B.Sc பட்டப் படிப்பிற்கான யுஜிசியின் மாடல் பாடத்திட்டம் – சர்ச்சைக்குரியது | பண்டைய இந்திய கணிதம் | Controversial UGC's Draft for B.Sc Degree Courses | www.bookday.in

B.Sc பட்டப் படிப்பிற்கான யுஜிசியின் மாடல் பாடத்திட்டம் – சர்ச்சைக்குரியது | பேரா.வி.முருகன்

B.Sc பட்டப் படிப்பிற்கான யுஜிசியின் மாடல் பாடத்திட்டம் – சர்ச்சைக்குரியது

– பேரா.வி.முருகன்

கல்லூரிகளில் நான்காண்டு B.Sc பட்டப்படிப்புக்கான யிஜிசியின் மாடல் கணித பாடத்திட்டம் தொடர்பான மூன்று ஆவணங்களை நான் பதிவிட்டுள்ளேன்.

1. Petition to withdraw the UGC draft curriculum 2025 for Mathematics B.Sc/B.A
https://static1.squarespace.com/static/644f86dd486ddf270c34b646/t/68cd590038ced310c4ef3e8a/1758288128370/PetitionUGCdraftCurriculum2025_Signeddocx_250918_151944.pdf

2. Mathematics Teachers’ Association (India) -A statement on the draft model curriculum For undergraduate mathematics Proposed by the UGC in August 2025
https://www.mtai.org.in/wp-content/uploads/2025/09/mta-for-ugc.pdf

3. On the UGC draft: Learning outcome based curriculum-2025 in mathematics for undergraduate program B.A. /B.Sc . (general) -Comments by Manjunath Krishnapur
https://math.iisc.ac.in/~manju/UGC2025mathcurriculum.pdf

யு.ஜி.சி ஆவணம் மிகவும் சர்ச்சைக்குரியது. இதை நம்முடைய வசதிக்காக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்: ஒரு பகுதி வழக்கமான கணித பாடங்கள் ( regular mathematics) தொடர்பான பகுதி. இரண்டாம் பகுதி வழக்கமான கணிதப் பாடங்களைத் தாண்டிய பாடங்கள் (subjects) உள்ள பகுதி. பண்டைய இந்திய கணிதம் பற்றியது. இது மட்டுமில்லாமல் தியானத்தின் கணிதம், உளவியலுக்கான கணிதம் போன்ற சில வழக்கில் இல்லாத பாடங்களும் உள்ளன. இவை இது வரை உள்ள B.Sc பட்டப் படிப்பிற்கான பாடத்திட்டங்களில் இல்லாதவை. இரண்டாம் பகுதி முற்றிலும் புதியது.

சதி கோட்பாடு:

பண்டைய இந்திய கணிதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நமது கடந்த கால வரலாற்றைப் பற்றிய இந்துத்துவா சித்தாந்தத்தின் பிரதிபலிப்பாகும். பழைய இந்திய நாகரிகத்தின் சாதனைகளை வேண்டுமென்றே மறைக்கும் சதி (conspiracy) இருப்பதாக இந்துத்துவா நம்புகிறது. ஐரோப்பியர்கள் திட்டமிட்டு நம்மை சிறுமைப் படுத்தும் நோக்கத்தோடு இந்த சதியை செய்கிறார்கள் என்றும் மேற்கத்திய சிந்தனைகள் மூலம் இந்தியர்களின் சிந்தனையை பாழ்படுத்துவதற்கு (corrupting our thought) அந்த சதி வழிவகுக்கிறது என்றும் தீவிரமாக இந்துத்துவா நம்புகிறது.

இந்த சதிக் கோட்பாட்டை கருத்தில் கொண்டு இன்றைய ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளனர்

இந்த சதிக் கோட்பாடு ஒரு கற்பனையான பயம். இந்தியாவில் இதை நம்புகிறவர்களும் உண்டு, இதை நம்பாதவர்களும் உண்டு. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்தக் கருத்து அதிகமாக நம்ப பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் இது ஒரு பிரச்சனையே (issue) இல்லை.பெரும்பான்மையினருக்கு இதில் ஆர்வமே இல்லை. இந்த சதியை முறியடிப்பதற்காக பாடத்திட்டங்களில் பண்டைய இந்திய கணிதத்தை கொண்டுவர வேண்டும் என்று சொல்பவர்கள் மிக் குறைவானவர்களே.
இந்துத்துவாவின் முடிவுகளை அமுல்படுத்தக் கூடிய சில கணிதவியலாள்களைக் கொண்டு இந்தப் பாடத்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. அவர்கள் கணிதத்திறனில் மிகவும் தரம் குறைந்தவர்கள். அவர்கள் கொடுக்கும் ஆதார நூல்களே (reference) அவர்களுடைய தரமற்ற கணித்திறனை வெட்டவெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. இல்லாத சில நூல்கள் ஆதார நூல்கள் பட்டியலில் உள்ளன என்று சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. யு.ஜி.சிக்கு இது ஒரு அவமானமாகும்.

கணிதவியலாளர்களின் மனு:

பண்டைய இந்திய கணிதத்தின் அறிமுகம் ஒரு வகையான சிக்கலை உருவாக்குகிறது என்றால் யுஜிசி தேர்ந்தெடுத்த கணிதவியலாளர்களின் கணித அறிவில் தரமின்மை மற்றொரு வகையான சிக்கலை உருவாக்குகிறது. உண்மையில், இரண்டாவது அம்சம் மிக அதிக சேதம் விளைவிக்கும்.

இந்த மாடல் பாடத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி 900 கணிதவியலாளர்கள் கையெழுத்திட்டு யுஜிசியிடம் சமர்ப்பிக்கப் பட்ட ஒரு ஆவணத்தின் நகலைப் பதிவிட்டுள்ளேன். இதில் 52 பக்கங்கள் உள்ளன. இதில் மனு இரண்டு பக்கங்கள் மட்டுமே. மீதமுள்ள 50 பக்கங்கள் இந்த ஆவணத்தில் கையொப்பமிட்ட கணிதவியலாளர்களின் பட்டியலைக் கொடுக்கின்றன. இந்த ஆவணம் வழக்கமான கணித பாடங்களைப் (regular mathematics) பற்றி மட்டுமே பேசுகிறது. பண்டைய இந்திய கணிதம் உள்ள பாடங்களை சேர்ப்பது குறித்த கருத்து எதுவும் இல்லை .

யு.ஜி.சி வரைவில் இருக்கும் வழக்கமான கணிதப் பாடங்கள் (regular mathematics) குறித்து மனுதாரர்கள் மிகவும் கடுமையாக விமர்சிக்கின்றனர். சமூகத்தின் தற்போதைய தேவையின் அடிப்படையில் பார்த்தால் சில பாடங்கள் மிகவும் காலாவதியானவை. நவீன காலத்தின் தேவைகளுக்கு அவை பொருத்தமற்றவை. இன்றைய தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியபல முக்கியமான பாடங்கள் விடுபட்டுள்ளன அல்லது போதுமான அளவிற்கு அவை ஆழமாக இல்லை. இந்தக் கருத்துக்கள்தான் அந்த மனுவின் சாராம்சம்.

மனு மிகவும் சுருக்கமாக உள்ளது . மனுதார்ரகளின் கருத்துக்களின் சாராம்சத்தை மட்டுமே முன்வைக்கிறது. ஒவ்வொருவருவரும் தனியாக அவரவர் கருத்துக்களை இணையதளத்தில் யுஜிசிக்கு மக்களின் கருத்துக்களை கேட்கும் பகுதிக்கு (feedback) அனுப்பி விடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மற்ற இரண்டு கட்டுரைகளும் யு.ஜி.சி வரைவு பற்றிய விரிவான விமர்சனத்தை முன்வைக்கின்றன. இந்த கட்டுரைகளை நீங்களே படிக்கலாம்.

ஐ.எஸ்.ஐ (Indian Statistical Institute)., சி.எம்.ஐ (Chennai Mathematical Insitute)., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,( Indian Institute for Science Education Research) ஐ.ஐ.எஸ்.சி (Indian Institute of Science)., இந்தியாவில் உள்ள சில ஐ.ஐ.டி.கள், ஈரான், கிரீஸ், தென் கொரியா மற்றும் வேறு சில நாடுகளில் உள்ள இளங்கலை பாடத்திட்டத்தோடு யுஜிசியின் மாடல் பாடத் திட்டத்தை அவர்கள் ஒப்பிட்டுள்ளனர். ஈரான் மற்றும் கிரீஸ் ஆகியவை வளமான பண்டைய நாகரிகங்களைக் கொண்டிருப்பதால் அவற்றை தேர்வு செய்துள்ளார்கள். எந்த நாட்டிலும் கணித வரலாறு கணிதத்திற்கான இளங்கலை பட்டப்படிப்பில் கற்பிக்கப்டுவதில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பண்டைய இந்திய கணிதம் யுஜிசி பாடத்திட்டத்தில் வைக்கப்படும் விதத்தை அவர்கள் விமர்சிக்கின்றனர்.

இது தொடர்பாக எனது சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .

யுஜிசி பாடத்திட்டத்தில் உள்ள வழக்கமான கணிதப் பாடங்களைப் பற்றி (regular mathematics ) நான் கருத்து தெரிவிக்க முடியாது. இது கணிதத்தையே தொழிலாக கொண்டுளவர்கள் சொல்வதுதான் சரி. நான் பணிபுரிந்த கல்லூரியில் நீண்டகாலமாக B.Sc மாணவர்கள் என்ன படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். அதே பாடங்கள்தான் இதிலும் உள்ளன. கூடுதலாக பண்டைய இந்திய கணிதம் உள்ளது. சில பாடங்கள் புதிராக உள்ளது. உதாரணமாக, Mathematics of meditation என்ற பாடம்.

பண்டைய இந்திய கணிதம்:

யுஜிசி மாதிரி பாடத்திட்டத்தில் பண்டைய இந்திய கணிதத்தை B.Sc மாணவர்களுக்கான பாடங்களாக வைத்திருப்பது நம் நாட்டில் ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளது. பண்டைய இந்திய கணிதம் பற்றிய பாடங்கள் கணிதத்திற்கான B.Sc பட்டப் படிப்பில் வைப்பது தேவையா? அது பயனுள்ளதா? அவற்றைப் படிப்பதால் என்ன லாபம் வரப் போகிறது?

சற்று சிக்கலான கேள்விகள். இன்றிருக்கும் அரசியல் சூழ்நிலையில் பண்டைய இந்தியக் கணிதம் குறித்த பாடங்கள் தேவையில்லை என்று கூறினால் உடனடியாக தேசப்பற்று இல்லாதவர்கள் என்று உங்கள் மீது முத்திரை குத்தப் படும். இருந்தாலும் இது விவாதிக்கப் பட வேண்டிய கேள்வி.

நமது விவாதத்திற்காக , கணிதத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிப்போம்: பொது ஆண்டு ( CE) 1600 க்கு முன்பிருந்த கணிதம் மற்றும் பொது ஆண்டு 1600 க்குப் பிறகு உருவான கணிதம் (யாரும் இப்படி பிரிப்பதில்லை). இந்த இரண்டு பகுதிகளையும் மாணவர்கள் படிக்க வேண்டும். இருப்பினும், பொது ஆண்டு 1600 க்கு முன்பு உருவாக்கப்பட்ட அனைத்து கணிதங்களும் பள்ளியில் 10 ஆம் வகுப்பிற்குள் அடங்கும். பொது ஆண்டு 1600 க்குப் பிறகு உருவான கணிதம் மட்டுமே பள்ளிக் கல்வியில் பிளஸ் 1 , பிளஸ் 2 வகுப்புகளிலும் கல்லூரிகளில் B.Sc மற்றும் M.Sc வகுப்புகளிலும் இன்று கற்பிக்கப்படுகிறது. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு பொருத்தமான பகுதி இதுதான்.

பொது ஆண்டு 1600 முதல் கணித அறிவு வேகமாக விரிவடைந்து வருகிறது. பல புதிய பாடங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. உயர்கல்வி பயிலும் காலம் மொத்தம் 7 ஆண்டுகளாகும். : பிளஸ் 1 மற்றும் 2, நான்கு ஆண்டுகள் B.Sc மற்றும் ஒரு வருடம் M.Sc.( முன்பு B.Sc மூன்று வருடங்கள், M.Sc இரண்டு வருடங்கள்). இந்த ஏழு ஆண்டுகளில் அனைத்து கணிதக் கருத்துக்களையும் (topics) உள்ளடக்குவது மிகவும் கடினம். சில கருத்துக்கள் சேர்க்கப்பட வேண்டும்; சில கருத்துக்கள் விடப்பட வேண்டும். எதை சேர்க்க வேண்டும், எதை விட்டுவிட வேண்டும் என்பதை தீர்மானிப்பது கடினம். இந்தச் சூழ்நிலையில், பண்டைய இந்திய கணிதத்தை சேர்ப்பது மாணவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்.

பண்டைய இந்திய கணிதம் என்பது உயர்நிலைப் பள்ளி கணிதம் மட்டுமே என்ற உண்மையை நாம் அங்கீகரிக்க வேண்டும் ( அனைத்து நாகரிகங்களுக்கும் இது பொருந்தும்). இந்த உண்மை பழங்கால இந்தியர்களின் சாதனைகளை சிறுமைப்படுத்துவதாகாது. வரலாற்று ரீதியாக அனைத்து நாகரிகங்களிலும் இப்படித்தான் நடை பெற்றிருக்க முடியும். தற்போதைய அறிவைப் பொறுத்தவரை இது தற்போதைய பள்ளி அளவுதான். ஆனால் அவர்களின் காலத்தில் அவர்களின் வேலை மிகவும் மேம்பட்ட படைப்புகளைக் குறிக்கிறது. நமது நிலையும் வருங்காலத்தில் இப்படித்தான் இருக்கும் .

அதனால் B.Sc பட்டப் படிப்பில் பண்டைய இந்தியக் கணிதத்தை நுழைப்பது மாணவர்களின் காலத்தை விரயாமாக்கும் என்ற கருத்து சரிதான்.
ஆனாலும், கணிதத்தின் வரலாற்றைக் கற்றுக்கொள்வது என்பது நேரத்தை வீணடிப்பது என்ற கருத்து முற்றிலும் சரியல்ல என்று நான் நினைக்கிறேன். யுஜிசி மாடல் பாடத்திட்டத்தில் இது வழங்கப்படும் விதம் நிச்சயமாக நேரத்தை வீணடிக்கிறது.

இந்துத்துவாவைப் பொறுத்தவரை, பண்டைய கணிதத்தைப் படிப்பது தேசியவாதத்தின் ஒரு பகுதியாகும். நமது கடந்தகால சாதனைகளை ஒரு போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் வெற்றிகளைப் போலவே இந்துத்துவா காண்கிறது. இது தவறான கண்ணோட்டம். வரலாற்று ரீதியாக அது இப்படி இல்லை. நமக்கு இந்தக் கண்ணோட்டம் ஒரு பயனும் தராது.

யுஜிசி மாடல் பாடத்திட்டம் பண்டைய இந்தியாவில் செய்யப்பட்ட பணிகளின் பட்டியலை வெறுமென வழங்குகிறது. இது எந்த நோக்கத்தையும் நிறைவேற்றாது.
மேலும் இந்தியாவில் கணிதம் செய்த முறைக்கும் கிரேக்க நாகரிகத்தில் கணிதம் செய்யப் பட்ட முறைக்கும் வேறுபாடு உள்ளது. பொது ஆண்டு 1600க்குப் பின் உருவான கணிதம் அடிப்படையில் கிரேக்க நாகரித்தில் கணிதம் செய்யப் பட்ட முறையில்தான் செய்யப்படுகிறது. ( சில axiomகளை வைத்து பல விளைவுகளை ஒன்றன் பின் ஒன்றாக deduce செய்யும் முறை) .இந்த சூழ்நிலையில் யுஜிசி மாடல் பாடத் திட்டத்தில் உள்ள பண்டைய இந்திய கணிதம் முற்றிலும் B,Sc மாணவர்கள் படிக்கும் மற்ற பாடங்களுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கும்.

கணித வரலாறுகள்:

கணிதக் கருத்துக்களின் வரலாறு என்பது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இங்கும் கூட அத்தகைய வரலாறு ஒரு உலகளாவிய வரலாறு இருக்க வேண்டும். இதில் பண்டைய இந்திய கணிதம் ஒரு அத்தியாயம் (ஒரு யூனிட்) மட்டுமே இருக்க முடியும். பொது ஆண்டு 1600க்கு உருவான கணிதக் கருத்துக்களின் வரலாறுதான் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

இந்த வரலாறு B.Sc மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் கணிதப் பாடங்களைப் புரிந்து கொள்வதற்கு பெரிதும் உதவும். கணிதத்தின் மீது அவர்களுக்கு பெரிய ஆர்வத்தை தூண்டும்.

மற்றொரு வகையிலான வரலாறும் உண்டு. அது கணிதக் கருத்துக்களின் வரலாற்றை அந்தக் கருத்துக்கள் உருவான காலத்தில் இருந்த புறச்சூழ்நிலைகளின் பின்னணியில் ஆராயும் வரலாறு ஆகும்.

இது வேறு சில கேள்விகளை ஆராய உதவும். கிரேக்க நாகரிகத்தில் செய்யப் பட்ட கணித முறைக்கும் இந்தியாவில் செய்யப்பட்ட கணித முறைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? அவை கிரேக்க நாகரித்திலும் இந்தியாவிலும் கணித வளர்ச்சியில் என்னென்ன விதத்தில் சாதகமாகவும் பாதகமாகவும் இருந்தன? கிரேக்க நாகரிகத்தில் பூஜியம் என்ற எண்ணை கண்டுபிடிப்பதை எது தடுத்தது? இந்தியாவில் அது சாத்தியமானது? எதிர்மறை எண்கள் (negative numbers) எப்படி இந்தியர்களால் சுலபமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது? ஐரோப்பாவில் அது சுலபமாக ஏன் ஏற்றுக் கொள்ளப் பட வில்லை?

இது போன்ற கேள்விகளுக்கு கணிதக் கருத்துக்களின் வரலாற்றை அந்தக் கருத்துக்கள் உருவான காலத்தில் இருந்த புறச்சூழ்நிலைகளின் பின்னணியில் ஆராயும் வரலாறுதான் பதில் கொடுக்க முடியும். இதுவும் இன்றைய சமுதாயத்திற்கு பயன் தரும் வரலாறுதான்.

Mathematics Teachers Association மற்றும் மஞ்சுனாத் கிரிஷ்ணபூர் ஆகியோர் கட்டுரைகளில் வேறொரு கேள்வியை எழுப்புகிறார்கள்.

ISI (Indian Statistical Institute), IISERs (Indian Institute for Science Education Research : அவை இருக்கும் இடங்கள் பெர்ஹம்ப்பூர், திருவனந்தபுரம், போப்பால், மொஹாலி, பூனா, திருப்பதி) and IISc (Indian Institute of Science,) சில IITகள் ஆகிய நிறுவனங்களில் ஒன்றிய அரசு ஏன் பண்டைய இந்திய கணிததை பாடங்களாக கொண்டுவரவில்லை?, இந்தக் கேள்வியோடு அவர்கள் நின்று விடுகிறார்கள். அவர்கள் அதற்கான பதில் தரவில்லை. இந்தக் கல்வி நிலையங்கள் ஒன்றிய அரசால் நடத்துப் படுபவை.

அது இந்தியாவில் வழங்கப்படும் கல்வியின் வேறொரு சமூகப் பரிமாணத்தோடு (social dimension) தொடர்புடையது. ஆனால் இது பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். எனது புரிதலின் அடிப்படையில் நான் இங்கு எழுதியுள்ளேன்.

இரண்டு விதமான கல்வி நிலையங்கள்:

இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிலையங்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

முதல் பிரிவு: கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் (தனியார்,மற்றும் மாநில அரசுகள் நடத்துபவை ). இவற்றிற்கு ஒன்றிய அரசு நிதியுதவி செய்வதில்லை.

இரண்டாம் பிரிவு: ISI (Indian Statistical Institute), IISERs (Indian Institute for Science Education Research : அவை இருக்கும் இடங்கள் பெர்ஹம்ப்பூர், திருவனந்தபுரம், போப்பால், மொஹாலி, பூனா, திருப்பதி) and IISc (Indian Institute of Science,) போன்ற நிறுவனங்கள். இவை ஒன்றிய அரசால் நடத்தப் படுபவை.

இதில் முதல் பிரிவில்தான் லட்சக் கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள். இதை mass education என்று சொல்லலாம். இந்தக் கல்வி நிறுவனங்களில்தான் விரும்பத்தகாத அத்தனையும் நடக்கின்றன. அரசியல் தலையீடு, லாப வேட்டை, சகல விதமான ஊழல்கள் , தரமில்லாத ஆசிரியர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இங்கு தரப்படும் கல்வியின் தரம் மிக மோசமானது

இரண்டாவது பிரிவு இதற்கு நேர்மாறானது. மிக் குறைவான மாணவர்கள் (சில ஆயிரங்கள்தான் இருக்கும்) படிக்கிறார்கள். மாணவர்கள் சேர்க்கையிலோ அல்லது ஆசிரியர்களின் நியமனத்திலோ ஊழல் இல்லை.அரசியல் தலையீடு இல்லை. இங்குள்ள ஆசிரியர்கள் தரமானவர்கள். இங்கு வழங்கப் படும் கல்வி நல்ல தரமானது.
முதல் பிரிவை சேர்ந்த உயர் கல்வி நிறுவனங்களோடு ஒப்பிடும் போது இரண்டாவது பிரிவில் உள்ள உயர்கல்வி நலையங்களில் ஒன்றிய அரசு அபரிதமாக நிதியைக் கொட்டுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இரண்டாவது பிரிவை சேர்ந்த உயர்கல்வி நிலையங்களுக்கும் யுஜிசிக்கும் தொடர்பில்லை. இந்த கல்வி நிறுவனங்கள் முற்றிலும் சுயேட்சையானவை. மேல் நாடுகளில் பின்பற்றப் படும் முறையே இங்கு பின்பற்றப் படுகிறது.

இந்தியாவிற்குத் தேவையான skilled resource persons இந்தக் கல்வி நிறுவனங்களில் இருந்துதான் கிடைக்கும்.

லட்சக்கணக்கான மாணவர்கள் முதல் பிரிவில் இருப்பதால் (by sheer large sample) மிக மோசமான அமைப்பையும் மீறி இதிலிருந்தும் திறமையானவர்கள் ஓரளவிற்கு வருகிறார்கள்.

முதல் பிரிவு கல்வி நிலையங்களுக்கு தமிழ்நாடு நல்ல உதாரணம். கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் மிக அதிகம். ஆனால் தமிழ்நாட்டில் வழங்கப் படும் உயர்கல்வியின் தரம் மிக மோசமானது.

எந்த மாநில அரசாலும் இரண்டாவது பிரிவில் உள்ள கல்வி நிலையங்களைப் போன்ற கல்வி நிலையங்களை நடத்த முடியாது. அந்த அளவிற்கு நிதியை செலவிட முடியாது.

இந்தியாவில் இருப்பதை மற்ற நாடுகளிலும் கல்வி நிலையங்களில் பாகுபாடுகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் இருக்கும் அளவிற்கு மற்ற நாடுகளில் உள்ளதா என்று தெரிய வில்லை.

இந்திய சமூகப் பொருளாதார சூழ்நிலைகளே இதற்கு முக்கியமான காரணமாகும்.

இந்தப் பின்னணியில் பார்த்தால் அனைத்து துறைகளுக்குமான யுஜிசியின் பாடதிட்டம் புரியும். இரண்டாவது பிரிவில் பண்டைய இந்தியக் கணிதம் வராது என்றுதான் நான் நம்புகிறேன்.

ஆனால் இந்த நிறுவங்களிலும் இந்துத்துவா சமீப காலத்தில் நுழைந்துள்ளது. கரக்பூர் ஐஐடியில் இருந்து வரும் காலண்டர்கள், சென்னை ஐஐடி டைரெக்டர் காமகோட்டியின் பிற்போக்கான கருத்துக்கள் போன்றவைகள் இதை உணர்த்துகிறது.

எழுதியவர் : 

✍🏻 – பேரா.வி.முருகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *