Image Credits: www.pacificariptide.com



(அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா அவர்களின் உரையை தோழர் சுவாமிநாதன் தமிழாக்கம் செய்திருந்தார். அதனை தழுவி எழுதியது)  

தம்பி – அண்ணே எனக்கு இன்னைக்கு இரண்டில ஒண்ணு தெரிஞ்சாகணும்.

அண்ணன் – டேய் தம்பி என்னடா இவ்வளவு சூடா இருக்க? உக்காரு. டீ சாப்பிட்டிட்டு பேசுவோம். அண்ணே தம்பி ரொம்ப சூடா இருக்காப்பல. ஒரு நல்ல டீ போடுங்க.

டீக்கடைக்காரர் – *இப்ப யாராவது சூடா இல்லைன்னாத்தான் ஆச்சரியம்.*

அண்ணன் – சரியா சொன்னீங்க. தம்பி டீயக் குடிச்சிட்டியா? இப்ப கேளு உனக்கு என்ன தெரியணும்?

தம்பி – மத்திய அரசு பட்ஜெட் போட்டிருக்கு இல்ல?

அண்ணன் – ஆமா போட்டிருக்கு. வருசா வருசம்தான் போடறாங்க.

தம்பி – அதில என்னமோ வருவாய்  பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை  அப்படின்னு எல்லாரும் பேசிக்கிறாங்க. அது என்னண்ணே?

அண்ணன் – வருசா வருஷம் நீ சொன்ன ரெண்டு பற்றாக்குறைதான் இருக்கும். இந்த வருஷம் பட்ஜெட்டில இன்னும் ரெண்டு சேர்ந்து இருக்கு.

தம்பி – அண்ணே நானே முதல்ல சொன்ன அந்த ரெண்டும் என்னன்னு குழம்பிக்கிட்டிருக்கேன். நீங்க மூணாவது,நாலாவது  வேற சொல்றீங்க.

அண்ணன் – முதல் ரெண்டும் அளவோட இருக்கிற வரை பிரச்சினை இல்ல. மத்த ரெண்டும் முக்கியமானது. இருந்தாலும் முதல்ல நீ கேட்டத எனக்கு தெரிஞ்சவரை சொல்றேன்.

தம்பி – சொல்லுங்கண்ணே 

அண்ணன் – அரசாங்கம் போன வருஷம் பட்ஜெட் போட்டுதா?

தம்பி – அதுதான் நீங்க சொல்லிட்டீங்களே வருசா வருஷம் போடறாங்கன்னு.

அண்ணன் – அதில ஒரு வருஷத்தில எவ்வளவு வருமானம் வரும், எவ்வளவு செலவு ஆகும், மிச்சம் எவ்வளவு நிக்கும் அப்படின்னு கணக்கு போட்டிருப்பாங்க. ஆனா வருஷம் முடிஞ்சு கணக்கு பாத்தா அவங்க எதிர்பார்த்ததை விட மிச்சமான தொகை குறைச்சலா இருந்ததுன்னா அது வருவாய் பற்றாக்குறை. மிச்சமே வராம, வரவை விட செலவு அதிகமா இருந்ததுன்னா அது நிதிப் பற்றாக்குறை.



தம்பி – கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு. நீங்க ஏதோ மூணாவது நாலாவது  பற்றாக்குறை அப்படீன்னு சொல்றீங்களே அது பத்தி சொல்லுங்க.

அண்ணன் – நம்ம நாட்டு சட்டங்கள இயற்றுவது பாராளுமன்றம். தெரியுமில்ல?

தம்பி -அண்ணே இது கூடவா தெரியாது?

அண்ணன் – அதில ரெண்டு சபை இருக்கு.மேல் சபை, கீழ் சபை. 

தம்பி – மக்களவை, மாநிலங்களவை. 

அண்ணன் – கரெக்ட். எல்லா சட்டங்களும் ரெண்டு சபையிலும் விவாதம் பண்ணி தேவைப்பட்டா வாக்கெடுப்பு நடத்தி பாசாகும். சில சமயம் தோற்கடிக்கப்படும். ஆனா  பட்ஜெட் மாதிரி சட்டங்கள நிதி மசோதா அப்படிங்கறாங்க. அத மக்களவையில பாஸ் பண்ணினா போதும். மாநிலங்களவை பாஸ் பண்ணாட்டியும் அது சட்டமாயிடும்.

தம்பி – இதுக்கும் நீங்க சொன்ன மூணாவது பற்றாக்குறைக்கும் என்ன சம்பந்தம்?

அண்ணன் – இந்த பட்ஜெட்டில சொல்லியிருக்கிற முக்கியமான விஷயம் என்னன்னு சொல்லு பாப்போம்.

தம்பி – ரெண்டு பேங்கயும் ஒரு பொது இன்சூரன்ஸ் கம்பெனியையும்  விக்கப்போறோம். எல்ஐசி பங்குகள விக்கப்போறோம் அப்பிடீன்னு சொல்லியிருக்காங்க.

அண்ணன் – கரெக்டா பாயிண்ட பிடிச்சிட்ட. இத ஏன் பட்ஜெட்டில சேத்திருக்காங்கன்னு யோசிச்சியா?

தம்பி – தெரியலையே ?

அண்ணன் – அதுக்கு முன்னாடி ஒரு கத சொல்றேன் கேளு. பழைய காலத்தில கிரேக்க வீரர்கள் ட்ராய் என்கிற கோட்டைய பிடிக்கிறதுக்காக ஒரு மரக் குதிரை செஞ்சு அதுக்குள்ளே ஒளிஞ்சுக்கிட்டிருந்தாங்க. அந்தக் குதிரைய கோட்டைக்கு வெளிய நிறுத்தி வெச்சுட்டாங்க. டிராய் நாட்டு மக்கள் அத ஏதோ சாதாரண குதிரன்னு நினைச்சிக்கிட்டு கோட்டைக்குள்ளே இழுத்துகிட்டு போனாங்க. உடனே அதுக்குள்ளேயிருந்த வீரர்கள் வெளியில வந்து சண்டை போட்டு அந்த கோட்டய பிடிச்சாங்களாம். 

தம்பி – அது மாதிரி…..

அண்ணன் – எல்ஐசி திருத்த சட்டம், பேங்கு திருத்த சட்டம் இதையெல்லாம்  பட்ஜெட்டுக்குள்ள ஒளிச்சுக் கொண்டாந்துட்டாங்க. சாதாரண சட்ட  திருத்தமா கொண்டுவந்தா இரண்டு சபையிலும் பாசாகணும். பிஜேபிக்கு கீழ் சபையில்தான் மெஜாரிட்டி இருக்கு. மேல்சபையில இல்ல. பட்ஜெட்டில இந்த திருத்தங்கள சேத்துட்டா மக்களவையில மட்டும் பாசானாப் போதும். மாநிலங்களவையில பாசாகணுமின்னு கட்டாயம் இல்ல. இத *ஜனநாயகப் பற்றாக்குறை*ன்னு சொல்லலாம்.

தம்பி – அடப்பாவிங்களா? சரி நாலாவது பற்றாக்குறையப் பத்தி சொல்லுங்க.

அண்ணன் – நாலாவதில மூணு அம்சம் இருக்கு. அதில முதலாவது எல்ஐசி பங்கு விற்பனை பற்றிய அறிவிப்பில் உள்ள ஒரு சூட்சுமம். ஐந்தாண்டுகளுக்கு எல்.ஐ.சி யில் அரசு பங்குகள் 75 சதவீதமாக இருக்கும்னு சொல்லியிருக்காங்க. அப்படின்னா என்ன அர்த்தம்? அடுத்தடுத்த பட்ஜெட்டுகளிலும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க கறவைப் பசுவாக எல்.ஐ.சி இருக்கும் என்பதே. இதிலும் ஒரு முரண் உள்ளது. “செபி”(SEBI) விதிகளின்படி, ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு விட்டால் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக 25 சதவீதத்தை விற்க வேண்டும். ஆகவே அரசு சொல்கிற ஐந்தாண்டுகள் என்ற வரையறையை நம்ப முடியுமா

தம்பி – அரசாங்கத்தையே நம்ப முடியாதா?



அண்ணன் – அதுக்குள்ளேயே மலைச்சுட்டா எப்படி? இரண்டாவத பாப்போம்.  வங்கி நெறியாளுகை திருத்தச் சட்டம், பொது இன்சூரன்ஸ் தேசிய மயச் சட்ட திருத்தம் ஆகியவை கொண்டு வரப்பட்ட போது என்ன உறுதி மொழிகள் தரப்பட்டன? அரசின் பங்குகள் அந்த நிறுவனங்களில் 51 சதவீதத்திற்கு கீழே போகாது என்பது. இப்போதோ, ஒரு அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனம், இரண்டு அரசு வங்கிகள் தனியார் மயமாகும் அப்படீங்கறாங்க. அதாவது அரசின் பங்குகள் 51 சதவீதத்திற்கும் கீழே போகும். எல்.ஐ.சி பங்கு விற்பனை என்பதும் தனியார் மயத்தின் முதற்படி என்பதுதானே உண்மை. இவர்களின் வார்த்தைகள் எவ்வளவு காலம்தான் காற்றில் நிற்குமென்ற சந்தேகம் எழாதா

தம்பி – பாராளுமன்றத்தில அரசாங்கம் கொடுக்கிற வாக்குறுதிகளுக்கு மதிப்பு அவ்வளவுதானா? 

அண்ணன் – நாமதான் எச்சரிக்கையா இருக்கணும். மூணாவது  அன்னிய முதலீடு குறித்த அறிவிப்பு. அன்னிய முதலீடு 26 சதவீதமாகக் கொண்டு வரப்பட்ட போதே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சொன்னது. அது “பாதையின் முடிவு அல்ல” (Not end of the road) என்று. அது நிரூபணம் ஆகியிருக்கிறது. 26 சதவீதம் 49 ஆக உயர்ந்தது. இன்று 74 சதவீதம் ஆக முன் மொழியப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல “இந்தியர் கட்டுப்பாடு” (Indian Control) என்று இவர்களே 2015 ல் சட்டத்தில் இணைத்ததை இன்று மாற்றுகிறார்கள். “நிபந்தனைகளோடு அன்னியர் உடமை” (Foreign ownership with safeguards) என்று இப்போது சொல்கிறார்கள். என்ன நிபந்தனைகள்! எப்படி இதை நம்புவது?

தம்பி – இதக் கேக்கும்போது நம்ம புராணத்தில சொல்ற ஒரு கத நினைவுக்கு வருது அண்ணே.

அண்ணன் – உன்ன நான் என்னமோன்னு நினச்சுட்டேன். பரவாயில்ல நிறைய படிப்ப போலிருக்கு. சொல்லு நானும் தெரிஞ்சுக்கிறேன்.

தம்பி – மெய்ப்பொருள் நாயனார் அப்படின்னு ஒரு மன்னர். சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதையே பெரும் பேறாக எண்ணினார். அவருடன் பகைமை கொண்டிருந்த முத்தநாதன் என்பவனால் அவரை போர் செய்து வெல்ல முடியவில்லை. அதனால் சிவனடியார் போல் வேடம் போட்டு வந்து அவரைக் கொலை செய்துவிட்டானாம். அதுசரி அண்ணே, இந்தப் பற்றாக்குறைக்கு என்னன்னு சொல்லலாம்?    

அண்ணன் – இத *நம்பகப் பற்றாக்குறை (Trust Deficit)* அப்படீன்னு சொல்லலாம். அரசு சொல்கிற நிதிப் பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை என்பதெல்லாம் விட அரசிடம் மக்களுக்குள்ள நம்பகப் பற்றாக்குறைதான் மிக முக்கியமான பிரச்சினை. 

தம்பி – மக்கள் கருத்தை திரட்டி நம்பகப் பற்றாக்குறையை எதிர்கொள்வோம்! அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டுவோம் அண்ணே.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *