டிஎன்ஏ மசோதாவின் முழுப் பெயர் டிஎன்ஏ தொழிநுட்பம் (பயன் & அமுல்) ஒழுங்காற்றுச் சட்டம் – 2019 ஆகும். இது டிஎன்ஏ பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதாகக் கூறுகிறது. டிஎன்ஏ மசோதாவின் முக்கிய நோக்கமாக பாதிக்கப்பட்டோரை, சந்தேகத்துக்குரியவரை, வழக்கில் உள்ளோரை, குற்றவாளிகளை, காணாமல் போனவர்களை, அடையாளம் காணாமல் போனவர்களையும், அவர்களது உறவினர்களையும் கண்டுபிடிப்பதற்கான குற்றவியல், சிவில் வழக்குகளுக்காக டிஎன்ஏவை சேகரிக்கவும், அதிலிருந்து அறியும் ப்ரொஃபைலைச் சேமித்து வைக்கவும் பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிடுகிறது. இதன் மூலம் தரவுகள், சேகரிக்கப்பட்டு, பெறப்பட்டு, வரிசைப்படுத்தப்பட்டு தரவுகளாக பதிவு செய்யப்படும்.
டிஎன்ஏ என்ற டீ ஆக்சி ரிபோனியூக்ளிக் அமிலம் என்பது ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உள்ள தனித்துவமான அடையாளம் தரக்கூடியதாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் தனி அடையாளம் கொண்டதாகும். இதனைப் பயன்படுத்தி ஒவ்வொருவரையும் கண்டறியும் ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம். குறிப்பாக விசாரணை நிறுவனங்கள் உடலின் பல பொருட்களை சோதனைக்கு எடுத்துக் கொள்வார்கள். அதிலிருந்து டிஎன்ஏவை எடுத்துக் கொள்வார்கள். இதனைக் கொண்டு கருவை கண்டறிதல், பெண்களைக் கடத்துதல் பிரச்சினைகள், பெற்றோர் தெரியாத சிக்கல், வெளிநாடு செல்வோர், வருவோர் பிரச்சினைகள், தனி நபரின் அடையாளம் கண்டறிதல் ஆகிய மிக சிக்கலான பிரச்சினைகளின் விசாரணைகளில் இதனைப் பயன்படுத்தி கண்டுபிடிப்பர்.
டிஎன்ஏ மசோதா, டிஎன்ஏவைப் பயன்படுத்த மூன்று அமைப்புகளை உருவாக்குகிறது: 1) டிஎன்ஏ சோதனைச்சாலை, 2) மண்டல அளவிளான தரவு வங்கி, 3) தேசியத் தரவு வங்கி மேலும் டிஎன்ஏ ஒழுங்காற்று ஆணையம் என்பதை அமைத்து அதில் தேசிய புலனாய்வுத் துறை, மத்திய புலனாய்வுத் துறை, மாநில காவல் துறை ஜெனரல் ஆகியோரை இதில் உறுப்பினர்களாக பரிந்துரைக்கிறது.
இந்த மசோதா 2018ல் லோக் சபாவில் அறிமுகப்படுததப்பட்டது. ஆனால் அது காலாவதி ஆகிவிட்டது. மீண்டும் 2019ல் லோக்சபாவில் வைக்கப்பட்டது . பிறகு அக்டோபர் 2019ல் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அது ஃபிப்ரவரி 2021ல் அறிக்கை தயாரித்துக் கொடுத்தது. எனவே தற்போது இந்த மழைக் காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை அரசு நிறைவேற்ற விரும்புகிறது.
நாடாளுமன்ற நிலக்குழு கூறியது என்ன?
அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனம், பருவகால மாற்ற அமைச்சகத்தால் திரு ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு டிஎன்ஏ தொழில் நுட்ப ஒழுங்காற்று மசோதா-2019 ( DNA Technology (Use and Application) Regulation Bill, 2019) குற்ற நிகழ்வு நடந்த சமயத்தில் எடுக்கப்படும் அனைத்து டிஎன்ஏ ப்ரொபைல்களையும் தேசிய தரவு வங்கியில் சேமிக்கப்படுவதும் , சில சமூகங்களை இலக்காக குறிவைக்கும் வாய்ப்பும் இந்த மசோதாவின் அபாயங்களாக கவலை தெரிவித்துள்ளது.
முதன் முதலில் 2003ல் கொண்டு வரப்பட்ட இந்த வரைவு மசோதா கொண்டு வரப்பட்டு பல மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளது. இது உயிரித் தொழில்நுட்பத் துறையாலும் சட்ட அமைச்சகத்தினாலும் பரிந்துரைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் அக்டோபர் 2019ல் இது பார்லிமெண்டரிக் கமிட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது. அப்போது பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது மதம், சாதி மற்றும் அரசியல் குழுவினருக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படும் என கவலை தெரிவித்தனர். இரண்டு பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பதிவிட்டனர். இவர்களின் கருத்துக்கள் நிராகரிக்கக் கூடியதல்ல. இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு அது பற்றி கணக்கில் எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றனர். இக்குழு இந்தச் சட்டம் தொழில் நுட்பம், சிக்கல்கள், உணர்வுமிக்கது எனக் குறிப்பிடுகின்றனர்.
தேசிய தரவு வங்கியில் குற்றம் நடந்த இடத்தில் அது நடக்கும் போது இல்லாத நபரின் டிஎன்ஏவைக் கொண்டுள்ள உரோமம் உள்ளிட்ட பகுதிகளை ஏதேனும் ஒருவகையில் திணிக்கப்படுவது கூட வாய்ப்பு இருப்பதால் இதுவும் குற்ற நிகழ்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டு தரவு வங்கியில் சேமிக்கப்படலாம். எனவே விசாரணை முடிந்தவுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களைத் தவிர சம்பந்தப்படாதவர்களின் தரவுகளை அழித்து விட வேண்டும் எனக் கூறியுள்ளானர்.
இந்த மசோதா தேசிய தரவு வங்கியுடன் மண்டல அளவிளான தரவு வங்கிகள் அமைக்கக் கூறுவது தேவையற்றது. ஏனெனில் தரவுகள் தவறுவதலாகப் பயன்படுத்தப்படுவது குறைக்கப்படும் என்று பரிந்துரைக்கின்றனர். ஏற்கனவே டிஎன்ஏ தொழில்நுட்பம் குற்ற விசாரணைகளில் பயன்படுத்தப்படுவதால் இந்தச் சட்டம் வேண்டாம் என்று சொல்லவில்லை என்றும் சமீபத்தில் நடந்த என்கவுண்டர் கொலையில் அப்பாவிகள் கொல்லப்பட்டதும் அவர்கள் பயங்கரவாதிகள் என புனையப்பட்டதும் தெரிய வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.
பல உறுப்பினர்கள் இந்தச்சட்டம் உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது என்பதால் தலித்கள், ஆதிவாசிகள், மதச் சிறுபான்மையினர்கள், பெண்கள் போன்றோர்கள் குறி வைக்கப்படும் அபாயம் உள்ளது எனக் குறிப்பிடுகின்றனர். நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உறுப்பினர்களின் கவலைகளைக் கணக்கில் கொண்டு மாற்றி அமைக்கப்படும் என்றார்.
இந்த மசோதா குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகத்துக்குரியவர்கள், காணாமல் போனோர்கள், அடையாளம் தெரியாத உடல்கள், அதோடு குற்றவாளிகள், சந்தேகக் குற்றவாளிகள், விசாரணையில் இருப்போர் ஆகியோரின் தரவுகள் இந்த வங்கியில் சேமிக்கப்படிருக்கும். இதனால் பாலியல் வன்முறை செய்வோர், கொலை செய்வோர்கள் போன்ற தொடர்ந்து குற்றம் இழைப்போர்களை எளிதில் கண்டறிய உதவும் எனக்குறிப்பிடபப்டுகிறது.
உயிரித் தொழில்நுட்பத்துறை இது போன்ற சட்டங்கள் சுமார் 60 நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மிக முக்கியமாக தனி நபர் உரிமை, ரகசியங்கள், தரவு பாதுகாப்ப்பு கணக்கில் கொள்ளப்படும் என்கிறது. டிஎன்ஏ ஒழுங்காற்று ஆணையம் என்பது சோதனைச் சாலைகள் அமைப்பது, தரவு வங்கிகள் அமைப்பது, வழிகாட்டு நெறிமுறைகள், தரத்தை உறுதிப்படுவது, இதற்கான வழிமுறைகளை உருவாக்கும்.
நாடாளுமன்ற நிலைக்குழு இந்த ஆணையம் சுயமாக இயங்க வேண்டும் என்றும் முழுவதுமாக அரசு அதிகாரிகளின் கையில் இயங்கக் கூடாது எனக் குறிப்பிடுகின்றனர். டிஎன்ஏ மாதிரிகள் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்பந்தப்படி எடுக்க வேண்டுமே ஒழிய கட்டாயப்படுத்தி எடுக்கக்கூடாது. அதன் மூலம் குற்றவாளியாக ஆக்க முனையக்கூடாது.
தேசிய குற்ற டிஎன்ஏ புரொஃபைல் தரவு வங்கி குற்றம் நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட குற்றத்தில் சம்பந்தமில்லாதவர் உட்பட அனைத்து நபர்களின் தரவுகளையும் செமித்து வைக்க உள்ளது என்பது எற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. டிஎன்ஏ ப்ரொஃபைலிங் என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும் அரசமைப்புச் சட்டப்படியும் இருத்தல் வேண்டும் எனக் கூறுகின்றனர்
இந்த நாடாளுமன்றக் குழு தடயவியல் நிபுணர்கள், சுதந்திர இணையதள ஃப்வுண்டேசன், தேசிய சட்டப் பல்கலைக்கழகம், இணையதள சமூக மையம், குஜராத் தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம், மற்றும் பலரைச் சந்தித்துக் கருத்துக் கேட்டுள்ளனர்.
ஆனால் நடந்தது என்ன? நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?
சட்டப்படி நடக்கும் குடிமக்கள் டிஎன்ஏ மாதிரிகள் எடுப்பது ஒன்றும் தவறில்லை எனக் கூறுவார்கள். இது குற்றங்களைக் கண்டுபிடிக்க நல்ல முயற்சி எனத் தான் பலர் நினைப்பார்கள். ஆனால் இது தனி மனிதர் பற்றிய தகவல்களை பெறுவதற்கும் அதன் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அரசுக்கு பெரும் அதிகாரம் கிடைக்கிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகன்/மகளையும் தொடர்ந்த கண்காணிப்பில் வைக்க ஏதுவாகிறது. ஒவ்வொரு குடிமகள்/மகனின் தரவுகளையும், பல தரவுகளை பல வகையில் சேகரித்து ஒரு தகவல் பெட்டகமாக வைத்திருக்க முடியும். இது தனி மனித உரிமையையும் அந்தரங்கத்தையும் மீறும் செயலாகும். அரசு உளவு பார்க்கும் பிரச்சினைகளை இப்பொழுது பார்க்கலாம்.
சேகரிக்கப்படும் டிஎன்ஏ தரவுகள் நம்பகமானவையா?
டிஎன்ஏ தரவுகள் என்ற இந்தத் துறை சமீபத்தியது. இது ஒரு மனிதனின் முழுத் தகவல்களை சரியாக வழங்க முடியாது. இதை வைத்து சரியாகக் கணிக்க முடியாத சூழ்நிலை என்னவென்றால் சம்பந்தப்படுத்தி (association) சொல்ல முடியுமே ஒழிய ஒப்பிட்டுக் (correlation) கூற முடியாது. எடுத்துக் காட்டாக ஒரு நபர் ஒரு இடத்தில் அந்த நேரத்தில் இருந்தால் அவருடையை டிஎன்ஏ கிடைத்தால் அவர் அந்த நிகழ்வுக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் அதை அந்த நிகழ்வோடு வேண்டுமென்றே சம்பந்தப்படுத்த முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் அதை தவறு என நிரூபிக்கும் பொறுப்பு அவர் மீது சுமத்தப்படுகிறது. இருப்பினும் இதை ஏற்றுக் கொள்ளாமல் இந்த டிஎன்ஏ தொழில்நுட்பத்தைத் திணிக்கிறது.
2.முழுமையான தகவல் தொகுப்பிற்காக சேகரிக்கபப்டுகிறது:
செக்ஷன் 22 வழியாக நிகழ்வு நடந்த இடத்தில் இருப்பவர் தானாக வந்து டிஎன்ஏவைக் கொடுக்க வேண்டும் அல்லது குற்றச் செயல் குறித்து விசாரணயில் பங்கு பெற்றால் தர வேண்டும் அல்லது தனது உறவினர் காணவில்லை என்று சொன்னால் அந்த சமயத்தில் கொடுக்க வேண்டும்.
துவக்கத்தில் இது சுயமாக வழங்க வேண்டும் என்று சொன்னாலும் அதைக் கட்டயம் தர வேண்டும் என்ற அளவில் கொண்டு நிறுத்தி விட வாய்ப்பு உள்ளது. ஆதார் கார்டையே நாம் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். முதலில் விரும்பியவர்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என்ற நிலையில் இருந்து தற்போது ரேசனுக்கும், ஆரோக்கியம் சம்பந்தமானவற்றிற்கும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இது பல நபர்கள் மீது குறியிட்டும், பாகுபாடு காட்டியும், விடுவிப்பதும் செய்வதற்கு வழி வகுத்து உள்ளது. இதை தற்போதய கோவிட் பெருந்தொற்றில் பாதுகாப்பு வலையில் உள்ள தேவையானவர்களுக்குப் போதிய ஆதாரம் இல்லாதா சூழலில் உரிய உதவி வழங்குவதில் கூட பாரபட்சம் காட்டுவதை அறிய முடிகிறது.
3. குற்றவாளியாக்கும் தன்மை கொண்டது:
உண்மையிலேயே ஒவ்வொருவரும் தரவுகளைத் தர முடியாது என மறுத்தாலும் அவர்கள் ஒப்புதல் இல்லாமலேயே டிஎன்ஏயை சோதனை செய்வதற்கும் அறிந்து கொள்வதற்கும் அவர்களிடம் இருந்து கட்டாயப்படுத்தி எடுக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டவரின் கண்ணியமும் தனது உடல் ரீதியான சுதந்திரமும் இதன் மூலம் பறி போகிறது. இதன் மூலம் ஒருவரது ஒப்புதல் இல்லாமல் டிஎன்ஏயை கட்டாயப்படுத்தி எடுத்து அவைக் குற்றவாளியாக்க முடியும். ஒரு குற்றத்தில் ஏழு வருட தண்டனை பெற்றவரோ, ஆயுள் தண்டனை பெற்றவரோ அல்லது மரண தண்டனை பெற்றவரோ இவர்களிடம் மட்டுமே ஒப்புதல் பெற வேண்டியதில்லை.
4. தண்டணையைப் பொறுத்து ஒப்புதல் பெறுவதில் மாறுபாடு:
செக்ஷன் 21 (1) படி டிஎன் ஏ பெறுபவரிடம் இருந்து எழுத்து மூலம் ஒப்புதல் பெறவேண்டும் என்கிறது. என்றாலும் குற்ற விசாரணாயின் போது போலீசார்கள் கட்டயப்படுத்தி ஒப்புதல் பெறும் வாய்ப்பு உள்ளது. கீழே சொல்லும் இரண்டு விதிகள் இந்த உரிமை என்பது பெயரளவில் தான் என்கிறது:
அ) ஒப்புதல் பெறும் முறை என்பது குறிப்பிட்ட தண்டனைக்காக கைது செய்யப்பட்டால் செல்லுபடியாகாது. மரண் தண்டனை அல்லது ஏழு வருட சிறைத்தண்டனைக்கு மேற்பட்டவருக்கும் இந்த விதி பொருந்தாது.
ஆ) ஒப்புதல் தர மறுக்கும் போதோ அல்லது பெற முடியாத சூழல் இருந்தாலோ விசாரணை செய்வோர் பொறுப்புக்குரிய மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெறலாம். மாஜிஸ்ட்ரேட் தனது சிந்தனையைப் பயன்படுத்தி குற்றத்தை உறுதிப்படுத்தவோ அல்லது விடுவித்து விடவோ பயன்மெடுமெனில் உடலில் இருந்து மாதிரிகளை எடுக்கத் தேவை இருக்கிறது எனக் கருதினால் அனுமதி கொடுக்கலாம். எனவே அரசின் கை தான் மோலோங்கி இருக்கும். இதன் மூலம் தனி நபர் உரிமை மிதிக்கப்படும். அதற்குப் பதிலாக, அந்த நபர் தனது தரவுகளைத் முடியாது என வாதங்களை முன் வைக்க முடியாது.
5. டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கும் இடங்கள்:
உங்களது டிஎன்ஏ உடம்பில் இருந்தோ உடுத்திய ஆடையில் இருந்தோ கையில் இருந்த பொருள்களில் இருந்தோ எடுத்துக்கொள்ளலாம். டிஎன்ஏ எடுப்பதற்கு விசாரணை செய்பவருக்கு விரிவான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் இருந்தும் சேகரிக்கும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாவது என்னவென்றால் போலீசார்கள் பெண்களின் இன விருத்தி உறுப்புகளை புகைப்படங்கள் எடுக்கவும் வீடியோ பதிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது எந்த விததத்தில் டிஎன்ஏ மாதிரி சேகரிக்க உதவும் எனத் தெரியவில்லை
6. தரவுகளை தக்க வைத்துக் கொள்ளுதல் (Retention of Data) :
கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாற்றப்பெற்றவர் விசாரணக்குப் பின் தனது டிஎன்ஏ தரவுகளை தரவு வங்கியில் இருந்து நீக்கக் கோரிக்கை விடுக்கலாம். அப்படி நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்காவிடின் டிஎன்ஏ தரவுகள் வங்கியில் மட்டுமல்லாமல் சோதனைச் சாலையிலும் வைக்கப்பட்டிருக்கும். மசோதா சொல்வது என்னவென்றால் குற்றத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வரிசைக்கிரமமாக சேமித்து வைக்கப்படும். எவ்வளவு நாட்கள் அப்படி தக்க வைக்கப்படும் எனக் கூறப்படாததால் அது கால வரையரையின்றி சேமிக்கப்படும் நிலை இருக்கிறது.
சமூகத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய சட்டம் தனி மனித உரிமையையும், சுதந்திரத்தையும் மீறுவதாக இருக்கக் கூடாது. அரசின் நோக்கமும் கடமையும் ஏன் கொண்டு வரப்படுகிறது என்பது தெரிவிக்கப்பட வேண்டும். சட்டம் என்பது அனைத்து குடிமக்களுக்கும் சம பாதுகாப்பு வழங்க வேண்டும் சூழலில் அது மிகவும் பாதிப்புக்குள்ளாக்கக் கூடிய பாலினம், சாதி, மதம், வர்க்கம் சார் சமூக மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
உண்மையில் இந்த டிஎன்ஏ மசோதா அரசுக்கு எதிராக அதன் கொள்கைகள் மீதோ செயல்பாடுகள் மீதோ குரல் எழுப்பும் சில தனி நபர்கள் மீதோ அல்லது சமூகத்தின் மீதோ இந்தச் சட்டம் வேண்டுமென்றே பாயும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அமுல்படுத்துப்படும் போது நமது துடிப்பு மிகு ஜனநாயகம் பாதிக்கப்பட்டு எதிர்ப்புக் குரலை அடக்குவதற்கே பயன்படும் எனக் கருதப்படுகிறது. எனவே இந்த டிஎன்ஏ மசோதாவைஎதிர்க்க வேண்டிய தேவை உள்ளது. இது தனது குடிமக்கள் மீது அரசுக்கு வரம்பற்ற அதிகாரத்தையும் இதுவே மக்களை விலக்கி வைக்கவும், பாகுபாடு காட்டுவதற்கும், அச்சுறுத்துவதற்கும் மனித உரிமையையை மீறுவதற்கும் வழி வகுப்பதால் நாம் கட்டாயம் எதிர்க்க வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் இதற்கு எதிராகப் பேசவேண்டும். இது நமது சுய உரிமையைப் பாதிக்ககூடியதாகும். நாம் இப்பொழுதே பேச வேண்டும். உரக்கப் பேச வேண்டும்..
Sources:
https://docs.google.com/forms/d/1SfFuXQFFGByifVXhm6rG0OBA09QhQAIAeLzwOo_QgbM/edit
News paper articles
Parliamentary committee report
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.