தமிழகத்தின் வரலாறோடு இரண்டறக் கலந்தவர் தோழர் பி.ஆர்
பி.ஆர் நினைவு சொற்பொழிவு நிகழ்வில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு
மதுரை, செப். 21- தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, மொழி உரிமை குறித்து பேசும் போது தோழர் பி.ராம முர்த்தியை மறந்துவிட்டு பேசமுடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவரும் சிஐடியு முன்னாள் தலைவருமான தோழர் பி.ராமமூர்த்தி 2வது நினைவு சொற்பொழிவு மதுரையில் வெள்ளியன்று (செப்.20) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது: இந்தியாவினுடைய அரிய பணிகளை எல்லாம் இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தான் தோழர் வைகை, பொன்னி ஆகியோர் தலைமையில் தோழர் பி. ராமமூர்த்தி நினைவு விழா குழு என்ற ஒன்றை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் பி. ராமமூர்த்தி அவர்களின் பிறந்த நாளிலே இது போன்ற நிகழ்வுகளை நடத்துகிறோம். கடந்த ஆண்டு சென்னையில் முதல் சொற்பொழிவை நம்முடைய அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மிகச் சிறப்பாக ஆற்றினார்கள். இரண்டாவது ஆண்டு சொற்பொழிவு மதுரையில் இந்த ஆண்டு நடந்து கொண்டிருக்கின்றது. இந்த விழாவில் தான் பி. ஆர் அவர்களின் சட்டமன்ற உரைகளை தொகுத்து பாரதி புத்தகாலயம் சார்பில் ஒரு புத்தகமாக தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். அடுத்த ஆண்டு நடை பெறும் விழாவில், நாடாளுமன்றத்தில் தோழர் பி.ஆர். அவர்கள் ஆற்றிய உரைகளை எல்லாம் தொகுத்து இரண்டு மூன்று தொகுப்புகளாக வந்தாலும் சரி ஒரு சிறப்பான புத்தகமாக வெளியிட இருக்கின்றோம். 1952 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தல் அன்றைக்கு சென்னை என்பது மிக விரிந்த ஒரு மாகாணம்.
இந்தியாவினுடைய விடுதலைக்குப் பின் நடை பெறும் முதல் தேர்தலில் சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்டுகள் மகத்தான வெற்றி பெறுகிறார்கள். அன்றைக்கு காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 66 லட்சம். கம்யூனிஸ்டுகள் தலைமையிலான எதிர்கட்சிகள் பெற்ற வாக்குகள் 126 லட்சம். நாம் பெற்ற வாக்குகளில் சரிபாதி கூட அன்றைக்கு காங்கிரஸ் பெறவில்லை. உண்மையிலேயே ஜனநாயகம் ஒன்று அன்று இருந்திருந்தால் அந்தத் தேர்தலில் தோழர் பி. ராமமூர்த்தி அவர்கள் தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். ஆனால் காங்கிரஸ் கட்சி தேர்தலில் இருந்து ஒதுங்கி இருந்த ராஜாஜியை கூட்டி வந்து முதலமைச்சராகியது. பிஆரை சிறையில் வைத்து தோற் கடித்து விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி அவர் சிறையில் இருந்து வெற்றி பெற்று கம்பீரமாக வெளியே வந்தார்.
சீர்திருத்த சாதி மறுப்பு திருமணம்
இன்றைக்கு கூட சீர்திருத்த திருமணங்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால் தமிழகத்திலேயே முதல் சாதி மறுப்பு திருமணத்தை செய்தவர் தோழர் பி. ராமமூர்த்தி அவர்கள் தான். தன்னுடைய தாயின் மறைவிற்குப் பின் தோழர் ராமமூர்த்தி எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் தன்னுடைய மனைவியை வீட்டில் விட்டுவிட்டு சட்டமன்றத்திற்கு சென்று விட்டார். திருமணம் நடைபெற்ற தகவல் அறிந்த முதலமைச்சர் ராஜாஜி உடனடியாக சட்டமன்றத்தில் பி. ராமமூர்த்தி அவர்களின் திருமணத்தை மனதார நான் வரவேற்கிறேன் என்று அவர் கூறிய போது தான் சட்டமன்றத்தில் உள்ள அனைவருக்கும் அவர் திருமணம் செய்தது தெரியும். இந்தத் திருமணத்தை கேள்விபட்ட பெரியார் மாலையில் திருமண வரவேற்பை தலைமை ஏற்று நடத்தினார். அப்படிப்பட்ட அற்புதமான நிகழ்வுகளுக்கு சொந்தக்காரர்கள் கம்யூனிஸ்டுகள்.
தமிழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்
பரப்பிக்குளம் – ஆழியார் பாசனத் திட்டம் தொடர்பாக கேரளா அரசாங்கத்திடம் பேசி அந்தத் திட்டத்தை உருவாக்கி கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கருக்கு பாசனம் கிடைக்கச் செய்தவர் பிஆர். அதேபோல் முல்லைப் பெரியாறு திட்டத்தில் பிரச்சனை வந்தது. நாங்கள் மின்சாரம் தயாரித்துக் கொள்கிறோம் என்று அங்குள்ள கேரள அரசு சொன்னபோது அந்த அரசாங்கத்தோடு பேச்சு நடத்தி மின்சாரத்தை தமிழகத்தில் நாங்கள் உற்பத்தி செய்கிறோம். நீங்கள் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்ற ஒப்பந்தத்தை போட்டுக் கொடுத்தார்..
நெய்வேலி அனல் மின் நிலையம்
இன்றைக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தோழர் பி. ராமமூர்த்தி இல்லை என்றால் அது நெய்வேலி அனல் மின் நிலையமாக வந்திருக்க முடியாது. அப்பகுதியில் கிடைக்கும் நிலக்கரி என்பதை இந்திய அரசு எடுத்து ஆய்வு செய்த போது இது பயன்படாத நிலக்கரி என்று ஆய்வாளர்கள் கூறினார்கள். அந்த நேரத்தில் தோழர் பி. ஆர். அவர்கள் கிழக்கு ஜெர்மனிக்கு கொண்டு சென்றார் . அவர்கள் ஆய்வு செய்து இந்த நிலக்கரியில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கூறினார்கள். அந்த ஆய்வின் அறிக்கையை அப்போதைய பிரதமர் நேருவிடம் கொடுத்து நெய்வேலி அனல் மின்நிலையம் உருவாக காரணமாக இருந்தார். இப்படி தமிழ்நாட்டினுடைய தொழில் வளர்ச்சி தமிழ் நாட்டினுடைய நீர் வளம் என்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக குரல் கொடுத்தவர் தோழர் பி. ஆர் என்பதை நாம் மறந்து விட முடியாது.
தமிழ் ஆட்சி மொழி அதிகாரத்தில் இருக்க வேண்டும்
இதேபோல் தமிழ்நாட்டில் தாய்மொழி தான் பாடமொழியாக இருக்க வேண்டும் என்று தமிழ் மொழி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் தாய்மொழி தான் நீதிமன்றம் வழியாக இருக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் 1954 ஆம் ஆண்டு முன்மொழிந்தவர். மொழி வழி மாநிலம் உருவாக்குகிற போது கம்யூனிஸ்டுகள் தான் போராடி தமிழ்நாடு என்ற மாநிலத்தை உருவாக்கினார்கள். கம்யூனிஸ்டுகள் போராடாமல் இருந்திருந்தால் தமிழ்நாடு என்று மாநிலம் உருவாகியிருக்காது. இன்றைக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை மோடி அரசு அறிமுகப்படுத்துகிறார்கள். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, நகராட்சி என்று ஒரே தேர்தல் நடை பெற்றால் அவர்கள் எத்தனை வாக்குகளை பதிவு செய்ய முடியும். நாம் கூறுவது நாடாளு மன்றம் என்றால் அதனுடைய தேர்தல் நடை முறை தனி, சட்டமன்ற தேர்தல் என்றால் அதனுடைய நடைமுறைகள் தனி, உள்ளாட்சித் தேர்தல் என்றால் அதனுடைய நடைமுறைகள் தனி இவற்றை ஒன்றாக நடத்தும் போது பிரச்சனைகள் தான் அதிகரிக்கும். எனவே தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டாம் என்று கூறுகிறோம். இவர்கள் கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்க நினைக்கின்றார்கள். மாநில உரிமைகளுக்கு சாவுமணி அடிக்கின்றார்கள். எனவேதான் இந்த சொற்பொழிவில் மாநிலங்களினுடைய உரிமைகளை பாது காப்பதற்கு மகத்தான பேரியக்கத்தை துவங்க வேண்டும் என்று அசோக் தாவ்லே அவர்கள் கூறியுள்ளார்கள். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்றைக்கு தமிழகத்தில் ஒரு மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது அருந்ததியர்களுக்கான மூன்று சதவீத உள் இட ஒதுக்கீடு சரியானது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழகத்தில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகின்றதோ எப்போதெல்லாம் பிரச்சனைகள் வருகின்றதோ அப்போதெல்லாம் அவர்களை பாதுகாக்கும் கேடயமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது.
தோழர் பி.ராமமூர்த்தி, சீத்தாராம் யெச்சூரி ஆகியோரை நினைவு கூறும் போது எந்த லட்சியத்திற்காக அவர்கள் போராடினார்களோ அந்த லட்சியத்திற்கான ஒரு மகத்தான இயக்கத்தை கட்டி முடிப்பதற்கு நாம் சபதம் ஏற்க வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார். நிகழ்ச்சியில் தலைமை ஏற்று பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், இடதுசாரி அரசியல் வலிமை மிக்க மாகாணமாக சென்னை மாகாணத்தை மாற்றியதில் ஒரு தலையாய பங்கு தோழர் பி. ஆர். அவர்களுக்கு உண்டு என்றால் மிகை அல்ல. இந்த 70 ஆண்டு காலம் நாம் நின்று விளையாடிக் கொண்டிருக்கிற இந்த மைதானத்தை உருவாக்கிய மகத்தான ஆளுமை தோழர் பி. ராமமூர்த்தி என்றார். காங்கிரஸ் கட்சி முழுமையாக சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தை ஆங்கிலத்தில் நடத்திய பொழுது அதை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என அவரவர் தாய் மொழியில் சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்மா னத்தை முன்மொழிந்த முதல் தலைவன் தோழர் பி. ராமமூர்த்தி என்றும் அவர் நினைவு கூர்ந்தார். அந்த ஆளுமையிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நமக்கு ஓராயிரம் விஷயங்கள் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நன்றி தீக்கதிர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.