிழகத்துக்குத் தர வேண்டிய பல நிதிகள் நிலுவையில் நிற்கின்றன.பின்னலாடை, கைத்தறி, விசைத்தறி முதல் பட்டாசு, தீப்பெட்டித் தொழில் வரை ஒன்றிய அரசின் கொள்கைகளால், பாராமுகத்தால் நலிந்து கொண்டிருக்கின்றன.தொழிலாளர்களும், சிறு குறு நடுத்தர தொழில் முனைவோரும் கடும் பாதிப்புக்குள்ளாகி தத்தளிக்கின்றனர்.நடுத்தர மக்களும் கூடச் சங்கடங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

தமிழக நிலை

தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பல்வேறு மதச்சார்பற்ற கட்சிகளும் இடம்பெற்ற திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, திமுக ஆட்சியில் அமர்ந்தது. பாஜகவின் மதவாதம் மற்றும் எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மாநில உரிமைகள், மொழிப் பாதுகாப்பு, நிதிப் பகிர்வு அதிகரிப்பு போன்றவற்றிற்காகவும் திமுக அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை உள்ளிட்ட, சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றி வருகிறது.

தமிழ்நாடு ஆளுநர் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கும் விரோதமாகச் செயல்பட்டு வருகிறார். நீட் தேர்வு விலக்கு உள்ளிட்டுத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது, தமிழகத்தின் பாரம்பரியமான தலைவர்களை அவமரியாதை செய்வது, அவதூறு பேச்சுகளைப் பேசுவது, ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கோட்பாடுகளைப் பரப்புவது, அரசிற்கு எதிராகப் போட்டி அரசாங்கம் நடத்துவது உள்ளிட்டு ஒன்றிய பாஜக அரசின் தூண்டுதலின் பேரிலேயே தொடர்ந்து தமிழகத்திற்கு விரோதமான போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். 

2011-2021 ஆட்சி அதிகாரத்திலிருந்து தற்போது எதிர்க்கட்சியாகச் செயல்படும் அதிமுக மாநில உரிமைகளையும், மக்கள் நலன்களையும் காவு கொடுத்து, ஒன்றிய ஆட்சியாளர்களிடம் சரணாகதி அடைந்து கிடந்தது. விவசாயி விரோத வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தொழிலாளர் உரிமைத் தொழிற்சங்க உரிமையை சீர்குலைக்கும் சட்டத் தொகுப்புகள், தேர்தல் பத்திரத் திட்டம் போன்ற அனைத்தையும் ஆதரித்தது மட்டுமல்ல, பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த பிறகு கூட அவை தவறு எனக் கூறுவதற்கு முன் வரவில்லை. 

ஊழல் சாம்ராஜ்யத்தைப் பாதுகாக்கும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை ஆதரித்து வரும் அதிமுக – தேமுதிக மற்றும் பாஜக – பாமக சந்தர்ப்பவாதக் கூட்டணிகளை முறியடித்து, மத்தியில் மதச்சார்பற்ற அரசாங்கத்தை நிறுவி, இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்த உயரிய நோக்கோடும், தமிழக நலன் காக்கவும், திமுக, இடதுசாரிகள், மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து உருவாக்கிய  மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கம்பீரமாகத் தொடர்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மக்களின் ஆதரவு கோரி வருகிறது.

மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஏனைய தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இவர்கள் அனைவரையும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

18 வது நாடாளுமன்றத் தேர்தல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வந்து போகிற சராசரித் தேர்தல் அல்ல. தேசத்தின் எதிர்காலத்தை, அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை விழுமியங்களான ஜனநாயகம், மதச் சார்பின்மை, கூட்டாட்சி, அறிவியல் கண்ணோட்டம் ஆகியவற்றின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய தேர்தல்.

மக்கள் நலன்  காக்க, தேசத்தின் நலம் காக்க மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில் அனைத்து முயற்சிகளும் எடுப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உறுதி கூறுகிறோம்.  தமிழகத்தில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க அனைத்து வாக்காளர்களும் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.

கீழ்க்கண்ட முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற நாடாளுமன்றத்தில் வலுவாகக் குரலெழுப்புவோம்.

அரசமைப்புச் சட்டம்

 • ஜனநாயகம், கருத்துரிமை, மதச் சார்பின்மை, கூட்டாட்சி, பாலின சமத்துவம், பகுத்தறிவு சார்ந்த அறிவியல் அணுகுமுறை உள்ளிட்ட மாண்புகளை மீட்டெடுக்கவும், இந்தியக் குடியரசின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்கவும் வலியுறுத்தப்படும்.
 • மத்தியப் புலனாய்வுத் துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கிஉள்ளிட்ட அரசமைப்பு சட்டப்படி நிறுவப்பட்ட  அமைப்புகளின் சுயேச்சைத் தன்மையை மீட்டெடுப்போம்.
 • பீமா கோரேகான் வழக்கு உட்பட ஊபா பிரிவுகளின் கீழ் தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப்பெற வலியுறுத்தப்படும்.
 • ஊபா, ஆப்ஸ்பா, பொதுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கொடுங்கோன்மைச் சட்டங்களையும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தையும் திரும்பப் பெற பாடுபடுவோம்.
 • காசி, மதுரா உள்ளிட்ட சிறுபான்மை மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் வகையில் மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ வலுப்படுத்தச் செய்வோம்.
 • காஷ்மீரில் அடக்குமுறைகளைக் கைவிட்டு அனைத்து அரசியல் உரிமைகளையும் வழங்கிடச் செய்வது. காஷ்மீர் மாநிலத்தை மீண்டும் ஒருங்கிணைத்து உடனடியாகத் தேர்தல் நடத்த வலியுறுத்துவோம்.
 • இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சான்றுகள் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக இயற்றப்பட்டுள்ள மூன்று புதிய சட்டங்களைத் திரும்ப பெற வற்புறுத்துவோம்.
 • சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்டத்தைத் திரும்பப் பெறச் செய்வது, தகவல் பெறும் உரிமை சட்டம், இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம், லோக்பால் சட்டம் ஆகியவற்றில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்துவோம்.

மாநில உரிமை

 • மாநில சுயாட்சியை மையப்படுத்தி, அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்க ஒன்றிய மாநில உறவுகள் சீரமைப்பு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் மற்றும் நிதி ஆதாரம்; கலைக்கப்பட்ட திட்டக்குழு, முடக்கப்பட்ட மாநிலங்களிடை மன்றம், தேசிய வளர்ச்சிக் கவுன்சில் ஆகிய அமைப்புகளை மீண்டும் உருவாக்கவும்,கடந்த 10 ஆண்டுகளில் மாநில உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாற்றி அமைக்க வலியுறுத்துவோம்.
 • ஆளுநர் பதவி தேவையில்லை என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு; எனினும் தற்போது மாநில அரசின் ஆலோசனை பெற்று ஆளுநரை நியமித்தல், மாநிலப் பல்கலைக் கழகங்களுக்கு வேந்தராக ஆளுநருக்கு பதில் முதலமைச்சரை நியமனம் செய்ய வற்புறுத்துதல், தமிழகத்திற்கு வர வேண்டிய உரிய நிதிகளைக் கிடைக்கச் செய்யப் பாடுபடுவோம்.

வேலைவாய்ப்பு

 • வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்குதல்; வேலை கிடைக்கும் வரை வேலையில்லாக் கால நிவாரணத் தொகை  வழங்குதல், ஒன்றிய, மாநில அரசுகளின் அனைத்துத்துறை அலுவலகங்களிலும் உள்ள காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வற்புறுத்துவோம் 
 • கிராமப்புற உழைப்பாளி மக்களின் நலனைப் பாதுகாத்தல், ஊரக வேலை உறுதிச் சட்டத்தை விரிவுபடுத்தி 200 நாட்கள் வேலையளிப்பது, தினக்கூலியாக ரூ. 600/. ஆக வழங்கிடுதல், உரிய நிதி ஒதுக்கீட்டுடன், உறுதியாக அமல்படுத்துதல், நகர்ப்புற வேலை உறுதிச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு வலியுறுத்துவோம், 
 • அரசாணை 152, 115, 131 ரத்து செய்தல், உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளில் ஒப்பந்தமுறை ஒழிக்கப்பட்டு ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தல், அங்கன்வாடி, மதிய உணவு, மருத்துவச் சேவை உள்ளிட்ட திட்டங்களில் பணிபுரியும் திட்ட ஊழியர்களை நிரந்தரப்படுத்துதல் மற்றும் சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலையை அடிப்படை உரிமையாக்கி சட்டமாக்குவதோடு, மக்கள் தொகை எண்ணிக்கைக்கேற்ப புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வற்புறுத்துவோம்.

வரி விதிப்பு / பகிர்வு

 • கார்ப்பரேட்டுகள், பில்லியன் கோடீஸ்வரர்கள் மீது கூடுதல் வரி விதிப்பு (நேர்முக வரி அதிகரிப்பு) என்கிற முறையில் மாற்றம்; செல்வ வரியை மீண்டும் கொண்டு வர வலியுறுத்துவோம், 
 • செஸ் உட்பட அனைத்து வரிகளிலும் மாநிலங்களுக்கு உரிய நிதிப்பகிர்வு அளிக்க வலியுறுத்துவோம்.

கல்வி

 • கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருதல், கல்விக்கு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 6 சதவிகித ஒதுக்கீடு;தேசிய கல்விக் கொள்கை 2020ஐ திரும்பப் பெறுதல், மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துதல், அனைத்துத் தரப்பினரும் அணுகும் விதத்திலும் சுதந்திரச் சிந்தனைகளைப் பாதுகாக்கும் விதத்திலும் மாற்றி அமைத்தல், கல்வி, ஆரோக்கியம், குடியிருப்பு போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்கக் குரலெழுப்புவோம்.
 • நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்குப் பெற தமிழ்நாடு அரசு வகை செய்துள்ள சட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் பெறவும், க்யூட் தேர்வை ரத்து செய்யவும் வலுவாகக் குரலெழுப்புவோம்.
 • மதரீதியில், வகுப்புவாதத்தைப் புகுத்தும் வகையில் திணிக்கப்பட்ட அனைத்துக் கருத்துகளையும், பாடங்களையும் நீக்கவும் – NCERT மூலம் நீக்கப்பட்ட வரலாறு மற்றும் டார்வின் கோட்பாடுகள் உள்ளிட்டவற்றைச் சேர்க்கவும்-  NCERR, SCERT கவுன்சில் உறுப்பினர்களை மறுநிர்ணயம் செய்யவும், ஏற்கனவே செய்யப்பட்ட வரலாற்றைத் திருத்தும் முயற்சிகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.
 • ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் புதிதாக ஒரு மத்தியக் கல்வி நிறுவனத்தைத் தொடங்க குரலெழுப்புவோம்.

விவசாயம்

 • வேளாண் தொழிலையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஒன்றிய அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை முற்றாகத் திரும்ப பெறச் செய்ய வலியுறுத்துவோம்.
 • அனைத்து விவசாயக் கடன்களையும் ரத்து செய்வது, வேளாண் துறைக்குக் கூடுதல் அரசு முதலீடு, உற்பத்திப் பொருட்களுக்கு நியாய விலை, அரசு கொள்முதல், விவசாயக் கடன் எளிதில் கிடைத்தல், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தல்,நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் முழுப்பயன்பெறும் வகையில் பயிர்க்காப்பீடுத் திட்டம், வேளாண் துறை உள்கட்டமைப்பு, வேளாண் சார்ந்த முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப் போராடுவோம்.
 • விவசாயத் தொழிலாளிகளுக்குத் தனித்துறை உருவாக்கம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த மத்திய சட்டத்தைக் கொண்டு வரக் குரலெழுப்புவோம்.
 • நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றங்களைக் கணக்கில் கொண்டு நீர் ஆதாரங்களைப் பெருக்குவதற்கும், நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைப் பலப்படுத்துவதற்கும் முன்னுரிமை வழங்க வலியுறுத்துவோம்.
 • நிலங்களை வரைமுறையற்றுக் கையகப்படுத்தும் கொடுமைக்கும், குடியிருப்புகளை விட்டு மக்களை வெளியேற்றும் அவல நிலைக்கும் முற்றுப்புள்ளி வைத்து, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் திரளைப் பாதுகாக்கும் விதத்தில் நிலம் குறித்த கொள்கையையும், சுற்றுச்சூழல் கொள்கையையும் உருவாக்க வற்புறுத்துவோம்.
 • நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்தி நிலமற்ற கிராமப்புற வேளாண் குடும்பங்களுக்கு நில விநியோகம் செய்யக் குரலெழுப்புவோம்.

தனியார்மயத்தைக் கைவிடுதல் – பொதுத்துறையைப் பாதுகாத்தல் :

 • கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் துறைகளை தனியார்மயமாக்குவதைக் கைவிட வற்புறுத்துவோம்.
 • காப்பீடு, வங்கி, இரயில்வே, ஆற்றல் துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதைக் கைவிட வலியுறுத்துவோம்.
 • மின்சாரத் திருத்தச் சட்டத்தையும், உதய் மின் திட்டத்தையும் திரும்பப் பெற வலுவாகக் குரலெழுப்புவோம்.

தொழிலாளர் நலன் / தொழில் பாதுகாப்பு

 • தொழிலாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும் ஒன்றிய அரசின் நான்கு சட்டத் தொகுப்புகளை உடனடியாகத் திரும்பப் பெற்றுத் தொழிலாளர்களுக்குச் சாதகமாக மாற்றுவோம்.தொழிலாளர் நல சட்டங்களைப் பலப்படுத்தப் போராடுவோம்.
 • சிறு-குறு நடுத்தர தொழில்கள் நலிவடையச் செய்யும் கொள்கையினைக் கைவிடுவது, இத்தொழில்களைப் பாதுகாத்திடச் சிறப்பு திட்டங்களை வலுப்படுத்துதல், பன்னாட்டு நிறுவனங்கள் இந்நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டுச் செயல்படுவதை உறுதி செய்தல், சிறு வணிகத்தை அழிக்கும் பெருந்தொழில் ஆன்லைன் வர்த்தகத்தைத் தடை செய்வது வலியுறுத்தப்படும்.
 • அரிசி உள்ளிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும், உயிர் காக்கும் மருந்துகளுக்கும், ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கும் ஒன்றிய பாஜக அரசு விதித்துள்ள அநியாய ஜி.எஸ்.டி. வரி உயர்வைத் திரும்ப பெற வலியுறுத்துவோம்.
 • ஒன்றிய பாஜக அரசின் நாசகர பொருளாதாரக் கொள்கையினால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.
 • விலைவாசி உயர்வுக்கேற்ப அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.26,000/- மாத ஊதியம் நிர்ணயம் செய்தல்,இ.பி.எப். ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ. 9,000/- ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப் பாடுபடுவோம்.
 • அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான ரகசிய வாக்கெடுப்பு நடத்திக் கூட்டு பேர உரிமையை நிலைநாட்டவும், குறைந்தபட்சம் 10 விழுக்காடு பெறும் சங்கங்களை அங்கீகரிக்கவும் வலியுறுத்துவோம்.
 • பாரதீய நியாய சன்ஹிதா “பி.என்.எஸ்.” எனும் பெயரில் வாகன விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் 10 ஆண்டு சிறை, ரூ. 7 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்டத்தைத் திரும்பப் பெறவும், காலாவதியான சுங்கச் சாவடிகளை மூடி, கட்டணங்களைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவோம்.
 • அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த சமூகப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றுதல், பெண் தொழிலாளர்களுக்குச் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்குதல், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் கமிட்டி அமைத்தல் வலியுறுத்தப்படும்.
 • புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வர வலுவாகக் குரெலழுப்புவோம்.
 • ஐடி ஊழியர்களைத் தொழில் தகராறு சட்டத்தின் கீழ் கொண்டு வருவதும், அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சட்டவிரோதப் பணி நீக்கம் மற்றும் ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தப்படும்,
 • சிறு-குறு தொழில்களைப் பாதுகாப்பதற்கும், மின் கட்டணம் – சொத்துவரி உயர்வுகளை மறு ஆய்வு செய்வதற்கும் வலியுறுத்தப்படும்.
 • சிறு-குறு தொழில் முனைவோர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் எளிதாகக் கிடைக்கச் செய்ய வற்புறுத்துவோம்.
 • பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய்க் கால விடுமுறையை உரிமையாய்க் கொண்டுவரக் குரலெழுப்புவோம்.

தமிழக வளர்ச்சி / தமிழ் வளர்ச்சி

 • கிடப்பில் போடப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல், மதுரை விமான நிலையத்தைப் பன்னாட்டு முனையமாகத் தரம் உயர்த்தல், உச்சநீதிமன்ற கிளையைத் தமிழகத்தில் நிறுவுதல், வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேளாண்சார் தொழிற்சாலைகள் அமைத்தல் வற்புறுத்தப்படும்.
 • விழுப்புரம்-தஞ்சாவூர் ரயில்பாதை இருவழிப்பாதையாக மாற்ற வலியுறுத்துவோம். தமிழக வளர்ச்சிக்கான ரயில்வேத் திட்டங்களை கொண்டு வருதல், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியினருக்கு ரயில் பயணச் சலுகையை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் வலியுறுத்தப்படும்.
 • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு குரலெழுப்புவோம்.
 • தமிழ் மொழியை ஆட்சி மொழியாக, அலுவல், வழக்காடு, பயிற்று மொழியாக ஆக்குதல், தமிழ் வளர்ச்சிக்கு உரிய நிதியை ஒன்றிய அரசிடமிருந்து பெறுதல்,அகில இந்திய அனைத்துத் தேர்வாணையப் போட்டித் தேர்வுகளை தமிழில் எழுதும் ஏற்பாட்டை உறுதிப்படுத்துதல் வற்புறுத்தப்படும்.

உயர்மட்ட ஊழல் தடுப்பு

 • இயற்கை வளங்களை அரசின் கட்டுப்பாட்டில் வைத்தல், கனிம வளத்துறை வியாபாரத்தில் ஊழல் முறைகேடுகளைக் களைந்து அரசுத்துறை மூலம் செயல்படுத்த வலியுறுத்தப்படும்.
 • கார்ப்பரேட்டுகளின் வாராக் கடன் பட்டியலை வெளியிடுதல், கடன்களை வசூலித்தல், ரஃபேல் போர் விமான ஊழல், அதானி பங்குச் சந்தை மோசடிப் பிரச்சனைகளில் சிறப்புப் புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடுதல், லோக்பால், லோக் ஆயுக்தா சுதந்திரமாக செயல்பட உகந்த சூழலை உருவாக்குதல் வற்புறுத்தப்படும்.
 • தேர்தல் பத்திர ஊழலில் ஈடுபட்டோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.
 • ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளிவந்துள்ள பின்னணியில் அதானி குழுமம் செய்துள்ள முறைகேடுகள் தொடர்பில் நம்பத்தகுந்த விசாரணை நடத்த வலியுறுத்துவோம்.

தேர்தல் சீர்திருத்தம்

 • ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் பெறக் கூடிய விதத்தில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களைஅமலாக்க வலியுறுத்தப்படும்.
 • தேர்தல் ஆணையர்கள், நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின் அரசுப் பொறுப்புகளுக்கோ, ஆளுநர், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினராகவோ தேர்வு செய்யப்படுவதை சட்டரீதியாகத்தடுக்க வற்புறுத்தப்படும்.

ஒடுக்குமுறை அகற்றி உரிமை நிலைநாட்ட

 • பெண்கள், குழந்தைகள், தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் நலனைப் பேணுதல்; 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அடுத்த தேர்தலில் நடைமுறைப்படுத்த உகந்த நடவடிக்கை எடுத்தல், நுண்நிதி நிறுவனங்களை முறைப்படுத்தவும், வட்டிக்கு உச்சவரம்பை விதிக்கவும் சட்டம் கொண்டு வருதல், முதியோர் பாதுகாப்புக்கு மாதம் ரூ.6000 உதவித் தொகை உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடு, முதியோர் நலனும் கண்ணியமும் காக்கப்படுவதை உறுதிப்படுத்துவது,ரத்து செய்யப்பட்ட முதியோருக்கான சலுகைகளை மீட்டெடுத்தல், இயற்கை மரணங்களுக்குத் தலா ரூ. 2 லட்சம் வழங்கும் காப்பீடுத் திட்டத்தை நிறைவேற்றுவது வலியுறுத்தப்படும்.
 • நிர்பயா நிதியை அதிகரித்து அது முறையாகச் செயல்படுத்தப்படுவதைக் கண்காணித்தல், பெண்களுக்கான தங்கும் விடுதிகளை ஒன்றிய அரசு மாவட்டந்தோறும் அமைத்தல், வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்குதல் – பெண்கள் பெயரில் அதற்கான உரிமம் வழங்குதல் வற்புறுத்தப்படும்.
 • சாதி ஒழிப்பு, சமூக ஒடுக்குமுறை ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கான புறச்சூழலை ஏற்படுத்துதல், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தல், இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துதல், சாதி ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்குத் தனிச்சட்டம் இயற்றுதல், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருதல், மனிதக் கழிவை மனிதனே அகற்றும் கொடுமையை ஒழிக்க இயற்றப்பட்ட சட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துதல், துணைத் திட்ட நிதி முறையாகப் பயன்படுத்துவதற்கான சட்டம் இயற்றுவது வலியுறுத்தப்படும்.
 • விஸ்வகர்ம யோஜ்னா என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள குலத்தொழில் ஊக்குவிப்புத் திட்டத்தைத் திரும்பப் பெறக் குரலெழுப்புவோம்.
 • சமூகப் பொருளாதார சாதி வாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்திட வலியுறுத்துவோம்.
 • ஆதிவாசி மக்களின் வன உரிமைகளைப் பறிக்கும் வகையில் மோடி ஆட்சியில் வனப் பாதுகாப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் ரத்து செய்யவும், வன உரிமைச் சட்டம் 2006ஐ தீவிரமாக அமல்படுத்தவும் வலியுறுத்துவோம்.
 • மலைப்புலையன், ஈரோடு மாவட்ட மலையாளி, குறவன் இனத்தின் உட்பிரிவினர், குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினர், வேட்டைக்காரன் ஆகிய இனத்தவரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்துவோம்.
 • பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களுக்குச் சாதிச் சான்றிதழ் தடையின்றி வழங்கிட வற்புறுத்துவோம்.

சிறுபான்மையினர் நலன்

 • மதச் சிறுபான்மையினரின் உணவு, உடை, வாழ்விடம், தொழில், வழிபாட்டு, பண்பாட்டு உரிமைகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்திட வலியுறுத்துவோம். இதை மறுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டங்களைத் திரும்பப் பெற வற்புறுத்துவோம்.
 • குடியுரிமைத் திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை ரத்து செய்யப் போராடுவோம்.
 • மோடி அரசால் கைவிடப்பட்ட சிறுபான்மை முஸ்லீம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மவுலானா ஆசாத் பவுண்டேஷன் வழியான கல்வி உதவித் தொகை உள்ளிட்ட அனைத்து கல்வி உதவித் தொகைகளும் மீண்டும் வழங்கிடக் குரலெழுப்புவோம்.
 • சச்சார் குழு பரிந்துரையின்படி முஸ்லீம்களின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தருதல், நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின் பேரில் இட ஒதுக்கீடு வழங்கவும், சமவாய்ப்புக் கமிஷன் அமைக்கவும் அழுத்தம் கொடுக்க வலியுறுத்துவோம்.
 • வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுவதோடு மதவெறி தாக்குதலில் ஈடுபடும் மதவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவோம். 

மாற்றுத்திறனாளிகள் நலன்

 • ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016ஐ முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தல் – அனைத்துத் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகித நிதி ஒதுக்குதல் – மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் நவீன இயந்திரங்கள் கிடைத்தல் – ஆதரவற்ற பெண் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பாகத் தங்குவதற்கு அரசுப் பாதுகாப்பு இல்லங்கள் அமைத்தல் வற்புறுத்தப்படும்.
 • அனைத்து மக்களுக்கும் அரசு நலத் திட்டப் பலன்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் சென்று சேர, குடிமைச் சாசனத்தைச் சட்டபூர்வமாக்க வலியுறுத்துவோம்.

திருநர்

 • திருநர்களுக்கு ஒரு சதவிகிதம் கிடைமட்ட இட ஒதுக்கீட்டிற்கான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்துவோம்.

கருத்துச் சுதந்திரம்

 • ஊடக சுதந்திரத்தை மீட்டெடுத்தல், யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட சமூக வலைதளக் கருத்துரிமையைச் சிதைக்கக் கூடிய விதத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்களைத் திரும்பப் பெறுதல், அரசை விமர்சித்ததற்காகக் கருப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் சமூகச் செயல்பாட்டாளர்களை விடுவிக்கக் குரலெழுப்புவோம்.

மீனவர் நலன்

 • தேசிய கடல் மீன்பிடிக் கொள்கை 2017, நீலப்புரட்சித் திட்டம் உள்ளிட்டவற்றின் பெயரால் பாரம்பரிய மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துதல், கடலோர சமூக மக்களிடம் கலந்து பேசிக் கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தை உருவாக்க வற்புறுத்துவோம்.
 • இலங்கைக் கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுத்தல், கடலில் காணாமல் போகும் மீனவர்களை விரைந்து மீட்க “கடல் ஆம்புலன்ஸ்” உள்ளிட்ட தேவையான திட்டங்களை அமல்படுத்த வலியுறுத்துவோம்.

இலங்கைத் தமிழர்

 • இலங்கையில் தமிழ் மக்களுக்குச் சம உரிமைகள், தமிழ் மொழிக்குச் சம அந்தஸ்து, இலங்கைத் தமிழ் மக்களிடம் பறிக்கப்பட்ட சொத்துகள் மற்றும் நிலம் மீள் ஒப்படைப்பு செய்திட ஒன்றிய அரசு ராஜிய ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.
 • இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களை விசாரிக்க இலங்கை அரசு சுயேச்சையான நம்பகத் தன்மையுடனான உயர்மட்ட விசாரணை நடத்த வலியுறுத்துவோம்.
 • தமிழ்நாட்டில் முகாம்களுக்கு உள்ளேயும், வெளியேயும் ஏதிலிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கிடக் குரலெழுப்புவோம்.

மத்தியில் அமைந்த மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு அனைத்து ஜனநாயக, அரசியல் சாசன கட்டமைப்புகளையும் தகர்த்துள்ள நிலையில் அவற்றை புனரமைப்பதும், ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி உள்ளிட்ட விழுமியங்களை நிலைநிறுத்துவதும் அவசியமாகிறது. அதற்கு மத்தியில் ஒரு மதச்சார்பற்ற மாற்று அரசு அமைவது அவசியமாகும்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவும், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும், முன் வைக்கும் மாற்றுத் திட்டங்களுக்கும் தமிழக மக்கள் பேராதரவு தர வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கு சுத்தியல், அரிவாள் நட்சத்திரம் சின்னத்திலும், தோழமைக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னத்திலும் வாக்களித்துப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்திட வேண்டுமென தமிழக வாக்காளப் பெருமக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டுகிறது.

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *