நியாய பத்ரா (நீதிக்கான வாக்குறுதி) என்ற தலைப்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 2024ஆம் ஆண்டு ஏப்ரல் நான்காம் நாள் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, இடஒதுக்கீட்டில் உள்ள ஐம்பது சதவிகித வரம்பை அதிகரிப்பது, இளைஞர்களுக்கான வேலைகள், வேலைகளுக்கான உள்ளிருப்பு பயிற்சிகள், ஏழைகளுக்கு அளிக்கப்படும் பொருளாதார ஆதரவு ஆகியவை குறித்து முக்கியமாகப் பேசியது. பெண்கள், ஆதிவாசிகள், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியின் மீதே தனது கவனத்தை அந்த அறிக்கை செலுத்தியிருந்தது. கடந்த பத்தாண்டுகால பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிகளைக் களைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து அந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
முந்தைய முஸ்லிம் லீக்கின் பிளவுபடுத்தும் முத்திரையுடன் அந்த அறிக்கை இருப்பதாகவும், இடதுசாரி சித்தாந்தத்தால் அதன் சில பகுதிகள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் கூறி நரேந்திர மோடி காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை விமர்சித்தார்.
ஹிந்து தேசியவாத சித்தாந்தத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் இரண்டாவது சர்சங்கசாலக்கான எம்.எஸ்.கோல்வால்கர் ஹிந்து தேசத்திற்கு முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் என மூன்று அச்சுறுத்தல்கள் இருப்பதாகத் தனது ‘சிந்தனைக் கொத்து’ நூலில் குறிப்பிட்டிருந்தது உடனடியாக நினைவிற்கு வந்தது. பல்வேறு மட்டங்களில் தொடர்ந்து பாஜகவால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள இரண்டு அச்சுறுத்தல்கள் தற்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒருவகையில் அந்த வலியுறுத்தல் பாஜகவின் முக்கிய ஆயுதமான இனவாத எச்சரிக்கையாகவே காணப்பட்டது.
முஸ்லீம் அடையாளம் குறித்த கோரிக்கைகளைச் சுற்றியே 1937ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களுக்கான முஸ்லீம் லீக்கின் தேர்தல் அறிக்கை, வேலைத்திட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றில் பலவீனமானவர்களுக்கான உறுதியான நடவடிக்கை பற்றி எதுவுமில்லை. முஸ்லீம் லீக்கின் திட்டங்கள் ஹிந்து தேசியவாதிகளுக்கு இணையாக, அவர்கள் பின்பற்றி வருவதற்கு எதிர்மாறாகவே இருந்தன.
பாஜகவின் முன்னோர்கள் முஸ்லிம் லீக்குடன் ஒத்துழைத்ததை மிகச் சரியாக வெளிப்படுத்திக் காட்டி பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலளித்தார்.
உண்மைதான் என்ன?
முஸ்லீம் லீக், ஹிந்து மகாசபா-ஆர்எஸ்எஸ் ஆகிய மத தேசியவாதிகளுக்கிடையே பொதுவான விஷயங்கள் ஏராளம் உள்ளன. அவர்களுடைய தோற்றம் காலனித்துவ இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்களுக்கிடையே சமூகத்தில் வீழ்ச்சியடைந்த பிரிவுகளிலேயே இருந்தது. தொழில்மயமாக்கல், நவீன கல்வி-நீதித்துறை-நிர்வாகம் மற்றும் தகவல் தொடர்பு என்று அனைத்தும் வந்தவுடன் உழைக்கும் வர்க்கங்கள், படித்த நவீன வர்க்கம், நவீன தொழிலதிபர்கள் என்று புதிய சமூக வர்க்கங்கள் உருவாகத் தொடங்கின. பழைய ஆட்சியாளர்கள், நிலப்பிரபுக்கள், ராஜா-நவாப்கள் தங்களுடைய சமூக-அரசியல்-பொருளாதார மேலாதிக்கம் வீழ்ச்சியடைந்ததால் தங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை உணரத் தொடங்கினர்.
எழுச்சி பெற்று வந்த வர்க்கங்களிலிருந்து நாராயண் மேகாஜி லோகண்டே, தோழர் சிங்காரவேலு மற்றும் இன்னும் பலரின் தலைமையில் தொழிலாளர் அமைப்புகள் தோன்றின. வளர்ந்து வரும் பல்வேறு குழுக்களின் அரசியல் வெளிப்பாடுகள் மற்றவற்றுடன் இணைந்து இந்திய தேசிய காங்கிரஸையும் தோற்றுவித்தன. அவர்களுடைய அடிப்படை விழுமியங்களாக ‘சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்’ ஆகியவற்றின் துவக்க வடிவம் இருந்தது.
நிலப்பிரபுக்கள்-அரசர்கள் என்று வீழ்ச்சியடைந்த வர்க்கத்திலிருந்து முதலில் ஐக்கிய இந்திய தேசபக்தி சங்கம் உருவானது. அது ஆங்கிலேயர்களிடம் மிகவும் விசுவாசத்துடன் இருந்தது. சாதி மற்றும் பாலினப் படிநிலையே அவர்களுடைய முக்கிய சித்தாந்தமாக அமைந்திருந்தது. அந்த அமைப்பு காலப்போக்கில் 1906ஆம் ஆண்டில் முஸ்லீம் லீக், 1915ஆம் ஆண்டில் ஹிந்து மகாசபா எனப் பிரிந்தது.
இந்த நாட்டில் ஹிந்து தேசம், முஸ்லீம் தேசம் என்று இரண்டு தேசங்கள் இருப்பதாக 1923ஆம் ஆண்டில் வி.டி.சாவர்க்கர் தனது ‘ஹிந்துத்துவாவின் சாராம்சம்’ என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார். அதிலிருந்து விலகி 1925ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் ஹிந்து ராஷ்டிரா திட்டத்தைக் கொண்டு வந்தது. லண்டனில் படித்து வந்த முஸ்லீம் லீக் ஆதரவாளர்கள் சிலர் பாகிஸ்தான் என்ற வார்த்தையைக் கொண்டு வந்தனர்.
ஹிந்து மன்னர்கள் அல்லது முஸ்லீம் மன்னர்களின் ஆட்சியை புகழ்பெற்ற, பொற்காலம் என்று கருதியதே அந்த இருபெரும் கருத்துகளுக்கிடையிலான பொதுவான இழையாக இருந்தது. நாட்டின் சுதந்திரத்திற்கான தேசிய இயக்கத்திற்கு எதிராக அவர்கள் ஆங்கிலேயர்களை முழுமையாக ஆதரித்தனர். அவர்களுடைய உத்திஹிந்துக்கள் அல்லது முஸ்லீம்களை எதிர்கொள்வதற்காக ஆங்கிலேயர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வதாகவே இருந்தது.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஹிந்து மகாசபையின் பத்தொன்பதாவது அமர்வில் ஹிந்து தேசியவாதத்தின் முக்கிய சித்தாந்தவாதியான சாவர்க்கர் ‘இன்று ஒற்றையாட்சி கொண்ட ஒரே மாதிரியான தேசமாக இந்தியாவை நம்மால் கருத முடியாது. மாறாக ஹிந்துக்கள் தேசம், முஸ்லீம்கள் தேசம் என்று இரண்டு தேசங்கள் இந்தியாவில் இருக்கின்றன’ என்று கூறினார். ‘இரு தேசக் கோட்பாட்டின்’ அடிப்படையில் 1940ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற முஸ்லீம் லீக் மாநாட்டில் முகம்மது அலி ஜின்னா தனி முஸ்லீம் தேசமாக பாகிஸ்தான் வேண்டுமெனக் கோரினார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வமற்ற ஊதுகுழலான ஆர்கனைசர் பத்திரிகை ஆகஸ்ட் பதினான்காம் நாளன்று ‘…ஹிந்துஸ்தானில் தேசம் என்பதை ஹிந்துக்கள் மட்டுமே உருவாக்குவதால், தேசியக் கட்டமைப்பு பாதுகாப்பான, உறுதியான அடித்தளத்தில் கட்டமைக்கப்பட வேண்டும்… இந்த தேசம் தன்னை ஹிந்துக்கள், ஹிந்து மரபுகள், கலாச்சாரம், கருத்துகள், அபிலாஷைகள் மீதே கட்டமைத்துக் கொள்ள வேண்டும்…’ என எழுதியது.
1939ஆம் ஆண்டில் வங்காளம், சிந்து மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் போன்ற இடங்களில் முஸ்லீம் லீக், ஹிந்து மகாசபா இரண்டும் இணைந்து கூட்டு அமைச்சரவைகளை உருவாக்கின. ஹிந்து மகாசபை உறுப்பினர்கள் அமைதியாக இருக்க, சிந்து சட்டமன்றத்தில் பாகிஸ்தான் தீர்மானத்தை முஸ்லீம் லீக் நிறைவேற்றிக் கொண்டது. ஜெர்மனியில் இருந்து சுபாஷ் சந்திர போஸ் மேற்கொண்ட ஒளிபரப்பில் முஸ்லீம் லீக், ஹிந்து மகாசபை இரண்டையும் பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கத்தில் சேருமாறு கேட்டுக் கொண்டார். இந்த இரண்டு அமைப்புகளும், ஆர்எஸ்எஸ்சும் 1942ஆம் ஆண்டு நடந்த மாபெரும் இயக்கத்திலிருந்து ஒதுங்கியே இருந்தன.
‘…[பிரிட்டிஷ்] ராணுவம், கடற்படை, வான்வழிப் படைகள் மற்றும் பல்வேறு போருக்கான ஆயுதங்கள் தயாரிப்பு வேலைகளில் ஹிந்து மக்கள் சேருவதைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் உள்ள ஹிந்து மகாசபையின் ஒவ்வொரு கிளையும் தீவிரமாக ஈடுபட வேண்டும்’ என்று கூறி ஆங்கிலேயர்களின் போர் முயற்சிகளை சாவர்க்கர் மிகத் தீவிரமாக ஆதரித்தார். சுபாஷ் போஸின் ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு எதிராகப் போராடிய வேளையில் சாவர்க்கர் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு உதவிக் கொண்டிருந்தார்.
ஹிந்து மகாசபை, முஸ்லீம் லீக் என்று இரண்டு அமைப்புகளுமே ஆங்கிலேயர்களின் நலன்களுக்காகச் செயல்பட்டு வந்ததை எவராலும் தெளிவாகக் காண முடியும். சுபாஷ் சந்திரபோஸ் இந்த இரு அமைப்புகளின் வகுப்புவாத அரசியலுக்கு எதிரானவராக இருந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் ஒன்று சேர வேண்டும் என்ற அவரது வேண்டுகோளை அந்த இரண்டு அமைப்புகளும் முற்றிலுமாகப் புறக்கணிக்கவே செய்தன.
வங்காளத்தில் முஸ்லீம் லீக்குடனான கூட்டு அமைச்சரவையின் ஒரு பகுதியாக இருந்த சியாமா பிரசாத் முகர்ஜி 1942 இயக்கத்தைக் கட்டுப்படுத்துமாறு பிரிட்டிஷ் வைஸ்ராய்க்கு கடிதம் ஒன்றை எழுதினார். வங்காளத்தில் அந்த இயக்கம் ஒடுக்கப்படுவதை தான் உறுதி செய்வதாக அவர் உறுதியளித்திருந்தார்.
1942ஆம் ஆண்டு ஜூலை இருபத்தியாறாம் நாளிட்ட கடிதத்தில் முகர்ஜி ‘காங்கிரஸால் பரவலாகத் தொடங்கப்பட்ட இயக்கத்தின் விளைவாக மாகாணத்தில் உருவாகக்கூடிய சூழ்நிலை பற்றி இப்போது குறிப்பிடுகிறேன். போரின் போது எவரொருவரும் வெகுஜன உணர்வைத் தூண்டுவதற்குத் திட்டமிட்டால், தற்போதைக்கு செயல்பாட்டில் உள்ள எந்தவொரு அரசும் அந்த தூண்டுதலின் விளைவாக ஏற்படும் உள்குழப்பங்கள் அல்லது பாதுகாப்பின்மை போன்றவற்றை எதிர்த்து நிற்க வேண்டும்’ என்று எழுதினார்.
முஸ்லீம் தேசியவாதம், ஹிந்து தேசியவாதம் ஆகிய இரண்டு சித்தாந்தங்களையும் ஒரே வகை என்று சுபாஷ் சந்திரபோஸ் வகைப்படுத்தியதைப் போலவே பீம்ராவ் பாபாசாகேப் அம்பேத்கரின் பகுப்பாய்வும் இருந்தது. அம்பேத்கர் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை- 1940’ என்ற தனது புத்தகத்தில் ‘வினோதமாகத் தோன்றினாலும், திரு.சாவர்க்கரும் திரு.ஜின்னாவும் ஒரு தேசம் மற்றும் இரு தேசம் என்ற பிரச்சனையில் ஒருவரையொருவர் எதிர்த்து நிற்பதற்குப் பதிலாக முழு உடன்பாடு கொண்டவர்களாக ஒரே பக்கத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் இந்தியாவில் இரண்டு தேசங்கள் உள்ளன என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். அவ்வாறு ஒப்புக்கொள்வது மட்டுமல்லாது ஒன்று முஸ்லீம் தேசம் மற்றொன்று ஹிந்து நாடு என்று அவர்கள் அதை வலியுறுத்தவும் செய்கிறார்கள்’ என்று எழுதியுள்ளார்.
தாழ்த்தப்பட்டவர்கள் மீதான எந்தவொரு அர்ப்பணிப்பும் ஹிந்து ராஷ்டிரா திட்டத்திற்கு எதிரானதாக இருப்பதால், பாஜக-ஆர்எஸ்எஸ் அதனைக் கண்டிப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. முஸ்லீம் தேசமாக உருவான பாகிஸ்தானில் தாழ்த்தப்பட்ட பிரிவினரின் நிலைமையை நம்மால் தெளிவாகக் காண முடிகிறது.
அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்ற காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மீது மோடி வைத்திருக்கும் இந்த விமர்சனம் அவரது சித்தாந்த முன்னோர்கள் கூறியவற்றுடனே முழுக்க ஒத்துப் போகிறது.
https://www.newsclick.in/does-congress-manifesto-reflect-muslim-league-thinking
எழுதியவர்
நன்றி: நியூஸ்க்ளிக்
தமிழில்: தா.சந்திரகுரு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.