Discover the Irregularities of Competitive Examination (போட்டித்தேர்வு முறைகேடுகள்) NEET in education, jobs and impact on student development - https://bookday.in/

இந்தியாவில் போட்டித்தேர்வு முறைகேடுகள்

போட்டித்தேர்வு முறைகேடுகள் கேள்விக்குள்ளாகும் மாணவர் – இளைஞர்களின் எதிர்காலம்

கல்வியானது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இன்றியமையாததும் விடுதலை உணர்வை அளிக்கக்கூடியதுமாகும். இக்கல்வியினூடாக தனிமனிதனின் திறன், தகுதி, தரத்தினை வளர்த்தெடுத்து மதிப்பெண் பெறவும், வேலைவாய்ப்பிற்கு சான்றாகயிருப்பது மட்டுமல்லாது, வறுமை, ஏழ்மை, கல்வியறிவின்மையிலிருந்து மீளுவதற்கு உதவிடுவதாய் இருப்பதினால் மிகவும் இன்றியமையாததாகிறது. கல்வி பெறுவதன்மூலம் கிடைக்கப்பெறும் விடுதலை உணர்வானது, மேற்சொன்ன அத்தியாவசியத்தேவைகளை நிவர்த்திசெய்துகொள்ளும் அதேவேளை, பாலினம், இனம், சாதி கடந்து, அனைத்துவகையான சுரண்டல், சமத்துவமின்மை, மற்றும் பாகுபாடுகளிலிருந்தும் விடுபட்ட ஒரு சமூகத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது. இத்தகைய ஜனநாயகத்தினை அடிப்படையாகக்கொண்ட கல்வி முறைதான் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் பலனளிக்கக்கூடியதாக அப்போது இருந்துவந்தது.

தற்போதைய சந்தை – வலதுசாரி அடையாள அரசியல் காலத்தில் அமலில் இருந்துவரும் கல்விமுறையானது சந்தைக்கும் வலதுசாரிகளுக்கும் பலனளிக்கக்கூடியதாக மாறி, ஜனநாயகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது. இதன்விளைவாக சமத்துவமின்மையும் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்தவண்ணமிருக்கிறது. இவை இரண்டும் சேர்ந்து பொதுத்தளத்தில் அதிகரிக்கஅதிகரிக்க, தரமான உயர்கல்வியின் மூலம் தங்களது தகுதி திறன்களை வளர்த்துக்கொள்ள விரும்புகிற; சமூகநீதியை வேண்டுகிற மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பிற்காக போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் அந்த இளைஞர்களின் எதிர்காலமென்பது கேள்விக்குள்ளாகிவிடுகிறது.

சமூகநீதி கோருகிற மாணவர்களும், இளைஞர்களும் ஒருபக்கம் சந்தையின் விளைவினால் ஏற்பட்டுள்ள ‘போட்டி’ யினாலும்; வலதுசாரி அடையாளப் பரவலினால் ஏற்பட்டுள்ள ’துருவப்படுத்தும்’ அரசியலினாலும் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர், இன்னொருபக்கம் ‘தங்களது வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதமளிக்கக்கூடிய உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பிற்கான போட்டித்தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளினால் மிகவும் பாதிக்கப்படுபவர்களாகவும் இருக்கின்றனர். இதனையொட்டிய விபரங்களைச் சற்று சுருக்கமாகக் காணலாம்.

நீட் நுழைவுத் தேர்வு (NEET Entrance Examination) முறைகேடுகள் :

கடந்த 2024 மே மாதம் ‘ தேசிய தேர்வு முகமை’ யினால் இந்திய நாடு முழுக்க 571 நகரங்களிலுள்ள 4750 மையத்தில் நடத்தப்பட்ட இளநிலை மருத்துவம் பயிலுவதற்கான நீட் நுழைவுத்தேர்வில் (போட்டித்தேர்வு முறைகேடுகள், கிட்டத்தட்ட 24 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வெழுதினர். இத்தேர்வின்போது, வடமாநிலங்களில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்திருப்பது பற்றிய செய்திகளானது ஊடகங்களின் வாயிலாகத் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு தேர்வுமையத்தில் ஹிந்தி வினாத்தாளுப்பதிலாக ஆங்கில வினாத்தாளினை வினியோகம் செய்ததின் காரணமாக ஏற்பட்டக் குழப்பத்தினால், மாணவர் ஒருவர் கட்டுப்பாடுகளையெல்லாம் மீறி வெளியேறியதன் மூலமாகத்தான் வினாத்தாள் கசிந்தது எனக்கூறப்பட்டது, பின்னர் வினாத்தாள் கசியவில்லை என தேசியத் தேர்வு முகமை மறுத்துள்ளதையும் அறிய முடிகிறது.

பிகார் மாநிலத்தில் நீட் தேர்வு நடைபெறும் நாளுக்கு முதல்நாளே (04.05.2024), அத்தேர்வினை எழுதவிருந்த 20 பேரினை வரவழைத்து, அவர்களிடம் கசிந்த நீட் வினாத்தாளுக்கானப் பதிலை தயார்செய்து கொடுத்திருக்கின்றனர். இதனையடுத்து, இச்செயலில் தொடர்புடைய பயிற்சிமையத்தினர், பெற்றோர் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

குஜராத் மாநிலம் கோத்ராவிலுள்ள ஒரு தேர்வு மையத்தில், அத்தேர்வு மையத்தின் துணைக்கண்காணிப்பாளர் உதவியுடன் நீட் தேர்வில் வெற்றிபெற உதவுவதாகக்கூறி, நடந்த முறைகேட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதுதவிர, ராஜஸ்தான், மும்பை ஆகிய இடங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியாகக்கூறி, அச்செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நீட் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் போன்ற முறைகேடுகளுக்குப்பின்னால் லட்சக்கணக்கில் பணமும் கைமாறியிருக்கின்றது. இதுவரை, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் மோசடிகளினால், பிகார், ராஜஸ்தான், குஜராத், மும்பை, ஜார்க்கண்ட் ஆகிய இடங்களிலிருந்து 50 பேருக்குமேல் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த காலங்களிலும் நீட் தேர்வில் இதுபோன்ற முறைகேடான சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது மாத்திரமல்ல, உச்ச நீதிமன்றமும் தலையிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும், ஒருபுறம், நாடுமுழுக்க உள்ள தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து நீட் தேர்விற்கு ஆயத்தமாகிவரும் மாணவர்களில் சிலர் மிகை அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துகொள்வதும் நிகழ்கிறது. இன்னொரு புறம் நீட் தேர்வு முடிவுகள் வெளிவரும்போது, கட் ஆஃப் மதிப்பெண்ணை எட்டமுடியாத மாணவர்களில் சிலரும் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். தமிழகத்தில் 2016 முதல் இதுவரை 23 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இப்படியான உணர்ச்சிவயமிக்க பிரச்சினையில் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொண்டு தீர்வுகாண மறுப்பது என்பது போட்டியினை ஊக்குவிக்கும் கார்ப்பரேட்களுக்கே உதவிடுவதாக அமைந்துவிடுகிறது.

மருத்துவத்திற்கான நீட் தேர்வில் மட்டுந்தான் முறைகேடுகள் நடைபெறுகிறது எனச்சொல்லமுடியாது. தமிழகத்திலுள்ள பிரபலமிக்க தனியார் பொறியியல் பல்கலைக்கழக நுழைவுத்தேர்விலும் கூட இந்த ஆண்டு இதுபோன்ற சம்பவம் அரங்கேறியிருக்கிறது. வேலூரிலுள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடந்த பொறியியல் பட்டப்படிப்பிற்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வின்போது முறைகேடுகள் கண்டறியப்பட்டு, இக்குற்றச்செயலில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். ஒன்றிய அரசும், தன்பங்கிற்கு போட்டித்தேர்வுகளில் நடைபெறும் வினாத்தாள் கசிவு, முறைகேடுகளைத்தடுக்கும் நோக்குடன், பொதுத்தேர்வுகள் ( நியாயமற்ற வழிமுறைகளைத்தடுத்தல்) – 2024 சட்டத்தினைக்கொண்டுவந்தும் முறைகேடுகளைத் தடுக்கமுடியவில்லை என்பதுதான் யதார்த்தமாக இருக்கின்றது.

தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப முறைகேடுகளும் புதுப்புது வடிவமெடுக்கின்றது. தகுதி, போட்டிதிறனை மேம்படுத்துவதற்கு, நுழைவுத்தேர்வு அவசியம் எனக்கூறிக்கொள்ளுகின்ற ஒன்றிய ஆட்சியாளர்கள், இதுபோன்று, சூழ்ச்சித்திறனுடன் கையாளப்படும் முறைகேடுகளைத் தடுக்கமுடிய வில்லை என்கிறபோது, அவர்களது மக்கள்நலனில் அக்கறையற்றப் போக்கையே வெளிக்காட்டுகிறது. இவ்வாறான முறைகேடுகள் தொடர்ந்து நடந்துவருவதினால் பாதிக்கப்படுவது யாரெனில், கல்வியின் மூலம் தங்களுடைய தகுதியை வளர்த்தெடுத்து, வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள நினைக்கிற சமூகநீதி கோரும் சமூகத்திலிருந்து வரும் மாணவர்களாகவே இருக்கின்றனர்.

Discover the Irregularities of Competitive Examination (போட்டித்தேர்வு முறைகேடுகள்) NEET in education, jobs and impact on student development - https://bookday.in/

ஒருவேளை, இப்படியான முறைகேடுகள் மூலம் தேர்வாகி உயர்கல்வி நிறுவனங்களில் கல்விபயில நுழையும் மாணவர்களின் திறன் எப்படியிருக்கும் என்பதும், எதிர்காலத்தில் உயர்கல்வி நிறுவனங்களின் தரம் எவ்வாறாக மாறும் என்பதும் கேள்விக்குறிதான். உதாரணத்திற்காகச் சொல்லவேண்டுமெனில், 2018 முதல் 2023 வரை ஐ.ஐ.டி; ஐ.ஐ.எம்; ஒன்றியப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படித்துவந்த 19,256 மாணவர்கள் தங்களது படிப்பினைத்தொடரமுடியாமல் இடைநின்று விட்டனர். இதே காலகட்டத்தில் இந்நிறுவனங்களில் படித்துவந்த கடினமான பாடத்திட்டம், பாகுபாடு போன்ற காரணங்களினால் 33 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; கடந்த ஆண்டு ஐ.ஐ.டி களில் படித்துமுடித்த சுமார் 8000 பேருக்கு வேலை கிடைக்கவில்லை ; உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப்பட்டியலில் முதல் 200 இடத்தில்கூட இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் ஏதுமில்லை; 2023 ஆம் ஆண்டின் நிலவரப்படி வெளிநாடுகளுக்குச்சென்று உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 13 லட்சமாகும். இந்தியாவில் 24 போலியான பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யூ.ஜி.சி தெரிவித்துள்ளது; மேலே கூறப்பட்டத் தகவல்கள் யாவும் தனித்தனியாகத் தெரிந்தாலும் அவையனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். இதிலிருந்தே, இனிவருங்காலத்தில் இந்தியாவின் கல்வித்தரம் எப்படியிருக்கும் என யூகித்துக்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பிற்கான போட்டித்தேர்வுகள் :

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் 2022 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 15 வயது முதல் 29 வயதுவரையிலான இளைஞர்களில் 83 சதவீதமானவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்கிறது. இளைஞர்களில் பலர் வேலைவாய்ப்பின்மை மட்டுமல்லாது, பணவீக்கம், விலைவாசி உயர்வினாலும் துயருற்று வருவதை யாரும் மறுக்கமுடியாது. ஒன்றிய அரசும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றியத்தில் 10 லட்சத்திற்கு மேலான காலிப்பணியிடங்கள் இருப்பதாகக்கூறியுள்ளது. இதுவல்லாது, தனியாருக்கு தாரைவார்த்ததுபோக எஞ்சியிருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் ஆகியற்றிலுள்ள காலிப்பணியிடங்களைப் பூர்த்திசெய்வதிலும் ஒருவிதத் தொய்வு நீடிக்கிறது. இதேபோல நாட்டிலுள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களும் நிரம்பவே இருக்கலாம்.

நாட்டின் வட பகுதியிலுள்ள மாநிலங்கள், தங்களது மாநிலத்தேவாணையத்தின் மூலம் நடத்துகிற தேர்வுகள் பலவும் முறைகேடுகளால் தடைபட்டு காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் இளைஞர்களின் எதிர்காலக்கனவைச் சிதைப்பதாக இருப்பதை பத்திரிகை, இணையச்செய்திகளிலிருந்து அறியமுடிகிறது. உதாரணத்திற்காகப் பட்டியலிடும்போது,, வினாத்தாள் கசிவினால் தேர்வு ரத்தாகிவிடுகிறது. வினாத்தாளில் தவறு, கட் ஆஃப் மதிப்பெண், இட ஒதுக்கீட்டினை முறையாகக்கடைபிடிக்காதது உள்ளிட்ட காரணங்களினால், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடி தடையுத்தரவு பெற்றுவிடுகின்றனர், இதன்பின்பு, வழக்கு விசாரணை இழுத்துக்கொண்டே போவதால், காலம் தாழ்ந்துபோய்விடுகிறது. சிலசமயம் ஆட்சிமாற்றம்; அரசியல் தலையீடு போன்ற காரணங்களினாலும் காலவரையரையின்றி தேர்வு தள்ளிப்போய்விடுகிறது. செலவில் சிக்கனம்; தொழில்நுட்பத்தினைப்புகுத்துதல் போன்ற அரசின் கொள்கைகளினால்கூட காலிப்பணியிடங்கள் பூர்த்தியாகுவதில்லை. இப்படியானச் சூழலில், தேர்வு எழுதுபவரின் வயது அதிகரிப்பு, இடம்பெயர்வு, மனநிலையில் மாற்றம் காரணமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரம் பறிபோய்விடுகிறது.

கடந்த 2015 முதல் 2023 வரை, குஜராத், ராஜஸ்தான், பிகார், உத்திரப்பிரதேசம், தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், உத்தராகண்ட், உள்ளிட்ட 8 மாநிலங்களில் 50 க்கும் மேற்பட்ட வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளினால் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன. இதனால் 1.4 கோடிக்கும் மேலான இளைஞர்கள் பாதிப்படைந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இதிலும் பார்க்க, குஜராத், ராஜஸ்தான், உத்தராகண்ட், உத்திரபிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இத்துடன், மத்தியப்பிரதேசத்தில் 2013 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட ’வியாபம்’ பணியாளர் ஆட்சேர்ப்பு முறைகேடுகளையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

ஆண்டுதோறும், வட மாநிலங்களிலுள்ள பள்ளிகளில் நடக்கும் அரசின் ஹிந்தி மொழிப்பாடத்திற்கானத் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சிப் பெறுவதில்லை. இன்னும்சொல்லப்போனால், பிகார், உத்திரப்பிரதேசம், போன்ற மாநிலங்களில் நடக்கும் அரசுப்பள்ளி தேர்வுகளின்போது, தேர்வு எழுதும் அறைக்கு வெளியிலிருந்து ’பிட் கொடுப்பதை ஊடகங்களில் பார்த்திருக்கலாம். பள்ளித்தேர்வுகளில் இப்படியான முறைகேடுகள் பஞ்சமின்றி நடக்கும் பின்னணியிலிருந்து வருபவர்கள், ஒன்றிய அரசின் போட்டித்தேர்வுகளில் அதிகளவில் தேர்ச்சிபெற்று அரசுப்பணிக்கு வருவதென்பது இன்றைய நாளில் அதிகரித்த வண்ணம் இருப்பதன் பின்னணிதான் கேள்விக்குறியாக உள்ளது.

தமிழகத்தில் பொதுவாக, ஒன்றிய அரசுத்துறைகளில் குறிப்பாக, இரயில்வே, அஞ்சல், வங்கிகளில் வட மாநிலத்தவரின் ஆதிக்கம் நிறைந்திருப்பதை பலரும் கவலையுடன் பகிர்ந்துகொள்வதைக் காணமுடியும். இதைத்தவிர, ஒன்றியப் பணியாளர்தேர்வு மையத்தினால் நடத்தப்பெறும் தேர்விலும் தமிழகஇளைஞர்களின் தேர்ச்சி எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு சென்னையில் இரயில்வே பணிக்கு நடந்த ஒரு தேர்வில், வட மாநிலத்தவர்கள் ‘புளு டூத்’ மூலம் தேர்வெழுதியதை கண்டுபிடித்து கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதுமாதிரி, சில ஆண்டுகளுக்குமுன், அஞ்சல் துறையில் ’போஸ்ட் மேன்’ பதவிக்கு தேர்வுக்கு நடந்த தேர்வில் அரியானா மாநிலத்தைச்சேர்ந்த ஒருவர் தமிழில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்ததையும் செய்தியாக அறியமுடிந்தது.
மேற்சொன்ன தகவல்களிருந்து தமிழகத்து இளைஞர்கள் ஒன்றிய அரசுப்பணிக்கு குறைந்த அளவில் தேர்ச்சி பெறுவதற்கும், வட மாநிலத்தவர்கள் உயர்கல்வி பயிலவும், போட்டித்தேர்வில் வெற்றிபெறவும் வேண்டி, முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதையும் கவனிக்கும்போது, நேர்மையான மனப்பாங்குகொண்ட, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நிலையறிந்து கவலை கொள்ள வேண்டியிருக்கின்றது.

இங்கே, சமூக – பொருளாதார தளமானது ஏற்றத்தாழ்வுமிக்கதாக இருக்கிறது. இதனோடு சமத்துவமின்மையும் வேலைவாய்ப்பின்மையும் சேர்ந்துகொள்ளும்போது மாணவர்கள்- இளைஞர்களின் எதிர்காலம் இனி மேலும் சிக்கலானதாகவே மாறும். இந்நிலையில், முறைகேடுகள் ஏதுமற்ற தரமான கல்வியையும் முறையான வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கித்தருவதென்பது சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்களின் கடைமையாகிறது.

பின்குறிப்பு :

(இக்கட்டுரை எழுதி முடித்த நாள் 30.05.2024. அதன் பிறகான காலத்தில், நீட் முறைகேடு புகார்களின் காரணமாக தேசிய தேர்வு முகமையின் தலைமைப்பொறுப்பிலிருந்தவர் நீக்கப்பட்டிருக்கிறார். ஒன்றிய அரசானது, இது குறித்த புகாரை விசாரிக்க சி.பி.ஐ யிடம் ஒப்படைத்திருக்கிறது.. சி.பி.ஐ யும் தனது விசாரணையைத்துவக்கி, இதுவரையில் வட மாநிலங்களில் பத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்திருக்கின்றது. நடப்பு மக்களவையில் இதுகுறித்து விவாதம் நடத்த எதிர்கட்சிகள் கோரியிருக்கின்றன. தமிழக அரசும் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் “ நீட்” டிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என பேரவையில் தீர்மானம் ஒன்றினையும் நிறைவேற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.)

இக்கட்டுரை எழுத உதவியவை:

The Indian Express, (Delhi) Dated – 06/05/24; The Hindustan Times (Delhi) Dated – 06/05/24; The Wire Dated – 05/12/2023 and Dated 16/03/23; Free Press Journal Dated – 30/03/23; The Hindu Dated – 07/05/24; தினமணி, தமிழ் ஹிந்து தேதி 07/05/24

கட்டுரையாளர் : 

நிகழ் அய்க்கண்

 

மேலும் படிக்க

நீட் தேர்வு: சமூக நீதிக்கு எதிரானது…..ஏன்? – துளசிதாசன்

நெருக்கடிக் காலத்தில் ‘நீட்’ அவசரம் – அ. குமரேசன்

ஒரே நாடு.. ஒரே நுழைவுத் தேர்வு உயர்கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்கள் நுழைய முடியுமா? கட்டுரை – பொ.இராஜமாணிக்கம்

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. கல்லிங்கரை கருணாநிதி

    இந்தியாவில் போட்டித்தேர்வு முறைகேடுகள் குறித்தான கட்டுரையில் எதார்த்தமான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. நாங்களும் எங்கள் பகுதியில் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறோம். கடந்த மூன்று வருடங்களாக தமிழகத்தில் போட்டித் தேர்வு அவசியம் குறித்து பள்ளிகளில் carreer guidence மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட்டு வருகிறது. நல்ல செய்தி. ஆனால் மாநில அரசு / ஒன்றிய அரசு போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்குவதில்லை. இது குறித்து எந்தவொரு விழிப்புணர்வு இல்லை. அரசு பணியிடங்களை முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்து வருகிறது. போட்டித் தேர்வு என்பது ஒரு வகையில் போதை அருந்துவது போலத்தான் இருக்கிறது. பல ஆண்டுகளாக படித்து போட்டித் தேர்விற்கு படித்து வரும் மிகப் பெரிய இளைஞர்கள்(பெண்கள் உட்பட) ஒருவித சோர்வு மனநிலைக்கு செல்லக்கூடிய அபாயம் இருக்கிறது. போட்டித் தேர்வு எந்த வேலைக்கும் லயக்கற்றவர்களாக மாற்றும் போக்கு நிகழ்ந்து வருகிறது. போட்டித் தேர்வு நடத்தும் அதே சமயத்தில் பணியிடங்கள் அதிகமாக ஏற்படுத்த வேண்டும். அரசியல் ரீதியாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும். மாநில /ஒன்றிய பட்ஜெட்டுகளில் வேலைவாய்ப்புக்கு என்று நிதியை ஒதுக்க வேண்டும். போட்டித் தேர்வுகளை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்திட அரசியல் உறுதிப்பாட்டை எடுத்திட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *