பொதுவுடமைக் காதல் கவிஞர் தமிழ் ஒளி (Tamil Oli)

 

விஜயரங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர் தமிழ் ஒளி தமிழ்க் கவிதை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஓர் ஆளுமை. அவர் ஓர் இயற்கைக் கவிஞர். பாரதி, பாரதிதாசனுக்கு அடுத்து அந்த வரிசையில் மூன்றாவது பெரும் கவிஞராக இடம் பெற்றிருக்க வேண்டியவர். தொடக்கத்தில் திராவிட இயக்க சிந்தனையால் ஈர்க்கப்பட்டு பின்னர் பொதுவுடமைக் கவிஞராக மாறியவர். அவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதி தமிழ் அன்னைக்கு மகுடம் சூட்டியவர். அவருடைய கவிதையின் பாடு பொருள்கள் பின்வரும் தலைப்பில் அமைந்துள்ளன. திராவிட இயக்கச் சிந்தனை, சாதி, மத எதிர்ப்பு, பொதுவுடமைச் சித்தாந்தம், தாய்மொழிப்பற்று, இந்திய எதிர்ப்பு, அடித்தட்டு மக்களின் விடுதலை, புத்தரின் உண்மை வரலாற்றை வெளிக் கொணரும் உணர்வு, ஆணவக் கொலை கண்டிப்பு, நகர சுத்தி தொழிலாளர்களின் கூலி உயர்வு, சீன தேசத்தின் பொதுவுடமை கருத்தாக்கம், மாவோவிற்கு பாடிய பாடல், நண்பர்களை பேணுதல், காதல், இயற்கை இப்படி எண்ணற்ற தலைப்புகளில் கவிதைகளை படைத்துள்ளார்.

தொடக்கத்தில் பாரதியைப் படித்தவர். அவரை தொடர்ந்து பாரதிதாசனையும் உள்வாங்கியது இவ்விருவரும் இந்திய தேசியத்தையும் தமிழ் தேசியத்தையும் தம் கவிதைகளில் பாடுபொருளாக எழுதினர். ஆனால் இம்மண்ணுக்கு மற்றொரு அல்லது புதிய தத்துவம் ஒன்றும் தேவை இருப்பதை உணர்ந்து அதன் அடிப்படையில் பொதுவுடமை கருத்தை உள்ளடக்கி தன் வாழ்நாள் முழுவதும் பொதுவுடமை சிந்தனையில் ஊறித்திளைத்தவர் தான் கவிஞர் தமிழ் ஒளி.

பாரதியையும் பாரதிதாசனையும் கொண்டாடிய இச்சமூகம் தமிழ் ஒளியை ஏன் மறந்தது அல்லது அவரை மறைத்ததற்கான காரணம் என்ன? என்று கேள்வியும் எழுகிறது. அதே சமயத்தில் பெயரளவிற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்று அவருடைய பிறந்தநாள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதையும் காண முடிகிறது. தமிழ்நாடு அரசும் அவருடைய பிறந்த நாளுக்காக அண்மையில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கவிஞர் தமிழ் ஒளி அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு அவருக்கு தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மார்பளவு சிலை அமைக்கப்படும். மேலும்,, பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் 50 லட்சம் ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தி அதில் கிடைக்க பெறும் வட்டி தொகையிலிருந்து ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ் ஒளி பெயரில் பரிசுகள் வழங்கப்படும் என தமிழ்நாட்டு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இப்படி ஓர் அறிவிப்பு வருவதற்கு அவருடைய நூற்றாண்டு தேவையாகவுள்ளது.

விடுதலை வேட்கை கொண்டோர்களால் சும்மா இருக்க முடியாது. சீன புரட்சியாளன் மாவோ மொழியில் சொல்வதென்றால் மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று சும்மா விடுவதால் இல்லை என்பதைப் போன்று, கவிஞர் தமிழ் ஒளி தமிழ் சமூகத்திற்காக பல ஆக்கப் பணிகளை செய்துள்ளார். அவற்றை பின்வருமாறு காணலாம். கவிஞரின் காதல் (1947), நிலைபெற்ற சிலை (1947), வீராயி (1947), மே தினமே வருக, விதியோ வீணையோ (1961), கண்ணப்பன் கிளைகள் (1966) புத்தர் பிறந்தார் (முற்று பெறாத காவியம்) கோசல குமாரி (1966), மாதவி காவியம், சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா?, திருக்குறளும் கடவுளும், தமிழர் சமுதாயம் என்று இதுவரை ஏழு காவியங்கள், நான்கு கவிதை தொகுப்புகள், குழந்தை பாடல்கள் ஒன்று, ஆய்வு நூல்கள் நான்கு, கதைத் தொகுப்பு நான்கு, நாடக நூல் ஒன்று என்று பல படைப்புகளைத் தந்து தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் தன்னால் இயன்ற அளவுக்கு உலக அரங்கில் ஓர் அங்குலம் அளவு உயர்த்தி தமிழுக்கு அணி சேர்த்தவர்.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு மாகவிஞரை காலங்கடந்து நினைவு கொள்கிறது என்பது பெரும் குறை தான். தமிழ் ஒளிக்கான அங்கீகாரம் தரப்படாதது ஏன்? என்று பேரா. வீ. அரசு அவர்களின் கேள்வியும் இணைத்துப் பார்க்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளையான, தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக செயல்பட்ட காலம் தொடங்கி மார்க்சியத்தை முழுமையாக ஏற்று தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக கருதி வாழ்ந்த காலம் வரை பல்வேறு ஆளுமைகளுடன் இருந்துள்ளார். அப்போது நூற்றுக்கணக்கான இடதுசாரி கவிதைகளை எழுதியுள்ளார். ஆனால் அதே சமயத்தில் கட்சி நடவடிக்கையில் இருந்து முரண்பட்டு கட்சியில் இருந்து வெளியேறி முழு நேர எழுத்தாளராக வாழ்ந்த போது பல படைப்புகளை வெளிக்கொண்டு வந்து தந்தது அப்பொழுதுதான்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் முப்பெரும் கவிஞர்கள் என்னும் மதிப்பைத்தினை செய்து வருகிறது. அதில் பாரதி, பாரதிதாசன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று அவர்கள் குறிப்பிட்டு வந்தார்கள். ஆனால் உண்மையில் அந்த வரிசையில் பாரதி பாரதிதாசன் தமிழ் ஒளி என்று தான் இடம்பெற்றிருக்க வேண்டும். தன்னை முழு நேர படைப்பாளியாகவும் களப்போராளியாகவும் மாற்றிக்கொண்டு தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய வரை புறம் தள்ளிவிட்டு திரைப்பட வெளிச்சத்தால் புகழ்பெற்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை மூன்றாவது பெரும் கவிஞராக வரிசைப்படுத்துவது, கவிஞர் தமிழ் மொழியை புறம் தள்ளுவதாகவே கொள்ள முடிகிறது. பட்டுக்கோட்டையாரை குறைத்து மதிப்பிடுவதாக எண்ணக் கூடாது. அவருக்கு எதிரான நிலைப்பாடு என்றும் நினைக்க கூடாது. உண்மையில் அவரை வணங்குகிறோம். நினைக்கிறோம். நினைக்கப்பட வேண்டியவர். கொண்டாடப்பட வேண்டியவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தமிழ் ஒளியை தவிர்ப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. இதன் அடிப்படையில் தான் அவரின் சாதி பெண் மூலமாக இருக்கக்கூடுமோ என்று வரையறைக்கு கொண்டு செல்கிறது. அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர். அதனால் என்னவோ என்ற கேள்வியும் வலுக்கிறது. அதேபோன்று தலித் அமைப்புகளும் அவரை கொண்டாட முன் வரவில்லை. அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து அந்த மக்களுக்கு செய்தது என்ன? அவர் எப்பொழுதும் தன்னை ஒரு இடது சாதியாகவே அடையாளப்படுத்திக் கொண்டவர் என்ற காரணத்தினாலும் அவரை புறம் தள்ளும் சூழலும் எழுந்துள்ளது என்ற எண்ணம் வலு சேர்க்கிறது.

பொதுவுடமைக் காதல்

தமிழ் ஒளிக்கான அங்கீகாரம் தரப்படாதது ஏன்? – Aram Onlineதொடக்கத்தில் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர், பின்னர் 1947 ஆம் ஆண்டு பொதுவுடமை சித்தாந்தத்தால் ஆட்கொள்ளப்பட்டா.ர் அதன் பொருட்டு தோழர் ஜீவா அவர்களின் முன்னிலையில் பொதுவுடமை இயக்கத்தில் தன்மை இணைத்து கொண்டார். மார்க்சியத்தில் ஆழங்கால் பட்டு புலமை மிக்கவராக தேறினார். அகில இந்திய அளவில் அன்று தோன்றிய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கு சென்னையில் ஒரு கிளை ஏற்படுத்தி செயல்பட்ட அவர் பாலசுந்தரம் என்னும் தன் நண்பருக்கு மார்க்சியம் பற்றி 12.12.1949 அன்று எழுதிய கடிதம் கவனம் பெறத்தக்கது. புரட்சியாளர் லெனின் மொழியில் சொல்வதைப் போன்று துடிப்புள்ள இளைஞர்கள் மார்க்சியத்தை எந்த அளவிற்கு விரும்பி ஏற்று கொள்கிறீர்களோ? அதே அளவிற்கு அதன் மீது கேள்விகள் வைக்கவும் தயங்க கூடாது என்பார். இங்கு விமர்சனம் என்பது வெறும் விமர்சனம் அல்ல அதை அறிவுப்பூர்வமாக அணுக வேண்டும் என்பதே ஆழமான கருத்து. கவிஞர் தமிழ் ஒளியும் மார்க்சியத்தை பெரும் உணர்வு பூர்வமாக மட்டும் உள்வாங்காமல் அறிவுப்பூர்வமாக உள்வாங்கியதை பாலச்சந்தருக்கு எழுதிய கடிதம் வெளி காட்டுகிறது. அவர் எந்த அளவிற்கு பொதுவுடைமையை உள்வாங்கப்பட்டார் என்பதை சிகரம் ச. செந்தில்நாதன் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். இந்தியாவில் முதன் முதலில் மே நாளை கொண்டாடியவர் சிங்காரவேலர் என்று நாம் பெருமிதம் கொள்ளலாம். அதை போல் மே நாளை முதன் முதலில் வரவேற்று கவிதைப் பாடிய கவிஞர் என்று தமிழ் ஒளியைக் கொண்டாடுவது அவசியம். தமிழ் ஒளி மே நாளை வரவேற்று 1949 மே மாதம் முன்னணி இதழில் எழுதினார். அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கவிதை அதைப் பற்றி பின்வருமாறு காணலாம.

கோழிக்கு முன்னெடுத்து கொத்தடிமை போலுழைத்து
பாடுபட்ட ஏழை முகம் பார்த்து பதைபதைத்துக்
கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!

மண்ணை இரும்பை மரத்தை பொருளாக்கி
விண்ணில் மழை இறக்கி மே தினக்கு நீர் பாய்ச்சி
வாழ்க்கை பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளி
கையில் விளங்கிடும் காலமெல்லாம் கொள்ளையிட்ட
பெய்யர் குலம் நடுங்க பொங்கி வந்த மே தினமே!
மன்னர் முடி தரித்த நாட்கள் மடிந்தன காண்!
மின்னாய் எரியுற்ற மீனாய் விழுந்தனக்காண்!

நாதம் கிளர்ந்துலகை நாள் முழுதும் ஆட்டி வைத்த
வேதம் பெயர் மடுங்கி வெட்டுலாய் ஆனது காண்!
ஆனால்
ஏழைத் தொழிலாளர் ஏற்று வைத்த தீபத்தில்
நின்னுடைய நாமம் நிலைத்தது காண் இவ்வுலகில்!
அமுதனையாய் அன்னாய் அருகுற்றாய் இந்நாள்
சமுதாயப் பந்தரிலே சந்திப்போம் வாராய் நீ!
…………. ………. …………
…………. ………. …………

அமெரிக்க மாநகரில் அன்றொரு ஒரு நாள் மக்கள்
குமுறி எழுந்து குருதியெலாம் சிந்தியதால்
வான் சிவந்து மண் சிவந்து மா கடலும் தான் சிவந்து
ஊன் சிவந்து வந்தாய் உயிர் சிவந்த செந்தினமே!

(தமிழ் ஒளி கவிதைகள் ப.92,93).

என்னும் கவிதை மே தின வரலாற்றை காட்சிப்படுத்துகிறது. மட்டுமல்லாமல் மே தினம் என்பது உழைக்கும் மக்களின் உன்னத தினம். அந்த தினத்தைப் பற்றி பாடும் பொழுது ஏழை விவசாயிகள் கூலி தொழிலாளர்கள், உழைப்பாளர்கள் அனைவரின் உணர்வை வெளிப்படுத்தும் தன்மையில் அமைந்துள்ளது.

நெஞ்சத்தின் செங்குருதியால் எழுதப்படுவதே பாட்டு, அப்படி எழுதுகிறவனே பாவலன், அவன் பொதுமக்கள் நலன் நாடி புது கருத்தை சொல்வான். அவன் உண்மையில் உருவம் அன்பின் வனம், வாழ்வியல் இயக்கமும், கலைத்திறமையும் படைப்பின் இயல்பாய் கூடும்போது பண் சுமந்த பாடல்கள் மண்ணாக மக்களின் வாழ்வோடு ஒன்றி விடுகின்றன. இந்த கருபொருளை உள்ளத்தில் கொண்டு கவிதை படைத்தவன் தான் கவிஞர் தமிழ் ஒளி என்கிறார்.

அந்த நாள்களில் பொதுவுடமை கட்சி அதிக முக்கியத்துவம் காட்டாத இரண்டு பிரச்சனைகளை பற்றி கவிஞர் தமிழ் ஒளி ஆர்வத்துடன் கவிதைகள் படைத்தார். பொதுவுடமை இயக்கம் போராட்டத்தில் நம்பிக்கையுள்ள இயக்கம். வருகப் போராட்டம் சாதிய கட்டமைப்பை உடைத்து விடும் என்பது அந்த இயக்கத்தின் பார்வை. அதனால் தான் சாதிப் பிரச்சனைகளில் அன்று முனைப்புக் காட்ட வில்லை.

தமிழ் ஒளியின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்துள்ளார்கள். இடதுசாரி சிந்தனையுள்ள தமது படைப்பாக்கங்களில் கவிஞர் தமிழ் ஒளி சமுதாயத்தையும், விளிம்பு நிலை மக்களின் விடுதலையும் பாடினார்.

உழைக்கும் மக்களே ஒன்று கூடுங்கள் உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்றார் லெனின். அதன் தாக்கம் கவிஞர் தமிழ் ஒளியிடம் காண முடிகிறது

உழைப்பவனே நிலத்திற்கு சொந்தக்காரன்
உழைப்பவனே தேசத்தின் உரிமையாளன்
புழுவைப்போல் கிடந்ததும் பிச்சை வாங்கும்
பன்மைநிலை அடைந்ததும் இனிமேல் இல்லை

எனும் பாடல் விவசாயத்தையும் விவசாயியையும் மையப்படுத்தி எழுதப்பட்டது. இதை வள்ளுவரும்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வர் (குறள் எண். 1034)

என்ற குறளில் விவசாயம் தான் உலகத் தொழில்களுக்கு முன்னோடி. அது வெறும் தொழில் அல்ல. அது இந்நாட்டுக்கும், மண்ணுக்கும், மக்களுக்கும் செய்யும் தொண்டென்றே கருத வேண்டும். விவசாயம் இல்லாத நாடே இல்லை. அது பாழ்ப்பட்டு போய்விடும்

1948 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. ஜனசக்தி இதழும் வெளிவருவதில் சிக்கல் இருக்கும் பட்சத்தில் முன்னணி என்ற இதழ்தான் பொதுவுடமை கருத்துக்களை பிரசுரித்தது. முன்னணி இதழ்க்காக தமிழ் ஒளி பெரிதளவில் உழைத்தார். அகில இந்திய வானொலியில் சுதந்திரம் என்னும் கவிதை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட கவிஞர் தமிழ் ஒளி சுதந்திரம் அடித்தட்டு மக்களின் உரிமைகளை மீட்டு அவர்கள் வாழ்க்கையை வளமாக்குவதாக இருக்க வேண்டும் என்று கவிதை மூலம் வலியுறுத்தினார்.

தமிழ் ஒளியைப் பற்றி கவிஞர் இன்குலாப் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு இருந்த காலத்தில் நீதிபதிகள் கேள்விக்குறி விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதர்கள் என்ற மாயை மூடி இருந்த காலம் அந்த காலத்தில் உள்ளத்தில் உண்மை ஒளி உடையவன் ஒருவன் மட்டுமே இப்படி எழுதி இருக்க முடியும் என்கிறார்.

1947 ல் தமிழ் ஒளி படைத்த மூன்று குறுங்காப்பியங்கள் வெளிவந்தன. அவற்றில் இரண்டு நூல்களில் அட்டைகளிலும் சுத்தி அரிவாள் சின்னம் இடம்பெற்றது. அவரை முழுமையாக அடையாளப்படுத்தியது. மே தினத்தைப் பற்றி போற்றி தமிழில் முதல் முதலில் கவிதை எழுதியவர் அவரே. இப்படி காலம் முழுவதும் தான் சார்ந்த கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் முரண்பாடு இல்லாமல் செயல்பட்டவர். இன்னும் சொல்லப்போனால் அவர் பொதுவுடமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் என்று சொல்வதை விட கரைத்துக் கொண்டவர் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட இயக்கவாதிக்கு அவர் சார்ந்த இயக்கம் அவருக்கு உகந்ததாக இல்லை. அதனால் கட்சியில் இருந்து ஒதுங்கி முழு நேர படைப்பாளராக வளம்வந்தார்.

கவிஞர் தமிழ் ஒளியைப் பற்றி அணுவணுவாக ஆய்வு செய்வதற்கான களங்கள் ஏராளம் உண்டு. குறிப்பாக அவருடைய மொழிப்பற்று, சாதி விடுதலை, புத்தர் குறித்து அவர் செய்த ஆராய்ச்சி இப்படி பல்வேறு தளங்களில் அவர் செய்த பங்களிப்பை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. அந்த வகையில் தமிழ் ஒளியின் மொழி உணர்வை பின்வருமாறு காணலாம்.

மொழி உணர்வு

கவிஞர் தமிழ் ஒளிக்கு தாய் மொழி மீது கொண்ட அளப்பரிய பற்றால் விஜயரங்கம் என்னும் தன்னுடைய இயற்பெயரை தமிழ் ஒளி என்று மாற்றி வைத்துக் கொண்டார். அந்த அளவிற்கு அவரிடம் மொழி உணர்வு மேலோங்கி இருந்தது. தொழிலாளர்களையும் மொழி அடிப்படையில் ஒன்றிணைக்கும் முயற்சியை அவரிடம் காண முடிகிறது.

ஓரினத்து மக்களே பிரிவும் சாதி
உண்டாக்கி கொண்டாடும் நிலையும் மக்கள்
பேரியலை மறந்து பொருள் ஏற்றத் தாழ்வால்
பெருங்கோடு விளைவிப்பதும் விதியை கூறி
பாரியலில் செந்தமிழர் ஏற்றம் கொள்ளும்
பாதையினை அடைப்பதவும். (தமிழ் ஒளி கவிதைகள் ப.57 )

என்று பாடுவதில் இருந்து மொழி உணர்வு மேலோங்கியதை காண முடியும். மொழிவாரி மாநிலம் பிரிக்கும் பொழுது கன்னியாகுமரியை தாய் தமிழகத்துடன் இணைக்கும் எல்லை போராட்டம் நடைபெற்ற போது தமிழ் ஒளி மக்களை அழைக்க பாடிய பாடல் இது.

தன் குமரி எல்லை தனைச் சார்ந்த தமிழகத்தில்
எல்லாம் தமிழருக்கே என்றெந்ழுத போர்முரசம்
எல்லோரும் கேட்டு எழுகின்ற நேரமிது
தாய் மொழி கல்வியை கற்பதிலார் – அவர்
துமிழ்மொழி கற்க நம்மை வருத்தி
வாய்மொழி பெற்று மகிழ்ந்திடுவார் – அவர்
வாழ்க்கையில் ஞானம் வருவதே இல்லை. (தமிழ் ஒளி கவிதைகள் ப.122 )

என்னும் கவிதையை அவரின் தாய்மொழி பற்றை அறிந்து கொள்வதற்கு போதுமான சான்று ஆகும். மொழிவாரி மாநிலம் பிரிக்கும் போது கன்னியாகுமரியை தலைநகராகக் கொண்டு தனித் தமிழகம் வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்

இந்தி எதிர்ப்பு

தமிழ் ஒளிக்கான அங்கீகாரம் தரப்படாதது ஏன்? – Aram Onlineஇந்தி எதிர்ப்பு காலந்தோறும் இந்திய ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்கு வரும்பொழுதெல்லாம் இந்தியை நேரடியாகவும், மறைமுகமாகவும் திணித்து வருகின்றனர். இது சுதந்திர இந்தியாவில் மட்டும் என்று சொல்ல முடியாது. பிரிட்டிஷ் அரசாங்கம் ஆட்சி செய்த 1930 களிலிருந்து இந்த போக்கு கடைபிடிக்க பட்டது. மொழி ஒவ்வொரு மனிதனின் அடையாளம். அவரவர் தாய் மொழி அவரவர்களுக்கு உயர்ந்தது. இந்தியாவில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத பெருமையும் சிறப்பும் தனித்தன்மையும் தமிழுக்கு மட்டும் உண்டு. தமிழ் தனித்து இயங்கும் வல்லமையை பெற்றது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு உள்ளிட்ட 18 மொழிகளுக்கு தமிழ் மொழி தாயாக விளங்குவதை காண முடிகிறது.

இந்த உண்மையை ஒரு தமிழன் சொல்லியிருந்தால் அவருடைய சுயசார்பு அல்லது மொழிப்பற்று என்று ஒதுக்கி தள்ளிவிட முடியும். ஆனால் தமிழ் மொழிக்கும், தமிழ் நாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லாத இராபர்ட் கால்டுவெல் 1856 ஆம் ஆண்டு திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் ஆராய்ச்சி செய்து வெளிப்படுத்தியுள்ளார். இப்படி வரலாற்று நெடுங்கணக்கில் தமிழ் மொழியும் நாகரிகமும் கடல் கடந்து பரவியுள்ளது, உலகில் பல்வேறு நாடுகளில் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தவர்கள் தமிழர்கள். தமிழ் மொழியை என்று பிறந்தவள் என்று அறுதியிட்டு உறுதியாக கூற முடியாத மொழி தமிழ் என்பதை, கி. பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் ஐயனாரிதனார் கல்தோன்றி மண் தோன்ற காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தக் குடி தமிழ் குடி என்று கூறியுள்ளார். இப்படி ஒரு பழமையான மொழி பேசும் மக்களிடத்திலும் மாநிலத்திலும் இந்தி மொழியை திணிக்கின்றனர். வருகின்றனர். ஆட்சியாளர்கள் மாறினாலும் அவர்களின் செயல் வடிவம் மட்டும் மாறுவதாக இல்லை. இப்படி மொழி திணிப்பு ஏற்படும் போதெல்லாம் தென்னிந்தியாவில் தான் முதல் எதிர்ப்புக் குரல் வரும். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து இந்தி மொழிக்கு எதிராக வலுவான கண்டனங்களும் தங்கள் எதிர்ப்புணர்வை பதிவு செய்து வந்தனர். இன்னும் மூர்க்கமாக இந்தி எதிர்ப்பு போரில் தன்னுடைய இன்னுரை தியாகம் செய்தவர்கள் பலர் அவர்களுள் தாளமுத்து நடராசன் உள்ளிட்டோர் அந்த பட்டியலில் நீண்டு செல்கின்றன. அவர்களின் தியாகத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ஆம் நாள் மொழிப்போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பாரதிதாசனும் இந்திக்கு தமிழ்நாட்டில் ஆதிக்கமா? என்று தன் ஆவேசத்தை வெளிப்படுத்தி எழுதியுள்ளார். அப்பொழுது கவிஞர் தமிழ் ஒளியும் திராவிட மாணவர் கழகத்தில் ஈடுபாடு கொண்டபோது இந்தியை எதிர்த்து

இந்தியை இங்கே அழைக்கின் றீர்கள் – கூர்
ஈட்டியை நெஞ்சில் நுழைக்கின்றீர்கள்
காரிருள் என்றும் விடியவில்லை – எம்
காற்றனை என்றும் ஒடியவில்லை!
இதர்மிசை இந்தி உயர்வுதோ – எங்கள்
செந்தமிழ் அன்னை அயர்ங்குவதோ? (தமிழ் ஒளி கவிதைகள் ப.221 )

என்று தமிழ்நாடு என்ற ஏட்டில் எழுதி இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு வலுவூட்டினார்.

சாதி விடுதலை

மக்களின் மனங்களையும் சிந்தனைகளையும் முடமாக்கியது சாதி. மக்களை சிந்திக்க விடாமல் சாதிக்குள்ளும், மதத்துக்குள்ளும் உழன்று கொண்டிருக்கும் எண்ணத்தை உருவாக்கியதில் மதத்திற்கு பங்குண்டு. குறிப்பாக இந்து மதத்திற்கு பெரும் பங்கு உண்டு சாதியை விட்டு வெளி உலகத்தைப் பற்றி சிந்திக்க விடாமல் ஒரு போக்கை உருவாக்கி வைத்துள்ளது என்று கூற முடியும். இந்து மதம் தான் சாஸ்திரங்களையும் புராணங்களையும் காரணம் காட்டி மக்களை பிளவுபடுத்தியது. பெண்களையும் சுரண்டுகிறது. கணவன் இழந்தப் பெண்ணை விதவை என்று முத்திரை குத்தியது. அவர்கள் பிறந்தது முதல் பயன்படுத்தி வந்த பூ, போட்டு, மஞ்சள், குங்குமம் இன்ன பிறவற்றையெல்லாம் ஒரு ஆணோடு பிணைத்து, அவன் இறந்தவுடன் எல்லாவற்றையும் அழித்து அவர்களை முடமாக்கியது. மட்டுமல்ல மொட்டை அடித்து வெள்ளைப் புடவை உடுத்தி மூளையில் உட்கார வைத்தது. இன்னும் ஒரு படி மேலே சென்றால் கணவன் இறந்த உடனே சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கமும் இருந்தது. அந்நிலை சற்று தளர்ந்து இருந்தாலும் கூட, ஆனால் விதவைக்கான அடையாளங்கள் இன்னும் முழுமையாக மாறவில்லை. கேட்டால் இந்து தர்மம் என்கிறார்கள். ஆச்சாரம் என்கிறார்கள். மரபு பண்பாடு கலாச்சாரம் என்று மதத்தோடு பிணைத்துள்ளனர். ஒரு ஆண் எந்த அளவிற்கு சுதந்திரமாக செயல்படுகிறானோ அதில் பத்தில் ஒரு பங்கு கூட பெண்களுக்கு இல்லை. இதை கவிஞர் மொழியில் சொல்வதென்றால் ஒடுக்கப்பட்ட பெண்களாக இருந்தால் அவர்கள் உயிர் வாழ்வதற்கு மட்டுமல்ல அவர்கள் உடல் மீது அவர்களுக்கே உரிமை இல்லை என்று கூறுவார்.

சாதி என்னும் கொடும் நோயே அதிலிருந்து பீடிக்கப்பட்டு வளர்ந்து இன்றும் ஒரு புற்று நோயாக பரவி மனித மனங்களை அரித்துக் கொண்டு வருகிறது. இந்தக் கொடுமையை எதிர்த்து காலம் தோறும் பல்வேறு சீர்திருத்தவாதிகள் எதிர்த்து வந்துள்ளனர். தமிழ் ஒளியும் சாதி எதிர்ப்பை மூர்க்கமாக முன்னெடுத்துள்ளார். அவர் நேரடியாக சாதியைப் பயன்படுத்தி யார் யாரெல்லாம் பயனடைந்தார்கள் என்பதை தன்னுடைய கவிதையில் பட்டியலிடுகிறார்.

வேதியர் ஓதிய வேதங்களில்
அவர் வேள்விகளில்
சாதி பற்பல தோன்றின
பொய் மதம் தண்டலை தூக்கி திரும்ப தம்மா

என்ற கவிதை வேதம் போதும் பார்ப்பனரே சாதியை காரணம் காட்டி மக்களைப் பிளபடுத்திய வரலாற்றையும் அதன் கொடுமையை காட்சிப்படுத்துகிறார்

கவிஞர் தமிழ் ஒளி சாதிய சிக்கலுக்கு தீர்வு காணும் நோக்கில் நிலைபெற்ற சிலை, வீராயி, மே தின ரோஜா ஆகிய முப்பெரும் படைப்புகளும் தந்துள்ளார். அதில் மே தின ரோஜா ஒரு நீண்ட கவிதையாக இருப்பதையும், அது ஏற்படுத்திய தாக்கமும் அதனால் அக்கவிதைக்கு கிடைத்த பேரும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

அதேபோன்று வீராயி காவியம் தமிழ் சமூகத்தில் தாக்கத்தையும் மிகுந்த வரவேற்பையும் பெற்றதையும் காணலாம் வீராயி ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த ஒரு பெண். வீராயி வாழ்க்கை முழுவதும் துன்பத்தை மட்டுமே அனுபவிக்கும் கதாபாத்திரம் தன் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள உற்ற துணை கிடைத்த போதும் இங்குள்ள சாதி ஆணவத்தால் திருமண வாழ்க்கையை பார்க்காமலே இருவரும் கொல்லப்படுகின்றனர். இப்படி அன்று தொடங்கிய ஆணவக் கொலை இன்று வரை நீடிக்கிறது

வீராயி காவியம் 1947 ல் எழுதப்பட்டது அதில் வெளிப்படையாக சாதியை சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் படைக்கப்பட்டது தான் அந்த காவியம். அதில் பின்வரும் ஒரு பதிவு கவுண்டருக்கும் பறைச்சிக்கும் கல்யாணம் என்று வரும் இடம் நேரடியாக சாதிப் பெயரைச் சொல்லி அன்றைக்கு இருந்த சமூக இழிவுகளை காட்சிப்படுத்தி உள்ளார். எப்படி வரலாற்று நெடுங்கணக்கில் கவிஞர் தமிழ் ஒளி அன்றைக்கு இருந்த சிக்கலுக்கு மட்டும் அல்லாது எல்லாவற்றுக்கும் தன்னுடைய உணர்வை பயன்படுத்தியுள்ளார்‌

முடிவுரை

காலம் தன் வரலாற்று தொழிற்சாலையில் அவ்வப்போது சில வியக்கத்தக்க நிகழ்வுகளை வெளிப்படுத்தும். சில நேரங்களில் வரலாறு புவியியல் வான சாஸ்திரம் என்றும் தலைவர்கள் அறிஞர்கள் போராளிகள் விஞ்ஞானிகள் கோட்பாட்டாளர்கள் சமூகச் சிந்தனையாளர்கள் என்றும் அதன் பட்டியல் நீண்டு செல்லும். அதேபோன்று வரலாற்றுப் பெயரெட்டிலும் என்னும் நிறைய பக்கங்கள் காலியாகவும் உள்ளன. இயற்கை எல்லா மனிதர்களுக்கும் சம வாய்ப்பை வழங்குகிறது. பிறப்பின் ரகசியம் அறிந்தவர்கள் தன் வாழ்க்கையை முழுமையாக பயன்படுத்துகின்றனர். அதில் அவர்கள் எறும்பை போன்று உழைக்கிறார்கள். இன்னும் சிலர் சோம்பேறியாகவும் வெந்ததை தின்றுவிட்டு விதி வந்தால் சாவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறார்கள். இதில் ஒரு சிலரின் இறப்பும் இழப்பும் அந்த இடத்தை இட்டு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடமாகவே இருக்கிறது. அந்த வெற்றிடத்தை அவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டியுள்ளது. அந்த வகையில் அவர்களின் பிறந்த நாள் நினைவு நாள் வரும்போது நினைவு கூற வேண்டியவர்களாக இருக்கின்றனர். இங்கும் கவிஞர் தமிழ் ஒளி அன்றாடம் நினைவு கூற வேண்டியவராக உள்ளார். அவர் வாழ்ந்த காலத்திலும் எதிர்காலத்துக்குண்டான சிக்கலுக்கு தீர்வு சொல்லும் தன்மையில் தன்னுடைய எழுத்துக்களை எழுத்துக்கள் மூலம் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

கவிஞர் தமிழ் வழி எந்த அளவிற்கு இந்த மண்ணையும் மக்களையும் நேசித்துள்ளார் என்பதற்கு அவருடைய படைப்புக்கள் ஒவ்வொன்றும் சாட்சி. அவர் மார்க்சிய சித்தாந்தத்தை முழுமையாக உள்வாங்கியவர். அதனால்தான் ஓர் ஒடுக்கப்படுத்த சமூகத்திலிருந்து வந்தாலும் கூட அவருடைய கவிதையின் பாடுபொருள்கள் இயற்கை காதல் மானுடம் என்று எல்லை விரிந்து செல்வதை காண முடியும். போலி ஜனநாயக வாதிகளுக்கு மத்தியில் அவர் என்றும் அரசியல் வானில் மின்னும் பொதுவுடமை கவிஞராகவே பிரகாசிக்கிறார்.

துணைநூற் பட்டியல்.
1. சஞ்சீவி.செ. து. (தொ. ஆ) 2018, கவிஞர் தமிழ் ஒளி கவிதைகள், புகழ் புத்தகாலயம், சென்னை – 30.
2. வரதராசன்.மு. டாக்டர். 2010, திருக்குறள் தெளிவுரை வானதி பதிப்பகம்


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *