நூல் அறிமுகம்: யஷ்பாலின் *காம்ரேட்* – குமரேசன் செல்வராஜ்.நூல்: காம்ரேட்
ஆசிரியர் – யஷ்பால்
விலை: 50.00
பதிப்பகம் – பாரதி புத்தகாலயம்.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/kamrate-9241/

விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தின் புரட்சி இயக்க வரலாற்றை இந்த நாவலில் திரை விலக்கிக் காட்டுகிறார் யாஷ்பால். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குத் தலைமையேற்று நடத்திய துணிகரமான போராட்டங்களின் பின்னணியில் இந்த நாவலைப் படைத்தது இருக்கிறார் ஆசிரியர்.

கல்லூரி மாணவியான கீதா என்னும் பெண் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியராக மாறும்போது அவளுக்குப் பல விசயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது, மக்களுக்காக உதவி செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியானது நல்ல ஆடை ஆபரணங்கள் அணியும்போது ஏற்படும் இன்பத்தை விட மேலானது என்பதை கம்யூனிஸ்ட் கட்சி பணி அவளுக்குப் புரிய வைத்திருந்தது.

கல்லூரி முடிந்த பின்பு தெருவோரங்களில் கம்யூனிஸ்ட் நாளிதழ் விற்கும் கீதாவை பவாரியா என்னும் ரவுடியின் கண்கள் அவளது மேனியை மேய்ந்துகொண்டிருந்தது, அவன் உடன் இருக்கும் நண்பர்கள் அவனை உசுப்பேத்திவிட அவளிடம் சென்று நாளிதழைப் பெறுகிறான். அதைத் தொடர்ந்து அவளுடன் நட்புறவைப் பெறுகிறான். காங்கிரஸ் அனுதாபியான பவாரியா பெரிதும் அரசியல் படாதவன். கீதாவோ இலக்கில்லாமல் எதையும் எதிர்ப்பது என்று ”வாய்ப்புரட்சிக்கு” வம்பளக்கஒதுங்குபவள் இல்லை. இவர்களின் நட்பின் வழியே கீதா பவாரியாவிற்கு கம்யூனிசத்தைச் சொல்ல முற்படுகிறாள், அவனோ இவளை அடையத் துடிக்கிறான்.இவர்களின் நட்பு, கீதாவின் ஒழுக்கத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது அப்போது கீதாவோ இதுவரையில் அவன் என்னிடம் எந்த தவறான முறையிலும் அணுகவில்லை என்கிறாள், கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் பொது வரையறையாகச் சொல்லப்படும் ஒழுக்கம் நாகரீகம் பற்றி கவலை கொள்பவர்கள் அல்ல, அது வர்க்கத்திற்கு ஏற்றாற் போல வரையறுக்கப்படுகிறது என்பதை அவர்கள் உணர்ந்தவர்களாக இருக்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது ஒரு பகுதி:
“எண்ணற்ற தெருக்கூட்டும் தொழிலாளி சகோதரிகளும், பூர்வ குடிப் பெண்களும் முழங்கால்கூட மறையாத ஆடைகளுடன் மார்பு தெரியக் குப்பை கூட்டுகின்றனர். யாருக்கும் அதைப் பற்றிக் கவலையில்லை. வெட்கித்தலை குனியவில்லை. ஒரு பூர்ஷ்வா, ஏன் படித்த வர்க்கத்துச் சின்ன எசமானிகளின் சேலை அரை சாண் உயர்ந்துவிட்டால் பம்பாய் நகரம் பற்றி எரிகிறது…” (புத்தகத்திலிருந்து).

ஒரு நாள் கீதாவைத் தனது கிளப்பிற்கு அழைத்துச் செல்கிறான் அதைக் கண்டு கீதா மனம் உடைந்து அழுகிறாள், அங்கிருந்து அவளை வீட்டிற்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு தனது இல்லத்தில் வந்து குடிக்கிறான். அவளது கண்ணீர் அவனை என்னமோ செய்கிறது, இதுவரையில் எத்தனையோ கண்ணீரைக் கண்டிருக்கிறான் ஆனால் கீதாவின் கண்ணீரிலிருந்த நம்பிக்கை அவனை உடைத்துவிடுகிறது.

கீதா கொடுத்த நாளிதழ்களை வாசிக்கிறான், காங்கிரஸ் காரர்கள் கம்யூனிஸ்ட்டுகள் மீது வன்மத்தைக் கக்குகின்றனர், இவனும் அதனை நம்புகிறான் அப்போது கூட கீதா கம்யூனிஸ்ட்டுகளால் ஏமாற்றப் படுகிறாளோ என்ற எண்ணமே அவன் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

கிளப்பிற்கு கீதா சென்றது பேசுபொருளாகிறது, கீதா அவமானப்படுத்தப் படுகிறாள், இருப்பினும் உழைக்க முற்படுகிறாள், இறுதியாக பவாரியாவிற்கு உண்மைகள் புலப்படுகிறது. கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டத்தின் நியாயம் தெரியவருகிறது. கப்பல் படை புரட்சி திரண்டு வருகின்ற நேரங்களில், நகரங்களில் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. பவாரியா அரசாங்கத்திற்கு எதிராகக் களம் இறங்குகிறான், துப்பாக்கிச் சூடு நீந்துபவர்கள் மீது பாய்ந்து சண்டை இடுகிறான், பதிலாக நான்கு குண்டுகளை உடம்பில் வாங்கிக்கொண்டு உயிருக்குப் போராடுகிறான். அப்போது அவனிடம் கேட்கிறார்கள் யாரேனும் உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று அவன் கீதாவின் பெயரைச் சொல்கிறான்.கீதாவிற்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது அவளது மனமும் அவனைப் பார்க்கத் துடிக்கிறது ஆனால் அவள் மருத்துவ உதவிப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறாள். கடைசியாக கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சென்று உத்தரவு பெற்று அவனைக் காணச் செல்லலாம் என்று இருக்கும் தறுவாயில் பவாரியாவின் இறப்புச் செய்தி வருகிறது, கீதாவின் கண்கள் குளமாயின. மாநிலச் செயலாளர் கீதாவைப் பார்த்து இது கண்ணீர் விடும் நேரம் அல்ல பெருமைப் பட வேண்டிய நேரம் என்கிறார் இருப்பினும் கீதாவின் கண்களில் தண்ணீர் பெருக்கெடுத்தது.ரத்தம் சிந்தியவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கீதாவை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு, போராட்டங்கள் ஆகியவற்றைச் சொல்வதுடன் பல முற்போக்கு விடயங்களை நம்மிடையே சொல்லிச் செல்கிறார் யஷ்பால் அவர்கள். பகத் சிங்கின் நண்பரான யஷ்பாலின் கதை நெடுக நிறைய முற்போக்கு செயல்பாடுகளை அள்ளித்தெளித்து இன்றளவும் இதுபோன்ற பிற்போக்கான செயல்கள் நடக்கத்தான் செய்கிறது என்பதை நமது உணர்த்தி சென்றிருப்பது மிகவும் அழகான அம்சம் ஆகும்.

நன்றி!

குமரேசன் செல்வராஜ்

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)