மூன்றெழுத்து மகத்துவம்- பி.எஸ்.ஆர்
இன்று ஒரு வெளிமாநிலத்திற்கு நாம் பயணப்பட திட்டமிடும் போதே அந்த பகுதியின் விவரங்கள், எதெல்லாம் அங்கு பிரபலமான இடங்கள், அப்ப்குதியின் மொழியில் உள்ள சில இலகுவான பயன்பாட்டு வார்த்தைகள், உடை, உணவு கலாச்சாரம் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு அதெற்கேற்ப நமது பயண திட்டத்தை தீர்மானிக்கிறோம்…அறிவியல் வளர்ச்சி நமக்கு பேருதவி செய்கிறது..தகவமைத்து கொள்கிறோம்.
ஆனால் தான் சார்ந்திருக்கும் கட்சியை உருவாக்க, கட்டமைக்க, விரிவுபடுத்த, 70 ஆண்டுகளுக்கு முன்னால் மொழி தெரியாத ஒரு பகுதிக்கு வந்திறங்கி சரித்திரமாகி போன ஒருவரை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?
மேல இருக்கறவன் பாத்துக்குவான், கை விட மாட்டான், மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான் என நம்பும் மக்கள் கூட்டம், நமக்கு விதிச்சது அவ்வளவு தான் , யாரு வந்து என்ன செய்ய முடியும் என நொந்து போய் வாழ்வின் அனைத்து துயரங்களுக்கும் வேறு ஏதோ ஒன்று காரணம் என நினைத்து கொண்டிருந்த அப்பாவி மக்கள் மத்தியில் நமக்கான மாற்றத்தை நாமே உருவாக்க முடியும் , அது நம் காலத்திலேயே சாத்தியம் என சாதித்து காட்டிய ஒருவர் சம காலத்தில் வாழ்ந்து மறைந்துள்ளார் ..அவர் யாரென தெரிந்து கொள்ள வேண்டாமா?
ஒரேயொரு மனிதன் அனைத்து சாகசங்களையும் செய்து மக்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றியவர் எனும் திரை கதாநாயகர்களை பார்த்து பிரமித்து நின்ற சமயத்தில் தங்களுடைய அன்றாட வாழ்வில் எவ்வித ஒளி வட்டமும் இல்லாமல், வாழ்வின் அத்தனை அம்சங்களோடும் ஒன்றர கலந்த ஒளி ஏற்றிய ஒரு போராளியை பற்றி தற்கால தலைமுறைக்கு அவ்வரலாற்றை சொல்ல வேண்டுமே…
அப்படி என்ன செய்தார் ? என்ன சாதனை ? என்ன வாழ்க்கை மாற்றத்தை தந்தார் ? யாரவர்?
பி.சீனிவாச ராவ் எனும் பெயர் கொண்ட பி.எஸ்.ஆர்.
1907 கர்நாடக மாநிலத்தில் பிறந்த பி.எஸ்.ஆர் சிறு வயதிலேயே தந்தையை இழந்து , தாயின் வளர்ப்பில் உருவானவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பதற்காக படிப்பை, பின் செய்த வேலையை துறந்து போராட்டங்களில் ஈடுபட்டவர். அப்படி நடந்த போராட்டங்களின் போது பிரிட்டிஷ் போலீசால் தாக்கப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்ட போது, உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை காப்பாற்றியவர் ஒரு தாசி தாய் .. அவரையும் தன் தாயாக போற்றியவர் பி.எஸ்.ஆர்.
விடுதலை வேள்வியில் தன்னை அர்ப்பணித்த சீனிவாச ராவ் சிறையிலிருந்த போது நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தொடர்பு கிடைத்தது. ஏகாதிபத்தியத்தின் கோர முகம் பற்றி தெளிவான பார்வை பெற்றார். சோசலிச கருத்துக்கள் பற்றி தெரிய வந்தது. தொடர் சிறை வாசத்தில் நடந்த உரையாடல்கள் அவருக்கு அரசியல் வெளிச்சத்தை ஊட்டியது.
தென் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்காக பணிக்கப்பட்ட மகத்தான தோழர் அமீர் ஹைதர் கான் அவர்களை சிறையில் சந்திக்கும் வாய்ப்பை அந்நிய துணி எரிக்கும் போராட்டம் உருவாக்கி தருகிறது. இருவரும் ஒரே சிறையில்.. விவாதங்கள்..அரசியல் பார்வை விசாலம் அடைகிறது. அமீர் ஹைதர் கான் பேராசான் காரல் மார்க்ஸ் ,பிரெடிரிக் ஏங்கெல்ஸ் எழுதிய “ கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை” வாசிக்கிறார். சிந்தனை மாற்றம் வித்திடுகிறது.
மீண்டும் ஒரு முறை படிக்க… தேசிய சிந்தனை மாறி வர்க்க பார்வை மேலோங்குகிறது. மானுட விடுதலைக்கு மார்க்சிய தத்துவமே தீர்வு என திடமாக நம்புகிறார்.
இரண்டாவது காவிரியாக:
தான் ஏற்றுக்கொண்ட கட்சியினை அமைப்பாக உருவாக்க தம்ழகத்துக்கு அனுப்பபடும் தோழர் சீனிவாச ராவ் எதிலிருந்து துவங்குவது என யோசித்து , கிராமப்புற விவசாயிகளையும், தொழிலாளர்களையும் திரட்ட முடிவெடுத்து ஒருங்கிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டத்திற்கு வருகிறார். மொழி ஓரளவே தெரியும்..கட்சி அமைப்பே கிடையாது.
அடிப்படையிலிருந்து உருவாக்க வேண்டும். எப்படி செய்வது? அதற்கு மக்களின் பாடுகள் தெரிந்து கொள்ள வேண்டும்… கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் துன்ப துயரங்களை பார்த்தார்.. அதிகாலை 4மணிக்கு கொம்பு ஊதியதிலிருந்து துவங்கும் வேலை.,ஓய்வில்லாமல் வெறும் கஞ்சியை குடித்து, அந்தி போய் இரவு 8 மணி வரை வயலில் முதுகெலும்பு ஒடிந்து வளைந்து போய் …என்ன துயரமான வாழ்க்கை..
உடல் நலம் சரி இல்லையென்றால் கூட விடுப்பு சொல்ல முடியாது.. வந்து நொந்து தான் ஆக வேண்டும். அதையும் மீறி வரவில்லை என்றால் சவுக்கடி தான். ஏனென்றால் அவர்கள் பண்ணைகளின் அடிமைகள்..
அடிமையா? அதென்ன என தெரிந்து கொண்டார். விவசாய கூலி தொழிலாளர்களின் வீட்டு குழந்தைகள் படிக்க கூடாது, பண்ணையாரின் அனுமதி பெற்ற பின்னர் தான் திருமணம், திருமணத்திற்கு முன்னரே வயது வந்த பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்கு கொடுப்பது, வளர்க்கும் மாடுகளின் முதல் கன்றை அளிப்பது, வயல் வேலை மட்டுமல்லாமல் பண்ணையார் வீட்டுக்கு தேவையான பணிவிடைகளை செய்வது என கொடுந்துயர் மிக்க வாழ்க்கையை வாழும் மக்களின் துயர் போக்கவேண்டும் என்பதே பிரதானம் என முடிவெடுத்தார்.
விவசாயிகளுக்கு இந்த கொடுமையிலிருந்து விடுதலை பெற்று தருவதே குறிக்கோள், அதற்காக இந்த ஏதுமறியாத அப்பாவிகளை திரட்டி உரிமைகளை பெற்று தருவதே இவர்களுக்கான வாழ்வின் விடியல் என தீர்மானித்து களமிறங்கினார்.
நிலத்தை வளமாக்கும் காவிரியை போல் வாழ்வை வளமாக்க காவிரியாக கிராமங்களை வலம் வந்தார் பி.எஸ்.ஆர். மொழியை, அவர்களின் அன்றாட வாழ்வியலை அம்மக்களோடு ஒன்றர கலந்து கற்று கொண்டார். அவர்கள் கொடுத்த நத்தை, நண்டு என அனைத்தையும் உவகையோடு சாப்பிட்டார்.
அவர்களிடம் உரிமைகள், ஒன்று சேர வேண்டிய தேவை, சங்கம் அமைப்பது என எளிமையான மொழியில் உரையாடினார். உள்ளுக்குள் அச்சம் இருந்தது.. இவரு சொல்லிட்டு போயிடுவாரு ..யாரு நம்மளோடு நிக்க போறா … எனும் கேள்விக்கு அவரே பதிலளித்தார்.
ஆகப்பெரிய பண்ணைகளும், ஜமீன்களும் , கத்தி, வேல்கம்பு, வீச்சரிவாள் என வந்தாலும் நெஞ்சுரத்தோடு கம்பீரமாக களத்தில் துணிச்சலோடு எல்லா போராட்டங்களுக்கு முன்னின்று நடத்திய போது மக்களுக்கு இயல்பாகவே நம்பிக்கை வந்தது.
ஆண்டைகளுக்கு நாம் இனி அடிமை இல்லை, நமக்கும் உரிமைகள் உண்டு , அதைப்பெற சங்கமும் இருக்கு எனும் சிந்தனையை மேலோங்க வைத்தார்.. விளைவு மன்னார்குடி வட்டம் தென்பரை கிராமத்தில் முதல் விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது.
தென்பரையில் துவங்கியது கிளை அல்ல…ஏற்றப்பட்டது செங்கொடி அல்ல… ஒரு பெரிய மாற்றத்திற்கான துவக்கம்.
தடை அதை தகர்தெறி;
கூலி தொழிலாளிகள் ஒன்று சேர நிலவுடமையாளர்கள் விடுவார்களா? வன்முறையால அடக்க பார்த்தார்கள்- ஆயுதம் கொண்டு மிரட்டினார்கள்…
ஆனால் அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் காதுகளில் தோழர் பி.எஸ்.ஆர் சொன்னதே ஒலித்து வந்தது… ’”அடித்தால் திருப்பி அடி “
பிசிறில்லாமல் பின்பற்றினார்கள்…எதிர் தாக்குதல் பலமாக இருந்தது. உற்சாகமாக மக்கள் தோழருக்கு பின்னால் திரண்டனர்.
இந்த மாற்றங்கள் திரைப்படத்தில் வருவது போல் ஒரே பாடலின் போது மாறவில்லை… இரவு ,பகல் பாராமல் அயராத அவரின் மக்கள் சந்திப்பு..விவசாயிகளிடம் பேச இரவு கூட்டங்கள், அமாவாசை ஊர் கூட்டம் என ஜமீந்தார்களின் தடைகளை உடைத்தெறிந்து ஒன்றிணைத்தார். பல நாட்கள் உணவே இல்லாமல், இரவில் தூக்கம் துறந்து உழைத்ததின் விளைவு தஞ்சை மாவட்டம் முழுவதும் செங்கொடி இயக்கத்தை பற்றியே பேசப்பட்டது. கிராமம் தோறும் கிளைகள், கூலி உயர்வுக்காக மன்னார்குடியில் 80 ஆண்டுகளுக்கு முன்னரே 5000 பேரை திரட்டி பிரம்மாண்டமான பேரணி. இப்போது யோசிக்கும் போதே மலைப்பாக உள்ளது.
சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் சமரசமின்றி போராடினார்.
திருத்துறைப்பூண்டியில் இருக்கும் பெரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவுக்கு கொடி ஏற்றிவிட்டால், வெளியாட்கள் யாரும் ஊருக்குள் நுழையக்கூடாது என்பது கட்டுப்பாடு. இது தெரியாமல் நகருக்குள் மனைவியோடு நுழைந்து விடுகிறார் தலித் தோழர் சீரங்கன்… அடித்து நொறுக்கி, கை கால்களை உடைத்து திருப்பி அனுப்புகிறார்கள் அந்த காலத்து ஆண்ட பரம்பரைகள்…. விசயம் தோழரின் கவனத்திற்கு செல்கிறது…
தேர் திருவிழா நடக்கும் போது ஐநூறுக்கும் அதிகமான மக்களை திரட்டி , ரோட்டில் மறியல் செய்து எல்லோருக்கும் பொதுவான சாமியை ஏன் ஒரு சாதிகாரங்க மட்டும் தேர் இழுக்கிறாங்க..எங்களுக்கும் உரிமை உண்டு என சொல்ல, அரசு அதிகாரிகள் மிரண்டு போக சமரச பேச்சுவார்த்தை… எல்லோரும் சாமி தேரை இழுக்கலாம் என முடிவாகிறது…இது போல சம்பவங்கள் ஓராயிரம் இருக்கு.
அன்றும்- இன்றும்- என்றும்.;
விவசாயிகளை திரட்டி , அவர்களை அரசியலாக்கியதின் விளைவு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் 1952 முதல் பொது தேர்தலில் பெரும்பாலான இடங்களை கம்யூனிஸ்ட் கட்சி கைபற்றியது. அதற்கு வித்திட்டவர் தோழர் பி.எஸ்.ஆர்.
இன்றும் விவசாயிகளின் நிலை துயரமானதே.. கார்ப்பரேட்டுகள் விவசாயத்தில் புகுந்து பெரும் சுரண்டலை செய்ய துவங்கியுள்ள இந்த நவீன காலத்தில், இதை பயன்படுத்தி பாசிச மதவெறி சக்திகள், அடையாள அரசியல் பேசி சாதி வாரியாக மக்களை பிரித்து வெற்றி பெற நினைக்கிறார்கள்.
தோழர் சீனிவாச ராவ் போல அம் மக்களுடன் ஒன்றர கலந்து அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக உழைத்தால் நிச்சயமாக மாற்றம் உருவாகும்.அதை நிச்சயமாக செய்வோம்.
– என்.சிவகுரு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.