முன்னெப்போதும் இருந்ததைக்காட்டிலும் பெருந்தொற்று பெரும் சிக்கல்களையும் சவால்களையும் நம் முன்னே வைத்துள்ளது. அதனை வெறும் கற்றல் இடைவெளி என்ற இடத்தில் மட்டும் நிறுத்திவிட முடியாது. ஆனால் புதைந்துள்ள சவால்கள் மெல்ல மெல்ல முகங்களை அங்கும் இங்கும் காட்டிக்கொண்டே வருகின்றன. போதைப்பொருட்களுக்கு அடிமையாவது, தொடரும் இளம்பருவத்தினரின் தற்கொலைகள், பெற்றோர்களிடம் அவர்கள் காட்டும் பெரும் எரிச்சல் என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அனைத்திற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் அந்தப் பழி சென்று சேரும் இடம் “பெற்றோர்கள்”. அவர்களிடம் பொறுப்பு உள்ளது. ஆனால் அவர்களிடம் மட்டுமா பொறுப்பு உள்ளது? அவர்களே குழந்தைகளுடன் பெரும்பாலான நேரங்களைச் செலவிடுகின்றனர். அவர்களே குழந்தைகள் எப்படி வளர வேண்டும் என கனவு காண்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு முறையான வழிகாட்டுதலை இந்தச் சமூகம் கொடுத்துள்ளதா?
குழந்தை வளர்ப்பு என்பது மிகப்பெரிய காரியம். தற்சமயம் அதில் பல்வேறு இடங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குழந்தையின் பிறப்பு, சத்தான உணவு, ஆரோக்கியமான மனது, அறக் கருத்துக்கள், சுய சிந்தனை, நல்ல கல்வி, சிறந்த நண்பர்களை அடையாளம் காணுதல், சிக்கல்களை எதிர்கொள்ளுதல், உடலினைப் பேணுதல் என நீளும் பெரும்பட்டியல் அது. அதில் மிக முக்கிய அங்கமாக இருப்பது கல்வி. அதனைச் சுற்றியே குழந்தை வளர்ப்பு சுழல்கின்றது. நிலைமை இப்படி இருக்க, பெற்றோர்கள் கல்வி பற்றிய புரிதலில் விலகியே நிற்கின்றார்கள்.
ஒட்டுமொத்த சமூகத்திற்கும் இன்னும் கல்வி சென்று சேர்ந்துவிட்டதா என்றால் இன்னும் இல்லை. சமூகநீதி என்று பேசிக்கொண்டிருக்கும் இம்மண்ணிலேயே இந்நிலைமை எனில் இன்னும் இருக்கும் பிற மாநிலங்களின் நிலைமை இன்னும் கவலைக்கிடம். கல்வி ஒரு சமூக வளர்ச்சியின் குறியீடு. அது கல்வி பயில்வதோடு நிற்பதில்லை, மாறுதல்களை வாழ்விடத்தில் உண்டு செய்யும், தொழிலை இன்னும் செம்மையாக்கும், புதிய சிந்தனைகளைப் பரவச்செய்யும். கல்விப்பயன் அடைந்த சமூகம், தான் பெற்ற கல்வியை தன்னோடு நிறுத்தாமல் அடுத்த நிலையில் இருக்கும் மறுக்கப்பட்ட சமூகத்திற்குக் கைநீட்ட வேண்டும்.
அதற்கு முதலில் கல்வி பற்றிய உரையாடல்களை பெற்றோர் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த சமூகத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்றாலும் குறிப்பாக பெற்றோர் சமூகத்தில் இதனை ஆரம்பம்முதலே ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்கு நுழையும் முன் துவங்கி, அவர்களின் குழந்தைகள் பள்ளியினை முடித்து அடுத்தகட்டத்திற்கு நகரும் வரையில் பெற்றோர்களின் பங்கினைப் பற்றிய விழிப்புணர்வு செய்தல் அவசியம்.
பெற்றோருக்கான மேடைகள் எனும் தேவை:
குழந்தை வளர்ப்பு சிக்கல்களை பெற்றோர்கள் பேசிக்கொள்ளவும், குழந்தைகளைக் கையாளுதல், கல்வி பற்றிய புரிதல்கள் ஆகியவற்றைப் பேசிக்கொள்ளவும் ஒரு தளமே நம் சமூக அமைப்பில் இல்லை. பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் இருந்தாலும் அவை குழந்தைகளின் சிக்கல்களைப்பற்றிப் பேச சரியான தளமாக இல்லை. பெரும்பாலும் பள்ளி – குழந்தைகளின் உறவுச் சிக்கல்களைப்பற்றி உரையாட மட்டுமே அவை பயன்படுகின்றன. ஆனால் பெற்றோர்களுக்கான ஒரு மேடை அவசியமாக இருக்கின்றது. அந்த மேடை / களம் பள்ளியில் அமையுமாயின் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒரு சொல்வழக்கு உண்டு – “ஒரு குழந்தையை வளர்த்தெடுக்க ஒரு கிராமமே வேண்டும்”. இதுவும் அந்த வகையில் ஒரு செயல்பாடுதான். பெற்றோர்களுக்கான மேடையில் பல முக்கிய, அவசியமான விஷயங்களைப் பேசலாம். புரிந்துகொள்ளலாம். சம வயதுக் குழந்தைகளை எப்படிக் கையாள்கின்றனர் என்னும் அனுபவப் பகிர்வு பலரையும் விழிப்படையச் செய்யும். “என் மகன் இப்படிச் செய்தான், இப்படிக் கையாண்டேன்” போன்ற எளிமையான பகிர்வுகளில் ஆரம்பித்து, உடல் பற்றிய கருத்தரங்கங்கள், மனச்சிக்கல்கள், உரையாடல் கலைகள், பள்ளி முடித்தபின்னர் கல்லூரிக்குள் செல்வது, வாய்ப்புகள் என குழந்தைகள் சார்ந்து செயல்பட நீண்ட பட்டியல் உண்டு. இவை அனைத்தையும் பெற்றோர் மேடைகள் செய்யலாம். பெயரை என்னவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம், உள்ளே என்ன செயல்பாடு என்பதே பிரதானம்.
பள்ளிக்குள் நுழைதல்:
பள்ளிக்குள் எப்போது குழந்தைகள் நுழைய வேண்டும், இருக்கும் கல்விமுறைகள் என்ன? அருகமைப்பள்ளிகளைத் தேர்ந்து எடுக்க வேண்டிய அவசியத்தை விரிவாகப் பேச வேண்டி உள்ளது. முன்பருவ கல்விபற்றி பல பொதுக்கருத்துக்களை சமுதாயம் கொண்டுள்ளது. முன்பருவ குழந்தை பராமரிப்பு என்பது என்ன, இப்போது இருக்கும் தேவையற்ற முன்பருவ பள்ளி பற்றியும் பேசலாம்.
வெவ்வேறு காலகட்டத்தில் கல்வி பற்றிய உரையாடல்கள்
குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவை அறிவு, திறன்கள் மற்றும் பண்புகள். ஆனால் பள்ளி என்பது அறிவு வளர்ச்சிக்கு மட்டும் என்ற புரிதல்மட்டுமே உள்ளது. அறிவு என்றால் இன்னும்கூட அது தகவல் என்று மட்டும் சமுதாயம் நம்பிக்கொண்டு இருக்கிறது. இதனால்தான் மனப்பாடம் செய்யும் போக்கு இன்னும் நீடிக்கின்றது. மதிப்பெண்கள் பற்றிய பிம்பங்களை உடைக்க வேண்டும். இது போன்ற ஏராளமான விசயங்களை அசைக்க வேண்டியுள்ளது. இதற்கு ஏராளமான உரையாடல்கள் தேவை. குழந்தையின் வளர்ச்சியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல புரிதல்கள் தேவை. கலையின் அவசியம், எது கலை, எதை நம் குழந்தையிடம் பரிசோதிப்பது, வாசிப்பை ஊக்கப்படுத்துவது, பயணம் செய்வது, பழகுவது, ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் அணுகுவது என எண்ணிலடங்காப் புரிதல்கள் முதலில் பெற்றோர்களுக்குத் தேவை. இவை எல்லாமே கல்வியுடன் நெருக்கமான தொடர்புடையவை.
அதிகரித்துவரும் சிறப்புக் குழந்தைகளைப் பற்றிய புரிதல்
முன்பைவிட இப்போது நிறைய சிறப்புக் குழந்தைகள் நம் சமூகத்தில் உள்ளனர். இந்தத் தலைமுறையில் இவ்வளவு அதிகமாக இருக்கின்றார்களா அல்லது இதுவரை கவனிக்கப்படாமல் கவனத்திற்கு வராமல் இருந்தார்களா தெரியவில்லை. இதனைப் பற்றிய புரிதல்கள் பெற்றோர்களுக்கு இல்லை. சில குறைபாடுகளை முன்னரே கண்டறிந்தால் விரைவாக இயல்பிற்குக் கொண்டுவரலாம். சில குறைபாடுகளுக்கு நீண்ட மருத்துவம்/ பயிற்சிகள் தேவைப்படும். ஆனால் சரியான நேரத்தில் இதனைக் கண்டறிதல் மிக அவசியம். இதனைக் கண்டறிய வேண்டும் என்றால் பொது சமூகத்திற்கும் பெற்றோர் சமூகத்திற்கும் இதைப்பற்றிய விழிப்புணர்வு அவசியம். இதனைப் பல்வேறு பிரச்சாரங்கள் மூலம் செய்ய வேண்டும். பள்ளிகள் இதனை மிகவும் கச்சிதமாகச் செய்ய முடியும்.
ஏன் பள்ளிகளில் இதனைச் செய்ய வேண்டுமென்றால்
- அந்தக் குழந்தைகள் இதே பள்ளிக்குச் சில ஆண்டுகளில் வரலாம். அப்போது நிலைமையைக் கொஞ்சம் சீராக்கி இருக்கலாம்.
- அதே பள்ளியில் சில சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களும் குழந்தைகளும் இருப்பார்கள். என்னதான் விளக்கம் கொடுத்தாலும் நேரிடையாக அதனை எதிர்கொள்ளும் பெற்றோர்களின் வார்த்தைகள் பெரும் நம்பிக்கை கொடுக்கும்.
- வெறும் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, விழிப்புணர்வானது ஒட்டுமொத்த பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் தரப்பட வேண்டும். அப்போதுதான் அனைவரையும் உள்ளடக்கிய பள்ளியாக / குழந்தையாக (inclusive schools) அது மாறும்.
- அதே பள்ளியில் சிறப்புப் பயிற்சிகளைத் தர இயலாது. ஆனால் வரும் பெற்றோர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக அமையலாம்.
ஆசிரியர் – பெற்றோர் புரிந்துணர்வு
குழந்தைகளுக்குத் தேவையான திறன்கள் என்ன என யூனிசெஃப் பட்டியலிட்டுள்ளது. அவை அனைத்தும் பள்ளி என்ற அமைப்பின் கீழ் மட்டும் சாத்தியமில்லை. ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளின் வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்றனர். அதேநேரம் இந்த இரண்டு நபர்களுக்குள்ளும் குழந்தையின் வளர்ச்சியில் நிறைய புரிந்துணர்வு அவசியம். பள்ளியும் வீடும் தேவையான களத்தினை அமைத்துக்கொடுக்க வேண்டும். பள்ளி தவறும் இடத்தில் வீடும், வீடும் தவறும் இடத்தில் பள்ளியும் கைகொடுக்க வேண்டும். பெற்றோர்கள் வேறு வடிவிலான ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வேறு முகம் வைத்திருக்கும் பெற்றோர்கள். இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் இணக்கம் மிக முக்கியம். குழந்தைகளை மிகச்சரியான பாதையில் நடக்க இது வழி வகுக்கும். இந்தப் புரிந்துணர்வினை ஏற்படுத்த பல சந்தர்ப்பங்களை உருவாக்குதலும் அவசியம். மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளை எல்லாம் ஒருங்கிணைத்தாலே இது எளிதாகச் சாத்தியமாகும்.
எல்லா பெற்றோர்களாலும் இதனைச் சாத்தியப்படுத்த இயலுமா?
எந்தக் காலகட்டத்திலும் அதற்குச் சாத்தியங்கள் குறைவே. பலவித குடும்பச்சூழல்களையும் சிக்கல்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் விகிதாச்சாரமும் சிக்கல்களின் வீரியத்தன்மையும் மாறும். அதிலும் அருகமை பொதுப்பள்ளிகளில் பன்முகத்தன்மையுள்ள பெற்றோர்கள் இருப்பார்கள். எல்லோராலும் நேரம் ஒதுக்குவதும் சாத்தியமில்லை. நேரமும் ஆர்வமும் இருக்கும் பெற்றோர்கள் கண்டிப்பாக இணைய வேண்டும். ஏதோ ஒரு வகையில் பள்ளியின் ஆண்டு நடவடிக்கைகளில் திட்டமிடும்போது பெற்றோர்களை இணைக்கும் பணிகளைச் செய்ய வேண்டும்.
திட்டமிடுதல் சரியாக இருந்தால் எதுவும் சாத்தியமே. பள்ளியின் ஆண்டு நடவடிக்கைகளை (Calender) பள்ளிக்கல்வித்துறை ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்துவிடுகின்றார்கள். அதே போல அதையும் உள்ளடக்கி ஒவ்வொரு பள்ளியும் ஒரு கேலண்டரை தன் பள்ளிக்கு மட்டும் வெளியிட வேண்டும். (மாநில அரசு அதற்கான சுதந்திரத்தையும் தர வேண்டும்). அதில் எங்கெல்லாம் பெற்றோர்கள் பங்குகொள்ளலாம், பங்களிப்புச் செய்யலாம் என்று முன்னரே அறிவிக்க வேண்டும். அதற்கு ஏற்ப பெற்றோர்களும் திட்டமிட்டுக்கொள்ளலாம்.
சுற்றுப்பயணங்களில் பங்குகொள்ளலாம், பள்ளி விழாக்களில் துணை நிற்கலாம், பள்ளி விழாக்களின் தயாரிப்புகளுக்குத் துணை நிற்கலாம். ஏராளமான தளங்களையும் இடங்களையும் அவர்களுக்கு உருவாக்கித்தர வேண்டும். மேலும் இப்படி ஆண்டிற்காக திட்டமிடலை சீராகச் செய்யும்போது மாணவர்களுக்கு திட்டமிட்டுச் செயல்படுத்தும் எண்ணம் ஆழமாக மனதில் பதியும். திட்டமிடுதலே வெகுவாகக் குறைந்துகொண்டே வருகின்றது.
சுருக்கமாக நன்மைகளும் விளைவுகளும்
பெற்றோர்களைக் கல்வியின்பால் இழுப்பதில் ஏராளமான விளைவுகளும் ஏற்படும்
- கல்விபற்றி புரிதல் சமூகத்தில் பரவலாகும்.
- கல்விபற்றி உரையாடல்கள் கல்வியினை அடுத்த நிலைக்கு நகர்த்தும்.
- கல்வி நம் உரிமை என ஆழமாக சமூகம் புரிந்துகொள்ளும்.
- அரசின் கொள்கைகள் இன்னும் கவனமாக வகுக்கப்படும்.
- கல்வியைக் கொடுப்பது அரசின் கடமை, பெற்றோர்களும் சமூகமும் அதனை உறுதிப்படுத்தும், அதே நேரம் அந்தப் பொறுப்பினை ஒருகாலும் கைகழுவி விடக்கூடாது.
- சமமற்ற கல்விச்சூழல் வேகமாக மாறி சமமான கல்விச்சூழலுக்கு மாறும்.
- குழந்தைகளின் உலகம் இன்னும் வண்ணமயமாகும்.
- காலத்திற்கு ஏற்ற சிக்கல்கள் உருவாகும். அதனை ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிர்கொள்ள புதிய புதிய உத்திகள் உருவாகும். பெற்றோர்கள் கல்வி அமைப்பிற்குள் செயல்பட்டால் எதனையும் தவிடுபொடியாக்கலாம்.
பெற்றோர்கள் கல்விக்குள் இன்னும் அதிகம் ஈடுபடுத்தப்பட்டால், நிறைய புரிந்துணர்வு கொடுத்தால், பள்ளியின் இயலாமைகளைப் புரிந்துகொள்வார்கள், அதே சமயம் இல்லம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் உணர்வார்கள். இந்த விழிப்புணர்வு, பள்ளியை இன்னும் பொறுப்புள்ளதாக மாற்றும். அடுத்த நிலையில், மாநில அரசுகளுக்குச் சிறப்பாக செயல்பட இன்னும் அழுத்தம் கொடுக்கும். கல்விக்கொள்கைகளை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும். புதிய தேசியக் கல்விக்கொள்கை வந்த சமயம் பெற்றோர் சமூகத்திடம் இருந்து பெரிய எதிர்வினையே வரவில்லை. இந்த பெரிய கல்விச்செயல்பாட்டில் என்னென்ன நடக்கின்றது என்ற புரிந்துணர்வு பெற்றோர் மத்தியில் குறைவே. விழிப்படைந்த பெற்றோர் சமூகம் இருக்கும்போது மக்கள் விரோத கல்விக்கொள்கைகளை அறிவிக்கவோ, நடைமுறைப்படுத்த நினைக்கவோ அரசு அஞ்சும். அப்படியான விழிப்படைந்த பெற்றோர்களாக மாற்ற முயல்வோம்.
– விழியன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

