1980களில் சென்னையைப் பற்றியானதொரு காட்சி எனக்குள் இப்படித்தான் பதிந்திருந்தது.
”வானுயர்ந்த கட்டிடங்கள், அலுவலகங்களுக்கு செல்ல காத்திருக்கும் மக்கள் நிறைந்த, சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்கள்.. அங்கே ஒவ்வொருவரின் கைகளிலும் சாப்பாட்டு பை. பெல்பாட்டம் போட்டு இங்கிலீஷ் பேசும் மனிதர்கள், விதவிதமான கார்களிலும், எஸ்டி பைக்குகளிலும் மனசுக்கு பிடித்த இளம் பெண்களோடு தியேட்டர்களில், கடற்கரை மணலில் இளசுகள்…. ”
“எப்படி சென்னையில் மட்டும் எல்லோரும் இவ்வளவு மகிழ்ச்சியான.. சந்தோஷமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்”, “வாழ்ந்தா அப்படி வாழனும்”, இப்படியாக மனசுக்குள் நிரப்பிச் செல்லும் காட்சிகளாகவே மனசெங்கிலும் இருந்தது.
“எங்க பார்த்தாலும் வேலைக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்…நல்லா படி.. பரிட்சை எழுதி பாஸ்பன்னு.. அப்பதான் உனக்கு வேலை கிடைக்கும்”, என்கிற அப்பாவின் அக்கறையான மிரட்டலுக்கிடையே… “எப்பிடியும் மெட்ராஸ் போனா நாமும் நல்லா வாழலாம்.. ஏன் அப்பா மிரட்டி நம்மள தளிச்சு தள்ளுராரு”, என்கிற எரிச்சலில் படிக்குத்தோன்றியது.
1987ல் நிர்பந்தத்தின் காரணமா அம்மாவின் மூக்குத்தியை அடமானம் வைத்து கிடைத்த 130 ரூபாயோடு, சென்னை நோக்கி கலர் கலர் கனவுகளோடு புறபட்ட எண்.122பேருந்து, மதுராந்தகத்தை தாண்டியதும் குறுக்கிடும் பெரிய பாலமொன்றினை கடந்திடும்போது வயிற்றில் இருக்கும் குடலை வெளியே இழுத்துப் போடும் நாற்றத்தினை சுவாசிக்க, என்ன வென்று ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது, அங்கிருந்த மதுபானத் தொழிற்சாலையின் வானுயர்ந்த புகைப்போக்கியில் இருந்து கிளம்பிய புகை, நீல நிற வானமெங்கிலும் கருப்புப் புடவைகொண்டு மறைத்துவரும் தோற்றமாக எனக்குள்… பேருந்து குரோம்பேட்டையை நெருங்கிடும்போது கவுச்சி நாத்தம் எதோ செய்திட, கூடவே வந்து கிளர்ச்சியடைய வைக்கும் பாண்ட்ஸ் பவுடர் வாசனை சமன் செய்தது…. அப்படியே பேருந்து காலை 8 மணிக்கெல்லாம், சைதாப்பேட்டை பாலமருகில் சென்றபோது, தன் வேகத்தை குறைத்து மெல்ல ஊர்ந்தது…
பேருந்தில் இருப்பவர்கள் மத்தியில் சலசலப்பு வர, சன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தபோது.. ”அய்யோ!, அதை நினைக்க இப்போதும் மனசுக்கு தைரியம் வரவில்லை…”, ஸ்கூட்டர் ஒன்று நொருங்கிக் கிடக்க பக்கத்தில் ஆண் ஒருவர் ரத்தவெள்ளத்தில்.. தரையெங்கும் ரத்தம் தெறித்து கட்டியாகிக் கிடக்க.. ”கொஞ்சம் தூரத்தில் பெண் ஒருவர் என்ன நடந்து என்பது தெரியாமல் அமைதியாக, மனநிலை பிறழ்ந்தவராக..”. மக்கள் நிற்கிறார்கள்..போகிறார்கள்.. போலீஸ் இன்னும் அங்கு வரவில்லை.. கண்களை இருக மூடிக்கொள்ள, மனசு வேகமாக அடித்துக் கொள்கிறது.. தொண்டை தண்ணீர் கேட்கிறதென்பதை உணர முடிகிறது..
தேனாம்பேட்டையில் இறங்க வேண்டிய நான் சைதாப் பேட்டையிலேயே இறங்கிவிடுகிறேன்.. அப்படியே ஓரம் இருக்கும் ஒரு டீகடையில் போய் நின்று டீ கேட்டு, தண்ணீர் குடித்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்த முயற்சி செய்கிறேன்,முடியவில்லை. கருப்பு வளையங்களாக சென்று கொண்டிருந்த புகை…. ரத்தச் சகதியில் மிதந்த அந்த ஆண் உருவம்…. தள்ளி அமர்ந்த அந்த பெண்….. வேடிக்கை பார்த்தமாதிரியே, சென்று கொண்டிருந்த மனிதர்கள்…. சென்னை குறித்தான என் கனவுகளை சிதைத்தமாதிரி உணர்ந்தேன்.

அதேப்போல், அமெரிக்கா குறித்த அழகானதொரு சித்தரிப்போடு மனசெங்கிலும் மகிழ்ச்சி நிரப்பியவாறு லித்துவேனியாவின் கிராமம் ஒன்றில் இருந்து, தொழிற்சாலை நிரம்பிக் கிடக்கும் தொழில் நகரமான சிக்காகோ நோக்கி எலிசபெத், மரியா, ஓனா, யூர்கிஸ், யூர்கிஸ் அப்பா, 3 குழந்தைகள் உள்ளிட்டவர்களைக் கொண்டவர்களாக பஞ்சம் பொழைக்க வந்து எல்லாவிதத்திலும் தொழிற்சாலை முதலாளிகளாலும், ஆட்சி செய்பவர்களாளும், காவல்துறை, நீதித்துறை என அரசின் எல்லவித நிறுவனங்களாலும், வஞ்சிக்கப்பட்டு, உடலில் ஓடும் பச்சை ரத்தம் உறிஞ்சி எடுக்கப்பட்டு வெளியே துப்பி எறியப்படுகிறார்கள், அப்படியானவர்கள் எப்படி தோழர்களாக உருமாறி, அந்நிறுவனங்களுக்கே சவாலாக நிற்கிறார்கள் என்பதை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலான அமெரிக்காவின் நிஜமுகத்தை கொண்டு வந்து நிறுத்துகிறார் “காங்கிரீட் காடு” நாவலின் ஆசிரியர்.
உலகப் புகழ் பெற்ற அமெரிக்க நாவலான “காங்கிரீக் காடு” வாசிக்கத் தொடங்கியபோது, “அப்டன் சிங்க்ளர்” எந்த மனநிலையில் இருந்து எழுதி இருந்தாரோ, அதே வலியோடும், கோவத்தோடும் வார்த்தைகளை அடுக்கி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார், எழுத்தாளர் ச.சுப்பராவ் அவர்கள்.

எழுத்தாளர் ச.சுப்பாராவ்
வளர்ச்சியடைந்த நாடு எத்தனை எத்தனை ஏழைத் தொழிலாளர்களின் பிணத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை சிக்காகோ நகரின் இறைச்சித் தொழிற்சாலைகளில் நடைபெற்ற லட்சோப லட்ச தொழிலாளர்களின் வீறஞ்செறிந்த போராட்டத்தின் வாயிலாக இந்தப் புதினத்தை படைத்திருக்கிறார் நாவலாசிரியர்.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலான அமெரிக்காவின் நிஜமுகத்தை கொண்டு வந்து நிறுத்துகிறார் “காங்கிரீட் காடு” நாவலின் ஆசிரியர் “அப்டன் சிங்க்ளர்”. தங்களின் மூலதனத்தை பெருக்கிக்கொள்ள முதளாளித்துவம் எந்த ஒரு எல்லைக்கும் செல்லும், அதற்காக தன் நாட்டு மக்களையும் பலி கொடுக்கத் தயங்காது என்பதனை நாவல் முழுக்க முதளாளித்துவத்தின் கயமைத்தனத்தை தோலுரித்துக் காட்டியிருப்பார் ஆசிரியர்.
மூலப் பொருளின் எந்த கழிவையும் காசுபார்க்காமல் வெளியே விடாது என்பதற்கு உதரணமாக சிக்காகோ தொழில் நகரத்தை அமைத்திருப்பார்கள் முதலாளிகள். மாட்டிறைச்சிக் கூடத்தில் தவறி விழும் தொழிலாளிகள் எப்படி இறைச்சியோடு இறைச்சியாக கூழாக்கப்பட்டு வெளியே விற்பனைக்கு பேக்கிங்க் செய்து அனுப்பப்படுகிறார்கள்.. அந்த தொழிலாளி சம்மந்தப்பட்டவகள் வந்து கேட்கும்போது எப்படி நயவஞ்சமாக மிரட்டப் பட்டு ஆளும் அரசியல் கட்சியாளும், நீதித்துறை, மற்றும் காவல் துறையாலும் வெளியேற்றப் படுகிறார்கள் என்பதை வாசிக்கும் போது நமக்கு நிச்சயம் வட மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்த கூலித் தொழிலாளர்களின் அவல நிலையும், தூத்துக்குடி தொடர் போராட்டங்களும்..

துப்பாக்கிச் சூடும், ஹுண்டாய் கம்பெனி போராட்டங்களும்,அணு உலை எதிர்ப்பு போராட்டங்களும், நிச்சயம் கவனத்திற்கு வரும்… வந்தே தீரும். உரிமைக் கேட்டுப் போராடுபவர்களை அடக்கி அவர்களின் பிணத்தின் மீது நிற்பதோடு அல்லாமல்.. போராடுபவர்களை கலவரக் காரர்கள் என முத்திரை குத்தி பல பிரபலங்களை துணைக்கழைத்து பேசவைப்பதுதான் முதலாளித்துவம்.
20ம் நூற்றாண்டின் வளர்ச்சியடைந்த நாடுகளில் நடைபெற்ற எண்ணற்ற போராட்டங்கள் 21 ம் நூற்றாண்டில் வெவ்வேறு வடிவங்களில் நிதமும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் முதலாளிகள் எப்படி ஏழை எளிய உழைக்கும் மக்களின் உதிரத்தை குடித்து உயர்ந்தார்கள். ஓங்கி உயர்ந்து நிற்கும் சுதந்திர தேவியின் சிலை முழுதும், இப்போதும் ஈர ரத்தத்தின் வாடை எப்படி வீசுகிறது என்பதை சொல்வதோடு,
கருங்காலியாக இருந்த கதைநாயகன் யூர்கிஸ் எப்படி தோழனாக மாறினான் என்பதையும், அவனின் காதலை, காதலியை, அவர்களின் குழந்தைகளை எப்படி முதலாளித்துவம் தன் கோரப் பற்சக்கரங்களுக்கிடையே மென்று விழுங்கியது, மரியாவின் வாழ்வதனை எப்படி சூறையாடியது என்பதனையும் மிகுந்த வலியுடன் விவரிப்பார். முதலாளித்துவத்தின் சங்கிலித் தொடர் எப்படியெல்லம் தன்னை எல்ல இடத்திலும் நிறுவி நிற்கிறது என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆழமாக சொல்லி இருப்பார்.
சிக்காகோவின் கால்நடைப் பட்டியில் யூர்கிஸ், ஓனா. மரியா எலிசபத்தின். கூட்டுக் குடும்பம் எப்படி முதலாளிகளால் உழைப்பும் உறிஞ்சப்பட்டு கிடைக்கும் கூலியில் மிச்சம் பிடித்து வீடு, வீட்டு உபயோகப் பொருட்களையும் தவணை முறையில் வாங்கி சேர்க்கிறார்கள். தொழிற்சாலையில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தினால், தன் காதலியும் மனைவியுமான ஓனா முதலாளியின் கைக்கூலியால் நயவஞ்சகமாக மிரட்டப்பட, அதனால் நடைபெற்ற சண்டையினால் யூர்கீஸ் சிறையிலடைக்கப்பட்டு, வெளியே வரும்போது தான் சிறுகச்சிறுக சேர்த்து வாங்கிய வீடு தனக்கானதாக இல்லை என் அறிகிறான்.

சிக்காகோவின் கால்நடைப் பட்டி
அப்பப்பா.. முதலாளித்துவதின் கழுகுகள் சங்கிலித் தொடராக, உழைப்பாளி மக்களின் சதையை ருசிபார்த்து கொத்தித் தின்கிறது. சமூகத்தில் கட்டப் பட்டிருக்கும் அனைத்து சட்டங்களும், ஏழைகளிடம் விற்பதற்கும்.. விற்றதைப் பிடுங்குவதற்கும்தான் என்பதையும் அதற்கு துணையாக நீதியையும் அழைத்துக் கொள்கிறது. அரசின் எந்திரங்கங்களும் உழைக்கும் மக்களின் நலன்களை நசுக்குவதற்காகவே, என்பதை கோவம் குறையாமல் பதிவு செய்திருப்பார் ஆசிரியர்.
பல மாதங்களாகியும் புதிய ஒப்பந்தம் போட மறுத்ததோடு, அல்லாமல் காலாவதியான ஒப்பந்தத்தைவிட கூலி குறைவாகக் கொடுக்க வேண்டும் என முதலாளிகள் நினைத்து செயல்படுத்த நினைக்கும்போது தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு முதலாளிகளால் தள்ளப்படுகிறார்கள். போராட்டத்தை உடைத்திட வெளியே இருக்கும் வேலையற்றவர்களை , ஆசை வார்த்தைகள் கூறி கருங்காலியாக குறைந்த ஊதியம் கொடுத்து பயன்படுத்துவார்கள்.
வேலை நிறுத்தம் தீவிரமாக வெளிப்படும்போது புதியதாக எவரையும் வேலைக்கு எடுக்காமல் ஒரு கூட்டத்தை வேலையற்றவர்களாகவே தொடர்ந்து வைத்துக் கொண்டு அவர்களை எப்பெடியெல்லாம் கருங்காலிகளாக அனுசரித்து, அரவணைத்து போவர்கள் என்பதை சிக்காகோ நகரின் தொழிலாளர்கள் போராட்டத்தில் சொல்லி இருப்பார் நாவலாசிரியர். இதனையே, தமிழகத்தில் நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் போராட்டத்தின் போது போராட்டம் நடத்துபவர்களின் பிள்ளைகளும், சொந்தங்களுமல்லவா கருங்காலிகளாக பயன்படுத்தியது முதலாளிகளால் நடத்தப்படும் இந்த அரசு.

20ஆம் நூற்றாண்டில் “காங்கிரீட் காடு” பேசிடும் அனைத்து அரசியலையும், 21ஆம் நூற்றாண்டில், இன்று நாம் இந்தியாவில் சந்தித்து வருகிறோம்.. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு உண்மையை ஆழமாக நமக்கு சொல்லும்.
சரியான நேரத்தில் இந்த நூலை வெளிக் கொண்டுவந்த
பாரதி புத்தகாலயத்திற்கு நன்றியும் பாராட்டுதல்களும்.
மொழிபெயர்த்த ச.சுப்புராவ் அவர்களுக்கு பேரன்புகள்.
புத்தகம் : காங்கிரீட் காடுகள்
ஆசிரியர் : அப்டன் சிங்களர்
தமிழில் : க . சுப்பாராவ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 352
மதிப்புரை: கருப்பு அன்பரசன்.

