உரையாடல் வடிவக் கட்டுரை: ‘மின்சாரம் கத்திரிக்காய் வியாபாரம் இல்லை’ – தமிழில் இரா.இரமணன்அண்ணன் – தம்பி! அன்னைக்கு நீ மின்சார சட்டத்தைப் பத்தி கேட்ட இல்ல?

தம்பி – ஆமாண்ணே. நீங்க கூட அதினால எப்படி நம்ம மின் கட்டணம் ஒசருமுன்னு விளக்கினீங்க.

அண்ணன் – இப்ப ஒரு பயங்கரமான தகவல் வந்திருக்கு.

தம்பி – அண்ணே நானே சந்திரமுகி முருகேசன் மாதிரி. பயங்காட்டாம விஷயத்த சொல்லுங்க.

அண்ணன் – அமெரிக்காவில டெக்சாஸ் அப்படின்னு ஒரு மாநிலம்.

தம்பி – ரெண்டாவது பெரிய மாநிலமுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.

அண்ணன் – கரெக்ட். அங்க பிப்ரவரி மாசம் பனியால மோசமான உறை குளிர் நிலைமை வந்து பத்து பதினைந்து நாளுக்கு மின்சாரமே இல்ல.

தம்பி – நம்ம நாட்டில கூட புயல் மழையில கரெண்டு ரெண்டு மூணு நாளைக்கு இல்லாம போயிடும். ஆனா அமெரிக்காவில அதுவும் பத்து பதினைந்து நாளா?ஏன் அண்ணே?

அண்ணன் – சொல்றேன்.அதுக்கு முன்னாடி இந்த கரண்டு கட்டுனால டெக்சாசில எவ்வளவு பயங்கரமான விளைவுகள் ஏற்பட்டதுன்னு தெரிஞ்சுக்கோ.

தம்பி – சொல்லுங்கண்ணே.

அண்ணன் – ஏராளமான மரணங்கள், காயங்கள்;பொருளாதார சின்னாபின்னங்கள்; உறைந்து போன, வெடித்துப்போன தண்ணீர்குழாய்கள்; இடிந்துபோன வீடுகள்; நகராட்சி குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டதால் 1.3கோடி டெக்சாஸ் மக்கள் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டி வந்தது.

தம்பி – இயற்கை பேரிடர்னா இதெல்லாம் சகஜம் தானே?

அண்ணன் – அமெரிக்காவிலேயே டெக்சாஸ்தான் எரிசக்தி ஆதாரம் அதிகம் உள்ள மாநிலம். எனவே இந்த மாதிரி பனிப்புயலையெல்லாம் அதுதான் திறமையாக சமாளித்திருக்க முடியும். இது இயற்கைப் பேரிடரை விட கொள்கையினால் வந்த விளைவு.தம்பி – விளக்கமா சொல்லுங்க.

அண்ணன் – 1990-2000 ஆண்டுகளில் என்ரான் என்கிற நிறுவனத்தின் ஆதிக்கத்தால் டெக்சாஸ் ஆட்சியாளர்கள் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் அதி தீவிரமான தளர்வுகளை ஏற்படுத்தினார்கள்.

தம்பி – அண்ணே இந்த என்ரான்கிற பேர எங்கியோ கேட்ட மாதிரி இருக்கு.

அண்ணன் – உன் நினைவாற்றலை பாராட்டறேன். நம்ம இந்தியாவில மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில ‘சுயேச்சையான மின்சார உற்பத்தியாளர்கள்’ (independent power producers)அப்படீன்னு ஒரு கொள்கைய அறிவிச்சாங்க.அதனடிப்படையில் அமெரிக்க என்ரான் நிறுவனம் மகாராஷ்டிர மாநிலத்தில தபோல் மின் உற்பத்தி திட்டம் தொடங்க அனுமதி கொடுத்தாங்க. அதுக்கடுத்தாப்பில வந்த வாஜ்பேய் அரசாங்கம் அதற்கு அரசு உறுதி(sovereign guarantee) அளித்தது. இந்த திட்டத்தில் மிக அதிக செலவு பிடிக்கும் திரவ இயற்கை வாயுவை எரிபொருளாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அது மலிவானது என்று என்ரான் பிரச்சாரம் செய்தது. இதனால் மகாராஷ்டிரா அரசாங்கம் திவாலாகும் நிலைமைக்கு சென்றது.

தம்பி – என்னண்ணே சொல்றீங்க? அரசாங்கத்தையே திவாலாக்கும் திட்டமா அது?

அண்ணன் – முழுக் கதையும் கேளு. வேற வழியில்லாம அரசாங்கமே தபோல் ஆலைய தன் வசம் எடுத்துகிச்சு. அவ்வளவுதான் .அந்நிய சொத்துக்கள அபகரிச்சுக்கிட்டோமின்னு சர்வதேச நீதிமன்றத்துக்கு நம்மள இழுத்துட்டாங்க. அந்த திட்டத்தில பங்கு மூலதனம் போட்டிருந்த ஜிஇ, பெக்டெல் நிறுவனங்களுக்கு இலட்சக்கணக்கான டாலர்கள மத்திய அரசாங்கமும் மகாராஷ்டிரா அரசாங்கமும் நஷ்ட ஈடாக கொடுத்தாங்க. அது மட்டுமில்ல நம்ம வங்கிகள் அந்த திட்டத்துக்கு கொடுத்த கடன் அத்தனையும் செயல்படா சொத்தா ஆயிடுச்சு.

தம்பி – ரொம்ப கொடுமையாத்தான் இருக்கு. ஆனா இதுக்கும் டெக்சாஸ் மின் தடைக்கும் என்ன தொடர்பு? அவன் நம்மள ஏமாளியா நினச்சு தலையில முளகா அரைச்சுட்டு போயிட்டான். சொந்த நாட்டிலயுமா அப்படி செய்வான்?

அண்ணன் – டெக்சாசுக்கு முன்னாடியே அவன் விளையாட்ட கலிபோர்னியாவில நடத்தினான்.

தம்பி -அமெரிக்காவிலேயே வளமான மாநிலம்; நம்ம ஆட்கள் நிறைய பேர் இருக்காங்க அதுவா?

அண்ணன் – கலிபோர்னியாவின் செல்வம் ஒரு சிலபேர் கையில்தான் இருக்குங்கறாங்க. அத தனியா பேசுவோம். அங்கயும் 90களில் மின் விநியோகத்தின் மேலிருந்த கட்டுப்பாடுகள தளர்த்தினாங்க. என்ன ஆச்சு? 2000-2001இல் மின்சாரத்தின் சந்தை விலை தாறுமாறா ஏறிச்சு. இரண்டு நிறுவனங்கள் நொடிச்சுப் போச்சு.

தம்பி – பெரிய கில்லாடியா இருப்பான் போலிருக்கு.ஆனா விலைதானே ஏறும்?ஏன் பதினைந்து நாள் கரெண்டே இல்லை?

அண்ணன் – இதுக்கு நீ ரெண்டு விசயத்த புரிஞ்சுக்கணும். ஒண்ணு உலகம் முழுவதும் சரி அமெரிக்காவிலும் சரி மின் விநியோகம் தனியார் கையில ஏகபோகமா இருந்தாலும் அதுக்கு அரசு ஒழுங்குபடுத்தும் முறைகள் உண்டு. மின் தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் மின்சாரத்தை மின் இணைத்தொகுதிக்கு (electricity grid) அளிப்பார்கள். விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மின்சாரத்தை இந்தத் தொகுதியின் மூலம் நுகர்வோர்களுக்கு அளிப்பார்கள். டெக்சாஸ் அரசாங்கம் என்ன செஞ்சுதுன்னா இந்த தொகுதிய மொத்தமா விலக்கிட்டாங்க.

தம்பி – இந்த தொகுதியின் முக்கியத்துவம் என்னண்ணே?

அண்ணன் – அதுக்கு நாம் கொஞ்சம் விஞ்ஞானம் தெரிஞ்சிருக்கணும். இருந்தாலும் நான் புரிஞ்சுகிட்டத சொல்றேன். ஒரு நாட்டில பல மின் உற்பத்தி நிலையங்கள் இருக்கும். அவை தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்த மின் தொகுதிக்கு கொடுக்கும். மின் தொகுதியிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் மின்சாரம் போகும்.இப்ப நெய்வேலியில உற்பத்தி செய்ற மின்சாரம் மின் தொகுதி மூலமா கர்நாடகா போகும். ஒரு ஆலையில உற்பத்தி கொறஞ்சா இன்னொரு ஆலையிலிருந்து வரும் மின்சாரத்த வெச்சு கொஞ்சம் சமாளிக்கலாம்.தம்பி – இவ்வளவு நல்ல விசயத்த டெக்சாஸ் அரசாங்கம் ஏன் விலக்கினாங்க?

அண்ணன் – அங்கதான் ஒரு புதிய கொள்கை வருது. மின் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், மின் வணிகர்கள் இந்த மூணு தரப்பையும் பிரிக்கணுமாம். மின்சாரத்துக்குன்னு ஒரு சந்தை உருவாக்கணுமாம். மின்சாரமும் ஒரு சந்தைச சரக்காம். இத இந்தியா முதற்கொண்டு பல நாடுகளில் புகுத்த முயற்சி பண்றாங்க.இந்தியாவில ஒருத்தர் சொல்றாராம் மின்சாரம் சோப் மாதிரி ஒரு பொருள்தான்.

தம்பி – கரெக்ட்தானே. ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு ரூபான்னு நாம் எவ்வளவு யூனிட் செலவழிக்கிறோமோ அதுக்கு பணம் கட்டறோமே.
அண்ணன் – நீ அண்ணாச்சி கடைக்கு போயிருப்ப;சூப்பர் மார்க்கெட் போயிருப்ப.அங்க சோப் எவ்வளவு அடுக்கி வெச்சிருக்காங்க?

தம்பி – அதுதாண்ணே பெரிய செக்க்ஷன். எவ்வளவு சோப் வெச்சிருக்காங்க?இப்பெல்லாம் ஒரு சோப்பா வெக்க மாட்டேங்கறாங்க. ரெண்டு மூணுன்னு கட்டி வெச்சிருக்காங்க.

அண்ணன் – சரி அது மாதிரி கரெண்டு எங்க வெச்சிருக்காங்க?

தம்பி – போஸ்ட் கம்பிலதானே இருக்கு?

அண்ணன் – என்னடா தம்பி உன்ன அறிவாளின்னு நினைச்சேன். இப்படி சொல்லிட்டியே? கரெண்ட எங்கயும் வக்க முடியாது. பேட்டரில வேணா கொஞ்சம் சேமிச்சு வெச்சுக்கலாம். மத்தப்படி அதுபாட்டுக்கு ஓடிக்கிட்டேயிருக்கும். அதினாலதான் நோபல் பரிசு வாங்கின அமெரிக்க பொருளாதார நிபுணர் குரூக்மென் இந்த சந்தை மேதாவிகளுக்கு சொன்னாரு’மின்சாரம் மாங்கா(avocados) மாதிரிப் பொருள் இல்ல’ன்னாரு. மின்சாரம் நுகர்வோருடைய தேவைக்கு(demand) குறைவாக வந்தாலும் அதிகமாக வந்தாலும் கிரிட் பழுதாகிவிடும்.

தம்பி – சரி அண்ணே.டெக்சாஸ் அரசாங்கம் மத்த மாநில கிரிட்டிலிருந்து விலகினதால என்ன ஆச்சு?

அண்ணன் – பனிப்புயலினால் அந்த மாநிலத்திலுள்ள பெருவாரியான உற்பத்தி நிலையங்கள் இயங்க முடியவில்லை. அதே நேரம் குளிர் காலமானதால் வீடுகளில் மின்சாரத் தேவை அதிகமாகிக்கொண்டே போனது. மின்வெட்டு செய்து கிரிட்டைக் காப்பாற்றினார்கள். ஆனால் 40இலட்சம் குடும்பங்களுக்கு பல நாட்களுக்கு மின்சாரம் இல்லை. மின்சாரம் இல்லாததால் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் அளிக்கும் நிறுவனங்களும் இயங்கவில்லை.இது நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியது.

தம்பி – அண்ணே அந்த நாட்டில இந்த மாதிரி குளிர் காலம் கடுமையாக இருக்கும்ன்னு அவங்களுக்கு தெரியாதா?

அண்ணன் – தெரியும்டா. இதுக்கு முன்னாடி 2011, 2014 ஆண்டுகளில் இந்த மாதிரி நெருக்கடிய சமாளிக்க முடியல. நிபுணர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சொன்னாங்க. அதையும் செய்யல்ல.

தம்பி – ஏண்ணே?

அண்ணன் – அதுதான் ஒழுங்குபடுத்தும் முறையற்ற(deregulated) சந்தைப் பொருளாதாரம். அவங்க என்ன சொல்றாங்க? பொருத்தமான சந்தை ஊக்குவிப்பு(லாபம்?) இருந்தா எல்லாப் பிரச்சினையும் சந்தை பாத்துக்கிடும்னு.

தம்பி – சந்தை ஊக்குவிப்புன்னா என்ன?

அண்ணன் – மின்சாரம் பற்றாக்குறையா இருக்கும்போது விலய ஏத்தறது; தேவை குறைச்சலா இருக்கும்போது விலய குறைக்கறது. இந்த வக்கிரமான கொள்கையால செயற்கையா பற்றாக்குறைய ஏற்படுத்தி விலய ஏத்தறதுக்குத்தான் ஊக்குவிப்பு இருக்கும். அதத்தான் கலிபோர்னியாவில என்ரான் செஞ்சுது. இப்ப டெக்சாசில சாதாரணமா ஒரு மெகாவாட் அவருக்கு 22 டாலரா இருந்த மின்கட்டணம் இந்த நெருக்கடி காலத்தில 9000டாலரா உயர்ந்தது. அப்படியும் அவங்களால மின்சாரத்த உற்பத்தி பண்ணவோ முறையா விநியோகம் செய்யவோ முடியல்ல. அதாவது சந்தை எல்லாத்தையும் பாத்துக்கிடும்னு சொன்னது நடக்கல.தம்பி – அப்ப அவங்களுக்கும் நஷ்டம்தானே?

அண்ணன் – இல்லடா. உறைபனி வீசிய ஐந்து நாட்களில் மட்டும் அவங்க $45பில்லியன் லாபம் பாத்துட்டாங்க. இதில பங்கு மார்க்கட்காரங்க அடிச்ச லாபமும் அடங்கும். விட்டு விட்டு மின்சாரம் கிடச்ச கொஞ்ச நாட்களுக்கு நுகர்வோர் செலுத்திய மின் கட்டணம் அவங்க வாழ்நாள் சேமிப்பு மொத்தத்தையும் அழிச்சிருச்சு.

தம்பி – அங்க அரசாங்கம் ஒண்ணுமே பண்ணலையா?

அண்ணன் – செஞ்சாங்களே.தேவையான நேரத்துக்கு மேலயும் வில உயர்வு தொடர அனுமதிச்சாங்க. நுகர்வோருக்கு எந்தவித நிவாரணமும் கொடுக்க மாட்டேன்னாங்க. காற்றாலை.சூரிய சக்தி ஆகியவை மூலம் மின்சாரம் கிடைக்காதுதான் மின் வெட்டுக்குக் காரணம் என உண்மைக்கு மாறாக அறிவித்தார்கள்.

தம்பி – போட்டி, சந்தைப் பொருளாதாரம் இதினால வில குறையுமின்னு சொல்றாங்களே?

அண்ணன் – டெக்சாசிலும் அப்படித்தான் சொன்னாங்க. ஒழுங்குமுறைகள் விலக்கப்பட்டதினால் டெக்சாசிலதான் குறைந்த விலை மின்சாரம் கிடைக்கிறதுன்னு பத்திரிகைகள் சொல்லிச்சு.ஆனா உண்மை என்னன்னா அங்க இரண்டுவித நுகர்வோர்கள் இருக்கிறாங்க. 85%மக்கள் ஒழுங்குமுறைகள் இல்லாத மின்கட்டணத்திற்கு மாறினாங்க.மீதிப்பேர் பழைய ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலேயே இருந்தாங்க. இவங்களவிட அவங்க 2004ஆம் ஆண்டிலிருந்து செலுத்திய மின்கட்டணம்$28பில்லியன்.

தம்பி – சரிண்ணே. இதினால நமக்கு என்ன பாதிப்பு?

அண்ணன் – அதே கதைதான் இங்கயும் நடக்கப் போகுது. ஒன்றிணைக்கப்பட்ட மின்தொகுதிய பிரிச்சு யாரு வேணா மின் வியாபாரம் செய்யலாம்கிற ‘என்ரான் மின்கொள்கை’யத்தான் இங்க இருந்த, இருக்கிற அரசாங்கங்கள் கொண்டு வருது. உற்பத்தி, மின்கடத்துதல்,விநியோகம் இது எதுவும் செய்யாத புதுவகை மின் வியாபாரிகள் மின்சாரத்த வாங்குவாங்க;விப்பாங்க. அவங்க இத ரொம்ப திறமையா செய்வாங்க அப்படின்னு நம்ம கிட்ட கத விடறாங்க.

தம்பி – டெக்சாசில நடந்த மாதிரி விலயும் உசரும்.நெருக்கடியான நேரத்தில மின்சாரமும் கிடைக்காது.

அண்ணன் – கரெக்ட். டெக்சாஸ் மின் திட்டத்த உருவாக்கினவரே சொன்னாரு’இந்த நெருக்கடி அது வடிவமைக்கப்பட்டபடியே (design) நடந்தது.’

தம்பி – ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’அப்படிங்கற மாதிரி இருக்குதே.

அண்ணன் – சந்தைப் பொருளாதார நிபுணர்களுக்குத் தெரியவில்லை ‘மின்சாரம் இயற்கையின் விதிகள்படித்தான் இயங்கும்.சந்தைவிதிகள் படி இயங்காது.’

பீப்பிள்ஸ் டெமாக்ரசி மார்ச் 08-14 இதழ் பிரபிர் புர்காயஸ்தா கட்டுரையை தழுவியது.