தோழர் எச்சூரி
********************
“குறிப்பாக இறந்த பிறகுதான்…”
ஆம். அது அப்படித்தான் நடந்தது.
கொஞ்ச நாளுக்கு முன்பு தான்
ஒருவனின் உடல் தானம்
உலகத்தின் பேசு பொருளானது
ஒருவனின் பெயர்
ஒவ்வொரு இந்தியனின் ரத்த அணுக்களிலும்
எழுதப்பட்டது
ஒவ்வொரு கம்யூனிஸ்டின் நாக்கும்
சிவப்புக் கொடி என
அவன் மேல் போர்த்தப்பட்டது
எச்சூரி என்று உச்சரித்ததும்
இந்துத்துவா வலது சாரியின்
எச்சிலும் சுத்திகரமானது!
அவன் இறப்பில்
ஆகாயம் முழுவதும்
அறிவு ஜீவிகளின் அஞ்சலி விமானங்கள்
“குறிப்பாக இறந்த பிறகு தான்.”
ஆம். அது அப்படித்தான் நடந்தது.
இந்தியர்களின் மிகப்பெரிய பலவீனம்
தேசத்தை இழந்த பிறகு போர்க்களத்தை யோசிப்பதைப் போல
இறந்தபிறகுதான் புகழ ஆரம்பிப்பார்கள்
இதனால் ஒரு பயனும் இல்லை என்பது வேறு விஷயம்.
இணைய உலகத்தைப்
பொய்களால் மேயும்
புனிதப் பசு ஒன்று இருக்கிறது.
அது
விடுதலைப் போர்க்களங்களில் தனது தொழிற்சாலைகளில்
எதிரிகளுக்குச் சப்பாத்து தயாரித்துக் கொடுத்தது.
அது
இந்தியத் தியாகிகளின் தூக்கு மரம்…
எதிரிகளிடம் மன்னிப்பு கேட்பது
அதன் தொழில் தர்மம்…
அதனால்
புகைப்படங்களில்
பொய்கள் கலந்து புகார் செய்கிற புலத்தொழில்
அதன் குலத்தொழில்!
இந்தியாவைக் கல்வாரி மலையாக்கி
எச்சூரியை ஏசுவாக்கியதும்கூட நடந்தது
வதந்திகளால்
சொர்க்கத்தை நிராகரித்தவர்களின் பட்டியல்
ஏராளம்.
மனதைக் குடைந்து சொல்கிற சொல்லில்
இதயத்தின் ஈரப்பதத்துடன்
உலக மக்களுக்குச் சொல்ல
ஒரு கவிதை இருக்கிறது:
உடல்தானம் செய்தவனின் உடல்கூட
உங்கள் முன்
உங்கள் பரிசோதனைக்காகவே
காத்திருக்கிறது
மானுடத்தை நோக்கிய அவனது பயணத்தில்
உங்களுடைய அளவுகோலும் இருக்கிறது
தொட்டுப் பார்க்கலாம்
அவனுடைய இதயம்
இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது.
எழுதியவர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

